Thursday, August 27, 2015

இந்திய பங்குச் சந்தை திடீர் வீழ்ச்சி கண்டது ஏன்?

 துளித்துளியாய் உயர்ந்தது, புள்ளிப் புள்ளியாக சரிந்தது... வேறு எது? பங்குச்சந்தைதான்.
கடந்த 24 ஆம் தேதி திங்கள், ஏனோ தினம் மாறி, நிறம் மாறி கறுப்பு வெள்ளி (Good Friday) போல் ஆனது. காரணம்...? The great Fall of China... The Great Wall of China கேள்விப்பட்டிருக்கிறோம். இது சீனாவுக்கு வீழ்ச்சி இல்லை, சீன கரன்ஸி யுவானுக்கு, அமெரிக்க டாலருக்கு எதிரான மதிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சி. இது பல நாட்டு வணிகச் சந்தைகளை நாலு, ஐந்து என்று மானாவரியான எண் விகிதத்தில் வீழ்ச்சி அடையச் செய்திருக்கிறது.


ஒரு புயல் உருவாகும்போது அதற்கான "epic centre" என்று ஒன்று இருக்கும். இந்த கறுப்புத் திங்களுக்கான மத்தியப் புள்ளி சீனா. அப்படி என்னதான் செய்தது சீனா, அங்கே என்னதான் நடக்கிறது? இதை பார்ப்பதற்கு முன், சீன நாட்டின் பொருளாதார திட்டத்தை ஒரு நோட்டம் விடுவோம்...சீனாவின் பொருளாதார சீர்படுத்தல் முயற்சிகள் 1978 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. FDI-வெளிநாட்டு பண முதலீடு 1990 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. .2001 ஆம் ஆண்டு (WTO) world trade organisation. அங்கீகாரம் கிடைக்கப்பெற்று, அதன் தீர்மானப்படி liberalisation, அதாவது தாராளமயமாக்கப்படுதல் அறிமுகப்படுத்தப்பட்டு, சீனாவின் வெளிநாட்டுடன் ஆன உறவு புதியமுகம் பெற்றது. நிறைய தொழிலாளர்களை கொண்ட சீனா, தன் நாட்டின் தயாரிப்பை மேம்படுத்த இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டது. பாதிக்கு மேல் செய்யப்பட்ட உற்பத்தி, செயலாக்க உற்பத்தியாக மாறி நின்றது.சரி, தற்போது உள்ள பிரச்னைக்கு வருவோம். சீனாவின் வங்கிக்கடன் அமெரிக்க மொத்த வணிகத்துறை மூலதனத்தைவிட இரண்டு மடங்கு அதிகம். இது எப்படி சாத்தியமாயிற்று சீனாவில்?  நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டுதான் பணப் புழக்கம் இரட்டிப்பு ஆக்கப்பட்டது. இந்த அதிக பணம், அரசுக்கு சொந்தமான தொழில்களிலும், நகரப்பணிகளுக்கும் கொடுக்கப்பட்டது. இவை லாபத்தைக் கணக்குப் பார்க்காமல், நாட்டின் வேலைவாய்ப்பை அதிகரிக்கச் செய்தது. இதையும் மீறி, வேறு காரணங்களினால் சீனாவில் பொருளாதாரம் பின் அடைவு ஏற்பட்டது. உலக நாடுகளுக்கு அனுப்பப்படும் வர்த்தகத்தில் பின்னடைவு, ரியல் எஸ்டேட் தொய்வு, பாலம், சாலை போக்குவரத்தில் தேக்கம்.பார்த்தது சீனா.. தன் நாட்டு நாணயத்தின் (கரன்ஸி) மதிப்பை கடந்த திங்களன்று இரண்டு சதவீதம் குறைத்தது. இது, நாணயப் போராட்டத்திற்கு வித்திட்டுவிட்டது. அதென்ன நாணயப் போராட்டம் (Currency War)? இதற்கு ஒரு குட்டி ஃப்ளாஷ்பேக் போட வேண்டும்.

இந்த நாணயப் போராட்டம் முதன் முதலில் தன் திருமுகத்தைக் காட்டியது 1921-ல். ரிப்பன் வெட்டி ஆரம்பித்தது ஜெர்மனி. தன் நாணயமான மார்க்கின் மதிப்பைக் குறைத்து, ஏற்றுமதி விகிதத்தை அதிகரித்தது. அதன் முடிவு,  மக்கள் வண்டியில் பணத்தை எடுத்துச்சென்று கைப்பையில் சாமான் வாங்கி வந்தார்கள். இந்த Hyper Inflationதான் ஹிட்லரின் வரவுக்கும், இரண்டாவது உலக யுத்தத்திற்கும் அடிக்கல் நாட்டு விழா நாட்டியது.


அடுத்த மதிப்புக்குறைப்பு 1967-ல் இங்கிலாந்தில் பௌண்ட் ஸ்டெர்லிங்கில் நடந்தது. இது அமெரிக்காவுக்கு எதிரான தன் நிலையை உயர்த்த என்று சொல்லப்பட்டது. இதன் முடிவு ரிச்சார்ட் நிக்சன், தங்கத் தர நிலை (Gold Standard)-யை காற்றில் பறக்க விட்டார். மூன்றாவதாக நாடுகள் எடுக்க ஆரம்பித்த தளர்த்தப்பட்ட பணக்கொள்கை, இப்போது தலை தெறிக்க ஓடத் துவங்கி உள்ள சீனாவின் போன வார முடிவு. அது சரி, சீனா ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெற்றது?சீனா அறுபதுகளின் நடுவில் இங்கிலாந்து எப்படி இருந்ததோ அப்படி இருக்கிறது. பொருளாதாரத்தில், உலகின் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஏற்றுமதியில் முதலிடமும், இறக்குமதியில் மிக முக்கியமான பங்கும் கொண்டுள்ளது. பிரேசில், கிழக்கு ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, மலேசிய நாடுகள் சீனாவிலிருந்துதான் இறக்குமதி செய்கின்றன. ஏற்கனவே செய்யப்பட்ட நாணய மதிப்புக்குறைப்பால் அவதிப்படும் இந்த நாடுகளின் அவதியை, இந்த யூவான் மதிப்புக் குறைப்பு இன்னும் அதிகரித்து உள்ளது.அது மட்டுமல்ல, சீனாவைத் தொடர்ந்து துருக்கி, கிழக்காப்ரிக்கா, இந்தோனேசியா, மலேசியா, கஜகஸ்தான், ஆஸ்திரேலியா நாடுகளும் மதிப்புக்குறைப்பு செய்யும் எண்ணத்தில் உள்ளன. இதைத்தவிர, அமெரிக்க நாணயக் கொள்கையின் வட்டி விகித பாலிசியினலும் பதிப்பு ஏற்பட்டுள்ளது. ஊடகங்களைப் பார்ப்பவராக இருந்தால் கவனித்திருக்கக்கூடும், இரண்டு வருடத்திலேயே மிகக்குறைவான விலையில் கச்சா எண்ணை, தங்கம், உலோகம் இவையெல்லாம் இன்னும் இறங்குமுகத்தில் இருக்கின்றன. இவையும், நாணய மதிப்புக் குறையும் நிலையை ஏற்படுத்தும்.மற்றும் ஒரு காரணம், யூரோ கேரி ட்ரேட் (Euro Carry Trade) என்னும் வியாபாரத்தில், யுரோவில் கடன் வாங்கப்பட்டு வளரும் நாடுகளில் முதலீடாகச் செய்வதுண்டு. இது, கடந்த இரண்டு வருடங்களாக அமர்க்களமாக நடைபெற்று வந்தது. இப்போது, சீனாவின் மதிப்புக்குறைப்பால் யூரோவின் மதிப்பு அதிகரித்துள்ளது. அதனால், இந்த வளரும் நாடுகளிலிருந்து பணம் எடுக்கப்படுகிறது. இதுவும் இந்த மாபெரும் புள்ளிகள் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்.சரி சீனா எப்படிப்போனால் என்ன? அதனால் நம் நாட்டுக்கு என்ன கேடு? இதுதானே உங்கள் மனதில் உள்ள கேள்வி...? இதைப்பற்றியும் பேசுவோம். சீனாவின் யுவான் மதிப்புக்குறைப்பால், (இதை நாணய மதிப்புக் குறைப்பு என்று சொல்வது தவறு). சீனா என்ன செய்தது என்று பார்ப்போம். சீனா தன் யுவானின் விலை நிர்ணயிக்கப்படும்  முறையை (Bench Mark Methodology) சந்தை சார்ந்ததாகச் செய்து, மத்தியப்புள்ளியை மாற்றி அமைத்ததால் இந்த இரண்டு பர்சண்ட் யுவான் சரிவு ஏற்பட்டுள்ளது.இதன் தாக்கம், முதலில் நம் சந்தைக்கு... முன்னேற்றப்பாதையில் இருந்த நிஃப்டி, சென்செக்ஸ், இரண்டும் ஒரே நாளில் மரண அடி வாங்கின. இது நம் பொருளாதார பின் அடைவுக்கு ஒரு குறியீடா? இல்லை, இது முதலில் சொன்னதுபோல யூரோ மதிப்பு உயர்ந்ததால் நம் சந்தையிலிருந்து முதலீட்டாளர்கள் பணத்தை
எடுத்துச் செல்கிறார்கள். அப்போது பொருளாதாரம் நஷ்டப்படாதா? இதுதான் நாம் கேட்க வேண்டிய, பார்க்க வேண்டிய கோணம். இதற்கான பதில், ''பாதிப்பு நிச்சயம் உண்டு" எப்படி?முதலாவதாக சீனாவிலிருந்து செய்யப்படும் ஏற்றுமதி, இன்னும் விலை மலிந்து, நம் இந்திய ஏற்றுமதியைப்பாதிக்கும். இது நம் “மேக் இன் இந்தியா” கூற்றிற்கு ஒரு நேர் அடி. அடுத்து, சீனா இறக்குமதி செய்ய அதிகம் கொடுக்க வேண்டியிருக்கும், இதனால் சீனா இறக்குமதியைக் குறைக்க முற்படும். அதனால், சீனாவுக்கு பிரதான ஏற்றுமதி செய்யும் நாடுகள், தன் பொருட்களுக்கு சந்தையில்லாமல் வேறு வழியின்றி தங்கள் நானயத்தின் மதிப்பையும் குறைக்க வேண்டி வரும். இது, இந்தியாவின் இறக்குமதியை விலை உயரச்செய்யும். இதுவும் நம் பாலன்ஸ் ஆஃப் பேமெண்ட்டுக்கு ஊறு விளைவிக்கும்.தவிர, இந்தியாவின் வர்த்தகப்பற்றாக்குறையில் (Balance of payment) சீனாவின் பங்கு 40%. இந்தக்கரன்சி போராட்டத்தினால் இது இரட்டிப்பாக உயரும். டயர், ஸ்டீல், இவற்றை சீனாவில் இந்தியாவைவிட 30% குறைவான விலைக்கு வாங்க முடியும். இப்போது, அவை இன்னும் விலை மலிவடைந்து, நம் நாட்டுத் தயாரிப்புப் பொருட்களின் நிறுவனங்கள் அவதிக்குள்ளாகும். மேக் இன் இந்தியா கொள்கைப்படி, தயாரிப்பு அதிகரிக்கப்பட்டாலும் ஏற்றுமதி செய்யமுடியாத நிலை உருவாகும். இதனால், வேலை நீக்கம் அதிகரிக்கப்படும்.நம் நாட்டுக் கரன்ஸி, அமெரிக்க டாலருக்கு எதிராக மிக நாட்களாக 60-64 ஆக இருந்தது. இப்போது 66.75க்கு உயர்ந்துவிட்டது. இது தொடர்ந்தால், நாமும் நம் ரூபாயை நாணயக்குறைப்பு செய்ய வேண்டி வரும். இதுதான் இந்தப் பிரச்னைக்கான தீர்வா? இல்லை, இருக்க முடியாது, இருக்கக்கூடாது.எனக்குத் தோன்றுபவை... இந்தியா தன் ஏற்றுமதியை, (இது சில வருடங்களாக குறைந்து வருகிறது) அதிகரிக்க வேண்டும். அடுத்தது அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்கச் செய்ய வேண்டும். கடைசியாக, பெரும் நிறுவனங்களே உற்பத்தியை பெருக்குங்கள். விழித்து எழுங்கள், உங்களால் ஆக்க முடியும் இந்தியாவை ஒரு வல்லரசாக!- லதா ரகுநாதன்
நன்றி - விகடன்

0 comments: