Saturday, August 15, 2015

வாலு பிரச்சனையில் அஜித் ஏன் உதவவில்லை? விஜய் என்ன உதவி செய்தார்? - சிம்பு ஓப்பன் டாக்!

"ஒய் சோ லேட்டு..?
இதான் வந்துட்டோம்ல... அதான் மாஸ்!"
இந்த விளம்பரத் துண்டு ரீலில் அடங்கியிருக்கிறது, 'வாலு' ரிலீஸ் எதிர்கொண்ட பிரச்சினைகள், வழக்குகள், தடைகள்!
திரையரங்குகள் பஞ்சாயத்து, விஜய் உதவி, அரசியலில் களம் இறங்குகிறார் சிம்பு என பல்வேறு செய்திகள் வலம் வந்து கொண்டிருந்த நேரத்தில் சிம்புவை சந்தித்து பேசியபோது...
"மூன்று 3 வருடங்கள் கழித்து படம் ரீலீஸ். உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது?"
"நான் என்னை கடவுள்கிட்ட கொடுத்துவிட்டேன். அவர் என்ன நினைக்கிறாரோ அப்படி நடக்குது. 3 வருடங்கள் சிம்புக்கு படங்கள் வெளியாகவில்லை, அவன் காலி, இனிமேல் எழுந்திருக்கவே முடியாது என்று நினைத்தார்கள். இப்போது என் படம் 'வாலு' ரிலீஸ். அதை வெளியிடுவதற்கும் வழக்கு, திரையரங்குகள் ஒப்பந்தம் என நிறைய பிரச்சினைகள் எழுந்தது.
மூன்று வருடங்களாக எனக்கு உறுதுணையாக இருந்தது என் ரசிகர்கள். அவர்களின் பாசத்துக்கு நான் எப்போதுமே அடிமைதான். இந்த பஞ்சாயத்து, வழக்கு என எதுவுமே இல்லாமல் இருந்தால் 'வாலு' எப்போதோ வெளியாகி இருக்கும். நான் எப்போதுமே மற்றவர்களுக்கு நிறைய உதவிகள் பண்ணியிருக்கிறேன். ஆனால், எனக்கு ஏன் இப்படி நடக்கிறது என்பதைதான் இதுவரை என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை.
ஒரு புதுமுக இயக்குநரான விஜய் சந்தருடன் இணைந்து பண்ணியிருக்கிறேன். என்னை விடுங்கள், அவருடைய உழைப்பு, கஷ்டம் அனைத்துமே வீணாகி விடக்கூடாது. அதனால் 'வாலு' வெளியாகி வரை கூடவே நின்றேன்.
"தொடர் பிரச்சினைகள் வருவதால் அரசியலுக்கு வரப் போகிறீர்கள் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறதே. உண்மையா?"
"அரசியலைப் பற்றி எனக்கு தெரியாது. அப்படி ஒரு எண்ணமும் எனக்கு இல்லை. எந்த ஒரு பிரச்சினை வந்தாலும் தனியாக நின்று எதிர்கொள்வேன். அந்த தகவலில் உண்மை இல்லை."
"விஜய் எந்த வகையில் 'வாலு' படத்துக்கு உதவி செய்தார்..?"
"பணம் கொடுத்து விஜய் உதவி செய்யவில்லை. இப்படத்துக்கு வெளியீட்டில் பிரச்சினை எழுந்தபோது விஜய் தரப்பில் இருந்து பி.டி.செல்வகுமார் தான் அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தார். இப்போதும் காலையில் இருந்து, இரவு வரை கூடவே இருந்து என்ன பிரச்சினை வந்தாலும் முடித்து கொடுத்து படம் வெளிவர உதவி செய்கிறார். அந்த வகையில் எனக்கு விஜய் அண்ணா செய்த உதவியை இன்றைக்கு அல்ல என்றைக்குமே மறக்க மாட்டேன்.
இன்னொரு உண்மையும் சொல்றேன். சில மாதங்களுக்கு முன்பாக 'வாலு' பிரச்சினை நிலவி வந்த நேரத்தில் லதா ரஜினிகாந்த் மேடம் போன் செய்து, "'வாலு'வுக்கு என்ன பிரச்சினை. உங்களை ரஜினி சார் பார்க்க வேண்டும்' என சொல்கிறார் என்றார்கள். ஆனால், நான் சொல்லவில்லை. என் படத்தின் பிரச்சினையை நாமளே தான் முடிக்க வேண்டும் என்று வைராக்கியமாக இருந்தேன். பிரச்சினைகள் முடிவுக்கு வந்தவுடன் ரஜினி சார் போன் பண்ணினார். "பிரச்சினை முடித்துவிட்டது என்று கேள்விப்பட்டேன். வாழ்த்துகள். நான் உங்களை அழைத்தேனே. ஏன் வரவில்லை" என்றார்.
பிரச்சினை எழுந்தபோது அனைவருமே எனக்கு ஆறுதல் சொன்னார்கள். என்ன பிரச்சினை வந்தாலும், எழுந்து நிற்பேனே தவிர, பிரச்சினைகளை கண்டு ஓடி ஒளியும் ஆள் சிம்பு இல்லை.
"நீங்கள் ஒரு அஜித் ரசிகர். அவர் தரப்பில் இருந்து எந்த ஒரு உதவியும் இல்லையே என்ற வருத்தம் இருக்கிறதா..?"
" 'தல' மேல வருத்தமா... வாய்ப்பே இல்லை. 'வாலு' படத்தின் தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி. அஜித்துக்கு, சக்ரவர்த்திக்கும் இடையே இருக்கும் பிரச்சினை என்ன என்பது திரையுலகுக்கு தெரியும். அப்புறம் எப்படி அஜித் உதவி செய்வார். படத்தை வாங்கியவுடன் அப்பாவுக்கு போன் பண்ணிய அஜித் சார், "எதற்குள் கவலைப்படாதீர்கள். அனைத்து பிரச்சினைகளையும் கடந்து சிம்பு வருவான்" என்று ஆறுதல் சொன்னார். இந்த விஷயத்தில் அஜித் உதவவில்லை என்று மாற்றி பேசி, அவர் மீது பழி போடுவதை நான் விரும்பவில்லை."
"உங்களுக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு என்ன தான் பிரச்சினை..?"
"ஒரு பிரச்சினையும் இல்லை. வருத்தம் இருக்கிறது. சென்னையில் முக்கியமான திரையரங்குகளில் வேறு ஒரு படத்துக்காக ஒப்பந்தம் செய்துவிட்டார்கள். 3 வருடம் கழித்து எனது படம் வெளியாகும் போது, பெரிய திரையரங்குகளில் வெளியாக முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் எனக்கு கோபம் கிடையாது, வருத்தம் தான்.
இந்தப் பிரச்சினையால் எனது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் செய்த விஷயங்களை நிறுத்தச் சொல்லி முதலில் குரல் கொடுத்தது நான்தானே. அவர்களது கோபத்தில் நியாயம் இருக்கிறது. தனது நடிகரின் படம் பெரிய திரையரங்குகளில் பார்த்து ரசிக்க வேண்டும் என்று ஒவ்வொரு ரசிகனும் ஆசைப்படத்தான் செய்வான். அதில் தவறு இல்லை.
"உங்களது அடுத்த படங்கள் குறித்து...?"
"கெளதம் மேனன் படம் 70 சதவீதம் முடிந்துவிட்டது. 'வாலு' இப்போது ரிலீஸ். இனிமேல் செல்வராகவன் படத்தின் படப்பிடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிடுவேன். செப்டம்பரில் 'இது நம்ம ஆளு' படத்தின் இசை வெளியீடு இருக்கும். அக்டோபர் அல்லது நவம்பரில் படம் வெளியாகும்.
கெளதம் மேனன், செல்வராகவன் படங்களை முடித்துவிட்டு அமீர் படத்தை அடுத்த ஆண்டு துவக்கத்தில் தொடங்க திட்டமிட்டு இருக்கிறேன். அமீர் படத்தில் விஜய் சேதுபதி என்னுடன் நடிக்கிறார் என்பது எல்லாம் தவறான செய்தி. அந்த மாதிரியான ஒரு பாத்திரம், அப்படத்தில் இல்லை."


நன்றி - த இந்து

0 comments: