Thursday, October 23, 2014

அருணாச்சலம் பன்ச் டயலாக் வந்த கதை - கிரேசியைக் கேளுங்கள் 3


சி.ரஞ்சனி மாதவன், வேலூர்.
‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தில் உங்களுக்கு ‘மார்க்கபந்து’ என்கிற பெயரை வைத்துக்கொள்ள ஏதாவது ஸ்பெஷல் காரணம்?


 
வசனம் எழுதும் முன்பாக எனக்கு மூடு ஏற்பட… VSP, அதாவது வெற்றிலை, சீவல், புகையிலை வாங்கிக்கொண்டு வந்த பொட்டலப் பேப்பரை பிரித்தால்… அதில் ‘காணவில்லை மார்க்கபந்து’ என்று போட்டிருந்தது.
‘காணவில்லை மார்க்கபந்து’ என்கிற பெயர் நீ…ள…மாக இருந்ததால் சுருக்கமாக ‘மார்க்கபந்து’ என்கிற பெயரை வைத்துக்கொண்டேன். படப்பிடிப்பில் உடன் நடித்தவர்கள் எல்லாம் ‘‘டாக்டர் வேஷத்துல நடிக்கப் போறே. அதுவும் கமல் சார் கூட. அழகா ஸ்டைலா ‘சுரேஷ், ரமேஷ்’னு வெச்சுக்காம, ‘மார்க்கபந்து’ன்னு என்ன பேரு’’ன்னு கேலி செய்தார்கள். நகைச்சுவை ஒரு உள்ளுணர்வு. அது எனக்குள் சொல்லியது ‘மார்க்கபந்து’ என்கிற பெயரைத்தான்.
இந்தப் படத்தில் கமல் சார் சொல்கிற ‘‘மார்க்கபந்து... மொதல் சந்து... அடடா பேரு கவிதை மாதிரி இருக்கே’’ என்கிற டயலாக் ஹிட்டாக, அந்தப் பெயர் எனக்குப் பயன்பட்டது. சொல்லித் தெரிவதில்லை சிரிப்புக் கலை. காமெடியை ஆராய்ச்சி செய்யாமல் அனுபவிக்க வேண்டும். லாஜிக்கை மீறிய மேஜிக்தானே ஹ்யூமர்! பி.திலக், புதுச்சேரி.
சோகம் சிரிப்பாக மாறிய சம்பவம்?
‘தென்றல்’ பத்திரிகையின் ஆசிரியர் மதுரபாரதி எழுதிய ‘ரமண சரிதம்' என்கிற புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தேன். என் நண்பன் ரவி எனக்கு வெண்பா இலக்கணம் கற்றுக் கொடுத்த நேரம் அது. ‘ரமண சரிதம்' படித்த பாதிப்பில் முழுமூச்சாக உட்கார்ந்து ‘ஒரே கல்லுல… ரெண்டு மாங்கா’ என்று ரமண சரிதத்தை 400 வெண்பாக்களில் எழுதி முடித்தேன்.
நான் ரமண பிரசாதமாக எழுதிய வெண்பாக்களை எனது நண்பரும் ‘அமுதசுரபி’ ஆசிரியருமான திருப்பூர் கிருஷ்ணன் பார்வைக்கு இமெயில் செய்தேன். ரமணப் பிரசாதத்தை அவர் ‘Pressசாதம்’ ஆக ‘அமுதசுரபி’ பத்திரிகையில் ‘ரமணாயணம்’ என்கிற பெயரில் வெளியிட்டார். அப்போது ரமணர் ‘முக்தி’ அடைந்த 400-வது வெண்பாவை எழுதிவிட்டு கேவிக் கேவி அழுதேன்.
அப்போது அங்கு வந்த என் மனைவி, எல்லோரையும் சிரிக்க வைக்கிற நான் அழுவதைப் பார்த்து ‘‘வெண்பா எழுத வரலேன்னா அழக்கூடாது. நல்லா வெண்பா தெரிஞ்சவங்கள்ட்ட கேளுங்க… அவங்க சொல்லித் தருவாங்க’’ என்று சொல்லிக்கொண்டே, நான் எழுதியதைக் கையில் எடுத்துப் பார்த்துவிட்டு ‘‘ஓஹோ… ரமணர் முக்தி அடைஞ்சுட்டாரேன்னு அழறீங்களா...’’ என்றவள், தொடர்ந்து ‘‘முக்தின்னவுடனேதான் எனக்கு ஞாபகம் வருது… மூக்குத்தி வாங்கித் தர்றேன்னு பிராமிஸ் செஞ்சீங்களே, என்னாச்சு...’’ என்று கேட்டுவிட்டு, தோள்பட்டையில் முகவாயால் இடித்துவிட்டுச் சென்றாள். ரமண சோகம் சிரிப்பாக மாறியது! ஜெ.ராதிகா, சென்னை-81.
ரஜினியுடன் ‘அருணாச்சலம்’ படத்தில் பணி

யாற்றியபோது நடந்த சுவையான சம்பவத்தைக் கூறுங்களேன்?

 
ரஜினி சாரின் ‘ஸ்ரீராகவேந்திரர்’ படத்துக்கு முதலில் நான்தான் வசனம் எழுதுவதாக இருந்தது. அந்தப் படத்தின் பூஜைக்கும்கூட நான் போயிருந்தேன். அப்போது ஒரு அலுவலகத்தில் நான் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அலுவலகத்தின் வேலை பளுவால் அந்தப் படத்தில் தொடர்ந்து என்னால் பணியாற்ற முடியவில்லை. அதில் எனக்கு ஏக வருத்தம். அடியேன் வியாழக்கிழமை வழக்கமாக செல்லும் திருவல்லிக்கேணி ராகவேந்திரரிடம் என் வருத்தத்தைச் சொல்லித் தீர்த்தேன்.
சினிமா பாஷையில் ‘கட்...’
15 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி சார் தன்னுடைய ‘அருணாச்சலம்’ படத்துக்கு என்னை அழைத்தார். ‘பன்ச்’ டயலாக்குக்காக நாலைந்து நாட்கள் மண்டையைப் போட்டு உடையோ உடை என உடைத்துக் கொண்ட எனக்கு, ஒரு வியாழக்கிழமையன்று திருவல்லிக்கேணி ராகவேந்திரர் சந்நிதானத்தில் ‘பஞ்சா’மிர்தமாக ஓர் அற்புதமான ‘பன்ச்’ டயலாக் மின்னல்வெட்டுப் போலத் தோன்றியது.
‘ராகவேந்திரர் நினைச்சார்…அருணாச்சலம் முடிச்சார்’ என்பதுதான் அந்த ‘பன்ச்’ டயலாக். அதை கொஞ்சூண்டு மாற்றி ‘ஆண்டவன் சொல்றான்… அருணாச்சலம் முடிக்கிறான்’னு எழுதிட்டுப் போய் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி சாரிடம் சொன்னேன்.
ரஜினி ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்டு தனக்கே உரிய படு ஸ்டைலான பாணியில் ‘சூப்பர்… சூப்பர்’னு ரெண்டு மூணு தடவை திரும்பத் திரும்ப சொன்னார். 15 வருஷங்களுக்கு முன்னால் ‘ஸ்ரீராகவேந்திரர்’விட்ட குறை ‘அருணாச்சலம்’ தொட்ட நிறையில் தீர்ந்தது. ‘எந்திராலயர்’ படத்துக்கு எழுதும் வாய்ப்பை எனக்கு அளித்தது அந்த ‘மந்திராலயர்!’ எம்.சங்கீதா, நாகர்கோவில்.
தியானம் செய்யும்போதுதான் எனக்குப் புதுசு புதுசாக என்னெவெல்லாமோ… மனதில் ஓடுகிறது. உங்களுக்கு?


 
நானும் எனது நண்பன் ரவியும் தினமும் மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடத்துக்குச் சென்று, நல்ல பிள்ளைகளாக அமர்ந்துகொண்டு கண்ணை மூடி தியானம்(!) செய்வது வழக்கம். இதில் என்ன வேடிக்கை என்றால், நண்பன் ரவி நிஜமாலுமே தியானம் செய்வான். எனக்குத் தெரிந்த ஒரே தியானம் ‘மத்யானம்’ மட்டும்தான்!
தியானம் செய்துவிட்டு திரும்பும்போது ரவி என்னிடம் ‘‘டேய் மச்சான்… தியானம் செய்றப்ப குண்டலினி சக்தி முதுகுத் தண்டுவடத்துல ஏறுற ஃபீலிங் வருதா’’ன்னு கேட்பான். நான் சிரித்து மழுப்பிவிடுவேன். இப்படித்தான் ஒரு தடவை நாங்கள் இருவரும் தியானம் செய்துகொண்டிருக்கும்போது, ரவியிடம் நான் ‘‘ரவி.... நெத்திக்கிட்ட சஹஸ்ராஹாரத்துல சூடா ஒரு ஃபீலிங் ஏற்படுதுடா…’’ என்றேன். சட்டென்று கண்ணைத் திறந்துப் பார்த்த ரவி, ‘‘முட்டாள்! பின்னாடி தள்ளி உக்காருடா. சுவாமி ஆரத்தி காட்டுறார், அதான் சுடுது… புருவம் பொசுங்கிடப் போகுது…’’ என்றான். 


ஆர்.ராஜேஷ், திருப்பதி.
கிரேசி… அது என்ன ஆறறிவு?
ஆறாவது அறிவுடன் நிறுத்திக்கொள்பவன் முட்டாள். ஏழாவது, எட்டாவது என்று தொடர்ந்து படித்து… கல்லூரிக்குப் போய் டிகிரி வாங்குபவனே புத்திசாலி!
எம்.எஸ்..சாரங்கன், தூத்துக்குடி. 


பாவம் செய்தவன் நரகம் செல்கிறான். புண்ணியம் செய்தவன் சொர்க்கம் செல்கிறான். எதுவும் செய்யாதவன்? 


எதுவும் செய்யாதவன் திரும்பவும் பூமியில் பிறக்கச் செல்கிறான்! 


 நன்றி -இந்து

1 comments:

Yarlpavanan said...

சிறந்த கருத்துப் பகிர்வு
தொடருங்கள்