Wednesday, August 12, 2015

தன்மானச்சிங்கமும், இன மானப் புலியும் சந்தித்தபோது.......

'வாலு' படத்துக்கு விஜய்யின் தார்மீக ஆதரவு பெரிய உதவியாக இருந்தது என டி.ராஜேந்தர் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 14ம் தேதி 'வாலு' படத்தை வெளியிட இருப்பதால், செவ்வாய்கிழமை பத்திரிகையாளர்களை சந்தித்தார் டி.ராஜேந்தர். அச்சந்திப்பில் டி.ஆர் பேசியது:
"சினிமா துறை எக்கச்சக்கமாக மாறியுள்ளது. படத்துக்கான மினிமம் கேரண்டி தொகையை தர திரையரங்க உரிமையாளர்கள் தயாராக இல்லை. எனவே விநியோகஸ்தர்கள் தான் அனைத்து பணத்தையும் செலவழிக்க வேண்டியுள்ளது.
நேற்று வரை ’’வாலு’’ தயாரிப்பாளருக்கு பணப் பிரச்சினை இருந்தது. ஒரு வழியாக அனைத்தையும் நாங்கள் சரிகட்டியுள்ளோம்.
எனக்கு நடிகர் விஜய்யின் பால் பெரிய மரியாதை உள்ளது. அவர் நல்ல இதயம் கொண்ட தமிழர். விஜய் எனது பெரிய ரசிகர் என்பதை அவரது நண்பர்கள் சிலர் மூலம் அறிந்து கொண்டேன். நானும் அவருக்கு உண்மையிலேயே ஒரு ரசிகன்.
சினிமாவைச் சேர்ந்த யாரும் எந்த உதவியும் செய்யாத போது, விஜய் தனது மேனேஜர் பிடி செல்வகுமார் மூலமாக ’வாலு’ படத்துக்கு உள்ள சிக்கல்களை கேட்டறிந்தார். அவரது தார்மீக ஆதரவு பெரிய உதவியாக இருந்தது. பிடி செல்வகுமார் மற்றும் கோவையைச் சேர்ந்த விநியோகர் சிவாவிடம் பேசி ’வாலு’ படம் எந்த சிக்கலுமின்றி வெளியாக உதவி செய்யச் சொன்னார்.
அவர்கள் இருவரும் விஜய்க்கு தூதுவர்களைப் போல. அவர்கள் என்னுடன் நேற்று இரவு வரை இருந்து அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க உதவியாக இருந்தனர்.
நான் யாரையும் குற்றம் சாட்டப் போவதில்லை. அடிக்கடி படங்களை வெளியிடும் விநியோகஸ்தர்களுக்கு, திரையரங்க உரிமையாளர்கள் முன்னுரிமை கொடுப்பது வழக்கம் தான். எனவே அவர்கள் இன்னொரு படத்துக்கு அதிக அரங்குகளை ஒதுக்கியுள்ளனர். சென்னையை தவிர மற்ற ஊர்களில் ’வாலு’ படம் பெரிய அரங்குகளில் வெளியாகும் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.
சிம்பு சினி ஆர்ட்ஸ் மூலம் பல படங்களை வெளியிடத் திட்டங்கள் உள்ளன. எனக்கு விஜய் நடித்து வரும் 'புலி' படத்த்தின் சேலம் மற்றும் திருநெல்வேலி வெளியீடு உரிமையை வாங்க ஆசையும் உள்ளது" என்று பேசினார் டி.ராஜேந்தர்.

நன்றி - த இந்து

0 comments: