Friday, February 15, 2013

விஸ்வரூபம் -ஓ பக்கங்கள் ஞாநியின் கேள்விகள் @ கல்கி


இன்னும் 15 நாட்கள்!

ஞாநி

மத்திய அமைச்சர் நாராயணசாமியின் கணக்கில் காலம் என்பது, வருடக் கணக்கில் யுகக் கணக்கில் இருப்பதே அல்ல. அதன் லிமிட் 15 நாட்கள்தான். ஒவ்வொரு முறை கூடங்குளம் அணுஉலை பற்றி அவரிடம் நிருபர்கள் கேள்வி கேட்டாலும், இன்னும் 15 நாட்களில் மின் உற்பத்தி தொடங்கிவிடும் என்று அலுக்காமல் பல 15 நாட்களாகச் சொல்லி வருபவர் அவர்.
அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தினால்தான் கூடங்குளம் அணுஉலை இயங்கமுடியாமல் தாமதமாகிறது என்று யாரும் சொல்லமுடியாது. மத்திய அரசும் மாநில அரசும் அடுத்தடுத்து அமைத்த குழுக்கள் அறிக்கை கொடுத்த பின்னர் போராட்டக்காரர்களுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை. அணுஉலை பணிகள் நடப்பதைப் போராட்டக்காரர்கள் தடுக்கவும் இல்லை.
ஆனால் இதுவரை உதயகுமார், புஷ்பராயன், முகிலன், மைபா ஜேசுராஜ் ஆகியோர் மீது 325 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெயர் பதிவு செய்யப்பட்ட 5296 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. வரலாற்றில் இதுவரை நடந்தே இராத சிறப்பாக, பெயர்களே பதிவு செய்யப்படாமல், 2,21,483 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்தியாவில் எந்தப் போராட்டத்திலும் இத்தனை பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.
கடந்த மார்ச் 18ம் தேதியன்று காவல் படைகளைக் குவித்து இடிந்தகரை கிராமத்தை அரசு முற்றுகையிட்டபோது அணுஉலை வளாகத்தில் ஆயத்தப் பணிகள் எந்தத் தடையும் இன்றி விரைவாக நடந்து வருவதாக அறிவிக்கப்பட்டது. மே மாதத்தில் மின் உற்பத்தி ஆரம்பித்துவிடும் என்று சொன்னார் நாராயணசாமி. அதன்பின் ஒவ்வொரு 15 நாட்களிலும் அவர் சொன்ன அறிவிப்புகளின்படி, ஜூலையில், ஆகஸ்டில், செப்டெம்பரில், அக்டோபரில், நவம்பரில், டிசம்பரில், ஜனவரியில் மின்உற்பத்தி தொடங்கியிருக்க வேண்டும். இப்போது போராடும் மக்கள் மீது அரசு முற்றுகையிட்டே ஒரு வருடமாகப் போகிறது. ஆனால் அணு உலை இயங்க ஆரம்பிக்கவில்லை.
ஏன்?

தொழில்நுட்பப் பிரச்னைதான் காரணம் என்று அரசும் அணுசக்தித் துறையுமே இப்போது அதிகார பூர்வமாக ஒப்புக்கொள்ளும் நிலை வந்துவிட்டது. இந்த அணுஉலை பாதுகாப்பானதல்ல என்று ஆரம்பத்திலிருந்து போராட்டக்காரர்கள் சொல்லி வரும் கருத்துக்கு வலு சேர்ப்பதாகவே இப்போது அரசு தரப்புச் செய்திகளே அமைந்திருப்பதை, சூழல் ஆர்வலர் நித்யானந்தன் ஜெயராமன் அம்பலப்படுத்தியிருக்கிறார்.
கூடங்குளம் முதல் அணு உலையில் முழு உலை தொடர்பான எல்லா பரிசோதனைகளையும் திரும்பச் செய்து பார்ப்பதற்கான அனுமதியை அணுசக்திக் கண்காணிப்பு வாரியம் வழங்கியுள்ளதாக ஜனவரி 25 அன்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது. புத்தம் புது அணு உலையில், பரிசோதனை ஓட்டத்தை ஒருமுறை செய்தால் போதுமானதுதானே? ஏன் இரண்டாம் முறை செய்ய வேண்டும்? முதல் சோதனையில் சிக்கல்கள், தோல்விகள் வந்தால்தானே அடுத்தது தேவைப்படும்?
அந்தத் தோல்வி என்ன? சில வால்வுகள் சரியாக இயங்கவில்லை என்று அதிகாரபூர்வமாகவே சொல்லப்பட்டது. அணுசக்தித் துறை தலைவர் ஆர்.கே.சின்ஹாவின் அறிக்கைப்படி குறிப்பிட்ட வால்வுகளில் இருக்கும் ஓட்டம், அழுத்தம், வெப்பநிலை என்று பல அம்சங்களின் தரம் சோதிக்கப்பட வேண்டியிருக்கிறது. அதாவது முதல் சோதனையில் இவை எதுவும் தேறவில்லை என்று அர்த்தம்.
கடந்த டிசம்பரில் நடந்த சோதனையில் சில வால்வுகள் சரியாக இயங்காததால், அவை மாற்றப்பட்டன. பழுதுபார்க்கப்பட்டன. புத்தம்புது வால்வுகள் ஏன் பழுதாக இருக்கின்றன என்பதும் அவற்றை ஏன் பழுது பார்க்க வேண்டும் என்பதும் அணுசக்தித் துறை பதில் சொல்லாத கேள்விகள். இந்த மாடல் வால்வுகள் உலகிலேயே முதன்முறையாக இப்போது தான் அணு உலையில் பயன்படுத்தப்படுகின்றன என்று சொல்கிறார்கள். ஆனால் அவை பாதுகாப்பானவை என்று முன்கூட்டியே சர்டிஃபிகேட் கொடுக்க அப்துல்கலாம் முதல் நாராயணசாமி வரை தயாராக இருக்கிறார்கள்!
கூடங்குளம் அணு உலைக்கு இயந்திரங்களை, பாகங்களை சப்ளை செய்யும் ரஷ்ய கம்பெனி மீது நிறைய ஊழல் புகார்கள் ஏற்கெனவே ரஷ்யாவில் உள்ளன. ரோசாட்டம் என்ற இந்த ரஷ்ய அரசு கம்பெனியின் ஊழல் முறைகேடுகள் பற்றி ஏற்கெனவே பக்கங்களில் எழுதியிருக்கிறேன் (கல்கி 15.1.2012). 2010ல் மட்டும் ரோசாட்டம் நிறுவனத்தின் கீழுள்ள 35 அதிகாரிகள் ஊழலுக்காக நீக்கப்பட்டார்கள். 2011ல் ரோசாட்டமின் கீழ் இருக்கும் வெவ்வேறு துறைகளின் தலைவர்கள் பன்னிரண்டு பேர் ஊழல் புகாரில் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்கள்.
கடந்த பிப்ரவரியில் ரோசாட்ட மின்துணை கம்பெனியான சியோ பொடால்ஸ்க்கின் பொருள் கொள்முதல் இயக்குனர் செர்ஜி ஷுடோவ் என்பவரை ரஷ்ய அரசு கைது செய்துள்ளது. உலகம் முழுக்க இருக்கும் ரஷ்ய அணு உலைகளுக்குப் பாகங்களை சப்ளை செய்யும் கம்பெனி இது. பல்கேரியா, இரான், சீனா, இந்தியா ஆகிய நாடுகளில் இருக்கும் ரஷ்ய அணு உலைகளுக்கான பாகங்களைத் தயாரிக்கும்போது தரம் குறைந்த உக்ரேனிய எஃகைப் பயன்படுத்தியதாக ஷுடோவ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கூடங்குளம் அணுஉலைக்கு என்னென்ன பாகங்களை ஷுடோவின் கம்பெனி வழங்கியிருக்கிறது என்ற விவரங்களை வெளியிட இந்திய - ரஷ்ய அரசுகள் முன்வரவேண்டும். இதற்காகத்தான் வால்வு சிக்கல் பற்றிய வெள்ளை அறிக்கை வெளியிடும்படி உதயகுமார் கோருகிறார். அதற்கு நாராயணசாமி யார்யாரோ கேட்பதற்காக அறிக்கை வெளியிடமுடியாது என்கிறார். உச்ச நீதிமன்றம் சொன்னால்தான் கேட்பார் போலிருக்கிறது.
கூடங்குளம் அணு உலையின் பாதுகாப்பு, தரம் பற்றி இன்னொரு அதிர்ச்சியான தகவலையும் நித்யானந்தன் ஜெயராமன் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஜூலை 2011லேயே அணுசக்தித் துறை வட்டாரங்களை ஆதாரம் காட்டி பி.டி.. வெளியிட்ட ஒரு கட்டுரையில், கூடங்குளம் உலையின் கபாலத்திலேயே சிக்கல் இருப்பது தெரியவந்திருக்கிறது.
உலையின் கபாலம் என்பது வட்ட வடிவில் உச்சியில் தெரியும் அமைப்பாகும். கதிரியக்கம் கசியாமல் இருக்க டபிள் கன்ட்டெனர் என்ற முறையில் இரட்டை அடுக்காக கான்க்ரீட்டில் இது கட்டப்படுகிறது. இதைக் கட்டும்போதே உள்ளே செல்ல வேண்டிய கேபிள் கம்பிகள் எல்லாம் பொருத்தப்பட்டு விட வேண்டும். நம் வீட்டில் சுவர் கட்டும்போதே மின் கம்பிகள் உட்புறம் செல்ல வழி அமைத்துக் கட்டுகிறோம் அல்லவா, அதைப் போல..! கட்டிய சுவரை இடித்து மின்கம்பி பதித்து திரும்பப் பூசுவது சுவரை பலவீனப்படுத்தும்.
ஆனால் கூடங்குளம் அணு உலையின் கபாலத்தில் உட்செல்ல வேண்டிய பல கிலோமீட்டர் நீளம் உள்ள கேபிள்கள் கட்டும்போது வந்து சேரவே இல்லை. கட்டுமான வேலைக்கு வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக எந்தெந்தப் பொருட்கள் வரவேண்டுமென்ற வரிசைக்கிரமம் உள்ளது. அதில் இந்த கேபிள்கள் மிஸ் ஆகிவிட்டன!
எனவே கட்டிய கபாலத்தில் திரும்ப ஓட்டை போட்டு கேபிள்களைச் செலுத்தித் திரும்பப் பூசியிருக்கிறார்கள். இந்தக் கபாலத்தை பைக் ஓட்டுபவரின் ஹெல்மெட்டுக்கு ஒப்பிடலாம். ஹெல்மெட் ஒற்றை வார்ப்பாக இருக்க வேண்டும். அதில் நடுவே வெட்டி பீஸ் போட்டு ஒட்டினால், ஹெல்மெட் பாதுகாப்பாக இருக்க முடியாது. உலகில் அணுஉலை வரலாற்றிலேயே இப்படி உலையின் கபாலத்தை ஓட்டை போட்டுப் பூசிய நிகழ்வு எங்கேயும் நடந்த செய்தியே இல்லை.
எனவே கூடங்குளம் அணு உலை கட்டுமானம் தொடர்பான எல்லா தகவல்களையும் அரசு வெளியிட வேண்டும். அணு உலையே வேண்டாம் என்று சொல்பவர்களை விட, அணு உலை வேண்டும் என்று வாதாடுபவர்கள்தான் இப்போது இந்தப் பிரச்னைகளில் குரல் எழுப்பவேண்டும்.
உலை பாதுகாப்பானது என்று அடித்துப் பேசிய அப்துல்கலாம், இப்போது வால்வ் பிரச்னை பற்றியும் கபாலமோட்சம் பற்றியும் தயவுசெய்து வாய் திறக்க வேண்டும்.

நாடக முன்தணிக்கை ஒழிந்தது!
விஸ்வரூப இரைச்சலில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நீதிமன்றத் தீர்ப்பு ஊடக, பத்திரிகை கவனத்தை அதிகம் பெறாமல் போய்விட்டது. தமிழ்நாடு நாடக நிகழ்ச்சிகள் சட்டத்தை எதிர்த்து நான் போட்ட வழக்கு வெற்றி பெற்றிருக்கிறது. என் சார்பாக நீதிமன்றத்தில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் யசோத் வரதன், சுனில் குமார் ஆகியோர் வாதிட்டனர். அரசியல் சட்டம் தொடர்பான வழக்கு என்பதால் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரலையே ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டிருந்தது.  


இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த பின்னர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தம் தீர்ப்பில் இந்தச் சட்டத்தின் பல ஷரத்துகள் அரசியல் சட்டத்தில், சட்டம் முன்னர் அனைவரும் சமம் என்று கூறும் 14ம் பிரிவு, கருத்துச் சுதந்திரத்தை உறுதி செய்யும் 19ம் பிரிவு ஆகியவற்றுக்கு விரோதமானவை என்று கூறி அந்த ஷரத்துகள் செல்லாதவை என்று அறிவித்திருக்கிறார்.
ஏன் இந்த 60 வருடச் சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடுத்தேன் என்பதை விரிவாக ஏற்கெனவே பக்கங்களில் (கல்கி 29.4.2012) எழுதியிருக்கிறேன். இப்போது வந்துள்ள தீர்ப்பின்படி இனி யாரும் முன்கூட்டியே அனுமதி கோரி சென்னையில் காவல் துறை ஆணையரிடமோ, மாவட்டங்களில் ஆட்சி யரிடமோ நாடகப் பிரதியை அளித்து விண்ணப்பிக்க வேண்டியதில்லை. அரங்கிலோ, வெளியிலோ நாடகம் நடத்த நாடகப் பிரதியை முன் அனுமதி கோரி தர வேண்டியதில்லை.
தீர்ப்புச் செய்தி சில இதழ்களில் வெளியானதும், எனக்கு வந்த நன்றி/பாராட்டு தொலைபேசி அழைப்புகளில் பெரும்பாலானவை பல்வேறு சிற்றூர்களிலிருந்தே ஆகும். அங்கே நாடகம் நடத்தும் குழுக்கள் சென்னையில் இருக்கும் நாடகக் குழுக்கள் சந்திப்பதை விட, அதிகமான அலைச்சலையும் தொல்லையையும், ஊழலையும் சந்தித்து வந்திருக்கிறார்கள். எதிர்ப்பை மீறி தொடர்ந்து செயல்பட்டு வந்த நாடகக் காரர்களான மறைந்த எம்.ஆர்.ராதாவுக்கும் கோமல் சுவாமிநாதனுக்கும் இந்தத் தீர்ப்பை காணிக்கையாக்குகிறேன்.
பூச்செண்டும் திட்டும்!
தில்லி பஸ்சில் நடந்த பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெண்ணின் பெயரையும் படத்தையும் இதுவரை இந்தியாவில் செய்தித்தாள்களும் ஊடகங்களும் வெளியிடாமல் இருந்து வருவது நம் பூச்செண்டுக்குரியது. பாலியல் வன்முறைகளில் பாதிக்கப்பட்டோர் பெயரை, விவரங்களை வெளியிடக் கூடாது என்ற நெறிமுறை இப்போதுதான் முதல்முறையாக முழுமையாகப் பின்பற்றப்பட்டிருக்கிறது. ஆனால் தில்லி நிகழ்வுக்குப் பின்னர் நடந்த பல நிகழ்வுகளில் இந்த நெறி பின்பற்றப்படவில்லை. பாலியல் கொடுமைக்குள்ளான இரண்டு வயதுக் குழந்தையின் படத்தையே மாலைமலர் ஏடு வெளியிட்டிருக்கிறது. இன்னும் பல ஏடுகள் இந்தத் தவறைச் செய்கின்றன. அவர்களுக்கெல்லாம் இந்த வாரத் திட்டு.
விஸ்வரூப கேள்விகள்!
கேள்வி 1: தணிக்கை வாரியத்தின் மீது நீதிமன்றத்திலேயே ஊழல் புகார் சொன்ன தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் ஆதாரம் காட்டவேண்டும் அல்லது மன்னிப்பு கேட்கவேண்டும் என்று தணிக்கை வாரியம் கோரியிருப்பதற்கு பதில் சொல்லாமல் தமிழக அரசு மௌனமாக இருப்பது ஏன்?
கேள்வி 2: படத்தில் ஏழு வெட்டுகள் இருந்தால் படம் தங்களுக்கு எதிரானதல்ல என்று திருப்தி அடையும் தமிழக முஸ்லிம் தலைவர்களுக்கும், எந்த வெட்டும் இல்லாமலே படத்தைப் பார்க்கத் தயாராக இருக்கும் இதர மாநில முஸ்லிம்களுக்கும் இருக்கும் ஏழு வித்தியாசங்கள் என்ன?


நன்றி - கல்கி

0 comments: