Saturday, October 18, 2014

நிகழ்நேரப் பதிவு: ஜெ. - பெங்களூர் டூ சென்னை

1.40 PM: நீதிபதி கையெழுத்திட்ட தீர்ப்பு நகல் பிற்பகல் 2.30 மணியளவில் பரப்பன அக்ரஹார சிறைத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் சிறைத்துறை நடைமுறைகளை முடித்து ஜெயலலிதா ஜாமீனில் விடுவிக்கப்படுவார்.
1.32 PM: ஜெயலலிதாவை ஜாமீனில் விடுவிக்க பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா பிறப்பித்த உத்தரவின் நகல், பதிவாளர் மூலம் சிறைத்துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
1.20 PM: பரப்பன அக்ரஹார சிறைப் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. செய்தியாளர்களுக்கு அமைக்கப்பட்ட கூடாரங்கள் சேதமடையும் அளவுக்கு பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. மழையைப் பொருட்படுத்தாமலும் அதிமுகவினர் குவிந்துள்ளனர்.
1.10 PM: உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்று ஜெயலலிதாவை ஜாமீனில் விடுவிக்க பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் நகல் இன்னும் அதிமுக வழக்கறிஞர்களுக்கு கிடைக்கவில்லை. |படிக்க: தீர்ப்பு நகல் இன்னும் கிடைக்கவில்லை: அதிமுக வழக்கறிஞர்கள் காத்திருப்பு
12.55 PM: ஜெயலலிதாவை ஜாமீனில் விடுவிக்க பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா உத்தரவிட்டுள்ளதை அடுத்து தமிழகத்தில் இருந்து ஏராளமான அதிமுகவினர் பெங்களூர் விரைந்து வருகின்றனர். வாகனங்கள் அதிக அளவில் வருவதால் பெங்களூர் - ஓசூர் சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. | படிக்க: குவியும் அதிமுகவினர்: பெங்களூர் - ஓசூர் சாலையில் போக்குவரத்து நெருக்கடி
12.50 PM: ஜெயலலிதா சிறையில் இருந்து வெளியேறுவதை காண அதிமுகவினர் ஏராளமானோர் குவிந்திருப்பதால், நிலைமையை கருத்தில் கொண்டு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என எம்.என்.ரெட்டி தெரிவித்தார்.
12.44 PM: சிறை வளாகத்தில் இருந்து ஒரு கி.மீ. தூரத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பெங்களூர் போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி தெரிவித்துள்ளார்.
12.35 PM: ஜெயலலிதா, பிற்பகல் 3.30 மணிக்கு மேல் சிறையில் இருந்து வெளியேறுமாறு அவரது ஜோதிடர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
12.20 PM: பிற்பகல் 3 மணியளவில் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்படுவார்.
12.07 PM: பிற்பகல் 2 மணிக்குள், பெங்களூர் சிறப்பு நீதிமன்ற உத்தரவு பரப்பன அக்ரஹார சிறை வளாகத்திற்கு சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
12.06 PM: இளவரசிக்கு அன்பம்மாள், லோகேஷ் ஆகியோரும், சுதாகரனுக்கு புகழேந்தி, ராஜேந்திரன் ஆகியோரும் ரூ.1 கோடி மதிப்பிலான சொத்துப் பத்திரங்களை தாக்கல் செய்தனர்.
12.05 PM: சசிகலாவுக்கு லட்சுமிபதி, ராஜ் ஆகியோர் ரூ.1 கோடி மதிப்பிலான சொத்துப் பத்திரங்களை தாக்கல் செய்தனர்.
12.00 PM: ஜெயலலிதாவுக்கு ஜெயபால், குணஜோதி ஆகியோர் தலா ரூ.1 கோடிக்கான சொத்து பத்திரம் வழங்கினர் அதனை நீதிபதி மைக்கேல் டி குன்ஹா ஏற்றுக் கொண்டார்.
11.50 AM: சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோரையும் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது.
11.48 AM: உச்ச நீதிமன்ற ஆணையை ஏற்று, ஜெயலலிதாவை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது. சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி குன்ஹா இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.
11.40 AM: பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில், ஜாமீன் ஆணையை பரிசீலிக்கும் நடவடிக்கைகள் தொடங்கின.
11.30 AM: இன்று பிற்பகல் ஜெயலலிதா சென்னை வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. விமான நிலையத்தில் அவரை வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
11.20 AM: பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹாவிடம், ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி பிறப்பித்த உத்தரவின் நகல் அளிக்கப்பட்டது.
11.15 AM: தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். தமிழகத்தில் இருந்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் வந்தடைந்தார்.
11.14 AM: பெங்களூர் பரப்பன அக்ரஹார நீதிமன்ற வளாகத்திற்கு வந்தடைந்தார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
10. 50 AM: பரப்பன அக்ரஹார சிறை வளாகத்தைச் சுற்றி அதிமுகவினர் அதிகளவில் திரண்டு வருவதால் ஆயிரக்கணக்கில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
10.40 AM: ஜாமீன் சூரிட்டி வழங்க ஒருவருக்கு 2 பேர் வீதம் மொத்தம் 8 பேர் தேவைப்படுவதால் அவர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். முன்னேற்பாடாக மேலும் 8 பேரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
10. 25 AM: காலை 11 மணியளவில் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா, நீதிமன்றம் வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
10. 20 AM: ஜெயலலிதாவை வரவேற்பதற்காக வழக்கறிஞர்கள் பன்னீர்செல்வம், பரணிகுமார், பழனிக்குமார்,செல்வக்குமார் ஆகியோர் காலையில் இருந்து காத்திருக்கின்றனர்.
10.15 AM: பரப்பன அக்ரஹார சிறை வளாகத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
10.10 AM: சிறையில் இருந்து ஜெயலலிதா விடுதலையாவதை ஒட்டி பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறை வளாகத்தில் ஏராளமான அதிமுகவினர் இனிப்புகளுடன் காத்திருக்கின்றனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியது. 
இதைய‌டுத்து 21 நாட்கள் சிறை வாசத்துக்கு பிறகு அவர் இன்று ஜாமீனில் விடுதலை ஆகிறார்.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வ‌ழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் கடந்த 27-ம் தேதி அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்தது. சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்து உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து நால்வரும் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். 


thanx  - the hindu

0 comments: