Saturday, August 29, 2015

தனி ஒருவன் - சினிமா விமர்சனம்

அண்ணன் 'ஜெயம்' ராஜா (இப்போது மோகன் ராஜா) இயக்கத்தில் மீண்டும் இணைந்திருக்கிறார் ஜெயம் ரவி. ஆனால், இது வேற மாதிரி. தொடர்ந்து ரீமேக் படங்களாகவே அளித்து வந்த இந்த சகோதரக் கூட்டணி இப்போது முதல் முறையாக அசல் சினிமாவில் கரம் கோத்துள்ளது.
இந்த அசல் விஷயம் மட்டுமின்றி, கடல் படத்துக்குப் பிறகான அரவிந்த் சுவாமியின் மறு மறுவருகையும் எதிர்பார்ப்பை சற்றே எகிறவைத்தது.
ஆனால், நம் எதிர்பார்ப்பையும் தாண்டி, நமக்கு சிறப்பு விருந்து அளிக்கும் 'தனி ஒருவன்', தமிழ் சினிமாவில் தனது அழுத்தமான கால்களைப் பதித்துள்ளான்.
அரவிந்த் சுவாமிக்கு தன் தந்தைக்காக கொலைப்பழி ஏற்கும் சிறுவனாக ப்ளாஷ்பேக்கில் அறிமுகம். சிறார் சீர்திருத்தப் பள்ளியில் இருந்து திரும்பும் அவர், 'கடலை'க் கடந்து அதிரடி கெட்டப்பில் வருகிறார். இம்முறை எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்துவிடுகிறார்.
'பேராண்மை'யில் போராடிய ஜெயம் ரவிக்கு மீண்டும் செம தீனி கிடைத்துள்ளது. போலீஸ் ஆஃபிஸராக அவர் மக்களுக்காக தனி ஒருவனாகவே சாகசங்கள் நிகழ்த்துகிறார். கதைப்படி தீய சக்திகளுக்கு எதிராக மட்டுமல்ல, படத்தையும் ரசிகர்களிடம் விறுவிறுப்பு குறையாமல் கொண்டுவந்து சேர்த்துவிட்டதில் ரவிக்கு ஜெயம்!
அரவிந்த் சுவாமியின் அத்தனை வியூகங்களையும் முறியடித்து நம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுபவர்தான் அதிரடி நாயகன் ஜெயம் ரவி. ஆனால், படம் முழுக்க வந்து நம்மை ஆக்கிரமிப்பது அரவிந்த் சுவாமியே!
இடைவேளைக்கு சிறிது நேரத்துக்க்கு முன்பான அரவிந்த் சுவாமியின் என்ட்ரி... கடைசி ப்ரேம் வரைக்கும் அந்த கேரக்டருக்கான ஜஸ்டிஃபிகேஷன்... தமிழ் சினிமாவில் சமீபகாலத்தில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒப்பிடத்தகுந்த ஸ்ட்ராங்கான வில்லன் சித்தரிப்பும் கனக்கச்சிதமான வெளிப்பாடும் பார்க்கவில்லையென்றே சொல்லலாம். அல்லது அரிதாகத்தான் பார்த்திருக்கிறோம்.
நயன்தாரா வெறும் தமிழ் சினிமாவுக்கு ஊறுகாய் ஹீரோயினாக இல்லை என்பதை இப்படத்தில் மீண்டும் நிரூபித்துவிட்டார். வசன உச்சரிப்பிலும், உடல் மொழியிலும் தன் சகல பிரதாபங்களையும் முன்வைக்கும் தம்பி ராமையாவின் நகைச்சுவை படத்தின் தடத்தை உறுத்தாதவண்ணம் நம்மை ஈர்க்கிறது. மற்றபடி நாசர், ஜெயம் ரவி நண்பர்களாக வரும் நான்கு பேர், வில்லனாக வரும் என்று எல்லாருமே பக்காவாக பொருந்துகிறார்கள்.
நல்ல தொழில்நுட்ப ரீதியான ராம்ஜியின் ஒளிப்பதிவு, ஹிப் ஹாப் ஆதியின் பின்னணி இசை, கோபி கிருஷ்ணா எடிட்டிங் அனைத்துமே படத்தின் வேகத்தோடு பாய்ந்து வருகிறது.
ஓர் அதிரடி த்ரில்லர் படம் என்றால் கண்டிப்பாக போர் அடிக்காத பாய்ச்சல் இருக்கவேண்டும். அந்த வகையில் ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் வைத்து படத்தில் அங்கங்கே திரைக்கதையில் இயக்குநரின் விளையாட்டு பளிச்.
தனி ஒருவன் அப்படி சாதாரணமாக வேகமான படம் என்று இல்லாமல், படத்தில் நிறைய இடங்களில் இயக்குநர் தன்னோட புத்திசாலித்தனத்தையும் காண்பித்துள்ளார். அதற்கான பிரதிபலிப்பு அரங்கு முழுவதும் கைத்தட்டலில் தெரிகிறது.
மற்றபடி, போரடிக்காத ஆக்‌ஷன் படத்தில் சின்னச் சின்ன சறுக்கல்கள்... முதல்பாதியில் அவ்வப்போது ஜெயம் ரவி கருத்து கந்தசாமியாக மாறிவிடுவதுதான். அந்த ஒரே ஒரு டூயட் கூட படத்தின் வேகத்தை குறைத்துவிடுகிறதோ என்றும் தோன்றுகிறது.
கத்தி, துப்பாக்கி, ரமணா, ஏழாம் அறிவு, பேராண்மை போன்ற படங்களின் நல்ல அம்சங்கள் எல்லாம் கலந்து ஒரு உல்டாவாக இல்லாமல் தரமான கலவையாக மிளிர்கிறான் தனி ஒருவன்.
ஜெயம் ராஜா எனும் இயக்குநர் எம்.ராஜா, கடந்த 4 வருடங்களாக இந்த ஸ்க்ரிப்டைத் தான் எழுதிக் கொண்டிருந்தாரா? இவ்வளவு திறமையான திரைக்கதையாசிரியர் எதற்கு இவ்வளவு நாள் இந்த மாதிரி ஒரு சொந்தக் கதையை எடுக்காமல், மொழிமாற்றுப் படமாகவே இயக்கிக் கொண்டிருந்தார் என்று நிறைய கேள்விகள் எழுவதை தவிர்க்கமுடியவில்லை.
அந்த எல்லா கேள்விகளுமே படத்துக்கு வரும் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ்தான் நல்ல பதிலாக இருக்கும். மொத்தத்தில், விறுவிறுப்பு சினிமா விரும்பிகள் தவறவிடக்கூடாத படம் இது

நன்றி - த  இந்து