Thursday, January 23, 2014

விடியும் வரை பேசு - சினிமா விமர்சனம் (தினமலர் )

 
தினமலர் விமர்சனம்

முகம் தெரியா மனிதர்களுடனும், அறிமுகம் இல்லா அழகிகளுடனும், செல்போனில் பெரியவர்களின் சொல்பேச்சு கேட்காமல் கடலை போடும் ஆண், பெண் இருபாலருக்கும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் விதமாக வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் ''விடியும் வரை பேசு''.

திருமணத்திற்கு காத்திருக்கும் தங்கை, விதவை தாய், குடும்பத்தை காப்பாற்றி வரும் தாய் மாமன், உருகி உருகி காதலிக்கும் தாய்மாமனின் மகள், அவருக்காகவே தன் புருஷன் அக்கா குடும்பத்திற்கு உதவுவதை தடுக்காத அத்தை... என உயிருக்கு உயிரான கிராமத்து உறவுகளை உடைய நாயகர் அனித்துக்கு, சென்னையில் வேலை கிடைக்கிறது. சென்னை வந்ததும் நாயகரின் போக்கில் எக்கச்சக்க மாற்றம். 
காரணம், அவரது செல்லுக்கு சின்னதாக வரும் ஒரு மிஸ்டுகால். மிஸ்டுகாலில் வந்த 'மிஸ்' உடன் நாயகர் அனித், அனுதினமும் கடல் அளவு காதல் வளர்க்க, அதை வெறும் பொழுதுபோக்காக கடலை வறுப்பதாக கருதுகிறார் அந்த மிஸ்டுகால் நாயகி! அதனால் நாயகர் அனித்தின் பிறந்தநாள் விழாவுக்கு வருவதாக சொல்லிவிட்டு வராமல் போகிறார் அந்த மிஸ்டுகால் மோகினி!

தன் முறைபையனுக்குள் வேறு காதல் வேரூண்றி விட்டதை அறிந்து, ஊரில் தாய்மாமன் மகள் விஷம் குடிக்கிறார். அதனால் பெற்றதாயின் வெறுப்பிற்கும், உடன்பிறந்த தங்கையின் வெறுப்பிற்கும் ஆளாகும் ஹீரோ, மிஸ்டுகால் மோகினி தந்த ஏமாற்றம், தாய்மாமன் மகளின் காதல் போராட்டம், நட்பு மற்றும் உறவுகளின் வெறுப்பேற்றம்... உள்ளிட்டவைகளால் ஒருமாதிரி மனநிலை பாதிப்பிற்கும், கஞ்சா 'அடிக்டு'க்கும் ஆளாகி தெருவில் போகும், வரும் இளம் பெண்களின் செல்போன்களை எல்லாம் பிடுங்கி உடைப்பதுடன் அவர்களை தாக்கவும் செய்கிறார்.

ஹீரோ அனித்தின் நிலைதான் இப்படி என்றால் இவரை ஏமாற்றிய மிஸ்டுகால் மோகினியின் நிலையோ இன்னும் மோசம். அந்த செல்போன் மோகினிக்கு பொழுதுபோக்கே இப்படி போனில் பலருடன் கடலை போடுவதுதான். 
அப்படி ஒரு குண்டுவெடிப்பு தீவிரவாதியுடன் மிஸ்டுகால் மோகினி தினமும் போட்ட கடலைக்காக போலீஸ் அவளை கைது செய்து தீவிரவாதிக்கும், உனக்குமான தொடர்பு என்ன? எனக்கேட்டு சித்ரவதை செய்கிறது! போலீஸ் சித்ரவதையில் இருந்து நாயகியும், சித்தபிரமையில் இருந்து நாயகரும் மீண்டும் கரம் கோர்த்தனரா? அல்லது நாயகரும், நாயகரின் தாய்மாமன் மகளும் திருமணம் புரிந்தனரா? என்பது வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கப்பட்டிருக்கும் 'விடியும் வரை பேசு' படத்தின் மீதிக்கதை!


நகரத்து நவநாகரீகங்களில் சிக்கி, கிராமத்து உயர்வுகளையும், உறவுகளையும் மறக்கும் நகர கிராமத்து ஆசாமி கேரக்டரில் அனித், கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். அவரது நடிப்பு நடனமெல்லாம் ஓ.கே. நடை, உடை, பாவனையில் உடை தான் உதைக்கிறது. என்னதான் பாடிபில்டர் என்றாலும் அதற்காக உடம்புகாட்டும் படியான முண்டாபனியன் மற்றும் பட்டன் போடாத சட்டைகளையும், அதிலும் அடிக்கும் சிகப்பு, பச்சை, மஞ்சள், நீலம் உள்ளிட்ட கலர்களில் உடை உடுத்தி ரசிகர்களின் கண்களை கூச செய்திருப்பதை மட்டும் அடுத்தடுத்த படங்களில் அனித் குறைத்து கொண்டு நடிப்பது அவருக்கும், தமிழ்சினிமா ரசிகர்களுக்கும் நல்லது!


நன்மா, வைதேகி என இரண்டு நாயகியர். மிஸ்டுகால் மோகினி ஒரு மாதிரி நகரத்து கவர்ச்சி என்றால், கிராமத்து தாய்மாமன் மகள், ஒரு மாதிரி கிராமத்து கவர்ச்சி என கலக்கி இருக்கின்றனர். பலே, பலே!

இமான் அண்ணாச்சி, மீரா கிருஷ்ணன், கிரேன் மனோகர், சிவநாராயண மூர்த்தி, தீனதயாளன், ராஜ்கிருஷ்ணா, கனகப்ரியா, கதிர், முனிராஜ், காளிகாபிரபு என எண்ணற்ற நட்சத்திரங்கள், தங்கள் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்!

'யாரோ அவள் யாரோ...', 'கன்னிப்பொண்ணு மனசு...' உள்ளிட்ட நான்கு பாடல்களும், புதியவர் மோகன்ஜியின் இசையில் தாளம் போட வைக்கும் ர(ரா)கம்! பின்னணி இசையில் இன்னும் ஸ்கோர் பண்ணனும் சார்!

ஆர்.ராஜாமணியின் அழகிய ஒளிப்பதிவில், எ.பி.முகனின் எழுத்து-இயக்கத்தில் ஒரு சில குறைகள் இருந்தாலும், இன்றைய நாகரீக உலகத்தில் யாராலும் தவிர்க்க முடியாத செல்போனையும், அதில் சில சமயங்களில் வரும் மிஸ்டுகாலையும் 'மிஸ்யூஸ்' செய்பவர்களுக்கு எச்சரிக்கை செய்யும் விதமாக 'விடியும் வரை பேசு' படத்தை எடுத்திருப்பதற்கு பாராட்டியே ஆக வேண்டும்!

ஆகமொத்தத்தில், ''விடியும் வரை பேசு'' - ''செல், சில்மிஷங்களுக்கு எதிரான வீச்சு!''
 
thanx  - dinamalar 


  • நடிகர் : அனித்
  • நடிகை : நன்மா
  • இயக்குனர் :ஏ.பி.முகன்

0 comments: