Tuesday, August 25, 2015

அகிலா முதலாம் வகுப்பு - சினிமா விமர்சனம் ( கள்ளக்காதல் கதை)

நன்றி -மாலைமலர்
நாயகன் திலகராஜூம், நாயகி சுவாதிஜாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தால், யாருடைய உதவியும் இன்றி தனித்து வாழ்ந்து வருகிறார்கள். 

இவர்களுக்கு அகிலா என்ற பெண் குழந்தை பிறக்கிறது. அவள் முதலாம் வகுப்பு படித்து வருகிறாள். மெக்கானிக் செட்டில் வேலை செய்யும் திலகராஜ், சொந்த முயற்சியில் முன்னேற துடிக்கிறார். இதனால், இவர் வேலையிலேயே தனது முழு கவனத்தையும் செலுத்தவதால், குடும்பத்தை சரிவர கவனிப்பதில்லை. இது சுவாதிஜாவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. 

இந்நிலையில், அந்த ஊருக்கு வரும் பள்ளி ஆசிரியர், சுவாதிஜா மீது கண் வைக்கிறார். சுவாதிஜாவுக்கும் தனது கணவன் தன்னிடம் அன்யோன்யமாக பழகி நீண்டநாள் ஆவதால், அவர்மீது ஆசைப்படுகிறார். ஒருகட்டத்தில் இருவரும் ரகசிய உறவு வைத்துக்கொள்கிறார்கள். 

சுவாதிஜாவை பிரிய முடியாத ஆசிரியர், இருவரும் வீட்டை விட்டு ஓடிசென்று திருமணம் செய்துகொள்ள சுவாதிஜாவை வற்புறுத்துகிறார். ஆனால், தனது குடும்பத்தை பிரிய சுவாதிஜாவுக்கு மனமில்லை. ஆசிரியரை பிரியவும் மனமில்லை. 

இரண்டு மனநிலையில் இருக்கும் சுவாதிஜா கடைசியில் என்ன முடிவெடுத்தார் என்பதே மீதிக்கதை. 

நாயகன் திலகராஜ் கிராமத்து இளைஞனாக பளிச்சிட்டாலும், ஓரளவுக்கு நடித்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். நாயகியுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளிலாவது கொஞ்சம் அழகாக நடித்திருக்கலாம். சுவாதிஜா படத்தில் அளவான கவர்ச்சியுடன் வலம் வந்திருக்கிறார். குழந்தையிடம் பாசம் காட்டும் தாயாகவும், கணவனின் அன்புக்காக ஏங்கும் காட்சிகளிலும் இன்னும் கொஞ்சம் நடிப்பை வரவழைத்திருக்கலாம். 

ஆசிரியராக வருபவருக்கு இந்த படத்தில் நல்ல வாய்ப்பு வழங்கியிருக்கிறார். ஆனால், அதை அவர் சரிவர பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றுதான் சொல்லவேண்டும். சிறு குழந்தை அகிலா, தனது வயதுக்கு மீறிய நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறது. 

இயக்குனர்கள் சுரேஷ்-சரண் இருவரும் இணைந்து இந்த படத்தை இயக்கியிருக்கிறார்கள். சமூகத்திற்கு ஏதோ ஒரு கருத்தை கூறவேண்டும் என்று முயற்சி செய்து படத்தை எடுத்திருக்கிறார்கள். ஆனால், சரியில்லாத காட்சியமைப்புகள் மற்றும் கதாபாத்திரங்களை வேலை வாங்க முடியாத திறமை இல்லாதது ஆகியவற்றால் தோல்வியடைந்திருக்கிறார்கள். படத்தில் எந்தவொரு காட்சியையும் ரசித்து பார்க்க முடியாதது ரொம்பவும் வருத்தமே. 

சுபி இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான். பின்னணி இசை ரொம்பவும் சொதப்பல். காட்சிக்கு ஏற்றவாறு பின்னணி இசையை கொடுக்காமல் ரசிகர்களை எரிச்சலையடைய வைத்திருக்கிறார். சந்திரசேகர் ஒளிப்பதிவும் சுமார் ரகம்தான். 

மொத்தத்தில் ‘அகிலா முதலாம் வகுப்பு’ பாஸாகவில்லை.

0 comments: