Saturday, August 08, 2015

சண்டி வீரன் - சினிமா விமர்சனம்

பாலா தயாரிப்பில் வெளியான படம், சற்குணம் இயக்கத்தில் கிராமத்து கதைக் களம் உள்ள படம், அதர்வா - ஆனந்தி - லால் நடித்த படம்... இந்த காரணங்களே 'சண்டி வீரன்' படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.
நய்யாண்டியில் விட்ட இடத்தை சற்குணம் சண்டி வீரனில் பிடித்துவிட வேண்டும் என்ற சினிமா ரசிகனின் சின்ன ஆசையுடன் படம் பார்க்க தியேட்டருக்குள் நுழைந்தேன்.
'சண்டி வீரன்' என்ன மாதிரியான உணர்வைக் கொடுக்கிறது? சந்தோஷமா? சலசலப்பா? சறுக்கலா?
சிங்கப்பூரில் இருக்கும் அதர்வா சொந்த கிராமம் நெடுங்காட்டுக்கு வருகிறார். ஆனந்தியைக் காதலிக்கிறார். ஆனந்தியின் அப்பா லால் எதிர்க்கிறார். இதற்கிடையில் நெடுங்காட்டுக்கும், பக்கத்து கிராமம் வயல்பாடிக்கும் பிரச்சினை வெடிக்கிறது. அதர்வா என்ன செய்கிறார்? ஆனந்தியின் காதல் என்ன ஆனது? பிரச்சினை தீர்ந்ததா? என்பது மீதி திரைக்கதை.
ஆனந்தியைக் காதலிக்கும்போதும், வெட்டியாய் திரியும்போதும், பிரச்சினை என்று வந்ததும் பொறுப்பாய் மாறும் போதும் கதாபாத்திரத்தோடு பொருந்தி விடுகிறார் அதர்வா. லாலுடன் முறுக்கிக் கொண்டும், ஆனந்தியுடன் காதலில் கிறக்கம் காட்டியும் நன்றாகவே நடித்திருக்கிறார்.
பிளஸ் டூ மாணவியாகவே அச்சு அசலாக இருக்கிறார் ஆனந்தி. நடிப்பதற்கு பெரிதாய் ஸ்கோப் இல்லை என்றாலும், கண்களாலேயே காதல் செய்யும் போதும், புன்னகையால் வசீகரிக்கும்போதும் மனதில் நிறைகிறார்.
லால் முரட்டுத்தனமான கேரக்டரில் நச்சென்று நடித்திருக்கிறார். ஊரே ஒத்துப்போகும் போது வீம்பு காட்டுவது, பூட்டிய அறைக்குள் அழுவது என்று தனியாய் தெரிகிறார்.
அருணகிரி இசையில் அலுங்குறேன் குலுங்குறேன் பாடல் ரசிக்க வைக்கிறது. சபேஷ் முரளியின் பின்னணி இசை எந்த ஈர்ப்பையும் வரவழைக்கவில்லை.
முத்தையாவின் கேமரா கிராமத்து மண் வாசனையை அள்ளி எடுத்து அழகாய் தந்திருக்கிறது.
தஞ்சாவூரை சுற்றிய கிராமங்களின் இயல்பை அப்படியே பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் சற்குணம். அதிலும் மக்களின் மிக முக்கிய வாழ்வாதாரப் பிரச்சினையை கையில் எடுத்ததற்காக சற்குணத்தைப் பாராட்டலாம்.
ஆனால், அதை சரியாக சொல்லாமல், காதலுக்கு மட்டுமே முன் பாதியில் முக்கியத்துவம் கொடுத்தது, பின் பாதியில் கதைக்குள் வந்து காமெடியாக முடித்தது என்று கிளிஷே சினிமாவைக் கொடுத்திருக்கிறார்.
'களவாணி' படமும் அடிக்கடி நினைவில் வந்து போகும் அளவுக்கு காட்சிகள் ஒத்துப்போகின்றன. ரொமான்ஸ் காட்சிகளும் புதிதில்லை. ஆக்‌ஷன் படம் என்று நினைத்தால் சண்டைக் காட்சிகள் கூட அதிகம் இல்லை.அதர்வாவின் ஐடியாவும், அதை செயல்படுத்தும் விதமும் சாதாரண சாகசமாகவே இருக்கிறது.
மொத்தத்தில் 'சண்டி வீரன்' டைட்டிலுக்கும், படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது சலசலப்பை ஏற்படுத்தியதுதான் மிச்சம்.

நன்றி - த இந்து

0 comments: