Friday, February 22, 2013

வன யுத்தம்-சினிமா விமர்சனம் (விகடன் விமர்சனக் குழு)


வீரப்பனின் வாழ்வும் மரணமும்தான்... 'வன யுத்தம்’!


 ஆனால், நாளிதழ் செய்திகளிலேயே பாக்கெட் நாவல் சுவாரஸ்யம் தந்த வீரப்பனின் வாழ்க்கையை, சினிமா ஆக்கியதில் அந்த சுவாரஸ்யத்தைக் 'காவு’ கொடுத்துவிட்டது ஏன் ரமேஷ்?  


முதல் பாதிச் சம்பவங்கள் முழுக்க முன்பின் தொடர்பு இல்லாமல் 'டாக்குமென்டரி’ தொனியில் கடந்து செல்வது, வாசித்த செய்திகளையே வாசிக்கும் அலுப்பு. ஒரு சாதாரண கூலித் தொழிலாளி வீரப்பன் எப்படி மொத்த வனத்தையும் கட்டுப்படுத்தும் கடத்தல்காரனாக உருவெடுத்தான், வீரப்பனின் ஒவ்வொரு முடிவுக்கும் பின் இருக்கும் அரசியல், வீரப்பனை வில்லனாக உருவெடுக்கவைத்ததில் தமிழக -  கர்நாடக போலீஸாரின் பங்கு... இவை எங்குமே காட்சிப்படுத்தப்படவில்லை. 10 வருடக் கதையை 10 நிமிட ஃபாஸ்ட் ஃபார்வர்டில் சொல்வதுபோலக் கடகடவெனக் கடக்கின்றன காட்சிகள். பின்பாதியில் அர்ஜுன் ஆபரேஷனை ஆரம்பித்ததும் வேகமெடுக்கும் திரைக்கதையில் மட்டுமே யுத்த திகில்!  


வீரப்பனாக... கிஷோர் நச் தேர்வு. ஒல்லி உடலும், பெரிய மீசையும், மூன்றாவது கையாக துப்பாக்கியுமாக... க்ளோனிங் வீரப்பன். 'ஸ்லாங்’ இடித்ததாலோ என்னவோ, இரண்டு மூன்று வார்த்தைகளிலேயே வசனத்தை முடித்துக்கொள்பவர், தப்பிச் செல்வதற்காக டி-ஷர்ட், ஜீன்ஸ் அணியும் காட்சியில், ''சின்னப் புள்ள மாதிரி என்னையும் டிரெஸ் போடவெச்சிட்டீங்களே!'' என்று வெட்கப்படும் இடம்... இயல்பு! ''நானும் மீசையை எடுக்கணுமா?'' என்று அதிர்ச்சியாகக் கேட்கும் சேத்துக்குளி கோவிந்தனாக, சம்பத் ராம் கோபம், குழப்பம் என எல்லாவற்றிலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.


விஜயகுமார் ஐ.பி.எஸ். கதாபாத்திரத்தில் அர்ஜுன் பெர்ஃபெக்ட் ஃபிட். வீரப்பன் கண்ணி வெடி மூலம் போலீஸை எப்படிக் கொன்றிருப்பான் என்று யோசிப்பது முதல் ஆம்புலன்ஸை இன்ச் இன்ச்சாக வடிவமைப்பது வரை அப்படியே விஜயகுமாரைப் பிரதி பலிக்கிறார். இந்தப் படத்துக்கு எதற்கு லட்சுமிராய்?  

'உன் மகளுக்கு காலேஜ் சீட், உன் மகனுக்கு கவர்மென்ட் வேலை’ என்று வீரப்பனுக்கு வேலை பார்க்கும் முன்னாள் மிலிட்டரியை பிரெய்ன்வாஷ் செய்யும் 'போலீஸ் புத்தி’, கோவை சிறை முதல் பாப்பாரப்பட்டி கிராமம் வரை துல்லியமாகக் காய் நகர்த்தி, வீரப்பனுக்குப் பொறிவைக்கும் வியூகம் என 'ஆபரேஷன் குக்கூன்-ஐ’ நேரில் பார்க்கும் உணர்வை ஏற்படுத்தி இருக்கிறது பின் பாதித் திரைக்கதை.  


ஆனால், மலைவாழ் மக்கள் போலீஸால் ஏகப்பட்ட கொடுமைகளுக்கு ஆளானது, பல நூறு பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது இவற்றைப் பற்றி ஒரு வார்த்தை, ஒரு காட்சிகூட இல்லையே படத்தில்?!
வீரப்பன் தரப்பு நியாயங்கள் எதுவுமே இல்லாமல் போலீஸ் தரப்பு விளக்கங்களாகப் படம் விரிவதால், இந்த யுத்தம் ஒரு பக்கச் சத்தம்!


- விகடன் விமர்சனக் குழு

2 comments:

RAMA RAVI (RAMVI) said...

விகடன் விமர்சனம் சரி... உங்க விமர்சனம் எங்கே??

vijayaustin said...

Still waiting for your review