Monday, October 20, 2014

15 வருடத்தில் 1 1/2 கோடி ரேப் -வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் தேவை -ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.எஸ். கிருஷ்ணன் நேர்காணல்


தீண்டாமையின் பரிணாம வளர்ச்சிதானே வன்கொடுமை? - ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.எஸ். கிருஷ்ணன் நேர்காணல்

இந்தியாவில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் மிகவும் மூத்தவர் பி.எஸ். கிருஷ்ணன். பல்வேறு சமூகப் பிரிவு மக்களுக்கான திட்டங்களை உருவாக்குவதில் இந்திரா காந்தி முதல் இன்றைய பிரதமர் வரை பல பிரதமர்
களோடு இணைந்து செயலாற்றிய ஆழ்ந்த அனுபவம் பெற்றவர். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் உருவாக் கத்திலும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான மண்டல் கமிஷன் பரிந்துரைகள் அமலாக்கத்திலும் பங்காற்றியவர். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பல சட்டதிட்டங்கள் உருவானதில் முக்கியப் பங்குவகித்தவர் பி.எஸ்.கிருஷ்ணன். ‘தி இந்து’வுக்காக அவரைச் சந்தித்தோம். 


இந்த நவீன காலத்தில் சில சாதிகளுக்கு மட்டும் ஏன் ஒரு தனிச் சட்டம்?
சாதிக்கு அல்ல. சமூகப் பிரிவுக்கு ஒரு நீதி எனும் சமூக முறைதான் பல நூறு வருஷமாக நம் நாட்டில் இருக்கிறது. சுதந்திரம் கிடைத்த பிறகுதான் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றானது. ஆனால், அது பெரும்பாலும் காகிதத்தில்தான் இருக்கிறது. தலித் மக்களும் பழங்குடிகளும் இப்போதும் அடிமட்டத் திலேயேதான் உள்ளனர்.
உதாரணமாக, ஒரு வயதுக்குள் சாகிற குழந்தைகளில் தலித் குழந்தைகள் அதிகம். மக்கள் தொகையில் சிறுபான்மையாக இருக்கும் தலித் மக்கள், விவசாயத் தொழிலாளிகளின் எண்ணிக்கையில் பெரும்பான்மையாக உள்ளனர். தலித் மக்களின் சராசரி ஆயுட்காலம் மற்றவர்களைவிடக் குறைவாகத்தான் இருக்கிறது. இதெல்லாம் சொல்வதென்ன?
இப்படித்தான் ரொம்ப காலமாக நடக்கிறது. அப்படிப்பட்ட மக்களுக்குச் சமூகப் பாதுகாப்பைத் தந்து முன்னேற்ற வேண்டும் என்பது இந்திய அரசியல் சாசனத்தின் கட்டளை. அதை நிறைவேற்றத்தான் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மாதிரியான சில சட்டங்களைக் கொண்டுவந்தோம். அரசியல் சாசனத்தில் வன்கொடுமைகள் என்ற வார்த்தை இல்லை. வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி பதிவான வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் 90 சதவீதத்துக்கும் மேலே விடுதலை ஆகிவிடுகிறார்கள்; அதனால், அவையெல்லாம் பொய் வழக்குகளே. இந்த வழக்குகளால் மற்றவர்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படுகின்றன. எனவே, வன்கொடுமை தடுப்புச் சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும். இப்படியெல்லாம், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் எதிர்ப்பாளர்கள் வாதங்களை முன்வைக்கிறார்களே?


 
அரசியல் சாசனத்தின் 17-வது பிரிவு தீண்டாமை முற்றாக ஒழிக்கப்படுகிறது என்று சொல்கிறது. அதில் தீண்டாமை என்ற வார்த்தை மட்டும்தான் இருக்கிறது என்பது சரிதான். ஆனால், 46-வது பிரிவில் தலித்-பழங்குடி மக்களை சமூக அநீதியிலிருந்தும், எல்லா விதமான சுரண்டல் வடிவங்களிலிருந்தும் பாதுகாக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறதே. தீண்டாமையின் பரிணாம வளர்ச்சிதானே வன்கொடுமைகள்?
வழக்குகளில் பலர் விடுவிக்கப்பட்டுவிடுவதால் பொய் வழக்குகள் என்ற வாதத்தில் பொருள் இல்லை. கீழவெண்மணி படுகொலைகளில் 44 பேர் உயிரோடு கொளுத்தப்பட்டனர். குற்றம்சாட்டப்பட்ட எல்லோரும் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர். அதனால் 44 பேர் கொல்லப்பட்டது பொய்யாகிவிடுமா? சுதந்திரத்துக்குப் பிறகு தலித் மக்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படவே இல்லையா?
மற்ற சமூகப் பிரிவுகளின் மக்கள் முன்னேறும் வேகத்தில் இல்லை என்றாலும், தலித் மக்கள் முன்னேற்றப் பாதையில் பயணம் செய்துகொண்டுதான் இருக்கின்றனர். ஆனால், அடிப்படையான மாற்றம் எதுவும் இன்னும் வரவில்லை.
முன்னேற்றத்துக்கான பயணத்தில் ஏற்படுத்தப்படும் தடைகள்தான் இந்த வன்கொடுமைகள். சுதந்திரத்துக்குப் பிறகு அவை அதிகரித்திருப்பதன் காரணம் அதுதான். 1959-ல் தமிழ்நாட்டில் முதுகுளத்தூர் வன் கொடுமைகள் நடந்தன. 1968-ல் கீழவெண்மணி சம்பவம். நமக்கும் சுதந்திரம் கிடைத்துவிட்டது என்று நம்பிக்கையோடு தலித் மக்கள் நிமிர்ந்து நிற்க முயன்ற இடங்களிலெல்லாம் இந்தியா முழுவதும் வன்கொடுமைகள் அதிகரித்தன. அதையெல்லாம் கணக்கில் கொண்டுதான் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை உருவாக்கினோம். 


வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஏற்கெனவே இருக்கும் போது, எதற்கு இன்னொரு அவசரச் சட்டம்?
வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989-ல் அமலுக்கு வந்தது. ஆனால், அது எப்படி அமல்படுத்தப்பட்டது தெரியுமா? 1995 முதல் 2010 வரைக்குமான காலகட்டத்தில் சுமார் ஒன்றரைக் கோடிப் பேர் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில், பலர் காவல்நிலையம் வந்து புகார் தரும் வலுகூட இல்லாமல் இருக்கின்றனர். அப்படி தைரியம் வந்து, காவல் நிலையப் புகார் தரும் தலித்துகள், பழங்குடிகளின் புகார்களெல்லாம் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் பதிவுசெய்யப்படுவதில்லை.
அப்படிப் பதிவுசெய்ய வைக்கவே ஒரு பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது. அப்படிப் பதிவு செய்தவர்கள் சுமார் ஐந்தரை லட்சம் பேர். அந்த வழக்குகளெல்லாம் காவல் நிலையம் தாண்டி நீதிமன்றத்தின் படி ஏறுவதே பெரிய விஷயம். அப்படி ஏறிய வழக்குகள் இழுத்தடிக்கப்பட்டு, இறுதியில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றத்தை நிரூபிக்க முடியவில்லை என்று விடுதலை செய்துவிடுவதுதான் இங்கு அதிகம் நடக்கிறது. வன்கொடுமை வழக்கு களில் நீதிமன்றத்தால் 0.5% முதல் 8% பேர் வரை மட்டுமே தண்டனை விதிக்கப்படுகிறார்கள்.
வாச்சாத்தி மலைக் கிராமத்தில் பழங்குடி மக்கள் மீது வன்கொடுமைத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தையே எடுத்துக்கொள்ளுங்களேன். நீதி கிடைப்பதற்குக் கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் ஆனதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அதிலும், பாதிக்கப் பட்டோருக்கு சட்டப்படி அரசு தர வேண்டிய நஷ்டஈடு இன்னமும் வழங்கப்படவில்லை. ஆனாலும், வன்கொடுமைகள் செய்த அதிகாரிகள் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் தண்டனை பெற்றது இந்த வழக்கில்தான்.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் தப்பிப்பதற்குப் பல ஓட்டைகள் ஏற்பட்டு விட்டன. அவற்றைச் சரிசெய்யவே அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அவசரச் சட்டம் காலாவதி ஆகிவிட்டதே?
ஆமாம். கடைசி நேரத்தில் இந்த அவசரச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறாமல் போய்விட்டது. தற்போது நாடாளுமன்ற நிலைக்குழுவுக்குப் போயிருக் கிறது. மீண்டும் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப் படும் என நம்புகிறேன். 


இன்னும் எவ்வளவு நாட்களுக்குத்தான் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தேவைப்படும்?
தீண்டாமையும் வன்கொடுமைகளும் இல்லாமல் போகும்போது இத்தகைய சட்டங்களும் இல்லாமல் போகும். சாதி சமத்துவம் ஏற்படும்வரை ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவு மக்களுக்குத் தனிச்சட்டம் என்பதுதான் ஜனநாயகம். இந்திய ஜனநாயகத்தின் வடிவமும் ஆன்மாவும் சமூகநீதியே. சாதி சமத்துவம் ஏற்படாமல் இந்தியாவில் ஜனநாயகமே மலராது. சாதி சமத்துவத்தின் வழியாக ஜனநாயகத்துக்குள் நாம் பயணம் செய்வதற்கான வழிகளில் ஒன்றாக வன்கொடுமை தடுப்புச் சட்டம் இருக்கும். இந்தியாவில் அதிசயம் அற்புதங்கள் எதுவும் நடக்கவில்லை என்றால், மிகவும் குறைவாக மதிப்பிட்டாலும்கூட வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் தேவை ஒரு நூறாண்டு காலத்துக்கு இருக்கும். 


த. நீதிராஜன்,
தொடர்புக்கு: [email protected]


நன்றி - த ஹிந்து 

0 comments: