Sunday, August 09, 2015

கத்தி தெலுங்கு ரீமேக்கில் நடிக்க மறுத்தது ஏன்? - ஆந்திரதளபதி மகேஷ் பாபு பேட்டி

“நிறைய தமிழ் படங்கள் பார்ப்பேன். ‘காக்கா முட்டை’ சமீபத்தில் என்னை பாதித்த தமிழ் படம். சிறுவர்களை வைத்துக் கொண்டு உணர்ச்சிபூர்வமாக கதை சொல்லியிருந்தார் இயக்குநர்” என்று தமிழ் படங்கள் மீது தனக்கு இருக்கும் காதலை வெளிப்படுத்தினார் நடிகர் மகேஷ் பாபு. தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் அவரைச் சந்தித்து பேசியதிலிருந்து...
உங்களுடைய பல படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. அப்படி இருக்கும்போது நீங்கள் ஏன் நேரடியாக ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்கக்கூடாது?
தமிழில் நேரடி படம் பண்ண வேண்டும் என்ற விருப்பம் எனக்கு இருக்கிறது. ஆனால் அதற்கான வாய்ப்பு இதுவரை அமையவில்லை. இங்கு திறமையான இயக்குநர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் எனக்கு நம்பிக்கை அளித்தால் உறுதியாக தமிழ் படம் பண்ணுவேன். குறிப்பாக எனக்கு முருகதாஸ் சாரின் படங்கள் மிகவும் பிடிக்கும். அவரது இயக்கத்தில் வெளியான ‘கத்தி’ எனக்கு பிடித்த படங்களில் ஒன்று.
நீங்கள் நடித்த ‘ஒக்கடு’, ‘போக்கிரி’ போன்ற படங்களின் ரீமேக்கில் விஜய் நடித்திருந்தார். அவரிடம் பேசியிருக்கிறீர்களா?
என் படங்களின் ரீமேக்கில் விஜய் நடித்தபோது மிகவும் சந்தோஷப்பட்டேன். அவருக்கு போன் செய்து எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன். என்னுடைய படங்களின் கதை வெவ்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெறுவது மகிழ்ச்சியளிக்கிறது.
நீங்கள் சென்னையில் படித்திருக்கிறீர்கள். உங்களுடைய மலரும் நினைவுகளை பற்றிச் சொல்லுங்கள்?
நான் இங்கு செயின்ட் பீட்ஸ் பள்ளி மற்றும் லயோலா கல்லூரியில்தான் படித்தேன். அந்த நாட்களை என்னால் மறக்க முடியாது. குறிப்பாக இங்குள்ள திரையரங்குகளில் படம் பார்த்த காலத்தை மறக்க முடியாது. ஹைதராபாத்துக்கு சென்றவுடன் என்னுடைய அந்த கால நண்பர்களோடு பேசுவது நின்றுவிட்டது. 23 ஆண்டுகள் சென்னையில் இருந் திருக்கிறேன், ஆனால் அப்போதிருந்த நண்பர்களை இழந்துவிட்டேன்.
‘கத்தி’ படத்தின் ரீமேக்கில் நீங்கள் நடிக்க மறுத்தது ஏன்?
‘கத்தி’ ஒரு இயக்குநருடைய படம். அக்கதையை ஏ.ஆர்.முருகதாஸ் ஒருவரால் மட்டுமே பண்ண முடியும். தெலுங்கில் முருகதாஸ் சார் மாதிரி ஒரு இயக்குநர் கிடையாது என்பதுதான் உண்மை. அதுதான் நான் மறுத்ததற்கு முக்கிய காரணம்.
உங்களைத் தொடர்ந்து மகனும் நடிக்க வந்துவிட்டார். அவரை தொடர்ந்து நடிக்க வைப்பீர்களா?
எனது மகனுக்கு இப்போது சின்ன வயது. ஒரு படத்தில் நடித்துவிட்டு, தற்போது படிப்பில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறான். இயக்குநர் சுகுமார் கதை சொல்லும் போது, உங்களுடைய சின்ன வயது பாத்திரத்தை உங்கள் மகன் செய்தால் நன்றாக இருக்கும் என்றார். இதுபற்றி என் மகனிடம் கேட்டபோது அவனும் நடிப்பதாக கூறினான். இதைத் தொடர்ந்து அவனை நடிக்க வைத்தோம்.
‘பாகுபலி’ வெளியீட்டுக்காக ‘செல்வந்தன்’ படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்ததாக செய்திகள் வருகிறதே? உண்மையா?
நாங்கள் முதலில் ஜூலை 17-ம் தேதி வெளியிடலாம் என்று முடிவு செய் திருந்தோம். அப்போது ‘பாகுபலி’ வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை. பிறகு அவர்கள் ஜூலை 10-ம் தேதி ‘பாகுபலி’யை வெளியிட முடிவு செய்தார்கள். ‘பாகுபலி’ போன்ற ஒரு பிரம்மாண்ட பட்ஜெட் படத் தோடு நாங்கள் போட்டியிடுவது எங்களுக்கு பிடிக்கவில்லை. மூன்று வாரங்கள் தள்ளி வைக்கலாம் என்று முடிவு செய்தோம்.
எங்களுடைய முடிவால் அனை வருக்குமே சந்தோஷம். திரையுலகில் ஒரு பெரிய படம் வரும்போது, அதற்கான இடைவெளியை கொடுப்பது நல்ல விஷயம் தானே.
உங்கள் அடுத்த படத்துக்கு ராஜமெளலிதானே இயக்குநர்?
அதைப் பற்றி இப்போது பேசுவது ரொம்ப சீக்கிரம் என்று நினைக்கிறேன். ‘பாகுபலி 2’ படத்துக்கான பணிகளை ராஜமெளலி முடிக்க வேண்டும். ஆனால், இருவரும் சேர்ந்து ஒரு படம் பண்ண ஒப்பந்தமாகி இருக்கிறோம் என்பது உண்மை.


நன்றி - த இந்து

0 comments: