Tuesday, October 21, 2014

குமுதம் புக்கின் சம்பந்தி ஆனது எப்படி ? - பெண் பார்த்த படலம்-கிரேசியைக் கேளுங்கள் - 2

அ.கோவிந்தராஜன், வேலூர்-9
கெட்டிமேளச் சத்தத்தை கேட்கும் போதெல்லாம் உங்களுக்கு என்ன ஞாபகம் வரும், ஏன்?


 
‘கெட்டி மேளம் கெட்டி மேளம்’ என்று கூவும்போது, என் காதில் ‘சோத்தைக் கொட்டிக்க ஏளும்…. கொட்டிக்க ஏளும் (அய்யங்கார் பரிபாஷையில் ஏளும் என்றால் எழுந்தருளுதல்) என்று விழும். பத்தாத குறைக்கு ‘மாங்கல்யம் தந்துனானேன... மம ஜீவன ஹேதுனா’ என்பது என்னுடைய காதில் செவிக்குணவாய் ‘மாங்கல்யம் தந்துனானேன... மம (என்னுடைய) போஜனம் முந்துனா’ என்று விழ, நான் முதல் பந்திக்கு முந்துவேன். 



கே.கலையரசன், திருவாரூர்.
நீங்கள் பெண் பார்த்த படலத்தை விவரியுங்களேன்?
குமுதம் பப்ளிஷர் பார்த்தசாரதியின் தங்கை மகளை எனக்கு மணமுடிக்க, என் குடும்பத்தினர் ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். அப்போது காத்தாடி ராமமூர்த்திக்காக அடியேன் எழுதிய ‘அய்யா அம்மா அம்மம்மா’ என்கிற நாடகத்தை, குமுதம் ஒட்டுமொத்த ஆசிரியர் குழுவினருக்கு பிரத்தியேகமாக போட்டு காட்டுமாறு, குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி. அண்ணாமலை கேட்டதாக குமுதம் பால்யூ வந்து என்னிடம் சொன்னார்.
எங்களுக்கு இருந்த விளம்பர ஆசையில் நானும் காத்தாடியும் அந்த வேண்டுகோளை விழுந்தடித்துக்கொண்டு ஒப்புக்கொண்டோம்.
‘அய்யா அம்மா அம்மம்மா’நாடகம் நடப்பதற்கு இன்னும் இரண்டு நாட்களே மிச்சமிருந்தன. மறுபடியும் பால்யூ ஓடிவந்து, ‘நீ போடப்போற அந்த நாடகத்தில் லேடி ஆர்டிஸ்ட்டுங்க இருக்கவே கூடாது. மனசில் வெச்சுக்கோ’ என்று மூச்சிரைக்க சொல்லிவிட்டுப் போனார்.
கடைசி நேரத்தில் என்ன செய்வதென்றே தெரியாமல் முழி பிதுங்கினோம். வேறு வழியே இல்லாமல், நானே நாடகத்தில் வரும் கதாநாயகி ஜானகி என்கிற பாத்திரத்தை ஏற்றுக்கொண்டேன்.
நாடகம் ஜரூராக ஆரம்பித்தது. அரங்கத்தின் முதல் வரிசையில் எஸ்.ஏ.பி., பார்த்தசாரதி, ரா.கி.ரங்கராஜன், ஜ.ரா.சுந்தரேசன் என்று குமுதம் ஆசிரியர் குழாமே அமர்ந்திருந்தது. அப்போது ரா.கி.ரங்கராஜன் பார்த்தசாரதியிடம், ‘சார் உங்க தங்கை பொண்ணுக்குப் பார்த்த பிள்ளை யார் தெரியுமா?’ என்று ரகசியமாக கேட்க, ‘அதோ... பொம்பள வேஷத்துல இருக்கானே, அவன்தான் கல்யாணப் பையன்’ என்றார் உரக்க. ஆக, எனது பெண் பார்க்கும் படலம் பெண் வேஷத்தில் உள்ள ‘பிள்ளைப் பார்க்கும் படலம்’ ஆக முடிந்தது. 



சு.ரவிச்சந்திரன், கடலூர்.
‘பசி வந்தால் பத்தும் பறந்து போகும்’ என்கிறார்களே. அது என்ன ‘பத்து?


 
அது ‘பத்து’ இல்ல ஸ்வாமி! ‘பற்று!
‘ஞானப் பசி வந்தால் பற்றும் பறந்து போகும்!’
சக்தி சம்பத், வானவன்மாதேவி. 



‘ஒருவரின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண்மணி இருப்பதாக’ சொல்வார்கள். உங்கள் வெற்றிக்குப் பின்னால்?
என் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் பெண், ஒரு ஆண். பெண் வேடமிட்ட ஆண் ‘அவ்வை சண்முகி’.
உலக நாயகன் நட்பால் அடியேன் உலகம் சுற்றிய நாடகன் ஆகியுள்ளேன். இந்தியாவில் நான் நாடகம் போட்டால் இவர் எனது ‘விசிட்டிக் கார்டு’. அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் நாடகம் போடும்போது இவர் எனது ‘விசா கார்டு!’ என்னையும் இவரையும் இணைத்தது நகைச்சுவை என்ற ‘அம்பலிகல் கார்டு!’ (தொப்புள்கொடி).
கி.சந்திரசேகரன், ஆரணி. 



பானை பிடித்தவள் பாக்யசாலி என்பதற்கு என்ன சார் அர்த்தம்?
ஆக்ச்சுவலா பாத்தா அது ‘ஆனை பிடித்தவள் அதிர்ஷ்டசாலி’ என்றுதான் ஒரிஜினலாக இருந்திருக்க வேண்டும். பின்னால், ‘ஆனை’ என்பது மருவி பானையாகிவிட்டது. அதிர்ஷ்டசாலி மருவி பாக்யசாலி ஆகிவிட்டது. அந்த ஆனை, அதாவது தும்பிக்கையானை (பிள்ளையார் கையை) ‘பேழை வயிறும் பெரும்பாரக் கோடென்று’ அகவல் பாடிய அவ்வையார் பிடிக்க முடியாது. அவர் பிரம்மச்சாரி. ஆகவே, அவ்வையார் பிள்ளையாரின் காலைப் பிடிக்க, பிள்ளையார் தனது தும்பிக்கையால் அவ்வையாரைப் பிடித்து அலேக்காக தூக்கி ‘சுந்தரர், சேரமானுக்கு’ முன்பு கைலாசத்தில் சேர்த்து, அவ்வையாரை அதிர்ஷ்டசாலி (பாக்கியசாலி) ஆக்கியது. 



ஆதிக்‌ஷா, சென்னை-5
பெரிய பெரிய மகான்கள் எல்லாம் தாடி வைத்திருப்பதன் காரணம் என்ன?
மெளனத்தை மீறி வாய்தவறி பேச்சு எழுந்தால் ’தாடி’ மூடியாக இருந்து தடுத்தாட்கொள்ளத்தான்!
சீதாராமன், திருப்பூண்டி. 


’நழுவாமல் பதில் சொல்லவும்’ என்று யாராவது உங்களிடம் கேள்வி கேட்டால் என்ன செய்வீர்கள்?
கேட்டவர் கேள்விப் பழம் நழுவி, என் பதில் பாலில் விழும் அளவுக்கு திரித்து விடுவேன். பாலும் திரியும்.
- கேட்போம்…
கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள - [email protected]


thanx- the hindu 

1 comments:

Yarlpavanan said...

சிறந்த கருத்துப் பகிர்வு
தொடருங்கள்