Sunday, February 24, 2013

பாரதிராஜா, இளையராஜா மீண்டும் மோதல் @ அன்னக்கொடியும் கொடிவீரனும்"

பாரதிராஜா, இளையராஜா, அன்னக்கிளி செல்வராஜ் இந்த மூன்று பேருமே மதுரை வைகை ஆற்று மணலில் தங்கள் வாழ்க்கையை ஆரம்பித்தவர்கள். அன்னக்கிளி செல்வராஜ் கதை எழுத, இளையராஜா இசை அமைக்க, பாரதிராஜா இயக்க இவர்கள் நாடகம் மதுரை தேனி, கம்பம், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி பகுதிகளில் பிரபலம். மூவருமே சினிமா ஆசையோடு சென்னைக்கு புறப்பட்டு வந்தார்கள். பாரதிராஜா பல இயக்குனர்களிடம உதவியாளராக பணியாற்றி "16 வயதினிலே" படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார்.

அன்னக்கிளி செல்வராஜ் எழுதிய "அன்னக்கிளி" கதை பஞ்சு அருணாசலத்துக்கு பிடித்துப்போக அவர் கதையும் -ஓகேவாகி, செல்வராஜ் சிபாரிசில் இளையராஜாவும் அறிமுகமானார். அடுத்த சில வருடங்களில் இவர்களோடு சேர்ந்தவர் வைரமுத்து. அவரும் வடுகபட்டியைச் சேர்ந்தவர். ஒரு காலத்தில் இணைபிரியாத நண்பர்களாக இருந்த இவர்கள் இணைந்து காலத்தால் அழிக்க முடியாத அரிய படைப்புகளை தந்தார்கள். இசையில் இளையராஜாவும், பாடலில் வைரமுத்துவும், இயக்கத்தில் பாரதிராஜாவும், கதையில் செல்வராஜும் அதன் உச்சம் தொட்டார்கள்.

காலப்போக்கில் வெற்றிகள் வந்து குவிந்தபோது இவர்களின் குணங்கள் மாறத் தொடங்கியது. முதலில் இந்த நால்வர் அணியில் இருந்து பிரிந்தவர் செல்வராஜ். கதைக்கு இவர்கள் தரும் ஊதியம் குறைவு என்பதால், பலருக்கு கதை எழுத கிளம்பினார் செல்வராஜ். புகழ்பெற்ற "அலைபாயுதே" படத்தின் கதை செல்வராஜுடையது. அடுத்து வைரமுத்து விலகிக் கொண்டார். இளையராஜாவுக்கும், வைரமுத்துவுக்குமிடையே இருந்த ஈகோ பிரச்சினை ஒரு முக்கிய சம்பவத்தில் வெடித்துச் சிதற நிரந்தரமாக பிரிந்து விட்டார்கள். பாரதிராஜா மட்டும் அனைவரிடமும் நெருக்கமாக இருந்து வந்தார்.

பாரதிராஜா, இளையராஜாவை வாடா போடா என்று பொது மேடையிலேயே அழைக்ககூடியவர். உலகமே தன்னை இசை மேதையாக கொண்டாடும்போது இவன் மட்டும் இப்படி பேசுகிறானே என்ற கவலை இளையராஜாவுக்கு உண்டு. வைரமுத்துவையும், இளையராஜாவையும் சேர்த்து வைக்கும் சில முயற்சிகளைச் செய்தார் பாரதிராஜா. அதை முளையிலேயே கிள்ளி எரிந்தார் இளையராஜா. வைரமுத்துவுடன் மீண்டும் இணைவதையும், பாரதிராஜா தன்னை ஒருமையில் விழிப்பதையும் அடியோடு வெறுத்து வந்தார் இளையராஜா.

இது அண்மையில் மதுரையில் நடந்த "அன்னக்கொடியும் கொடிவீரனும்" படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் வெளிப்படையாக வெடித்தது. அதில் இளையராஜாவை பாராட்டி பேசிய பாரதிராஜா வழக்கம்போல இளையராஜாவை வாடா போடா என்று ஒருமையில் பேசினார். சொந்த மண்ணில் நடக்கும் விழாவில் இப்படி அவர் பேசியது இளையராஜாவை அதிர்ச்சி அடைய வைத்தது. "நீ யார்கிட்டேயும் பத்து நிமிஷம் உட்கார்ந்து பேச மாட்டேங்ற. எல்லார்கிட்டேயும் பேசு. நீ தலைக்கனம் பிடிச்சு ஆடுற. நாம என்ன இன்னொரு தடவை பொறக்கவா போறாம். இருக்கிறப்போ சந்தோஷமா இருந்துட்டு போவோம். நாங்க மூணு பேரு, அதுல ஒருத்தன் (வைரமுத்து) இங்க இல்லை. திரும்பவும் மூணு பேரும் ஒண்ணா சேர்வோம்" என்று பேசினார்.

இது இளையராஜாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அன்று விழா முடிந்ததும் பாரதிராஜாவிடம் சொல்லிக் கொள்ளாமலே சென்னை திரும்பினார். இப்போது அதுபற்றி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:  அவருக்கு (பாரதிராஜா) என் மீதுள்ள குறையெல்லாம், நான் அவனைப்போல இல்லையே என்பதுதான். அதாவது குடித்துக் கொண்டும், கூத்தடித்துக் கொண்டும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ? அப்படி நான் மாறுவது நடக்கிற காரியமா? அவர் நினைக்கிறபடி நான் இருக்க வேண்டுமா?. இல்லை என்றால் ஏன் இந்த புத்திமதி. என்னை மேடையில் அவமதிப்பதா?. அவர் பேச்சை வெறும் பைத்தியக்காரன் பேச்சு என்று விட்டு விட வேண்டியதுதான். அவ்வளவு பெரிய விழாவில் என்னை வற்புறுத்தி அழைத்துச் சென்று அவமதித்த பேசியது மட்டும் ஏற்புடையதுதானா?" என்று கூறியிருக்கிறார்.

"பாரதிராஜாவுக்கும், இளையராஜாவுக்கும் அவ்வப்போது சிறு ஊடல்கள் வருவது சகஜம்தான். ஆனால் அதனை மீடியாக்களிடமும், பொது இடங்களிலும் வெளிப்படுத்தும் அளவுக்கு வளர்ந்திருப்பது வேதனையாக உள்ளது" என்று அவருக்கு நெருக்கமான நண்பர்கள் கூறுகிறார்கள். பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து சேர்வது மட்டுமல்ல இனி இளையராஜாவும், பாரதிராஜாவும் இணைவது என்பதே கடினமானது என்கிறார்கள்.


 நன்றி - தினமலர்மதுரையில் இருந்து கிளம்பி வந்து பல்வேறு போராட்டங்களைக் கடந்து தங்களது திறமையால் தமிழ் திரையுலகத்தின் உச்சானிக் கொம்பில் ஏறி உட்கார்ந்தவர்கள் பாரதிராஜாவும், இளையராஜாவும். ஒருவர் இயக்கத்திலும், மற்றொருவர் இசையமைப்பிலும் நிகரற்று விளங்குகிறார்கள்.


இருவரும் பால்ய கால நண்பர்கள் என்பதால் அடிக்கடி ஊடலும், கூடலும் இருக்கும் என்பது இயற்கை.


ஆனால் தற்போது இருவருக்குள்ளும் இனி சேரவே முடியாது என்ற அளவுக்கு ஏதோ பிரச்னை வெடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.சமீபத்தில், அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தின் பாடல் வெளியீடு தங்களது சொந்த மண்ணான மதுரையில் நடந்தது. இவ்விழாவில் கலந்து கொண்ட இளையராஜாவை, பாரதிராஜா ஒருமையில் அழைத்துப் பேசியதும், சில அறிவுரைகள் வழங்கியதும், இளையராஜாவுக்கு பிடிக்காமல் போனது. சொந்த மண்ணில் தன்னைப் பற்றி பாரதிராஜா இவ்வாறு கூறியது இளையராஜாவின் மனதை பாதித்தது.இதுதான் இருவருக்குள்ளும் அவ்வப்போது உண்டான சண்டை, வெளி உலகுக்குத் தெரிய வரக் காரணமாகிவிட்டதாம்.


தங்களது திறமையால் தமிழ் உலகில் நிகரற்று விளங்கும் இருவரும் நட்பிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதே தமிழ் ரசிகர்களின் ஆசை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


thanx - dinamani

1 comments:

Inian said...

பாரதிராஜா இன்று நேற்று அல்ல ராஜாவை அவன் இவன் என்று அழைப்பது. அதனால் அந்த காரணத்திற்காக ராஜா கோபித்துக் கொள்ளவில்லை. ராஜா சொன்ன காரணத்தை இந்த நேரத்தில் கவனத்தில் கொள்வது நல்லது என்று நினைக்கிறேன். தலைக்கணம் பிடித்து அலைகிறாய் அது இது என்று பொது சபையில் பேசுவது எந்த வகையில் நியாயம். பாரதிராஜா இளையராஜா உறவு என்பது சாதாரணமானது இல்லை, இந்த அறிவுரையை தனிமையில் சொல்லியிருக்கலாமே பொது மேடையில் இப்படி பேசி தன்னை எல்லோரும் போற்ற வேண்டும் இளையராஜாவை தூற்ற வேண்டும் என்ற மனப்போக்கு தானே வேறொன்றும் இல்லை. அவரைப்போலவே எல்லோரும் இருக்க வேண்டும் நினைப்பது எந்த வகையில் நியாயம். பாரதிராஜா எல்லோரையுமே ன் விகுதியில் விளிப்பது தன்னை பெரிய ஆள் என்று தன்னை தானே நினைத்து கொள்ளும் தலைக்கணம் என்று சொன்னால் மிகையில்லை.