Thursday, February 28, 2013

அமீரின் ஆதி-பகவன் ,ஹரிதாஸ் -சினிமா விமர்சனம் (விகடன் விமர்சனக் குழு )

சினிமா விமர்சனம் - அமீரின் ஆதி-பகவன்

ஆதி vs டான் பகவான்தான்... 'அமீரின் ஆதி-பகவன்’!


 பொதுவாக, பஞ்சம் பிழைக்கத் தமிழர்கள் சிங்கப்பூர், மலேசியா, துபாய் என்றுதான் செல்வார்கள். ஆனால், படத்தில் அஜால் குஜால் சங்கதிகளுக்குப் பேர் போன பாங்காக்குக்கு அம்மா, தங்கையோடு ஜெயம் ரவி செல்லும்போதே உஷாராகி இருக்க வேண்டும்... இது வேறு அமீர் என்று. என்ன்ன்னா அடி!



'எ மாஃபியஸோ ஆக்ஷன் லவ் ஸ்டோரி’ என்று படத்தின் கேப்ஷனில் மட்டும் வித்தியாசம் காண்பித்திருக்கிறார் அமீர். கோட்-சூட், சுருட்டு, பப், கையில் துப்பாக்கி, சொகுசு கார்கள்... இவற்றோடு வெளிநாட்டு வீதிகளில் வாக்கிங் போனால், அவர் டானாகத்தானே இருக்க முடியும். தமிழ் சினிமாவில் அஜித் ஆரம்பித்துவைத்த மாஃபியா கலாசாரத்தை ஹீரோ ஜெயம் ரவி டிட்டோ அடிக்கிறார். தமிழில் வெளிவந்த டான் கதைகளில் பார்த்துச் சலித்த விஷயங்களை இயக்குநர் அமீர் டிட்டோ அடிக்கிறார்.


ஆண்டான், அரவாணி டான் என இரண்டு பாத்திரங்களில் வித்தியாசம் காட்ட நிறையவே மெனக்கெட்டு இருக்கிறார் ஜெயம் ரவி. லிப்ஸ்டிக் பூசி, நெளிந்து நடந்து வெட்கப்படும் மும்பை பகவானைக் காட்டிலும், கனத்த மீசையும் கம்பீர நடையுமாக ஆதி மிரட்டுகிறார். ஆனால், இரண்டு 'ரவி’க்களைவிடவும் திரையை அதிகம் ஆக்ரமித்து இருப்பது, நீத்து சந்திராதான். இருப்பினும், ஏனோ சோகம் அப்பிய கண்களுடன் எப்போதும் அசதியாகவே காட்சிஅளிப்பது ஏன் நீத்து? அட, பகவானோடு சேர்ந்திருக்கும்போதேனும் கண்களில் வில்லத்தனம் ஒளிர வேண்டுமே... அதுவும் நீத்துவிடம் லேது!



பாகவதர் தோன்றி எம்.ஜி.ஆர். தோன்றாக் காலத்து முன் தோன்றிய, ஹீரோ உடம்பில் இருக்கும் துப்பாக்கிக் குண்டை ஹீரோயின் கத்தி கொண்டு எடுக்கும் காட்சி இதிலும் உண்டு. ஹீரோவின் அம்மா நியாயத்தின் பக்கம் நின்று கொடி பிடிக்க வேண்டுமே? இதில் ரவியின் அம்மா சுதா சந்திரன் 'என் புள்ளை நல்லவனா இருக்கும்போதே செத்துட்டான்!’ எனக் கண்ணீர் சிந்துகிறார்.  




காதல் வில்லி நீத்து, அரவாணி வில்லன் பகவான்... இந்த இரண்டு டிவிஸ்ட்டும் படத்தைக் காப்பாற்றும் என்பது அமீரின் நம்பிக்கையாக இருந்திருக்கும்போல. ஆனால், இடைவேளைக்குப் பிறகான எந்தச் சம்பவமும் ஆர்வப் பரபரப்பைக் கிளப்பவில்லையே சார்? இன்ன காரணத்துக்காகத்தான் ஆதியைக் கடத்தியிருக்கிறார்கள் என்று தெரிந்த பிறகும் திரைக்கதையை ஜவ்வாக இழுத்துக்கொண்டே செல்வது... ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹாவ் பகவன்!  


தேவராஜின் ஒளிப்பதிவில் பாங்காக் லொகேஷன்கள் பளிச். இசை யுவன்ஷங்கர் ராஜா... நோ கமென்ட்ஸ்!


காதலர்கள் இருவரும் ஈகோ சண்டை தான் போடுவார்கள். இதில் நிஜமாகவே கட்டிப் புரண்டு கராத்தே சண்டை போடுகிறார்கள். அது ஒன்று மட்டுமே படத்தில் வித்தியாசம்.


- விகடன் விமர்சனக் குழு


 சினிமா விமர்சனம் - ஹரிதாஸ்

ன்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் அப்பா, ஆட்டிஸம் பாதித்த தன் மகனின் கனவை நிறைவேற்றப் போராடுவதே... ஹரிதாஸ்!


 மாஃபியா தாதா பிரதீப் ராவத்தை என்கவுன்டரில் வேட்டையாட அலைகிற நேரத்தில், தன் மகன் ஹரிதாஸைக் கவனித்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் வருகிறது கிஷோருக்கு. அப்பா என்றுகூட சொல்லத் தெரியாத ஹரியின் ஆழ்மன விருப்பத்தை அறிந்துகொள்ளும் கிஷோர், அதன் மூலம் ஹரியை ஒரு சாதனையாளனாக்க முயல்கிறார். ஹரியின் சாதனைக்கு மேடை அமைக்கப்படும் நாளில், பிரதீபின் தாக்குதலை எதிர்கொள்கிறார் கிஷோர். ஹரி தன்னை நிரூபித்தானா... கிஷோர் தாக்குதலை வெற்றிகொண்டாரா என்பது உருக்கமும் நெருக்கமுமான க்ளைமாக்ஸ்!    


    
கொரிய மொழியில் வெளியான 'மாரத்தான்’ படத்தின் மென்மையான 'ஆட்டிஸம்’ அத்தியாயத்தை எடுத்துக்கொண்டு, அதில் வன்மையான என்கவுன்டர் திரைக்கதையைப் பின்னிப் பிணைத்திருக்கிறார் இயக்குநர் ஜி.என்.ஆர்.குமரவேலன். தழுவல் சாயல் என்றாலும், ஆட்டிஸம் பாதித்த குழந்தைகளைப் புரிந்துகொள்ளும் நெகிழ்ச்சிப் ப(£)டம் எடுத்த வகையில் இயக்கு நரின் முனைப்பு பாராட்டத்தக்கது!



டீக்கடையில் ரவுடியிடம், 'உனக்கு பால்தானே... சொல்லியாச்சு!’ என்று விறைக்கும்போதும், 'உன்னை எப்படி உருவாக்குறதுனு தெரியலையே?’ என்று மகனிடம் கரையும்போதும் அசத்துகிறார் கிஷோர். மகன் காணாமல் போன இடத்தில் சினேகாவிடம் அதிகாரியாக விசாரித்துவிட்டு, மறைவாக குளிர்க் கண்ணாடியைக் கழட்டிக் கலங்கும் இடம்... க்ளாஸ்! படத்தின் ஹீரோ... ஹரியாக நடித்த மாஸ்டர் பிருத்விதான். கண்கள் செருகி, கைகள் கோணலாக, கால்கள் வளைந்து நடக்கும்போதும், அதையே ஓட்டமாக மாற்றும்போதும் உடல்மொழியில் பின்னி எடுக்கிறான். 'அப்பா’ என ஒரே ஒருமுறை சொல்வதைத் தவிர, வேறு வசனம் எதுவும் இல்லை. ஆனால், பந்தயப் பயிற்சிகள் ஆரம்பித்த பிறகான காட்சிகளிலும் அந்த க்ளைமாக்ஸ் பந்தயத்திலும் கலங்கடிக்கிறான் பிருத்வி!




இப்படியான படங்களின் 'க்ளிஷே’ கேரக்டர்தான் என்றாலும், 'அமுதவல்லி டீச்சர்’ கேரக்டரில் சினேகா நச்! எந்த அவசரமும் இல்லாமல் மெதுவாகப் பயணிக்கும் கதையில் கிச்சுகிச்சு பிரேக் கொடுக்கிறது சூரியின் காமெடி!
'அவன் கோச் இல்லை... காக்ரோச்’, 'டாக்டர், கோச் மாதிரி பேசுறாரு; கோச், டாக்டர் மாதிரி பேசுறாரு!’, 'நம்மளைச் சுத்தி இருக்குற நாலு பேர் தப்பா பேசுறது இருக்கட்டும்... முதல்ல நீ தப்பா பேசாத!’ போன்ற ஏ.ஆர்.வெங்கடேசனின் பளிச் வசனங்கள் படத்தின் பெரும்பலம். திரைக்கதையின் பின்னணிக்கு ஏற்ப ஆக்ரோஷம், அன்பு நேச தொனிகளைப் பிரதிபலிக்கிறது ரத்னவேலுவின் ஒளிப்பதிவு.



பள்ளி வகுப்பு, பந்தயப் பயிற்சிகள் மூலம் குழந்தைகள் உலகத்திலும், 'மாமு... மச்சி’ என்று அழைத்துக்கொண்டு பணி புரியும் காவலர்களின் உலகிலும் ஒருசேர எந்தத் தடுமாற்றமும் இல்லாமல் பயணிக் கும் திரைக்கதையின் ஒவ்வோர் அடுக்கும் க்ளைமாக்ஸை நோக்கி சின்னச் சின்னதாக வேனும் முன்னேறுகிறது.  



ஹரிதாஸ்... ஆட்டிஸம் பாதித்த குழந்தைகள் உலகைப் புரிந்துகொள்ள ஒரு கேட் பாஸ்!


- விகடன் விமர்சனக் குழு   


thanx - vikatan

0 comments: