Saturday, August 22, 2015

திகார் - சினிமா விமர்சனம்

நன்றி - மாலைமலர்

சென்னையில் லோக்கல் ரவுடியாக இருக்கும் பார்த்திபன், மிகப்பெரிய தாதாவை போட்டுத்தள்ளிவிட்டு, பெரிய டானாக மாறுகிறார். பார்த்திபனால் கொல்லப்பட்ட தாதாவின் அண்ணன் தேவன், பார்த்திபனை கொலை செய்ய திட்டமிடுகிறார். ஒருகட்டத்தில் பார்த்திபனுடன் இருப்பவனை கைக்குள் போட்டுக்கொண்டு பார்த்திபனையும், அவரது மனைவியையும் கொன்றுவிடுகிறார். 

பார்த்திபன் மகனையும் காரில் வெடிகுண்டு வைத்து கொன்றுவிடுகிறார். 23 வருடங்கள் கழிந்த பின்னர், தேவன் சென்னையில் மிகப்பெரிய டானாக இருக்கிறார். ஆயுதம் கடத்தும் தொழிலில் கொடிகட்டி பறக்கும் இவரை, தகுந்த ஆதாரங்கள் கிடைக்காமல் கைது செய்ய முடியாமல் போலீஸும் தவிக்கிறது. இந்நிலையில், இறந்துவிட்டதாக நினைத்த பார்த்திபனின் மகன் உயிரோடு திரும்பி வந்து இவர்களது தொழிலுக்கு இடையூறாக இருக்கிறான். 

ஒருகட்டத்தில் அவனையும் தீர்த்துக்கட்ட நினைக்கிறார் தேவன். அவனுடைய மாமாவான மதுவை கடத்தி வைத்துக்கொண்டு, அவனை தீர்த்துக்கட்ட பார்க்கிறான். ஆனால், அவனுடைய மாமா மது, இவன் பார்த்திபன் மகனே இல்லை என்று போட்டு உடைக்கிறார். அதிர்ச்சியடையும் தேவன், அவன் யாரென்று யூகிக்கும்முன் பார்த்திபனின் உண்மையான மகன் உன்னி முகுந்தன் அவர்கள் முன் வருகிறான். அதேசமயம் அங்கு போலீசும் வர, தேவன் தனது அடியாட்களுடன் தப்பிக்கிறார். 

பின்னர், உன்னி முகுந்தனின் வீட்டுக்கு சென்று அவனது மாமா மதுவை தீர்த்துக்கட்டுகிறார். அவர் இறப்பதற்கு முன், அவர் மூலம், தனது அப்பா, அம்மாவை கொன்றவன் யார் என்பதை தெரிந்து கொள்கிறார் உன்னி முகுந்த். பின்னர், அவர் எப்படி தனது எதிரிகளை துவம்சம் செய்தார்? என்பதே மீதிக்கதை.

படத்தில் பார்த்திபன், மது, உன்னி முகுந்தன், மனோஜ் கே.ஜெயன், காதல் தண்டபாணி, தேவன் ஆகியோர் மட்டுமே தெரிந்த முகங்கள். மற்றபடி எல்லாமே புதுமுகங்கள்தான். இதில் பார்த்திபன் மிகப்பெரிய டானாக நடித்திருக்கிறார். கோட் சூட் போட்டுக் கொண்டாலே டான் என்ற கலாச்சாரத்தை இப்படத்திலும் இயக்குனர் கையாண்டிருப்பது நகைச்சுவையாக இருக்கிறது. ஆனால், பார்த்திபனுக்கு சுத்தமாக அது எடுபடவில்லை. இதுவரை மென்மையான மற்றும் நக்கலான கதாபாத்திரங்களில் ரசித்த இவரை டான் வேடத்தில் ஏனோ ரசிக்க முடியவில்லை.

உன்னி முகுந்தன் தான் இப்படத்தின் ஹீரோ என்றாலும், இப்படத்தில் நடித்திருக்கும் அனைவரையுமே ஹீரோ போலவே காட்டியிருக்கிறார் இயக்குனர் பேரரசு. படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவரும் திரையில் தோன்றும் பொழுதெல்லாம் அவர்களுக்கென்று ஒரு அறிமுகம், ஸ்லோ மோஷன் காட்சிகள் என வைத்து நமக்கு யார் ஹீரோ என்ற குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குனர். 

படத்தின் நீளத்திற்காக சில காட்சிகளை வேண்டுமென்றே திணித்ததுபோல் தெரிகிறது. அதுவும் படத்திற்கு மிகப்பெரிய பலவீனம். குறிப்பாக, உன்னி முகுந்தனும், வில்லனின் மகனும் குத்துச்சண்டை போடும் காட்சி வேண்டுமென்றே திணிக்கப்பட்டது போல் இருக்கிறது. அதேபோல், படம் முழுக்க துப்பாக்கி சத்தம்தான் கேட்டுக் கொண்டே இருக்கிறது. இதுவே, படத்தை பார்க்க ரொம்பவும் சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

எல்லா கதாபாத்திரங்களையும் மிகைப்படுத்தியே காட்டியிருப்பதால், எதையும் முழுவதுமாக ரசிக்க முடியவில்லை. இதுவரை மாஸ் ஹீரோக்களை வைத்து படமெடுத்த பேரரசு, இதில் சாதாரண ஹீரோக்களை வைத்து மாஸ் காட்ட முயற்சித்திருக்கிறார். ஆனால், அது தூசாக போய்விட்டது. 

இசையில் பாடல்கள் எதுவும் மனதில் பதியவில்லை. பின்னணி இசையும் ஒரே இரைச்சல்தான். ஒளிப்பதிவு சுமார் ரகம்தான்.

மொத்தத்தில் ‘திகார்’ பாதுகாப்பு இல்லை.

0 comments: