Wednesday, February 13, 2013

ஒரே ஒரு நபர் ஒரு சினிமா எடுக்க முடியுமா? -வெங்காயம் சங்ககிரி ராஜ்குமார் பேட்டி

ஒரே ஒரு நபர் ஒரு சினிமா எடுக்க முடியுமா? ''முடியும்!'' என்கிறார் சங்ககிரி ராச்குமார்.

அப்பாவிகளை மூடநம்பிக்கைகளால் முடக்கிவைத்திருக்கும் கிராமத்துச் சாமியார்களின் நிஜ முகத்தைத் தோலுரித்துக் காட்டிய 'வெங்காயம்’ படம் இயக்கிய ராச்குமாரின் அடுத்த முயற்சி 'ஒன்’!


திரைக்கதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு, இசை, தயாரிப்பு, நடிப்பு ஆகியவற்றை ஒருவரே செய்யும் 'டி.ஆர். ஸ்டைலையும் முறியடிக்கும் வகையில் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் முதல் எடிட்டிங் வரை, கார் டிரைவர் முதல் கலர் கரெக்ஷன் வரை... 'ஒன்’ படம் தொடர்பான அனைத்து வேலைகளையும் இவர் ஒருவரே செய்திருக்கிறார்.


'ஒரு குறும்பட இயக்கம் என்றாலே, 20 பேர் வரை கும்பலாக நிற்பார்கள். அப்படியிருக்க, ஒருவரே எப்படி மொத்தப் படத்தையும் எடுக்க முடியும்?’ ராச்குமாரே இந்த சந்தேகத்தை எதிர்பார்த்திருப்பார்போல. படத்தின் சில காட்சிகளை நமக்குத் திரையிட்டுக் காட்டினார். ஆச்சர்யம்... தனி நபராக ஒரு சினிமா எடுத்திருக்கிறார்.
''கொஞ்சம் விரிவா சொல்லுங்க... ஏன் இந்த 'ஒன்’ முயற்சி?''


''சினிமா ஆசையோட எட்டு வருஷத்துக்கு முன்னாடி சென்னை வந்தப்ப, என் கையில இருந்த திரைக்கதை இது. இதுக்காக சினிமா வுக்குத் தேவையான ஒவ்வொரு கலையா கத்துக்கிட்டேன்.


அஞ்சு வருஷத்துல 'ஒன்’ எடுக்கும் தகுதி எனக்கு வந்துடும்னு நம்பினேன். ஆனா, 'வெங்காயம்’ படம் இயக்கி, அதன் லாப நஷ்டங்கள் தெரிஞ்ச பிறகுதான், இந்தத் தைரியம் வந்தது.

'ஒன்’ படத்தின் கதைக் கருவில் தொடங்கி, மேக்கிங் வீடியோ வரைக்கும் எல்லாமே என் உழைப்பில் உருவானது. கேனான்-5டி ஆட்டோஃபோகஸ் கேமரா வாங்கினேன். நானே ஒரு கிரேன் தயாரிச்சேன். அதைக் கழட்டினா டிராலியாவும், விளக்குகள் பொருத்தவும் பயன்படும். பெங்களூருல சின்னச் சின்ன ஹெலிகாப்டர்களை வெச்சு ரேஸ் நடத்துவாங்க. அவங்ககிட்ட இருந்து சின்ன ஹெலிகாப்டரை வாங்கி, அதில் கேமராவெச்சு ரிமோட் மூலமா இயக்கி ஏரியல் வியூ காட்சிகளை எடுத்தேன். வீட்லயே ஒரு எடிட் ஷூட் போட்டு, அங்கேயே 'ஆவிட்’ல எடிட் பண்ணினேன். இந்தப் படத்துக்காகவே ஒரு கார் வாங்கினேன். எப்போ பணம் கிடைக்குதோ, எப்போ பருவநிலை செட் ஆகுதோ, அப்போ ஷூட்டிங் கிளம்பிடுவேன். கேமராவை செட் பண்ணிட்டு நான் நடிக்க ஆரம்பிச்சுடுவேன். டிராலியையும் கிரேனையும் மோட்டார் மூலமா இயக்குவேன். எனக்கு நானே 'ஸ்டார்ட், கேமரா, ஆக்ஷன்’ சொல்லிக்குவேன். இப்படித்தான் 80 சதவிகித படத்தை எடுத்து முடிச்சிருக்கேன். படத்துல டான்ஸ், பாட்டு எல்லாம்கூட உண்டு!''''இவ்வளவு மெனக்கெட்டு ஏன் ஒருத்தரே எல்லா வேலையையும் செய்யணும்?''


''ஏன்னா, இந்தக் கதைக்கு 'நேட்டிவிட்டி’ கிடையாது. உலகத்தில் யார் பார்த்தாலும் புரியும். மொழியே தேவை இல்லை. அதனால, இதை ஒரு ஆங்கிலப் படமாகவே எடுத்திருக்கேன். ஆனா, இந்தப் படத்தை உலகம் முழுக்கக் கொண்டுசேர்க்கும் பொருளாதாரப் பலம் என்கிட்ட இல்லை. அப்போ, ஏதாவது வித்தியாசமான முயற்சி செஞ்சாதான் உலகத்தின் கவனத்தை ஈர்க்க முடியும். 'காஸ்ட் அவே’, '127 ஹவர்ஸ்’, 'தி பரேட்’ படங்கள் சின்ன பட்ஜெட்டில் மிகக் குறைந்த நபர்களால் எடுக்கப்பட்ட படங்கள்தான். ஆனால், உலக அளவில் பேசப்படுது. காரணம், அந்தப் படங்களோட மேக்கிங் வித்தியாசமா இருக்கும். அப்படி ஒரு விஷயம் மூலமா வித்தியா
சப்படுத்திட்டா, என் படத்தையும் உலகம் கவனிக்கும்னு நம்பி இதைச் செஞ்சிருக்கேன்.''


''வித்தியாச முயற்சிக்கான லாஜிக் எல்லாம் ஓ.கே. ஆனா, படம் சுவாரஸ்யமா இருக்குமா?''''ஏதோ சாதனைக்காக மட்டுமே எடுக்கிற படம் இல்லை இது. ஒரு விறுவிறுப்பான, பரபரப்பான படமா இருக்கும். கதை சொல்றேன். நீங்களே எப்படி இருக்கும்னு தீர்மானிச்சுக்குங்க.  கனவில்கூட ராஜாவாகவே இருக்க விரும்பும் ஒருத்தன், உண்மையிலேயே உலகத்துக்கு ராஜாவானா எப்படி இருக்கும்? திடீர்னு உலகம் அழிய ஆரம்பிக்குது. கடைசி மனுஷனா அவன் மட்டும் உலகத்துல மிஞ்சி இருக்கான். இப்போ இந்த உலகத்துக்கே அவன்தான் ராஜா. அப்போ அவன் என்ன செய்வான்? அதுதான் படம். அதுக்காகப் படம் முழுக்க என் முகம் மட்டுமே வராது. கதைப் படி வேற வேற கேரக்டர்கள் வரும். எல்லாத்தையும் நானே நடிச்சு கிராஃபிக்ஸ் பண்ணியிருக்கேன். மலேசியா, தாய்லாந்து காடுகளில் படத்தை எடுத்திருக்கேன். 20 சதவிகிதப் படத்தை எடுக்க அமெரிக்கா போறேன். அப்படியே அமெரிக்காவில் ஆடியோ ரிலீஸ். படத்தை ஆங்கிலத்தில் எடுத்திருந்தாலும் தமிழ்நாட்டிலும் ரிலீஸ் ஆகும்!''


செம தில்லு

நன்றி - விகடன் 

1 comments:

'பரிவை' சே.குமார் said...

வித்தியாசமான முயற்சி...
வெற்றி பெறட்டும்.