Tuesday, February 05, 2013

அன்னக்கொடியும் கொடிவீரனும்

அன்னக்கொடியும் கொடிவீரனும்’ பட இசை வெளியீட்டு விழா என்றுதான் அறிவித்தது அழைப்பிதழ். ஆனால், மதுரை அரசரடி மைதானத்தில் அன்று அரங்கேறியதோ 'இமயத்திற்கு மரியாதை’ விழா. பாரதிராஜாவின் 36 வருட திரை வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும் வகையில் நடந்த விழாவை 80-களின் திரை நட்சத்திரங்கள் கலகல கலாட்டாவாக நடத்த, நெகிழ்ந்துவிட்டார் பாரதிராஜா.


 பாரதிராஜாவை முதன்முதலில் சந்தித்தது, ஹீரோவாக அறிமுகமானது உள்ளிட்ட சம்பவங்களைப் பகிர்ந்துகொண்ட பாக்யராஜ், 'என் குருநாதரின் ஆசியுடன் சினிமாவில் நான் என்னுடைய செகண்ட் இன்னிங்ஸைத் தொடங்கப்போகிறேன். படத்தின் தலைப்பை பாரதிராஜா அறிவிப்பார்!'' என்றபடி ஒரு துண்டுத் தாளை அவரிடம் நீட்டினார். அதைப் பார்த்ததும் பாரதிராஜாவுக்கு முகமெல்லாம் அதிர்ச்சி. 'படத்தின் பெயர் 'துணை முதல்வர்’ சப் டைட்டில் 'அன் அப்போஸ்ட்!'' என்று வாசித்த பாரதிராஜா, ''அட சண்டாளா... மாட்டிவுட்டுட்டான்யா!'' என்று சிரித்தார்.  


பார்த்திபனின் பேச்சு முழுக்கக் குறும்பு தெறித்தது. 'மயிலு, முத்துப்பேச்சி, பாஞ்சாலி, பஞ்சவர்ணம்னு அவரோட கதாநாயகிகள் பேரு எல்லாம் 'நச்’னு மனசுல பதிஞ்சிரும். ஆனா, அவர் படத்து ஹீரோக்கள் எவன் பேரும் என் ஞாபகத்துல இல்லை. ஏன்னா, எந்த நாயகனையும் நம்ம மனசுல நிக்கவிட மாட்டாரு அவரு. ஹீரோவை சப்பாணி ஆக்கிடுவாரு. அதே சப்பாணி சிகப்பு ரோஜாவோடு வந்தா, மென்டல் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிடுவாரு. சுதாகர் மாதிரி ஒரு அப்பாவி கிடைச்சா... கரும்புள்ளி, செம்புள்ளி குத்திக் கழுதை மேல ஏத்திவிட்ருவாரு. இப்படி எல்லா ஹீரோவையும் கேவலப்படுத்திக்கிட்டே இருந்தா... அவங்க மூஞ்சி எப்படி நமக்கு ஞாபகத்துல இருக்கும்?



பாரதிராஜாவுக்கு ஒரு மன வருத்தம் உண்டு. 'ஊர்ல எல்லாரும் வந்து பாராட்டுறாங்க. ஆனா, வீட்ல சரியான மரியாதை கொடுக்க மாட்டேங்குறாங்களே’னு சொல்லுவார். 'இந்த பாரதிராஜா எவ்வளவு சாதிச்சிருக்கான். அவனை ஏன்யா சராசரி மனுஷனா ட்ரீட் பண்றாங்கன்னு 'தண்ணி’ப்பட்ட... ஸாரி, தனிப்பட்ட முறையில் வருத்தப்படுவார். வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை உங்களோடு நாங்க இருப்போம். தமிழ் சினிமா இருக்கிற வரை நீங்க இருப்பீங்க!'' என்று நெகிழ்வாக முடித்தார்.


வடிவுக்கரசி பேசியபோது, '' 'முதல் மரியாதை’ படத்துல, சிவாஜி சாரோட ஜோடின்னதும் 'தங்கப்பதக்கம்’ கே.ஆர்.விஜயா மாதிரி நடிக்கப்போறோம்னு சந்தோஷமாப் போனேன். ஆனா, அங்க போய் நின்னதுமே முஞ்சில கரியப் பூசுனாங்க, காதுல தண்டட்டி போட்டாங்க. அப்புறமா, 'அப்பச்சி கோவணத்தைக் காத்து தூக்கிட்டுப் போயிடுச்சாம். அடுப்பு ஊதுற குழல்ல அப்படி என்னடா ராகம்?’னு வசனம் பேசவெச்சாரு. நான் நொந்துட்டேன். அந்த கேரக்டர் எனக்குப் பிடிக்கவே இல்லை. டைரக்டர் மேல உள்ள கோபத்தைத்தான் படத்துல சிவாஜி சார் மேல காட்டினேன்!' என்று உண்மையைப் போட்டு உடைத்தார்.



சத்யராஜ் பேச்சு முழுக்கத் தகடு தகடுதான். ''நான் நடிச்ச முதல் லவ் சப்ஜெக்ட் 'கடலோரக் கவிதைகள்’தான். அதுக்கு முன்னாடி 75 படத்துல வில்லனா நடிச்சிருக்கேன். நான் ஸ்க்ரீன்ல வந்து நின்னதுமே, 'சூப்பர் ரேப் சீன் இருக்குடா’னு ஆடியன்ஸ் எல்லாம் கை தட்ட ஆரம்பிச்சிடுவாங்க. ஆனா, அப்படிப்பட்ட என் கையில ஆட்டுக்குட்டியைக் கொடுத்து, 'டீச்சர்... டீச்சர்’னு நடிக்கவெச்சவர் பாரதிராஜா!'' என்றார் சத்யராஜ்.



''எங்க காலடி படாத இடமே கிடையாது இந்த மதுரையில். பாரதிராஜாவைப் பாராட்ட வந்த வங்க எல்லாம் அவங்கவங்க அனுபவிச்ச விஷயத்தை அழகாச் சொன்னாங்க. ஆனா, அவரை அதிகமாப் புரிஞ்சுக்கிட்டவன் நான்தான். என்னை அதிகமாப் புரிஞ்சுகிட்டவர் அவர்தான்!'' என்று நெகிழ்ந்த இளையராஜா, இருவருக்கும் இடையிலான நெருக் கத்துக்கு மேலும் பல சம்பவங்களைக் குறிப் பிட்டார்.  



இறுதியில் பேச எழுந்தபோது, உணர்ச்சிப்பிழம்பாக நெக்குருகிவிட்டார் பாரதிராஜா.


''நான் கோபத்தின் உச்சம். அவன் இசை உலகின், தத்துவ உலகின் உச்சம். இந்த பாரதிராஜா சினிமாவைத்தான் ஜெயிச்சேன். நீ சமூகத்தையே ஜெயிச்சவன்டா. நீ மிகப் பெரிய கலைஞன். உனக்கு வித்தை கர்வம் வேணும். வெச்சிக்கோ. இப்பக்கூட எனக்கும் உனக்கும் சண்டை. ஏ இசைஞானி... இந்த மதுரை மண்ணில் நான் ஒன்றைப் பிரகடனப்படுத்துகிறேன்... இங்கே இருந் திருக்க வேண்டிய இன்னொரு தூண் (வைரமுத்து) இங்கே இல்லை. 



நீ உருவாக்கின தூண் இங்க இல்லை. ஒரு எறும்பு உன்னைக் கடிக்குதுடா. அதுக்காக நீ அதைக் கொல்லக் கூடாதுடா. கீழே எடுத்துவிட்றணும்டா. இந்த மண்ணில் ஒரு மொட்டைக் கோபுரம் நின்றுகொண்டு இருக்கிறது கட்டப்படாமல். நீ நினைத்தால் கட்டி முடிக்கலாம். பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து என்ற மூன்று கோபுரங்களும் எழுந்து நிற்கும். நிக்கவைக்கணும். நான் கை கொடுக்குறேன்... நீ..?'' என்று கேள்வியோடு பாரதிராஜா நிறுத்த, சிந்தனையில் ஆழ்ந்தார் இளையராஜா.


நல்ல கனவுகள் நனவாகட்டும்!


நன்றி - விகடன்



0 comments: