Saturday, August 29, 2015

தாக்க தாக்க - சினிமா விமர்சனம்

நன்றி = மாலை மலர்

நடிகர் : விக்ராந்த்
நடிகை :அபிநயா ஆனந்த்
இயக்குனர் :சஞ்சீவ்
இசை :ஜாக்ஸ் பிசாய்
ஓளிப்பதிவு :சுஜீத் சராங்
விக்ராந்தின் அம்மா சிறு வயதிலேயே விபச்சாரத்தில் தள்ளப்பட்டு விட்டவர். சிறுவயதிலிருந்தே தனது அம்மா அனுபவித்த கொடுமைகளையும், தன் கண்முன்னே விபச்சார கும்பலின் தலைவன் அருள்தாஸால் தனது அம்மா கொல்லப்பட்டதையும் எண்ணி சோகத்துடனே வலம் வருகிறார்.

விபச்சார கும்பலிடமிருந்து தப்பி சென்னைக்கு வரும் சிறுவயது விக்ராந்துக்கு, அரவிந்த் சிங் நண்பராகிறார். இருவரும் வளர்ந்து பெரியவர்களாகிறார்கள். விக்ராந்த் யாருடனும் கலகலப்பில்லாமல் இருந்து வருகிறார். அரவிந்த் சிங்கும், நர்சாக பணிபுரியும் அபிநயாவும் ஒருவருக்கொருவர் தீவிரமாக காதலித்து வருகிறார்கள். ஆனால், அபிநயாவை திருமணம் செய்வதில் அவரது மாமன் ஆசைப்படுகிறார். அவர், சென்னையில் பெரிய தாதாவாக இருக்கும் அருள்தாசின் தம்பி ராகுல் வெங்கட்டிடம் பணிபுரிகிறார். அவரிடமே போஸ் வெங்கட்டும் பணிபுரிந்து வருகிறார். பெண்களை விபச்சாரத்தில் தள்ளும் தொழிலில் கொடிகட்டி பறந்து வருகிறார் ராகுல் வெங்கட்.

இந்நிலையில், காதலித்து வரும் அரவிந்த் சிங்கும், அபிநயாவும் ஒருநாள் ரகசிய திருமணம் செய்துகொள்கிறார்கள். இவர்களது ரகசிய திருமணத்தை அறிந்த அபிநயாவின் மாமன் அபிநயாவை விபச்சாரத்தில் தள்ளி, அவளை சீரழிக்க பார்க்கிறான். அவளை மீட்க அரவிந்த் சிங், போஸ் வெங்கட்டின் உதவியை நாடுகிறான். 

மறுமுனையில், இதையெல்லாம் அறியாத விக்ராந்த், ஒருநாள் தனது அம்மாவை கொன்று வாழ்க்கையை சீரழித்த அருள்தாஸை சென்னையில் பார்க்கிறார். அவரை பழிவாங்க துடிக்கிறார். அதேபோல், அருள்தாஸ் கும்பலிடம்தான் தனது நண்பனின் காதலியும் இருக்கிறாள் என்பதையும் விக்ராந்த் அறிகிறார். 

இறுதியில், தனது நண்பனின் காதலியை அந்த கும்பலிடமிருந்து விக்ராந்த் மீட்டாரா? தனது வாழ்க்கையின் சீரழிவுக்கு காரணமான அருள்தாஸை பழிவாங்கினாரா? என்பதே மீதிக்கதை. 

நீண்ட இடைவெளிக்கு பிறகு, விக்ராந்த் இந்த படத்தில் ஹீரோ வேடமேற்றிருக்கிறார். இதில் ரொம்பவும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படத்தில் இவர் நடித்திருக்கிறார் என்பதைவிட வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லுமளவிற்கு இவருடைய நடிப்பு பிரமாதம். குறிப்பாக, தனது அம்மாவை நினைத்து வாடும் காட்சிகளிலும், தனது நண்பனை இழந்து கதறி அழும் காட்சிகளிலும் நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.

அதேபோல், அரவிந்த் சிங்கின் காதலியாக வரும் அபிநயாவும் ரொம்பவும் திறமையான நடிப்பை கொடுத்திருக்கிறார். ஒருசில காட்சிகளில் இவரது நடிப்பு நம்மையை கண்கலங்க வைத்துவிடுகிறது. அருள்தாஸ் இந்த படத்தில் கொடூர வில்லனாக நடித்திருக்கிறார். படத்தின் ஆரம்பத்தில் இவர் வரும் 10 நிமிட காட்சிகளும் மிரட்டியிருக்கிறார்.

படத்தில் இன்னொரு நாயகியாக வரும் லீமா பாபுவுக்கு பெரிதாக வாய்ப்பு இல்லை. விக்ராந்துக்கு ஜோடியாக வரும் இவருக்கு, அவருடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் குறைவு. அதேபோல், இருவருக்கும் இடையில் ரொமான்ஸ் பாடலும் வைக்காதது மிகப்பெரிய குறைவே. மேலும், போஸ் வெங்கட், ராகுல் வெங்கட், விக்ராந்தின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் என அனைவரும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து செவ்வனே நடித்திருக்கிறார்கள். 

படத்தின் ஆரம்ப கட்ட காட்சியிலேயே ரசிகர்களை இயக்குனர் சஞ்சீவ் கவர்ந்துவிடுகிறார். சிறு வயதில் பெண்களை விபச்சாரத்தில் தள்ளும் கும்பலிடம், பெண்கள் படும் துயரத்தை யதார்த்தமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். அந்த காட்சிகள் வரும் 10 நிமிடங்கள் தியேட்டரில் நிசப்தமே மேலோங்கியிருக்கிறது. படத்தில் ரொமான்ஸ் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல், ஆக்க்ஷன் மற்றும் செண்டிமென்ட் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது சிறப்பு. 

சுஜீத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். அவருடைய பெரும்பாலான காட்சிகள் நம்மை கதையோடு ஒன்றி பார்க்க வைத்திருக்கிறது. அனைத்து காட்சிகளும் நேரடியாக நடப்பதுபோன்றே படமாக்கியிருப்பது மேலும் சிறப்பு. ஜேக்ஸ் பிசாய்யின் பின்னணி இசை படத்திற்கு மேலும் ஒரு பக்கபலமாய் இருக்கிறது. நடிகர் விஷால், ஆர்யா, விஷ்ணு விஷால் ஆகியோருடன் விக்ராந்த் இணைந்து வரும் பாடல் ரசிக்கும்படி இருக்கிறது. 

மொத்தத்தில் ‘தாக்க தாக்க’ ரசிக்க ரசிக்க.

0 comments: