Saturday, February 23, 2013

வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி திடுக் பேட்டி

வீரப்பனின் ஆன்மா மன்னிக்காது!
முத்துலட்சுமி சொல்லும் ரகசியம்
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பேருக்கும் என் கண​வருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஒரு பாவமும் அறியாத அப்பாவிகள் அவர்கள். அவர்களைத் தூக்குத் தண்டனையில் இருந்து எப்படியாவது காப்பாற்றியே ஆக வேண்டும். இல்லை என்றால், என் கணவரின் ஆத்மா என்னை மன்னிக்காது'' உணர்ச்சிப் பிழம்பாக வெடிக்கிறார் சந்தன வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி. ''உங்கள் கணவருடன் நீங்கள் காட்டுக்குள் இருந்தபோது மீசை மாதையன், ஞானபிரகாசம், சைமன், பிலவேந்திரன் ஆகிய நான்கு பேரையும் பார்த்தது இல்லையா?''''எங்களுக்கு 1990-ம் வருஷம் ஜனவரி மாதம் திருமணம் நடந்தது. அதில் இருந்து 93-ம் வருஷம் செப்டம்பர் மாதம் வரைக்கும் நான் அவரோடு காட்டில்தான் இருந்தேன். அவரோட கூட்டாளிகள் யார், அவருக்கு உதவி செய்தவர்கள் யார் என்பதெல்லாம் எனக்கு நல்லாவே தெரியும். இப்போது தூக்குத் தண்டனைக் கைதிகளாக இருக்கும் அந்த நான்கு பேரையும் நான் காட்டுக்குள் பார்த்ததே இல்லை. என் வீட்டுக்காரரும் அவர்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. நான் காட்டுக்குள் இருந்து வெளியில் வந்த பிறகு, 'வீரப்பன் கூட்டாளிகள் சைமன், பிலவேந்திரன், மீசை மாதையன், ஞானபிரகாசம் பிடிக்கப்பட்டனர்’ என்று ரேடியோவில் சொன்னதைக் கேட்டு எனக்கு குழப்பமாக இருந்தது. யார் இவர்கள் என்று யோசித்தேன். நினைவுக்கு வரவில்லை.''''பாலாற்றுப் பாலத்தை வெடிவைத்து தகர்த்தபோது நீங்கள் வீரப்பனுடன் இருந்து இருக்கிறீர்கள்... அந்தத் தகவல் உங்களுக்கு முன்கூட்டியே தெரியுமா?''''அந்தச் சம்பவம் 1993-ம் வருஷம் ஏப்ரல் மாதம் நடந்தது. அந்த நேரத்தில் நான் என்னுடையை குழந்தையை வயிற்றில் சுமந்துகொண்டிருந்தேன். அதைப்பற்றி என்னுடைய வீட்டுக்காரர் எதுவும் சொல்ல​வில்லை. எந்த ஒரு திட்டம் போடு​வதாக இருந்தாலும் சரி, அதை நிறைவேற்றுவதாக இருந்தாலும் சரி.. அது என் வீட்டுக்காரருக்கும் சேத்துக்குழி கோவிந்த​னுக்கும் மட்டுமே தெரியும். எல்லாம் முடிந்த பிறகுதான் எனக்குத் தெரியும்.''''ஆனால், 'வனயுத்தம்’ படத்தில் பாலாற்றுப் பாலம் தகர்க்கும் காட்சியில் வீரப்பன், 'சைமா வெடி மருந்தை அதிகமா​ போடு’ என்று சொல்வதைப்போல காட்சிகள் வருகிறதே?''அந்தப் படம் முழுக்க முழுக்க ஒருதலைபட்சமான கற்பனையான படம். படம் எடுப்பதற்கு முன், படத்தின் இயக்குநர் ரமேஷ், பெல்காம் சிறையில் இருக்கும் நான்கு பேரையும் சந்திக்கப் போயிருக்கிறார். சைமன் மட்டும் அவரைச் சந்திக்க மறுத்துவிட்டார். அந்தக் கோபத்தில் சைமன் பெயரை என் கணவர் சொல்வதைப்போலக் காட்டி இருக்கிறார். அதிரடிப் படைக்கு ஆதரவாக எடுக்கப்பட்ட படத்தில் எப்படி நியாயத்தையும் உண்மையையும் எதிர்பார்க்க முடியும்? அதிரடிப் படையால் பாதிக்கப்பட்டப் பெண்களைப் பற்றிய பதிவு எதுவுமே அந்தப் படத்தில் இல்லை. அதிரடிப்படை செய்த அட்டூழியங்களை நான் படமாக எடுத்தால், அவர்களால் தாங்க முடியுமா?வீரப்பனுக்கு ரேஷன் வாங்கிக் கொடுத்​தவர் என்று பாலாறு விபத்துக்கு முன்பே பிலவேந்திரனை அதிரடிப் படையினர் பிடித்துத் தொல்லை கொடுத்திருக்கின்றனர். மீசை மாதையன் மீதும் இதேபோல ஒரு வழக்குப் போட்டிருக்கின்றனர். பாலாறு விபத்து நடந்த பிறகு மீசை மாதையன், அப்போதைய எஸ்.பி. கோபால​​கிருஷ்ணனை நேரில் சந்தித்து, 'எனக்கும் இந்தச் சம்பவத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. என்னை இதுல மாட்டி விட்டுடாதீங்க’ என்று அழுதிருக்கிறார். 'உன் மேல எனக்கு சந்தேகமே இல்லை’ என்று சொன்ன கோபால கிருஷ்ணன், பிறகு மாதையனை வழக்கில் சேர்த்திருக்கிறார். இவர்கள் நால்​வரும் அப்பாவி மலைவாழ் மக்கள். பரம்பரைப் பரம்பரையாக மலையில் ஆடு, மாடு மேய்ப்பவர்கள். அப்படிப்​பட்டவர்​களைப் பிடித்து பொய் வழக்குப் போட்டு, இன்று தூக்குக் கயிறு வரை கொண்டு​போய் நிறுத்தி இருக்கிறது போலீஸ்.''
''எஸ்.பி. கோபாலகிருஷ்ணன் பாலாற்றுச் சம்பவத்தில் இந்த நான்கு பேரும் இருந்ததாக சாட்சி சொல்லி இருக்​கிறாரே?''''பாலாறு வெடி விபத்தில் கோபாலகிருஷ்​ணனுக்குக் காலில் பலத்த அடிபட்டது. அந்த இடத்திலேயே மயக்கமாகி விட்டார். மயக்கத்தில் இருந்த ஒருவர் எப்படி நான்கு பேரை அடையாளம் கண்டிருக்க முடியும்? அவருக்கு இந்த நால்வரையும் முன்கூட்டியே தெரியும் என்பதால், அப்பாவிகளை வழக்கில் சிக்கவைத்து​ விட்டார்.
 கோர்ட்டில், கோபால கிருஷ்ணனைத் தவிர வேறு யாரும், இந்த நான்கு பேரையும் பார்த்ததாகச் சொல்லவே இல்லை. அவர் ஒருவரின் சாட்சியை வைத்துதான் நீதி வழங்கப்பட்டு இருக்கிறது. செய்யாத தவறுக்காக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவித்துவிட்டனர். ஏழைகள் என்பதால் அவர்களுக்கான நீதி மறுக்கப்பட்டு இருக்கிறது. இந்திய அரசு இந்த வழக்கை மறுவிசாரணைக்கு எடுத்துக்​கொள்ள வேண்டும். ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம். ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டு விடக்கூடாது. அந்தப் பாவம் சும்மா விடாது!''- வீ.கே.ரமேஷ்,  


படம்: எம்.விஜயகுமார்

நன்றி - ஜூ வி 

0 comments: