Tuesday, January 28, 2014

தெகல்கா தருண் தேஜ்பால் vs பெண்நிருபர் அளித்த பாலியல் அத்துமீறல் புகார்

கடந்துபோன ஆண்டு பல வகைகளில் நம்மைப் பாலியல் வன்முறை பற்றிய புரிதலை நோக்கி இட்டுச் சென்றுள்ளது. சட்ட வரையறைகளின் போதாமைகள் பற்றியும் பொதுபுத்தியின் கயமைகளைப் பற்றியும் ஊடகங்களின் பரபரப்புச் செயல்பாடுகளைப் பற்றியும் அது நம்மை விவாதிக்க வைத்துள்ளது. ஏராளமான மக்கள் தெருவில் இறங்கிப் பாலியல் வன்முறைக்கு எதிராகத் தங்கள் குரலை உயர்த்தினார்கள். இரு புதிய சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன. இவை முக்கியமானவை.குறிப்பிட்ட சில சம்பவங்களில்தான் இப்படிப்பட்ட போராட்டங்களும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன என்ற ஆதங்கமும் கோபமும் பலருக்கும் இருந்தாலும் இந்த விவாதம் வன்முறைக்கு எதிரான பெண்களின் வரலாற்றுப் போராட்டத்தில் அதனளவில் ஒரு முன்னோக்கிய அடி என்பதை நாம் மறுக்க முடியாது.


இந்தப் புரிதலைப் பல பெண்கள் தம்மீது, தம் உடல்மீது, தம் மாண்பின் மீது பலத்த காயங்களைச் சுமந்துகொண்டு ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்பது இதில் முதன்மையான விஷயம்.


தெகல்கா இதழில் நிறுவன ஆசிரியரான தருண் தேஜ்பால்மீது தெகல்காவின் இளம் பெண்நிருபர் அளித்த பாலியல் அத்துமீறல் புகார்தான் இந்த விவாதத்தின் இப்போதைய முக்கியச் செய்தி.


முதல்நாள் இரவு தேஜ்பால் தெகல்காவிலிருந்து விலகுகிறார் என்று செய்தி வந்தது. “ஒரு தவறான புரிதலில் எடுத்த முடிவு பொருந்தாத செயலாக மாறி இப்போது நாம் நம்பும் அனைத்தையும் பிரச்சினைக் குள்ளாக்கியிருக்கிறது. அந்தச் செய்தியாளரிடம் நான் ஏற்கனவே நிபந்தனைகளற்ற மன்னிப்புக் கோரிவிட்டேன். பரிகாரம் வெறும் வார்த்தைகளால் இருக்க முடியாது என்று நினைக்கிறேன். என்னைச் சாட்டையால் அடிக்கும் தவத்தை நான் மேற்கொள்ள வேண்டும். எனவே நான் அடுத்த ஆறு மாதத்திற்குத் தெகல்கா வின் ஆசிரியர் பதவியிலிருந்தும் தெகல்கா அலுவலகத்திலிருந்தும் என்னை விடுவித்துக் கொள்ளும் முடிவை முன்வைக்கிறேன்” என்ற ஒரு ‘இலக்கியத்தரம் வாய்ந்த சுயபரிசோதனை, சுய தண்டனை மற்றும் சுய தீர்ப்பை’ எழுதிச் சம்பவத்தை முடிக்க அவர் முற்பட்டார்.
தெகல்கா பத்திரிகையின் நிர்வாக ஆசிரியரும் பொதுவெளியில் பெண்களின் மீதான வன்முறைகளுக்குக் குரல் கொடுத்து வந்தவருமான ஷோமா சௌத்ரியிடம் பாலியல் வன்முறைப் புகாரை அந்த நிருபர் அளித்தார். அதன் நகலும் வெளியானது.
கோவா போலிஸார் நடவடிக்கையைத் தொடங்கிப் பிரச்சினையைச் சட்டத்தின் வளையத்திற்குள் கொண்டு சென்றதும் தேஜ்பாலின் தரப்புப் புகார் அளித்த பெண் நிருபரின் மீது அவதூறுகளைவீச ஆரம்பித்தனர்.


 அதுதானே நம் தேசிய பண்பாடு! அந்தப் பெண்ணின் விருப்பத்தோடுதான் கோவாவில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் லிஃப்டில் 'அவர் வேண்டாம் என்று மறுத்தும்' தான் அவரிடம் “பொருந்தாத” செயலில் ஈடுபட்ட தாகத் தேஜ்பால் சொன்னார். கோவா போலிஸ் அவரை விசாரிக்க முயற்சி செய்தவுடன் தேஜ்பால் ஆதரவாளர் கள் என்ற போர்வையில் இலக்கியவாதிகளும் பத்திரிகை யாளர்களும் அவருக்கு ஆதரவாக அந்தப் பெண்ணை இழிவுபடுத்திச் சமூக வலைதளங்களிலும் பத்திரிகை களிலும் அவதூறுகளை அள்ளித்தெளிக்கத் துவங்கினர்.ஒரு குற்றம் நடந்ததற்குப் பாதிக்கப்பட்டவரையே காரணமாக்குவது ஆணாதிக்கச் சமூகத்தின் வெளிப்பாடு. தருண் தேஜ்பாலும் அவரது ஆண் நண்பர்களும் இலக்கிய மற்றும் பத்திரிகை சகாக்களும் அவருக்கு வக்காலத்து வாங்குவது அவர்களின் 'புரிதலின் உணர்வு நிலையின்' வெளிப்பாடு.இந்த அவதூறுகளுக்குச் சட்ட ரீதியாகவும் பெண்ணிய நோக்கிலும் பதில் சொல்ல முடியும், பதில் சொல்லப்பட்டிருக்கிறது.
தேஜ்பால் மீது பாலியல் குற்றத்திற்கான குற்றச்சாட்டை அளித்துள்ள இளம் பத்திரிகையாளர் தன் அறிக்கையில் குறிப்பிடுவது:“கடந்த இரு வாரங்களாக எனக்குக் கிடைத்துள்ள பரந்துபட்ட ஆதரவு என்னை நெகிழச் செய்துள்ளது. அதேசமயம் என்னுடைய புகாரை ஒரு தேர்தல் கால அரசியல் சதியாகச் சித்திரிக்கும் முயற்சிகள் என்னை மிகவும் பாதிக்கின்றன. என்னைக் கவலைக்குள்ளாக்குகின்றன. இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை நான் முழுமையாக மறுக்கிறேன். கீழ்க்காணும் வாதங்களை வைக்கிறேன்.பெண்கள் தங்களுடைய வாழ்வையும் தங்கள் உடல்களையும் தமக்கானதாக அவற்றின் மீது தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்காக நடத்தும் போராட்டம் நிச்சயமாக ஒரு அரசியல் போராட்டம்தான். ஆனால் பெண்ணிய அரசியலும் அதன் கவலைகளும் நம்முடைய குறுகிய கட்சி அரசியல் உலகத்திலிருந்து மிகவும் விரிந்து பரந்தவை. எனவே பாலினம், அதிகாரம் மற்றும் வன்முறை குறித்து எழும் ஒவ்வொரு முக்கிய விவாதத்தையும் தங்களைப் பற்றிய ஒன்றாக மாற்ற முனையும் அரசியல் கட்சிகளின் உளவேட்கையை அவர்கள் கட்டுப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.”
ஆனால் இந்தச் சர்ச்சைகளிலும் பல பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் சர்ச்சைக்குப் பதிலாக நிலவும் ஒரு கனத்த நிசப்தத்திலும் ஒரு விஷயத்தைப் பார்க்கத் தவறுகிறோம். அது பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் ஒரு பெண்ணின் வலி. இந்த வலி உடல்ரீதியாக மனரீதியாக அவர்களை ஆழ்த்தும் நிராதரவான, தனிமையான துக்கம் நிறைந்த வெற்றிடம் நம்முடைய விவாதங்களில் கவனம் பெறுவதேயில்லை.தெகல்கா விவகாரத்திலும் பாதிக்கப்பட்ட இளம் நிருபர் தான் மிகவும் மதித்த தன் தந்தையின் நண்பரான தன் தோழியின் தகப்பனான, எழுத்தாளர், இந்திய ஊடகவியலின் சூப்பர்மேன் என்று பலராலும் கருதப்படும் தேஜ்பாலால் மிகக் கீழ்த்தரமான முறையில் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டுள்ளார். அவர் எழுதிய புகார் கடிதங்களில் அவருடைய அதிர்ச்சியும் குழப்பமும் துயரமும் கோபமும் வெளிப்படுகின்றன.“ஓயாத வலிநிறைக்கும் இச்சம்பவத்தின் மிகக் கடினமான பகுதி இதற்கான சரியான வார்த்தை, வரையறையைக் கையாள்வதுதான். என்னை நான் ஒரு “பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவளாக” பார்க்கத் தயாராக இருந்தேனா என்பது எனக்குத் தெரியவில்லை. என்னுடைய நண்பர்கள், உடன் பணிபுரிவோர், ஆதரவாளர்கள், எதிரிகள் அனைவரும் என்னை அப்படிப் பார்ப்பதை ஏற்கத் தயாராக இருந்தனரா என்றும் தெரியவில்லை. ஆனால் ஒரு குற்றத்தைப் பாதிக்கப்பட்டவர் வரையறுப்பதில்லை, சட்டமே வரையறுக்கும். இந்தச் சம்பவத்தில் சட்டம் தெளிவாக இருக்கிறது. தேஜ்பால் செய்தது சட்ட வரையறைப்படி பாலியல் வன்புணர்வுதான்.

பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களில் அவற்றைத் தடுக்கப் புகார் அளிக்கும் தயக்கங்களில் மிக முக்கியமான ஒரு விஷயத்தை அவர் விவாதப் படுத்தியிருக்கிறார்.


தேஜ்பாலின் மதவாதத்திற்கு எதிரான செயல்பாடுகளின் பேராலும் தெகல்காவின் சிறப்புமிக்க பத்திரிகைச் செயல்பாடுகளின் பெயராலும் தேஜ்பாலின் உலகத்தரம் வாய்ந்த எழுத்தின் பெயராலும் அவரால் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு பெண்ணின் வலியை, துயரத்தைப் பற்றி ஒரு அணுவளவு புரிந்துணர்வும் இல்லாமல் புறந்தள்ளிக் கருத்துக்களை, அவதூறுகளை அள்ளிவீசுவது கீழ்த்தரமான ஆதிக்கச் செயல்பாடேயன்றி வேறெதுவும் இல்லை.


எந்தக் கொம்பனையும் பெண் விஷயத்தை வைத்து வீழ்த்திவிடலாம் என்று ஒரு இளம் ஆண்பத்திரிகையாளர் குமுறியிருக்கிறார். அதைப் படித்தால் இந்த ஆண்கள்தான் எவ்வளவு கஷ்டப்பட்டு வீட்டிற்கு வெளியே வந்து, தங்களைத் தூண்டிலில் சிக்கவைக்க ஓயாமல் அலையும் பெண்களின் பிடியில் சிக்காமல், பணிபுரிந்து வருகிறார்கள் என்ற பரிதாபம்தான் தோன்றுகிறது.ஊடகங்களில் பெண்கள்ஆண், பெண் பணிபுரியும் எல்லாத் துறைகளிலும் பாலியல் துன்புறுத்தல் இருக்கிறது. ஏனெனில் பாலியல் வன்முறை பாலியல் சார்ந்ததோ செய்யும் தொழிலால் தீர்மானிக்கப்படுவதோ ஆண்களின் மரபணுக்கோளாறோ மேலைக்கலாச்சார ஊடுருவலோ அல்ல. அது அதிகாரம் பற்றியது.ஆசிரியர்களாகவும் மருத்துவத் தாதிகளாகவும் இருப்பதே பெண்களுக்கு உகந்த பாதுகாப்பான வேலைகள் என்ற நிலை உடைபட்ட கடந்த இருபது ஆண்டுகளில் ஊடகங்களில் பெண்கள் ஒரு பெரும் புயலென உள்நுழைந்து பணியாற்றி வருகிறார்கள். ஆசிரியத் தொழிலிலும் தாதிகளுக்கும்கூடப் பாலியல் துன்புறுத்தல் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது என்பது அவர்கள் நடத்தும் போராட்டங்களிலிருந்து பார்க்க முடிகிறது. பெண்கள் எல்லாத் துறைகளிலும் கால்பதித்து முன்னகரும்போது அதிகாரம் அவர்களுக்கு மட்டுமே உரியது என்று நம்பும் ஆண்களின் மேதாவித்தனங்களும் உடைந்து நொறுங்குகின்றன.

தமிழக ஊடக உலகமும் இதற்கு விதிவிலக்கல்ல. பெண் நிருபர்களை மிகக் கேலியாகவும் ஏதோ அலங்காரப் பொருட்களாகவும்தான் தமிழ் ஆண்பத்திரிகையாளர்கள் தொடக்கக் காலத்தில் எதிர்கொண்டனர். உடை குறித்த பாலியல் ததும்பும் கேலியை எதிர்கொள்ளாமல் பெண்ஊடகவியலாளர்கள் ஒரு நாளைக்கூடக் கடக்க முடியாது.


 எழுதும் கட்டுரைகளோ தொகுக்கும் தொலைக்காட்சி செய்தியையோவிடத் தோற்றம், அவள் அணியும் உடை இவைக் குறித்துக் கிடைக்கும் வழிசல்கள்தான் அதிகம்.“சென்னைப் பெண்கள்லாம் பார்த்தாலே படுக்க ரெடி” “நீங்கள்லாம் இப்படி இறுக்கமா டிரெஸ் போட்டுட்டு வந்தா எப்படி மனுஷன் பிரஸ் மீட்ட கவனிக்க முடியும்?” “இப்படிக் கையத் தொடைமேல வச்சிப் பேசாதம்மா, என்னமோ ஆகுது எனக்கு.” செய்தி அறைகளில் எதிர்கொண்ட உரையாடல்களை இப்படி எழுதிக்கொண்டே போகலாம்


.
முதலில் வருவது அதிர்ச்சியும் அவமானமும்தான். யாராவது பார்த்தால் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற அச்சம். நீங்காத அருவருப்பு பல நாட்களுக்கு உறுத்தும். அவநம்பிக்கையும் குற்ற உணர்ச்சியும் வந்து வந்து போகும்.ஆனால் இதுகுறித்துப் புகார் அளிப்பது அல்லது இதை யாரிடமாவது பகிர்ந்துகொள்வது என்பதுகூடப் பெரும்பாலும் சாத்தியமில்லை. அப்படிப் பேசுபவர்களிடமிருந்து விலகிச் செல்வதுதான் பெரும்பாலான பெண்களுக்கு இருக்கும் சாத்தியம். ஆனால் அப்படிப் பேசுபவர் செய்தி ஆசிரியராகவோ தலைமை நிருபராகவோ இருந்தால் அது வேலையில் ஒதுக்கப்படுவதிலும் வாய்ப்புகள் மறுக்கப்படுவதிலும் போய் முடியும். சன் தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் ராஜாமீது அளிக்கப்பட்ட புகாரைப் பார்த்தால் இது புரியும். தொடர்ந்து அந்தச் செய்தி வாசிப்பாளர் அதிகாலை ஷிஃப்டிற்கு ஒதுக்கப்பட்டார் என்பது அவர் விலகிச்செல்ல முயன்றதற்கு அளிக்கப்பட்ட தண்டனை.தெகல்காவின் பெண்பத்திரிகையாளருக்கும் ஒரு வாரம் தேவைப்பட்டது தன்மீது நிகழ்ந்த வன்முறையைப் புகாராகப் பதிவு செய்ய. இந்த மன உளைச்சலை, அலைகழிப்பை உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.கங்குலிமீது பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்துள்ள சட்ட மாணவி தெளிவாகப் பகிர்ந்துள்ளார்.ஏ.கே.கங்குலி விவகாரமே அந்த மாணவி, அவர் தற்போது வழக்கறிஞர், கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்துக் கங்குலியின் பெயரைக் குறிப்பிடாமல் எழுதிய ஒரு வலைப்பதிவில்தான் வெளியில் வந்தது.“காந்தி ஒருமுறை கூறினார், ‘வாதங்களைவிட மிகப் பலம் வாய்ந்த ஒன்று என்னிடம் இருக்கிறது, அதன் பெயர் அனுபவம்’ என்று. இந்த வார்த்தைகளில் இருந்துதான் நான் எழுதும் இந்தப் பதிவிற்கான சக்தி, மதிப்பு எனக்குக் கிடைத்தது. என்னுடைய அனுபவம் மட்டுமல்ல, ஆனால் நம் நாட்டில் இப்போது நடந்துவரும் விவாதத்தில் அந்த அனுபவம் கொண்டுவரக்கூடிய வெளிச்சத்திலிருந்து இதை எழுதுகிறேன்”என்று தொடங்கி அவர் நாட்டின் மிக உயர்ந்த நீதிபீடமாகத் தங்களுடைய இறையாண்மையை மிகத் தெளிவாகக் கட்டிக்காத்துவரும் இந்திய உச்சநீதிமன்றத்தின் ஆணாதிக்கக் கட்டுமானத்தை அசைத்துப் போடப்போகும் தன் கட்டுரையைத் தொடர்கிறார். கடந்த டிசம்பர் மாதம் நிர்பயாவுக்கு நிகழ்ந்த கோரப் பாலியல் வன்முறையை எதிர்த்து வரலாறு காணாத ஒரு போராட்டத்தைத் தில்லி தன் வீதிகளில் கண்டது. அதே மாதத்தில் தன் கல்லூரி இறுதியாண்டின் விடுப்பில் சட்ட உதவியாளராக நீதிபதி ஏ.கே.கங்குலியிடம் பணிபுரிந்த அந்த மாணவி அவரின் தாத்தா வயதொத்த ஏ.கே.கங்குலியால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானார். அதை அவர் கடந்த நவம்பரில்தான் வலைப்பதிவாகப் பதிந்தார்.“ இந்தச் சம்பவத்தில் என்னைத் துன்புறுத்தியது எது? இந்தச் சமூகத்தின் வளர்ப்பான நான் அந்தப் பிரச்சினையிலிருந்து உடனடியாக வெளி யேறிவிட்டேன். ஆனால் அதுவா என்னை மிகவும் பாதித்தது? நான் 'ஏற்கவே முடியாத' ஒன்றை ஏற்றுக்கொண்டுவிட்டேன் என்பதா என்னைப் பாதித்தது? நான் மிக அதிகமாக அதை யோசிக்க யோசிக்க எனக்குப் பிடிபட்டது இதுதான்.எனக்கு நேர்ந்ததைப் பற்றிப் பேசவோ ஏன் யோசிக்கவோ ஒரு கட்டமைப்போ மொழியோ எனக்குத் தட்டுப்படவில்லை என்பதுதான். என்னுடைய குழப்பத்தின் இயலாமையின் மையமாக இருந்தது.


 அந்தச் சம்பவம் என்னை ஆழமாகப் பாதித்த அதே நேரத்தில் எனக்கு அவர்மீது கோபமோ வெறுப்போ வரவில்லை. பதிலாக நான் பெரிதும் மதித்த ஒருவர் என்னிடம் அப்படி நடந்துகொண்டது பற்றிய அதிர்ச்சியும் வலியுமே உணர்ந்தேன். எல்லையற்ற சோகம்தான் என்னை மிகத் தீவிரமாகப் பற்றிக்கொண்ட உணர்வு. ஆனால் இப்படிப்பட்ட மனநிலை எனக்குப் புதிதாக இருந்தது. இப்படிப்பட்ட சம்பவங்கள் பற்றிச் ‘சரியான’ எதிர்வினையாக நான் நினைத்திருந்தவற்றோடு முற்றிலும் மாறாக அவரின் செய்கைகளை நான் புரிந்துகொண்டு அவரை மன்னிப்பதும் இல்லையென்றால் நான் அவரை ‘நல்ல மனிதர்’ என்றே தொடர்ந்து நினைப்பதும் ஒரு முட்டாள்தனமான நிலைப்பாடு என்று பட்டது.இந்த மனநிலை அன்று தில்லியில் போராட்டக்காரர்கள் வெளிப்படுத்திய தீவிரமான அறச்சீற்றத்திற்கு முன் முற்றிலும் வேறுபட்டும் இருந்தது.”
தன்னை மிகவும் காயப்படுத்திய பாலியல் வன்முறையை எதிர்த்துத் தில்லி போராட்டக்காரர்களைப் போல் சீற்றத்துடன் தன்னால் எதிர்கொள்ள இயலவில்லை என்பதைக் குறித்துத் தொடர்ந்து அந்தப் பதிவில் எழுதியிருக்கிறார்.இதேபோல் தெகல்கா விவகாரம் வெளியில் வந்த மூன்றாவது நாள் ஒரு பெண் பத்திரிகையாளர் ஐந்து ஆண்டுகளுக்கு முன் தனக்கு ‘தி ஹிந்து’ நாளிதழில் பணிபுரியும்போது ஏற்பட்ட பாலியல் தொந்தரவு குறித்து வலைப்பதிவு எழுதியுள்ளார். தன்னிடம் ஆபாசமாகப் பேசிய ஒரு சீனியர் பிசினஸ் செய்தியாளர் குறித்துத் தான் அளித்த புகார்கள் பலனில்லாமல் போனது குறித்தும் எழுதும் அவர் “அது என்னுடைய முதல் வேலை, அதை விட்டால் எனக்கு வேலை கிடைக்காது என்று நான் அப்போது நினைத்ததால் அவர்கள் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியபோது அதை நான் நம்பினேன்.” அதற்குப் பின்னரும் துன்புறுத்தல் தொடர்ந்ததாலும் அவரைத் தவிர வேறு பெண் நிருபர்களும் பாதிக்கப்பட்டதாலும் அந்த ஆண் செய்தியாளர் அவரிடம் மன்னிப்பு கேட்கும் நிலை வந்தது என்று கூறும் அவர், “அத்தனை புகார்களுக்குப் பின்னும் அவர் வேலையில் இருந்து நீக்கப்படவில்லை. விடுப்பில் சென்று பின் ராஜினாமா செய்தார்” என்று குறிப்பிடுகிறார். “என்னைப் பொருத்தவரை என் வாழ்வின் மிகக் கடினமான நாட்கள் அவை. அவர் என்னிடம் பேசியவை, என்னுடைய எதிர்ப்பைப் பதிவு செய்ய நான் பட்ட நரகவேதனை. நான் புகார் அளித்தபின் என்னுடன் பணிபுரியும் ஆண்கள் என்னைப் பார்த்த விதத்தையும் நான் மறக்கமாட்டேன். சிலர் ‘அய்யோ நான் உன்னுடன் பேசமாட்டேன். நானும் துன்புறுத்தினேன் என்று நீ நாளை சொல்லிவிட்டால்’ என்று கிண்டல் செய்தார்கள். நான் வேலையை விட்டு விலகிய நாளில் பலர் என்னிடம் ‘நான் ஒரு பத்திரிகையாளரின் வேலையைக் கெடுத்து அவர் வாழ்க்கையை அழித்துவிட்டதாகக் கூறினார்கள்” என்று அவர் எழுதுகிறார். ஊடக நிறுவனங்களில் பாலியல் துன்புறுத்தல் மிகச் சாதாரணமாக நடைபெறுவதையும் ஊடகங்களின் பெண்வெறுப்பு மனநிலையையும் வெளிக்கொண்டுவந்திருக்கும் தெகல்கா விவகாரம் பெரும் பனிக்கட்டியின் ஒரு சிறு நுனிதான் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
இதுபோலப் பலரும் கடந்த ஒரு மாதத்தில் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் பற்றியும் அதுகுறித்த தங்கள் புகார்கள் எந்த விளைவையும் ஏற்படுத்தாதது குறித்தும் பொதுவெளியில் வைத்திருக்கிறார்கள். இவர்களில் பலரும் படித்தவர்கள், சுய சம்பாத்தியமும் ஆளுமையும் உள்ளவர்கள்.ஒரு பெண் தனக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தலைப் பொதுவாக வெளியில் சொல்லத் தயங்கும் சமூகம் இது. மேலும் அதிர்ச்சியும் அவமானமும் வலியும் நிறைந்த இந்த அனுபவத்தைப் பேசுவதற்குக்கூட வெளியற்றதாகவே குடும்பக் கட்டமைப்பு இருக்கிறது. இவ்வளவையும் தாண்டி ஒரு பெண் புகார் அளிக்க முன்வருவது மிகப் பெரிய விஷயம். இப்படியான துணிச்சலும் நியாய உணர்வும் உள்ள பெண்களின் கண்ணீரின் ரத்தத்தின் மேல்தான் பெண்களைப் பாதுகாக்கும் பல சட்டங்கள் எழுந்துள்ளன. இந்தச் சட்டங்கள்தான் ஓரளவிற்காவது நமது அரசு சமத்துவத்தை நம்புகிறது என்பதை நமக்குத் தெரிவிக்கும் சான்றுகள்.
அதேசமயம் ஒரு வன்முறையைச் சந்திக்கும் பெண் மேலும் அதை வெளியில் சொல்லக்கூட முடியாமல் குமைந்து போவது ஒட்டுமொத்த சமூகத்தின் பிரச்சினை. ஒரு சமூகமாக நாம் சமத்துவத்தை ஏற்றுக்கொள்ள பெண்களின் வலிகளைப் புரிந்துணர்வோடு பார்க்கப் பல ஒளிவருடத் தூரத்தைக் கடக்கவேண்டியிருக்கும் என்றே தோன்றுகிறது. ஆனாலும் இந்தப் பயணம் தொடர்கிறது. ஏனெனில் “எலிகளுக்குப் பூனைகளால் என்றைக்குமே விடுதலை கிடைக்கப் போவதில்லை.” அடிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு விடுதலையைத் தவிர வேறெதுவும் போதுமானதில்லை.
பாலியல் வன்முறை குறித்தும் பெண்கள் சுயாதீனமாகச் செயல்பட அவர்களுக்கு இருக்கும் மறுக்க முடியாத உரிமை குறித்தும் உடல்சார்ந்த வன்முறைகள் நிகழும்போது ஒரு பழமையான சமூகத்தில் தன் விடுதலையை நோக்கி அடியெடுத்துவைக்கும் பெண்கள் உணரும் வலிநிறைந்த அலைக்கழிப்புகள் குறித்தும் மிக அத்தியாவசியமான விவாதம் தொடங்கப்பட்டுள்ளது.பாலியல் வன்முறை அடிப்படையில் ஆண்-பெண் சமத்துவத்தை மறுக்கவும் ஆணாதிக்கத்தைக் காப்பாற்றவும் உருவாக்கி வளர்த்தெடுக்கப்பட்ட கருவி என்ற புரிதல் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேண்டும். பாலியல் வன்முறையைச் சந்திக்கும் பெண்கள் இதைப் பற்றிப் பேச ஒரு வெளியை, ஒரு மொழியை நாம் உருவாக்க வேண்டும். பாதுகாப்பான நம்பத்தகுந்த அமைப்புகள் வேண்டும். பாலியல் வன்முறைக்குள்ளாகும் பெண்ணின் உடல், மனவலிகளையும் காயங்களையும் புரிந்துணர்வோடு பார்க்கும் நாகரீகத்தையும் நியாய உணர்வையும் நம் சமூகம் பெற வேண்டும்.


thanx - kaalachuvadu

0 comments: