Tuesday, August 11, 2015

விசாரணை -வெற்றி மாறன் -ன் அடுத்த ஹிட்- முன்னோட்டம்

சட்டத்தின் ஆட்சியையும், எல்லா மக்களுக்கும் நீதியையும் உறுதிசெய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு, உண்மையில் என்ன நிலையில் இருக்கிறது? அதன் கைகளில் அப்பாவிகள் சிக்கினால் என்ன ஆவார்கள் என்பதை ‘விசாரணை’ படத்தின் டிரைலரே ரத்தம் உறையச் சொல்லிவிடுகிறது. உலகப்புகழ் பெற்ற வெனிஸ் உலகத் திரைப்பட விழாவில் போட்டிப் பிரிவில் திரையிடவிருக்கும் 20 படங்களில், வெற்றிமாறன் இயக்கிய ‘விசாரணை’-யும் இடம்பெற்றுள்ளது. போட்டிப் பிரிவில் வெனிசில் திரையிடப்படும் முதல் தமிழ்ப் படம் என்பதே விசாரணை குறித்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
கோவையிலிருந்து 1983-ல் ஆந்திர மாநிலம் குண்டூர் சென்று பொய்யான குற்றச்சாட்டில் அப்பாவியாய் சிக்கிய மு.சந்திரகுமாரின் கதை இது. மூன்று நண்பர்களுடன் சட்டவிரோதக் காவலில் 13 நாட்கள் காவலர்களால் சித்திரவதை செய்யப்பட்ட மு.சந்திரகுமார் என்ற ஆட்டோ சந்திரன், தன் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதிய ‘லாக்கப்’ நாவல் தான் ‘விசாரணை’யாக மாறியுள்ளது.
“இந்தியாவில் காவல் துறையினரால் பாதிக்கப்படும் லட்சக்கணக்கானவர்களின் அனுபவம் இது. எத்தனையோ துயரங்கள் பதிவாகாமலேயே போயிருக்கின்றன. சந்திரகுமார் தனது 13 நாள் சிறை அனுபவங்களை ஒரு டைரி போல எழுதியதன் மூலம் ஒரு காலகட்டத்தின் பதிவாக மாற்றியுள்ளார். அந்த நாவலில் இருந்த உண்மை என்னை ஈர்த்தது. ஆடுகளம் முடித்த பிறகு, ஐந்து மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த இடைவெளியில் பெரிய ஹீரோவை மையமாக வைத்துக் கதை பண்ணாமல் யதார்த்தமாக ஒரு படம் செய்ய ஆசைப்பட்டேன். அப்போது எனது நண்பர் பரிந்துரைத்த புத்தகம்தான் ‘லாக்கப்’.” என்றார் இயக்குநர் வெற்றி மாறன்.
ஒரு தேர்ந்த எழுத்தாளரின் கூர்மையுடன் எழுதப்பட்டிருக்கும் ஆட்டோ சந்திரனின் வாழ்க்கை மிகவும் சுவாரசியமானது. இளம் வயதிலேயே வீட்டிலிருந்து கோபித்துக்கொண்டு சென்னை, மதுரை, தூத்துக்குடி என்று அலைந்த இவருக்கு வாழ்வையே திருப்பிப் போடும் அனுபவம் நேர்ந்தது ஆந்திராவில். குண்டூரிலிருந்து 42 கிலோமீட்டர் தூரத்தில் ஒரு தெருவோர உணவு விடுதியில் பரிசாரகனாக வேலை கிடைத்தது. தினப்படிக் கூலி என்பது அவருக்கும் அவரைப் போன்ற நாடோடி நண்பர்களுக்கும் சந்தோஷமான விஷயமாக இருந்துள்ளது.
“நாள் முழுவதும் வேலை. அதற்கப்புறம் சினிமா பார்ப்பது, இரவில் நண்பர்களுடன் எதிர்காலத்தைப் பற்றி கனவுகளுடன் அசைபோடுவது என்று இருந்தபோதுதான் திருட்டுவழக்கில் என்னையும் மூன்று நண்பர்களையும் கைது செய்தார்கள். கேட்பதற்கு நாதியற்ற அநாதைகள், ஏழைகள் மற்றும் பழங்குடிகளை காவல்துறை எப்படி நடத்துகிறார்களோ அதேபோலவே நாங்களும் நடத்தப்பட்டோம். 13 நாட்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சிதைக்கப்பட்டோம். நாங்களாகப் போராடித்தான் நீதிமன்றத்தின் பார்வைக்கே செல்ல முடிந்தது. பத்துக்கு பத்து அடி பரப்பளவே கொண்ட சின்ன அறையில் மார்ச் மாத வெயிலில் வழியும் வேர்வையுடன் மிருகங்கள் போல அடைக்கப் பட்டிருந்த அந்த நாட்களை என்னால் மறக்கவே முடியாது. எங்களை ஜாமீன் எடுப்பதற்கோ, எங்களைத் தேடி காவல் நிலையத்துக்கு வருவதற்கோ யாரும் கிடையாது. அந்தக் கதையைத்தான் என் முதல் நாவலாக எழுதினேன்” என்கிறார் ஆட்டோ சந்திரன்.
நீதிமன்றத்துக்குச் சென்ற பிறகும் செய்யாத குற்றத்தை ஒப்புக்கொண்டு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனையைக் கழித்துள்ளார் சந்திரன்.
இவர் எழுதிய 160 பக்கம் கொண்ட லாக்கப்புக்கு 2006-ம் ஆண்டில் நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் அங்கம் வகிக்கும் மனித உரிமைக் கண்காணிப்பகம் ‘சிறந்த மனித உரிமைகள் ஆவணம்’ என்ற விருதைக் கொடுத்தது.
தமிழ் மட்டுமல்ல இந்திய வெகுஜன சினிமாக்கள் அனைத்திலும் காவல் துறையினர் கேலியாகவும் ஊழலாகவுமே சித்திரிக்கப்படுகிறார்கள். ஆனால் அதேவேளையில், என்கவுண்டர் செய்யும் போலீஸ் நாயகர்கள் கடவுள்களாகச் சித்தரிக்கப்பட்டு பெரும் வெற்றி அடைவதும் சாத்தியமாகவே உள்ளது. மோதல் சாவுகள் மட்டுமல்ல; காவல் கொலைகளும், சித்திரவதைகளும், காவல் நிலையத்தில் நடக்கும் வல்லுறவுச் சம்பவங்களிலும் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் எளிய மக்களாகவே இருக்கின்றனர். சமீபத்தில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 20 தமிழர்கள் ஆந்திர போலீசாரால் கொல்லப்பட்ட சம்பவம் ‘விசாரணை’ டிரைலரைப் பார்க்கும் போது ஞாபகத்துக்கு வருவதைத் தவிர்க்கவே முடியாது.
ஒரு நாவலின் கதையை எடுத்து திரைக்கதையை உருவாக்கி, அதை எழுதிய எழுத்தாளருக்கு சரியான அங்கீகாரத்தையும் வழங்கியுள்ளார் வெற்றி மாறன். தமிழ் சினிமாவில் அரிதான போக்கு இது. விசாரணை திரைப்படத்தின் இறுதியில் கதாசிரியரைப் பற்றிய ஆவணப்படமாக ஒன்றரை நிமிடப் படம் ஒன்றை சேர்த்திருக்கிறார்கள். “தமிழ் சினிமாவில் எழுத்தாளனுக்குச் செய்யப்பட்டிருக்கிற ராஜமரியாதை இது” என்கிறார் ஆட்டோ சந்திரன்.
நடிகர் தனுஷும், வெற்றி மாறனும் ‘காக்கா முட்டை’-க்குப் பிறகு தயாரிப்பாளர்களாக இணையும் இரண்டாவது திரைப்படம் இது. இரண்டு திரைப்படங்களும் உலகத் திரைப்படவிழாக்களுக்குச் சென்ற பெருமையையும் பெற்றுவிட்டன.
இப்படத்தின் மூலம் வெற்றி மாறன், காவல் நிலையச் சுவர்களுக்குப் பின்னர் இருக்கும் குரூரமான யதார்த்தத்தையும், சொல்லப்படாத குமுறல்களையும் விசாரணை செய்திருக்கிறார். தமிழ் சினிமாவில் ஒரு நிஜமான அரசியல் திரில்லருக்கான நீண்ட இடைவெளி விழுந்துவிட்டது. இந்தப் படம் மூலம் அது சாத்தியப்படலாம்.

நன்றி- த இந்து

0 comments: