Wednesday, January 15, 2014

அற்புத மருந்துகளின் வித்தகர்!

டாக்டர் எல்லப்பிரகத சுப்பாராவ் 

"அநேகமாக, நீங்கள் எல்லப்பிரகத சுப்பாராவ் என்ற பெயரை கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். இருப்பினும், அவர் வாழ்ந்தார் என்பதாலேயே நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழக்கூடும்."


டாரென் ஆன்ட்ரிம் 1950-ல் ஆர்கோசி வார இதழில் இவ்வாறு குறிப்பிட்டார். ஏறக்குறைய 65 ஆண்டுகள் கழித்து இன்றும் மேற்கூறிய வாசகங்கள் உண்மையாகவே விளங்குகின்றன.


எக்ஸ்-ரே கதிர்கள், பெனிசிலின் போன்ற ஒற்றை முக்கிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய விஞ்ஞானிகளின் பெயர்களை நம் நாட்டில் சிறு குழந்தை கூட சொல்லும். ஆனால், கோடானகோடி மக்களை கொடிய நோய்களிலிருந்து காக்கும் அருமருந்துகள் பலவற்றை கண்டுபிடித்தவர் ஓர் இந்தியர் என்பது நம்மில் பெரும்பாலானோருக்கு தெரியாது.


அவர் ஆந்திர மாநிலம் பீமாவரத்தில் பிறந்து சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்த டாக்டர் எல்லப்பிரகத சுப்பாராவ்.
அன்றைய மதராஸ் மாகாணம் பீமாவரத்தில் 1895ஆம் ஆண்டு எல்லப்பிரகத சுப்பாராவ் ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்தார். கடும் வறுமையாலும், உறவினர்களின் இறப்பாலும் சுப்பாராவின் இளமைப் பருவம் சூழப்பட்டிருந்தது. இதன் காரணமாக தன் மூன்றாவது முயற்சியில் பள்ளிப் படிப்பை முடித்தார். இடையில், காசிக்கு சென்று யாத்ரீகர்களுக்கு பழம் விற்றால் பெரும் செல்வம் ஈட்டலாம் என எண்ணி வீட்டை விட்டோடிய சுப்பாராவ், பாதியில் மீட்டுக் கொணரப்பட்டார்.


சென்னை மாநிலக் கல்லூரியில் சிறப்புத் தகுதியுடன் இடைநிலைப் பட்டம் பெற்றபின், உலக வாழ்வில் பற்றற்று ராமகிருஷ்ண மடத்தில் சந்நியாசி ஆக முடிவு செய்தார். இதற்கு தன் தாயின் சம்மதம் கிட்டாததாலும், மடத்தின் அறிவுரையாலும் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தார்.

 
காதி கையுறைகள்

இக்காலகட்டத்தில், காந்தியின் ஒத்துழையாமை கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட சுப்பாராவ், அறுவை சிகிச்சைக்கு காதி கையுறைகளை பயன்படுத்தினார். இதனால் கோபமுற்ற அறுவை சிகிச்சை பேராசிரியர் பிராட்பீல்ட், சுப்பாராவை அப்பாடத்தில் தேர்ச்சி செய்யவில்லை. ஆதலால், சுப்பாராவிற்கு 1921ல் மருத்துவப் பட்டம் தரப்படாமல் எல்.எம்.எஸ். பட்டமே அளிக்கப்பட்டது.


அதே ஆண்டு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெப்பமண்டல மருத்துவம் பயில இடம் கிடைத்தும் தன் சகோதரர்கள் மரணத்தால் அவர் அவ்வாய்ப்பை ஏற்க முடியாத சூழல் உருவானது. இடையில் ஓராண்டு ஆயுர்வேத கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்த சுப்பாராவ், மீண்டும் 1923ல் ஹார்வர்டில் இடம் கிடைக்கவே, ஹார்வர்ட் பயணமானார்.


அமெரிக்க பயணம்

சென்னையில் தன் மருத்துவப் படிப்பிற்கு உதவிய தன் நண்பர் கஸ்தூரி சூரியநாராயண மூர்த்தியின் மகளை மணந்த சுப்பாராவ், தன் மாமனாரிடமும், காக்கிநாடா சத்தியலிங்கம் அறக்கட்டளையிடமும் நிதியுதவி பெற்று அமெரிக்காவிற்கான தன் பயணத்தை துவங்கினார்.


கையில் 75 டாலர்களுடன் அக்டோபர் இறுதியில் பாஸ்டன் நகரம் வந்தடையும் சுப்பாராவின் உடனடிச் செலவுகளை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் ஸ்டிராங் ஏற்றுக்கொள்கிறார். அமெரிக்காவில் மருத்துவத் தொழில் செய்ய சுப்பாராவிற்கு உரிமம் இல்லாததால், ப்ரிகாம் பெண்கள் மருத்துவமனையில் அடிப்படை பணியாள் வேலை செய்கிறார்.


ஒரு முக்கியத் திருப்புமுனை

இவ்வாறான அசாதாரண சூழலில் வெப்பமண்டல மருத்துவத்தில் பட்டயம் பெறும் சுப்பாராவ், 1924-ல் ஹார்வர்ட் உயிர்வேதியியல் துறையில் பேராசிரியர் சைரஸ் ஃபிஸ்கே'வின் ஆய்வுக்கூடத்தில் ஆராய்ச்சியாளராக பணியில் அமர்கிறார். இத்தருணம் சுப்பாராவின் வாழ்வின் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைகிறது.


இதுவரை வாழ்வில் வறுமை, இறப்பு, ஈகை சூழ வாழ்ந்த சுப்பாராவ், தொடர்ந்து புகழையும் செல்வத்தையும் தேடித் தெளிவான இலக்குகளற்று ஓடி வந்தவர், வாழ்வில் முதல் முறையாக தன் இலக்கை, பாதையை இனம்காண்கிறார். மருத்துவ ஆராய்ச்சியே தன் வாழ்வின் பிடிமானம் என உணர்கிறார்.


ஃபிஸ்கே - சுப்பாராவ் முறை

ஃபிஸ்கேயின் ஆய்வகத்தில் பணியை துவங்கும் சுப்பாராவ், சில மாதங்களிலேயே ரத்தத்தில் பாஸ்பரஸின் அளவை விரைவாக மதிப்பிடும் முறையை கண்டுபிடிக்கிறார். ஃபிஸ்கே-சுப்பாராவ் முறை என்று விளங்கப்படும் இம்முறை அதே ஆண்டு பாடப் புத்தகங்களில் இடம்பெறுகிறது. இன்று வரை உலகெங்கிலும் உயிர்வேதியியல் மாணவர்கள் கற்கும் ஓர் அடிப்படை கற்றல் முறையாக இம்முறை விளங்குகிறது.


இம்முறையின் துணைகொண்டு சுப்பாராவ் மற்றும் ஃபிஸ்கே மனித உடலின் சக்தி வடிவங்களான பாஸ்போகிரியாட்டின் மற்றும் அடினோசின் ட்ரைபாஸ்பேட் வேதிப்பொருட்களை கண்டுபிடிக்கின்றனர். நாம் உண்ணும் உணவை உடலில் சக்திவடிவமாக சேமித்து வைப்பதிலும், தேவைப்படும் பொழுது சக்தியாக மாற்றி நம் தசை இயக்கத்திற்கு உதவுவதுமே இவ்விரு வேதிப்பொருட்களின் வேலையாகும்.


நோபல் கமிட்டியின் தவறு

அதுநாள் வரை கிளைகொஜென் லாக்டிக் அமிலமாக மாற்றம் பெறுவதே தசை இயக்கத்திற்கு காரணமாக எண்ணப்பட்டது; 1922-ல் நோபல் பரிசும் அக்கண்டுபிடிப்புக்காக வழங்கப்பட்டதே. ஆனால் சுப்பாராவின் கண்டுபிடிப்பு நோபல் கமிட்டியின் தவறை சுட்டிக்காட்டுவதாக அமைகிறது. முடிவுகளை வெளியிடுவதில் ஏற்படும் தாமதத்தாலும், தன தவறினை ஏற்றுக்கொள்ள நோபல் கமிட்டி காட்டிய தயக்கத்தாலும் இப்பெரும் கண்டுபிடிப்பிற்கான அங்கீகாரம் சுப்பாராவ் மற்றும் ஃபிஸ்கேவிற்கு மறுக்கப்பட்டது.


எனினும், 1930ல் உயிர்வேதியலில் சுப்பாராவ் முனைவர் பட்டம் பெறுகிறார். ஹார்வர்ட் பல்கலை.யில் தொடர்ந்து ஆராய்ச்சியாளராக பணியாற்றும் சுப்பாராவ், தசை வேதியியலில் நாட்டம் குறையவே, பெர்நிசியஸ் சோகைக்கான மருந்தினை வெற்றிகரமாக மிருக ஈரலிலிருந்து பிரித்தெடுத்தார். இந்நோய் வெப்பமண்டலங்களில் காணப்படும் குடல் உறிஞ்சா நோய்க்கு இணையானது என்பது குறிப்பிடத்தக்கது. சுப்பாராவின் சகோதரர்கள் அனைவரும் இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள். ஒருவர் இறந்தும் போனார்.


B12 கண்டுபிடிப்பு

அடுத்தக்கட்டமாக, ஈரலிலிருந்து விட்டமின்கள், குறிப்பாக விட்டமின் B12, பிரித்தெடுப்பதில் ஆர்வம் காட்டினார் சுப்பாராவ். பலவாறு முயன்றும் இம்முயற்சியில் தோல்வியை தழுவுகிறார். எனினும் B12 பிரித்தெடுத்தல் முறையில் முக்கியப் பங்காற்றுகிறார். இன்று விட்டமின் B12 கண்டுபிடிப்பில் சுப்பாராவின் பங்களிப்பு சுட்டிக்காட்டப்படாதது துரதிர்ஷ்டவசமானது.


இப்பின்னணியில் 1940-ல், நியூயார்க் மாகாணத்தில் லெடெர்ல் ஆய்வுக்கூடம் சுப்பாராவை தன் ஈரல் மருந்து ஆய்வுப்பிரிவில் ஆய்வு மேலாளர் பணியில், பெரும் சம்பளத்துடன் அமர்த்த முன்வருகிறது. தனக்கு அளிக்கப்பட சம்பளத்தை பாதியாக குறைத்தால் பணியில் சேர்வதாக சொல்கிறார் சுப்பாராவ். ஆம், சம்பளத்தை பாதியாக குறைத்துக்கொண்டு அதற்கு பதில் வார இறுதி நாட்களில் வேதிப்பொருள் பிரித்தெடுத்தல் ஆய்வுகளை நடத்த மூலப்பொருட்களும், தடையற்ற அதிகாரமும் வழங்குமாறு கேட்டுக்கொண்டு பணியில் சேர்கிறார்.


அருமருந்துகள் கண்டுபிடிப்பு

லெடெர்ல் ஆய்வகத்தில் தன் தலைமையில் திறமையான இளைஞர் குழுவை உருவாக்கும் சுப்பாராவ், அடுத்த ஐந்து ஆண்டுகள் நோய் நீக்க மருந்து ஆய்விற்கான அடித்தளத்தினை நிறுவுகிறார். பின் வரும் மூன்று ஆண்டுகளில் சுப்பாராவ் குழு மானுடத்தைக் காக்கும் பல அருமருந்துகளை மருத்துவ உலகிற்கு சமர்ப்பிக்கிறது. இக்காலகட்டத்தில் மருத்துவ உலகில் சுப்பாராவ் மற்றும் குழுவினர் ஃபோலிக் ஆசிட் பாய்ஸ் (folic acid boys) என்று பெருமைப்பட அழைக்கப்படுகின்றனர்.


1945-ல், சுப்பாராவ் மற்றும் டுக்கர், ஆரியோமைசின் எனும் முதல் டெட்ராசைக்ளின் வகை நுண்ணுயிர் எதிரியை கண்டுபிடிக்கின்றனர். இவை கிராம்-நேர் மற்றும் கிராம்-எதிர் என இருவகை நுண்ணுயிரிகளையும் கட்டுப்படுத்தக்கூடிய தன்மை கொண்டவை. இதற்கு முன் இருந்த பிளெம்மிங்கின் பெனிசிலின் மற்றும் வாக்ஸ்மன்னின் ஸ்டிரெப்டோமைசின் நுண்ணுயிர் எதிரிகள், முறையே, கிராம்-நேர் மற்றும் கிராம்-எதிர் நுண்ணுயிரிகளை மட்டும் அளிக்கக்கூடியவை.


புற்றுநோய்க்கு எதிரான முதல் மருந்து

ஃபோலிக் அமில குறைபாட்டால் ஏற்படும் சோகை நோய்க்கான மருந்தாக ஃபோலிக் அமிலத்தை வேதித்தொகுப்பு முறையில் தயாரித்து வெற்றி காண்கிறார் சுப்பாராவ். பலநிலை வினைகளை உள்ளடக்கிய இத்தொகுப்பு முறையின் இடையில் எதிர்ஃபோலேட் (antifolate) வகை வேதிப்பொருட்கள் கிடைக்கின்றன. சுப்பாராவின் ஹார்வர்ட் நண்பர் மருத்துவர் சிட்னி ஃபார்பரின் ஆலோசனையில் அமினொப்டெரின் (aminopterin) எனும் எதிர்ஃபோலேட்டை சுப்பாராவ் மற்றும் கில்டி தயாரிக்கின்றனர். இதுவே புற்றுநோய்க்கெதிரான முதல் மருந்தாகும்.


லுகீமியா நோயால் தாக்கப்பட்ட சிறுவர்களுக்கு அமினொப்டெரின் சிகிச்சையளித்து வெற்றிபெறுவதன் மூலம் கீமோதெரபி முறையை ஆற்றல்மிக்க சிகிச்சை முறையாக உலகுக்கு அளிக்கிறார் ஃபார்பர். இன்று வரை நவீன கீமோதெரபி முறையின் தந்தை என்று சிட்னி ஃபார்பர் அழைக்கப்படுகிறார்.


இதன் பின்னர் மேலும் ஆற்றல் மிக்க, குறைந்த பக்கவிளைவுகள் ஏற்படுத்தக்கூடிய இன்னுமொரு எதிர்ஃபோலேட்டான மீதோட்ரெக்சேட்டை (methotrexate) சுப்பாராவ் கண்டுபிடிக்கிறார். இன்று வரை, சிறுவர்களுக்கான லுகீமியா, பல்வேறு புற்றுநோய்கள், முடக்கு வாதம், தடிப்புத்தோல் அழற்சி (Psoriasis), க்ரோன் நோய் (Crohn's colitis) என பல நோய்களுக்கான மருந்தாக மீதோட்ரெக்சேட் பயன்படுத்தப்படுகின்றது.

ஹெட்ராசென்

இரண்டாம் உலகப்போரின் பொழுது உலகெங்கிலும் பணியில் அமர்த்தப்பட்ட அமெரிக்க ராணுவத்தினரை மலேரியா மற்றும் யானைக்கால் நோயில் இருந்து காக்க மருந்து தயாரிக்கும் பணி சுப்பாராவிடம் அளிக்கப்பட்டது. ஹெட்ராசென் என அழைக்கப்படும் டைஎத்தில் கார்பமசைன் (DEC) மருந்தினை கண்டுபிடித்தார். இன்று வரை, யானைக்கால் நோய்க்கெதிரான இயக்கத்தில் உலக சுகாதார அமைப்பு ஹெட்ராசென் மருந்துகளையே பயன்படுத்துகிறது.


சுப்பாராவ் 1948-ல், தனது 53-வது வயதில் மாரடைப்பால் காலமானார். நியூயார்க் டைம்ஸ், நியூயார்க் ஹெரால்ட் - ட்ரிப்யூன் உட்பட பல இதழ்கள் சுப்பாராவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தன.


சுப்புராவின் தனித்துவம்

தன் கண்டுபிடிப்புகளை தன் பெயரோடு இணைத்துக்கொள்ளும் (விஞ்ஞான உலகின் பொதுவான நடைமுறை) காரியங்களை சுப்பாராவ் என்றும் முன்னெடுத்ததில்லை. விஞ்ஞான மாநாடுகளுக்கு சென்று தன் கண்டுபிடிப்புகளை பறைசாற்றியதில்லை. தன் குழுவின் பணியாளர்கள் பொதுமேடைகளில் அங்கீகாரங்களை பெற்றுக்கொள்கையில் பெருமிதத்தோடு அரங்கத்தில் கடைசியில் அமர்ந்துகொள்வார். 


பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுப்பதை தவிர்த்தே வந்தார். 1990ல் தி சைண்டிபிக் இதழ் வெளியிட்ட 'ஐம்பது ஆண்டுகளை கடந்த பத்து பெரும்பங்காற்றிய ஆய்வுக்கட்டுரைகள்' எனும் சிறப்புக்கட்டுரையில் ஃபிஸ்கே--சுப்பாராவ் முறையை விளக்கும் சுப்பாராவின் ஆய்வுக்கட்டுரை முதலிடத்தை பிடித்தது.


இந்தியக் குடிமகன்

ஏறக்குறைய 25 ஆண்டுகள் அமெரிக்காவில் பணிபுரிந்த சுப்பாராவ் கடைசி வரை அமெரிக்க குடியுரிமை பெறவே இல்லை. அக்கால அமெரிக்கச் சட்டம் இந்தியர்களுக்கு குடியுரிமை மறுத்தது. 1943ல் நியூ ரிபப்ளிக் இதழ் சுப்பாராவ் போன்ற மகத்தான இந்தியர்களுக்கு குடியுரிமை மறுக்கப்படுவது கண்டனத்துக்குரியது என கருத்து தெரிவித்தது. 1946லேயே இந்தியர்களுக்கு குடியுரிமையில் இடம் தரும் சட்டம் அமலுக்கு வந்தது. அதன் பின்னும் சுப்பாராவ் அமெரிக்க குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முன்வரவில்லை. கடைசி வரை இந்தியக் குடிமகனாகவே வாழ்ந்து இறந்தார்.


1994ல் குஜராத் மற்றும் மராட்டியத்தில் பரவிய ப்ளேக் வெடிப்பை கட்டுப்படுத்தி பின்னர் முற்றிலும் அகற்ற பெரிதும் உதவியது டெட்ராசைக்ளின் நோய்க்கொல்லிகளே. சுப்பாராவ் பிறந்த நூறாவது ஆண்டில் தன் தாயகத்திற்கு செய்த சிறு பங்களிப்பாக இதனை எடுத்துக்கொள்ளலாம்.


விஞ்ஞானத்தின் மூலம் மானுட நல்வாழ்வுக்கு பெரும்பங்காற்றிய இந்தியர்களில் கண்டிப்பாக சுப்பாராவ் முதன்மையானவராக விளங்குகிறார். சுப்பாராவிற்கு அமரர்களுக்கு வழங்கும் பாரத ரத்னா விருது வழங்குவதன் மூலமும், பள்ளிப் பாடத்திட்டத்தில் சுப்பாராவின் வாழ்க்கை மற்றும் பங்களிப்பை சேர்ப்பதன் மூலமும் இந்தியா தன் தவப்புதல்வர்களுள் ஒருவரை சிறப்பிக்கலாம். டாக்டர் எல்லப்பிரகத சுப்பாராவ் அதற்கு முற்றிலும் தகுதியானவரே.

Thanks-The Hindu

0 comments: