Monday, October 20, 2014

கை, சூரியன், தாமரை, இலை... இடம்சுட்டிப் பொருள் விளக்குக? கிரேசியைக் கேளுங்கள் - 1

கேசவ் வரைந்த கண்ணன் ஓவியம்
கேசவ் வரைந்த கண்ணன் ஓவியம்
இது… வாசகர்களின் கேள்வி மேளா. கிரேசி மோகனின் தவுசண்ட்வாலா. வாசகர்கள் கேள்விக்குறி, மேற்கோள்குறி ஆச்சர்யக்குறி போட்டு தாளித்த எந்தக் கேள்வியை வேண்டுமானாலும் கேட்கலாம். ருசியான பதில்கள் சுடச்சுடக் கிடைக்கும். 

 
சக்திசம்பத், சேரன்மாதேவி.
உங்க ‘நண்பேன்டா’ லிஸ்ட்டை சொல்லுங்களேன்?
லிஸ்ட்டைச் சொன்னால் ‘ஹிண்டு’ தமிழ் ‘குண்டு’ தமிழ் ஆகிவிடும். ஆகவே, முக்கியமான முதல் மூவரை சொல்லிவிடுகிறேன். முதலில் உற்சவராக கிரேசி உலகளக்க உதவிடும் மூலவர் புனே வாழ் நண்பன் சு.இரவியைப் பற்றி சொல்கிறேன். ‘நண்பேன்டா’ வார்த்தையைப் பிரித் தால் ‘நண்பன் + ஏன்டா’. ஏன்டாவை ‘எதுக்குடா’ என்றும் கொள்ளலாம். தோள் கொடுப்பான் தோழன் என்பார்கள்.
செத்த பிறகு தோள் கொடுப்பது நண்பனா, எதிரியா? நமக்கு தெரியவா போகிறது. இருக்கும்போதே என்னை எழுதவைத்து ‘தாள்’ கொடுத்தவன் பால்ய நண்பன் ‘இரவி’. எனக்கு ‘ஆனா’ கற்றுக் கொடுத்துவிட்டு இப்போது ‘பூனா’ (புனே)வில் வசிக்கிறான். எனக்கு இவன்தான் ‘எழுத்தறிவித்த இரவியன்’. ஏ.ஆர்.ரஹ்மான் போல் சொல்கிறேன் ‘எல்லாப் புகழும் இரவியனுக்கே’. ‘கிரேசி யைக் கேளுங்கள்’ எழுதத் தொடங்கும் முன் ‘கடவுள் வாழ்த்து’ இந்த பதில். ஆர்.கே.பாலா, சென்னை-63
நீங்கள் ஒரு வெண்பா ஸ்பெஷ லிஸ்ட். ஒரு வெண்பா ப்ளீஸ் நண்பா?
எனது இரண்டாவது ‘நண்பேன்டா’ எழுத்தாளர் ‘இரா.முருகன்’. செல்லில் ‘நகர் வெண்பா’ என்று தினமும் ஒரு வெண்பா எழுதி அனுப்பி என்னை உசுப்பியவர். ராவோடு ராவாக முதல் ‘நண்பேன்டா’ ரவியிடம் வெண்பா இலக்கணம் பயின்றேன். என் வரையில் வெண்பாவும் காமெடியும் கசின் பிரதர்ஸ். வெண்பாவுக்கு ஈற்றடிதான் பன்ச் லைன். காமெடிக்கு கவுன்ட்டர் பஞ்சதந்திர லைன்.
‘சொல்லித் தெரிவதில்லை சிரிப்புக் கலை’. எனது வெண்பா வெறிக்கு தீனிபோட்டது மூன்றாவது ‘நண்பேன்டா’ கார்ட்டூனிஸ்ட் கேசவ். தினமும் கடந்த ஆறு வருஷங்களாக ‘கண்ணன்’ ஓவியம் அதிகாலையில் அனுப்புவார். எனது காலைக் கடன் அந்தக் கண்ணனுக்கு வெண்பா எழுதுவது. ‘ஹிண்டு’ கேசவ்… கண்ணன் ‘தொண்டு’ கேசவ். கிருஷ்ண ப்ரேமி போல இவர் Brushண ப்ரேமி. IPL சமயத்தில் கேசவ் வரைந்த கண்ணனுக்கு அடியேனின் வெண்பா இது:
Krishna For Today
‘தாய்ப்பசு தாள்பார்க்க, சேய்க்கன்று மேல்பார்க்க,
Bowl பண்ணும் கண்ணன் பரவசம் - தூள்கேசவ்;
சென்னைக்(கு) இவன் Spin செய்திட IPL,
தொன்னைக் Cup தோனிக்குத் தான்’.
எஸ்.கதிரேசன், துறையூர். அது என்ன ‘கிரேசி' மோகன்?
வீட்டுத் தாத்தா வைத்த பெயர் ‘மோகன்’. எனக்கு விகடன் தாத்தா கொடுத்த அடைமொழி ‘கிரேசி’. அந்த அடைமொழியால் இன்று என் ‘காட்டுல அடை மழை’. நான் பட்ட ஒரே கடன் வி‘கடன்’. 


செந்தூர் பாரி, கோயம்புத்தூர்-4.
ரஜினியிடம் பிடித்தது?
அவரது ஆன்மிகம்.
பி.எம்.கமலினி, வேலூர்-8.
கமலிடம் பிடித்தது?
அவரது ‘ஆண்’மிகம்.
பா.மீ.ரவிச்சந்திரன், திருவாரூர்-2
‘பயந்தாங்கொள்ளி’ சிறுகுறிப்பு வரைக?
‘பயம்தான் சாவு. செத்தால் கொள்ளி. So, பயந்தால் கொள்ளி. அது மருவி பயந்தாங்கொள்ளி!
கே.எம்.கிருஷ்ண பாரதி, புழுதிவாக்கம்.
கிரேசிக்கு ‘டான்ஸ்’ ஆடத் தெரி யுமா?
அறுபதைத் தாண்டியாகிவிட்டது அண்ணாச்சி. இப்ப ‘நான் ஆடாவிட்டா லும் Knee ஆடும்’.
ஆர்.நாதன், ஆழ்வார்க்குறிச்சி.
நீங்கள் குட் பாயா, பேட் பாயா?
விழுந்து விழுந்து சிரிக்க வைக்க முயலும் விட் (Wit) Boy. இதுதான் என்னோட Life Boy. ‘Survival Of The Fittest’. 'வாயுள்ள புள்ள பொழச்சுக் கும்’னு சொல்வாங்க. இப்போ இருக்கிற Stressfull வாழ்க்கையில் ‘Survival Of The Wittest’தான் சரி. முடிந்தால் ‘சிரி… சிந்தி’. முடியாவிட்டால் ‘சிரி… மேலும் சிரி’.
எல்.சவீதா நாராயணன், பெங்களூர்-11.
விரல்விட்டு எண்ணுவீர்களா, வாய்விட்டு எண்ணுவீர்களா… ஏன்?
யோசிக்கும்போது எனக்கு நகம் கடிக்கும் வழக்கம் உண்டு. வெறித்தனமாக யோசிக்கும் சில சமயங்களில் என்னையே நான் முழுங்கியிருக்கேன். அதனால் அடியேன் ‘வாய்க்குள் விரல் விட்டு எண்ணுவேன் (யோசிப்பேன்). விரலுக்கு எட்டியது வாய்க்கு எட்டுமில்லையா!, Finger Tips-ல் உள்ளது Tounger Twist ஆகி, காமெடி பன்ச் ஆக ‘வாய்’ப்பு உண்டு.
எம்.ஹெச்.தீன், கூத்தாநல்லூர்.
குட்டக் குட்ட குனிவீர்களா?
குனிவேன். நான் குனியக் குனிய குட்டுபவரும் குனிவார் அல்லவா! ‘இன்னா செய்தாரை ஒறுத்தல்; அவர் நாண - நன்னா குனிய வைத்தல்’.
சந்தானகிருஷ்ணன், பாபநாசம்.
சமீபத்தில் பார்த்த நகைச்சுவை படம்?
எவ்வளவுதான் நகைச்சுவை படமாக இருந்தாலும், சமீபத்தில் (First row) அமர்ந்து பார்த்தால் கண் கெட்டுவிடும். நூறு தடவைக்கு மேல் நான் பார்த்து ரசித்த நகைச்சுவை படம் ‘காதலிக்க நேரமில்லை’. அந்த எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய டென்சிங் ‘சித்ராலயா கோபு சார்’. அந்த ‘டென்சிங்’ கோபுவுடன் ஒப்பிடும்போது, அடியேன் ‘Nine சிங், Eight சிங்’தான்.
அ.பிரவீன், குளச்சல்.
டைரக்டர் ‘பாலசந்தர்’ பற்றி ஒரே வார்த்தையில் கூற முடியுமா?
‘பாலசந்தர்’ இன்று சினிமாவில் சாதித்த பலருக்கு ‘லாபசந்தர்’.
கே.சசிதரன், ராமநாதபுரம்.
கை, சூரியன், தாமரை, இலை... இடம்சுட்டிப் பொருள் விளக்குக?
அர்ச்சுனனைக் காத்த அச்சுதனின் அபயக் ‘கை’. ஆண்டாள் பாடிய ‘கதிர்’ மதியம் போல் முகம். சரண் அடைந்தவரைக் காக்கும் செங்கமலத் திருவடித் ‘தாமரை’. பிரளய காலத்தில் பாலனவன் மிதந்த ‘ஆலிலை’. இடம்சுட்டிப் பொருள் விளக்கம் கேட்டதால், இடம் - பிரளய பூமி. சுட்டி - சுட்டிக் காட்ட எவருமே இல்லாததால், ஆலிலையில் மிதந்த ‘சுட்டி’ப் பயல் கண்ணன். பொருள் - பரம்பொருள்.
ஜே.வி.நாகராஜன், திருமுல்லைவாயில்.
‘16-வது வாய்ப்பாடை கடகட வென்று ஒப்பித்தால் 500 ஏக்கர் நிலம் பரிசு’ என்று கடவுள் வந்து சொன்னால், என்ன செய்வீர்கள்?
கடகடவென்று சொல்லிவிடுவேன். பதினாறோன் - கடகட, பதினாறு ரெண்டு - கடகட… இப்படியே பதினாறு பதினாறு -கடகட. ஒப்பிக்க சொன்ன கடவுள் பராசக்தியாக இருந்தால் ‘500 ஏக்கர் வேண்டாம் தாயே. காணி நிலம் போதும் பராசக்தி’ என்று பாடுவேன்.
- கேட்போம்...


நன்றி - த ஹிந்து

1 comments:

Yarlpavanan said...


சிறந்த கருத்துப் பகிர்வு
தொடருங்கள்