Monday, February 11, 2013

பிருந்தாவின் கனவு - அ. வெண்ணிலா - சிறுகதை

பிருந்தாவின் கனவு

முன்குறிப்பு: ஓர் உண்மைச் சம்பவத்தின் தழுவலே இந்தக் கதை! 


பிருந்தாவுக்குக் கைகுலுக்கப் பிடிக்கும். கை கூப்பியோ, கைகளை உயர்த்தியோ வணக்கம் சொல்வதைவிட, கைகுலுக்கி வணக்கம் சொல்வது மனசுக்குப் பிடிக்கும். நெருக்கமாக உணர்வாள். வலது கை குலுக்கிக்கொண்டு இருக்கும் நேரத்தில் இடது கையை மேலேவைத்து அழுத்தி, இரு கைகளுக்குள் ஒரு கையைப் புதைத்துக்கொள்ளும் கணம் உயிர்ப்பானது.
 முன் பார்த்த முதல் சந்திப்பில் கை குலுக்க கைகளை முன் நீட்டினால், எதிரில் நிற்கும் ஆண் கொஞ்சம் மிரள்வது தெரியும். எதிர்பார்த்திருக்க மாட்டான். மனசுக்குள் உள்ள தடுமாற்றம் மறைத்து, 'அவளே கை நீட்டுகிறாள், நமக்குஎன்ன?’ என்று காட்டிக்கொள்வதுபோல் பேன்ட் பாக்கெட்டில் இருந்து கைகளை வெளியே எடுத்து, அவசர அவசரமாகக் கை குலுக்குவார்கள்.
 கை குலுக்கல் இங்கு சம்பிரதாய மீறல். பெண் தன் உடலின் கட்டுக்களை லேசாக விடுவித்துக் கொள்ளும் சுதந்திரம். சில நேரங்களில் அழைப் பாகப் புரிந்துகொள்ளப்படும் அபாயமும் உள்ளது. பொதுச் சபைகளில், (நிச்சயம் அவை ஆண்களால் நிரம்பியதாகத்தானே இருக்கும்.) நண்பர்களுடன் கை குலுக்கும் பெண்தான் கவனத்தின் மையம்.
 எல்லோரும் அவரவர் நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருப்பதுபோல் பாவனை இருக்கும். அவர்களின் ரகசியக் கண்கள் அந்தப் பெண்ணை ஊடுருவியபடியேதான் இருக்கும். கை குலுக்கலுடன், பற்கள் வெளியே தெரிகிற மாதிரி, கொஞ்சம் சத்தமும் வெளிக் கேட்கிற மாதிரி சிரித்துக்கொண்டு, லேசாக நண்பனின் கையைத் தட்டிக்கொண்டு பேசுகிற பெண் என்றால், சபை எப்போது கலையும் என்று பார்த்துக்கொண்டே இருப்பார் கள். 'என்ன பாஸ், என்ன மச்சி, என்ன மாப்ள, என்ன தல’ என அவரவர்களின் தகுதிக்கு ஏற்ப அழைத்து, 'கைவசம் ஒரு ரெடி பீஸ் வெச்சிருக்க போல இருக்கே’ என்று பொறாமை கலந்த, வாழ்த்துக்கள் போன்ற ஏக்கத்தைத் தெரிவிப்பார்கள். 
'அக்கா, தங்கச்சிகூடப் பொறக்கலையா’ என்று திட்டு வாங்கக் கூடாது என்ற வைராக்கியத்தோடு வளர்க்கப்பட்ட சில அப்பிராணி ஆண் கள், இயல்பான இந்தக் கைகுலுக்கலுக்குப் பயந்துவிடுவார்கள். ஈரத் துணியைப் பிடித்துக் கை குலுக்குவதுபோல் அவர்கள் கைகள் வேர்த்து இருக்கும். கை குலுக்கி முடித்த பிறகு தீவிரவாதச் செயலைச் செய்த மாதிரி, இரு கைகளையும் பேன்ட் பாக்கெட்டுக்குள் விட்டு, நடுக்கத்தைக் குறைத்துக்கொள்வார்கள் அல்லது கைக்குட்டை எடுத்து, வியர்க்கும் முகத்தை அடிக்கடி துடைத்துவிட்டுக்கொண்டு, உண்மையிலேயே தான் அப்பிராணி என்பதை நிரூபிப்பார்கள்.


கை குலுக்குவதைப் பற்றி தான் இயல்பாக இருப்பதாகக் காட்டிக்கொள்ளும் நண்பர்கள் ஒரு சிலர் இருப்பார்கள். வெளியில் தெரியாவிட்டாலும், உள்ளுக்குள் அவர்கள் இதைப் பற்றி யோசித்துக்கொண்டு இருப்பதை, கீழே தாழும் அவர்களின் கண்கள் காட்டிக் கொடுத்துவிடும்.தோழிகள் கோபிப்பார்கள்... ''இங்க எல்லா ஆம்பளையும் ஒண்ணுதான்டி. தண்ணி அடிச்சுட்டு லுங்கியை அவுத்துத் தோள் மேல போட் டுக்கிட்டு போறவன்ல இருந்து... சட்டையை இன் பண்ணிக்கிட்டு, பளபளப்பா ஷூ போட்டுக்கிட்டு, முகத்தை இறுக்கமா வெச்சுக்கிட்டு அதிகாரியா வர்றவன் வரைக்கும் எல்லா ஆம்பிள மனசுக்குள்ளயும் 'இவ ஒரு பொம்பளதானே’னு சொல்ற புத்திதான் இருக்கும். நீ சும்மா ஏன் அவனுங்ககிட்ட போய் இயல்பா இருக்கிறதாக் காட்டிக்கணும்னு நெனைக்கிறே? இவனுங்ககிட்டபோய் உனக்கென்ன ஃப்ரெண்ட்ஷிப்... கத்திரிக்காய், மண்ணாங்கட்டி. வந்தா வேலையைப் பார்ப்பியா..?'' என்பார்கள். இவள் சிரித்துக்கொண்டே ''வாழ்க்கைலேர்ந் துதானே எல்லாத் தத்துவமும் வந்தி ருக்கு. வாழ்க்கைலேர்ந்து வந்ததே வாழ்க்கைக்குப் பயன்படாதா?'' என்பாள்.
''உனக்கெல்லாம் பட்டாலும் புத்தி வராதுடி. பேரக் கெடுத்துக்கிட்டு எங்கனா கஷ்டப்படு. அப்புறம் இப்படிக் கனவு வந்தது, அப்படிக் கனவு வந்ததுன்னு சொன்னே... அவ்ளோதான்'' என்பதோடு தோழி களும் நகர்ந்துகொள்வார்கள்.தலைநகரத்தின், புகழ்பெற்ற தனியார் நிறுவனத்தின் மனிதவளப் பிரிவு அதிகாரி இவள். தினம் புதுப் புது முகங்கள், விதவிதமான தேர்வுகள் என்று ஒவ்வொரு நாளும் சுவாரஸ்ய மாகவே போகும். நிறைய சதவிகிதம் எடுத்துத் தேர்ச்சி பெற்ற மாணவர் களை, வேலைக்காக நிறுவனம் தேர்வுசெய்துவிடும். தேர்வு செய்த மாணவர்களை, எந்தெந்தப் பணிக்கு நிறுவனத்தில் பணியில் அமர்த்த முடியும் என்று தேர்வுசெய்து கொடுப்பதே இவளின் பணி.கல்லூரியில் இருந்து நேரடியாகப் பணிக்கு வரும் புதிய மாணவர்களைத் துவக்கத்தில் ஆர்வமாகச் சந்திப்பாள். சான்றிதழில் அவர்கள் பெற்றிருக்கும் மதிப்பெண் சதவிகிதத்துக்கும், பணி சார்ந்து நிறுவனம் எதிர்பார்க்கும் தகுதிக்கும் தொடர்பே இருக்காது. கல்லூரியில் அவர்கள் பெறும் அனுபவம் பெரிய கேள்விக்குறியாகவே இருக்கும். இவள் கேட்கும் நுட்பமான கேள்விகளில் ஆண்கள், பெண்கள் இருவருமே தடுமாறிப்போவார்கள். உறவுகளைக் கையாள்வதுகுறித்து, குறிப்பாக இருபாலாரிடமுமே தெளிவு இருக்காது. பதில் என்ற பெயரில் எதையாவது உளறிக்கொட்டுவார்கள். நல்ல கத்திரிக்காயைக் கூடையில் இருப்பதில் இருந்துதானே தேர்வுசெய்ய முடியும்? கூடையைக் கிளறிக் கிளறி இருப்பதில் நல்லது என்று நம்புவதைத் தேர்வு செய்வாள். இவள் தேர்வு பெரும்பாலும் தோற்காது.


இவளுக்குக் கீழே இருக்கும் அடுத்த நிலை அதிகாரிகள் நான்கு பேரும் ஆண்கள். அப்படி ஒரு நினைவு வராமல் இருக்க விரும்புவாள். தவிர்க்க முடியாமல் 'ஆண்கள்’ என்பதும் சேர்ந்தே ஞாபகத்தில் வரும். அந்த நினைவைக் குறைப்பதற்காகவே, கண்களைப் பார்த்துப் பேசுவது, பல் வெளித் தெரியச் சிரிப்பது, அவர்களின் முன்னால் ஆடைகளைச் சரிசெய்துகொள்ளாதது, திடீர் என்று கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தால் பதற்றம் அடையாமல் இருப்பது எனப் பல்முனை முயற்சிகளைச் செய்துபார்ப்பாள். இடைவேளை நேரத்தில் அவளாகவே தேநீர் குடிக்க அழைப்பாள்.திவாகர்தான், இவளுக்கு அடுத்து இந்த அலுவலகத்துக்கு வந்தவன். இரண்டு புதியவர்கள் சேர்ந்து அந்த இடத்தை, பழையதாக்க முயற்சிப்பதுபோல் இருவரும் ஒன்றாகத் தேநீர் குடிக்கப்போவது, மதிய உணவைப் பகிர்ந்துகொள்வது என்று இணைந்து வேலை செய்தார்கள். காலையில் கை குலுக்கிக்கொள்வது, சந்தோஷத்தில் அடித்துக்கொண்டு சிரிப்பது, இயல்பாகப் பக்கத்தில் உட்கார்வது என்று இவளால் திவாகருடன் பொருந்திப் போக முடிந்தது. திவாகர், பிருந்தாவின் அணுகுமுறையினால் அவளோடு இயல்பாக இருக்கக் கற்றுக்கொண்டான். பிருந்தா எதிர்பார்ப்பதும் இதைத்தான். ஒரு பெண்ணுடன் உள்ளது போன்ற சகஜமான நட்பை, ஆணிடமும் பெற்றுவிட வேண்டும் என்பதே பிருந்தாவின் பேரவா.இந்தக் கதையின் பிரச்னை என்ன என்றால், நீங்கள் எல்லோரும் யூகிப்பதைப் போல்... பிருந்தாவுக்கு அவள் விரும்பும்படியான நண்பர்கள் கிடைக்காதது அல்ல; பிரச்னையே பிருந்தா தான்.அவளுக்குப் பிடித்தமான நிறைய ஆண்கள் இருந்தார்கள். பிடித்தமான என்பதில் 'யோக்கியமான’ என்ற தகுதியை உள்ளடக்கியது இல்லை. இன்று பல பேர் அந்தத் தகுதியைப் பெரிதாக எடுத்துக்கொள்வதும் கிடையாது. பிருந்தா தன் அறிவு, படிப்பு, திறமை எல்லாம் பயன்படுத்திப் பழகும் நண்பர்கள் வட்டத்தை இயல்பாக்கி வைத்திருப்பாள். எல்லோருக்கும் சம மதிப்பு, சம இடம். தராசைச் சரியாக வைத்திருந்தாள். தராசின் முள்ளே ஊசல்தானே? மெல்லிய காற்றோ, மயிலிறகின் கூடுதல் எடையோ... தராசின் ஒரு தட்டை உயரச்செய்வதுபோல் சில சம்பவங்கள் நடந்துவிடும். பிருந்தாவின் வலிந்து கற்பித்துக்கொள்ளப்பட்ட நட்புப் பிம்பம் அன்றைய கனவில் சிதறும்.திவாகர்தான் அப்படி ஒரு துர்கனவால் சிதைக்கப்பட்ட முதல் பிம்பம். அலுவலக வேலையாக இவளும் திவாகரும் கோவைக்குப் பயணமானார்கள். காரில் நீண்ட பயணத்தின் உற்சாகம் இருவரிடமும். சொந்த விஷயங்கள், கல்லூரி நாட்கள், முதல் காதல் அனுபவம், மனசுக்குப் பிடித்த முதல் ஆள் என்று பயணம் ஏற்படுத்திக் கொடுத்த தனிமை இதத்தில், மனசின் பக்கங்களைப் புரட்டிப் பேசினார் கள். இருவருக்குமே பிடித்திருந்தது. அதிகமாக வலிந்து தன்னை நல்லவ னாகக் காட்டிக்கொள்ளாத அவனின் வெளிப்படைத் தன்மையை ரசித்தாள்.நிறைய முறை கை, கால்கள் தொட்டுக்கொண்டன. நீண்ட நேரம் தொங்கவிட்டபடி வரும் காலைச் சரிசெய்துகொள்ள, மடித்து உட்கார்ந்தபோது அவள் முட்டிக் கால் அவன் கால் மேல் இடித்தது. எதுவும் உறுத்தவில்லை... அல்லது உறுத்தாத மாதிரி நடந்துகொண்டார்கள்.போன வேலை ஒரு நாள் முன்னதாகவே முடிந்துபோனது. தங்களின் கூட்டு, வேலையை எளிமையாக்கிய மகிழ்ச்சியில் அன்று மாலையே ஊர் திரும்பினார்கள். ஃபுட் பாய்சனோ என்னவோ, புறப்பட்ட கொஞ்ச நேரத்தில் இவளுக்குத் தலைவலியும் வாந்தியும் ஆரம்பித்தது. கிளம்பிப் போன பயணத்துக்கு நேர்மாறாக இருந்தது திரும்பும் பயணம். சோர்ந்துபோனாள். வழியில் வண்டியை நிறுத்தி மாத்திரையும் நேநீரும் வாங்கிக்கொடுத்தான் திவாகர். ஜுரம் அடிக்கிறதா என்று அவ்வப்போது நெற்றியில் கை வைத்துப் பார்த்தான். உடம்பு முடியாத நேரத்தில், அன்பான ஓர் ஆள் பக்கத்தில் இருப்பது பெரிய தெம்புதானே?கவலையுடன் இவளை வீட்டில் விட்டுச் சென்றான். நன்றாகத் தூங்கும்படியும், மறு நாள் அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்துக்கொள்ளும்படியும் சொல்லிவிட்டுச் சென்றான். உடம்பு முடியாமல் இருந்தாலும் ஒரு நிறைவும் மகிழ்வும் இருந்தது.நள்ளிரவில் அலறி அடித்து எழுந்தாள். கழுத்து, நெற்றி எல்லாம் வேர்வையில் குளித்திருந்தது. வாய், 'வேண்டாம்... வேண்டாம்...’ என்று முணு முணுத்தபடி இருந்தது. 'நீயா திவாகர், நல்லவன் மாதிரி இருந்தாயே?’ என்று கனவில் தான் கேட்ட கேள்வியின் மிச்சம் அவள் நாவில் இருந்தது. நட்பாகப் பேசிக்கொண்டே திவாகர் தன்னுடன் தவறாக நடக்கத் துணிந்த, அந்தக் கனவு அவளின் சிந்தனைக்குப் பெருத்த அடியாக இருந்தது. 'கூடாது... தான் தோற்கக் கூடாது. தனக்குப் பிரியமான ஒருவனைத் தன் கனவு சிதைக்க அனுமதிக்கக் கூடாது. நண்பர்கள் வேண்டும்... அவர்கள் ஆண்களாக அல்ல; நண்பர்களாக.’சிந்தனை தரும் உறுதி, நடைமுறையில் அவளுக்குக் கிடைக்கவில்லை. அடுத்த நாள் காலையில் இருந்து திவாகரை அவளால் இயல்பாகப் பார்க்க முடியவில்லை. அவனைப் பார்த்துச் சிரிக்கும்போது எல்லாம் அவள் இமைகளுக்குள் கனவு வந்து உட்கார்ந்துகொள்ளும். கனவின் அச்சுறுத்தலால், இவளால் திவாகரை நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை. இணைந்த பயணத்தில் விபத்து ஒன்றை ஏற்படுத்திவிட்டு, கனவு அமைதியாக உட்கார்ந்து இருந்தது.காரணம் இல்லாமல் பிருந்தாவின் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றங்களைப் புரிந்துகொள்ள முடியாமல் திவாகர் தடுமாறி னான். அவளின் அமைதிக்கான பொருள் தெரியாமல், மீண்டும் பழையபடி நடந்துகொள்வது தனக்கான அவமதிப்பாக முடியும் என்ற புரிதலில் அவனும் அமைதி காத்தான். பிருந்தாவுக்கு அப்போதுதான் புரிந்தது, தன் முயற்சி இல்லாமல் எந்த நட்பும் வளர முடியாது என்று. கொஞ்ச நாளில் அவனின் விலகல் பழகிப்போனாலும், பார்த்துக்கொள்ளும் நேரத்தில் கண்ணில் ஒரு முள் குத்தத் துவங்கும். இமைகளைத் தழைத்துக்கொண்டாலும் முள் நெஞ்சுக்குள் இறங்கும்.தனிமையில் சந்திக்க நேரும் எல்லா நட்பும் தன்னைப் படுக்கையறைக்கு அழைப்பதாகவே காட்டும் கனவுகள் தினம் தினம் பிருந்தாவுக்கு வரத் துவங்கின. கனவை வெறும் கனவு என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாதபடி, தாக்கம் அதிகமாக இருந்தது. யாரைப் பார்த்தாலும் பயம். கொஞ்சம் கூடுதலாகச் சிரித்துப் பேசிவிட்டால், அன்று கனவு வந்துவிடக் கூடாதே என்பதற்காகத் தூக்கத்தை விரட்டிய படியே விழித்திருப்பாள். தினம் பத்து, இருபது ஆண்களுடன் அலுவல்ரீதியாகப் பேசிப் பழக வேண்டிய கட்டாயம் இருந்த இவளுடைய பணியில்... இவளுடைய கனவு பெரும் சித்ரவதையாக இருந்தது. சிரித்த முகமாக இருந்தவளின், உதட்டு மடிப்புக்குள் புன்னகை ஒளிந்து கொண்டது. அமைதியான தூக்கம் இல்லாததால், கண்கள் கருவளையத்துக்குள் சிக்கின. முகம் சுருங்கி ஒடுக்கு விழுந்தது. வேலையில் கூர்மையும் சுறுசுறுப்பும் குறைந்தது. நிமிட நேரத்துக்குக் கூர்மை குறைந்தால்கூடத் தன்னைத் தகுதி இல்லாமல் ஒதுக்கிவிடும் வேலையில், அவளால் சமாளிக்க முடியவில்லை.தோழிகள் கட்டாயப்படுத்தி மன நல மருத்துவரிடம் ஆலோசனைக்கு அழைத்துச் சென்றார்கள். முதலில் அமைதியாகத் தூங்குவதற்கு அவர் மருந்து, மாத்திரைகளைப் பரிந்துரைத்தார். உடல்நிலையும் மனநிலையும் கொஞ்சம் தேறியவுடன் பேசலாம் என ஆலோசனை சொன்னார். நன்றாக, வயிறு நிறையச் சாப்பிடச் சொன்னார். உடல் வியர்க்க வேலையோ, உடற்பயிற்சியோ செய்து வரச் சொன்னார். இரவு நடைப் பயிற்சிக்குப் பின் தூங்கப்போனால், உடம்பு அலுத்து, சோர்ந்து, களைப்பில் தூங்கிவிடலாம் என்றார்.அவர் சொன்னதை எல்லாம் செய்தாள். தூக்கம் மட்டும் வரவில்லை. களைத்துப்போய் படுக்கையில் விழுந்தாலும், கை, கால்கள் அசந்துகிடந்தனவே தவிர, மனசு கொட்டக்கொட்ட விழித்திருந்தது. தான் வேறாகவும் மனசு வேறாகவும் பிரிந்து கிடக்கும் அதிசயத்தைத் தினமும் இரவுகளில் சந்தித்தாள். உடம்பு ஓய்வு எடுக்கும். மனசு மட்டும் விழித்திருந்து சுற்றி நடப்பதைப் பார்த்துக்கொண்டு இருக்கும். மனசையும் உடம்பையும் ஒன்றிணைக்க முடியாமல் தடுமாறினாள். சம நிலை குலைந்த அவளின் நாட்கள் தினம் அவளுக்கு நரகத்தைப் பரிசளித்தன.இவளின் மோசமான நிலையைப் பார்த்து, மருத்துவருக்கே கவலை வந்தது. இவ்வளவு ஆழமாக... ஒரு சிறு விஷயம் பாதிப்பதற்கான காரணத்தை இவளிடம் இருந்து கண்டறிய அவர் பெரும் முயற்சிகள் எடுத்துக்கொண்டார். தினம் மருத்துவருடன் பல மணி நேரங்கள் உட்கார்ந்த இவள், மெள்ளத் தன்னுடைய இளம் பருவச் சம்பவங்களை நினைவுகூர்ந்தாள்.ஆண்- பெண் நட்பு இவளுடைய அறிவு நிலையின் விருப்ப மாக இருப்பதையும், ஆண் - பெண் உறவின் வன்முறை அவள் ஆழ் மனசின் அனுபவமாக இருப்பதையும் மருத்து வர் கண்டறிந்தார். இவளின் மனப் பிரச்னைக்கு மருந்து இவளேதான் என்று மருத்துவருக்குத் தெரிந் தது. நண்பர்களைக் கையாள்வதைப் பற்றி அவள் தான் தீர்மானிக்க வேண்டும் என்று ஆலோசனை கூறினார்.இரவுத் தூக்கத்தில்தான் கனவு நிறையும். பகலில் தூங்கி ஓய்வு எடுக்கலாம் என்று அலுவலகத்துக்கு 15 நாட்களுக்குத் தொடர் விடுப்பு எடுத்தாள். சூடாக வெந்நீரில் குளித்துவிட்டு, வயிறு முழுக்கச் சாப்பிட்டு, தன்னை வெகுவாக மனதளவில் தளர்த்திக்கொள்வாள். 'தனக்கு எதிரான ஆண் கள் யாரும் இல்லை... தான் வெறுக்கும் ஆண்கள் யாரும் இல்லை... உலகில் உள்ள ஆண்கள் எல்லாம் தனக்கு விருப்பமானவர்களே’ என்று மனசுக் குள் மந்திரம்போல் சொல்லிக்கொண் டாள். தன் அனுமதி இல்லாமல் தன்னை யாரும் நெருங்க முடியாது என்று உறுதியாக வாய் திறந்து சொல்லிப்பார்த்தாள். தான் எவ்வளவு இணக்கமான, புரிந்துகொண்ட ஆண்களுக்கு மத்தியில் இருக்கிறோம் என்று பெருமிதப்பட்டாள். தனக்கு இரண்டு சக்கர வாகனம் ஓட்டக் கற்றுக்கொடுத்த நண்பன், கார் ஓட்டக் கற்றுக்கொடுத்த நண்பன், கல்லூரியில் தங்களுக்குள் ஒருத்தியாக ஏற்றுக்கொண்டு, உச்சபட்ச சந்தோஷத்துடன் படிப்பை முடிக்க உதவிய ஆண்கள், தன்னைப் பெண் என்று உணரவைக்காமல் சரிக்குச் சரியாகப் பழகிய அலுவலக நண்பர்கள் என்று தனக்குப் பிடித்த நண்பர்களை நினைவுகூர்ந்தாள்.
ஹெட்போனில் பழைய சோகப் பாடல்களைக் கேட்டாள். மனதை உற்சாகம்கொள்ளவைக்கும், நெகிழவைக்கும் சோக வரிகள், மனதைத் துடைத்துவைத்ததைப்போல் வெறுமையாக்கின. குழப்பங்கள் வடிந்து மனது பாடல் வரிகளை முணுமுணுத்தது. வெந்நீர்க் குளியல், வயிறு கனக்கச் சாப்பாடு, தனிமை, காலை நேரத்தின் இளம் குளிர்ச்சி, அறைக்குள் உருவாக்கப்பட்ட மெல்லிய இருட்டு, பாடல் தரும் கிறக்கம், எல்லாம் சேர்ந்து தூங்குவதற்கு இசைவான ஓர் அமைதியைத் தரும் என்று மகிழ்ந்தாள். ஏ.சி-யைக் கூட்டிவைத்துவிட்டு, பாட்டு கேட்டுக்கொண்டு போர்வைக்குள் சுருண்டாள். மூளைக்குள் இருந்த மனங்கொத்திப் பறவைகள் எங்காவது பறந்துபோய்விட்டால் பரவாயில்லை என்பதுபோல் கூண்டுகளை அகலத் திறந்துவைத்தாள். சிந்தனைகளைத் தொலைக்க வேண்டும் என்ற சிந்தனை யிலேயே தூங்கிப்போனாள். பல நாட்கள் தூங்க முடியாததன் அசதியை அந்த காலைப்பொழுது நீக்கிக் கொண்டு இருந்தது.
கனவுக்குப் பகல் என்ன? இரவு என்ன? விழிகள் ஓய்ந்தால் போதாதா, இடம் பிடித்துக்கொள்ள? பிருந்தாவைத் துரத்த ஆரம்பித்தது பெருங்கனவு.தலையை வருடின விரல்கள். 'உனக்குள் இவ்வளவு சோகமா பெண்ணே?’ என்ற கனிவான குரல் கழுத்து அருகில் கேட்டது. துவண்டுகிடந்த பாதங்களைத் தன் மடியின் மீது தூக்கிவைத்துக் கொண்டு மெள்ள அழுத்தின. ஒவ்வொரு கால் விரலையும் வலிக்காமல் சொடுக்கு எடுத்தன. 'ஏன் இப்படி மெலிந்து எலும்பாகத் துருத்திக் கொண்டு இருக்கின்றன விரல்கள்?’ - ஆதங்க வார்த்தைகள் விரல்களுக்கு அடியில் புதைந்தன.'ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்’ பாடல் காதுக்குள் கேட்டது. பி.சுசீலாவின் குரலில் ஒன்றினாள். மெள்ள ஒரு கை உடலை அணைத்தது. இவ்வளவு நேரம் இருந்த மென்மை யில் இறுக்கம் கூடியிருந்தது. தன் உடம்பை ஒரு கை வாகாகப் பிடித்துக்கொள்ள... மற்றொரு கை ஆடையை விலக்கத் துவங்கியது. உடம்பு ஒடுங்கியது. ஆடையை விலக்கும் கையைக் கூர்ந்து பார்த்தாள். தனக்குப் பழக்கமான கை போலவே இருந்தது. பார்வையைக் கூர்மையாக்கி, இன்னும் நெருங்கிப் பார்த்தாள். இந்தக் கையைத் தெரியுமே... இந்தக் கை... இந்தக் கை... நினைவின் ஆழத்தில் பாதாளச் சங்கிலி வேகமாகத் துழாவியது. அடையாளத்தைத் தொட்டுவிட்ட கணத்தில்... நெற்றிப் பொட்டுத் தெறிக்க அவள் வாய்விட்டு அலறினாள் 'அப்பா...’!நன்றி - விகடன்

0 comments: