Sunday, February 17, 2013

என்னை ஆச்சர்யப்படுத்தின படங்கள் - ஏ ஆர் முருகதாஸ் பேட்டி

சினிமாவில் 'அண்ணன் உடையான் அறிமுகத்துக்கு அஞ்சான்’கிறது புதுமொழி. சரிதானே!'' - தன் தம்பி திலீபனை அருகில் இழுத்து இறுக்கி அணைத்துக்கொண்டு சிரிக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். தன் தயாரிப்பில் உருவாகும் 'வத்திக்குச்சி’ படத்தில் திலீபனை ஹீரோவாக அறிமுகம் செய்கிறார் இந்த மாஸ் இயக்குநர். ''கஷ்டப்பட்டு சினிமாவில் சாதிச்சவர் நீங்க. ஆனா, எந்தக் கஷ்டமும் இல்லாமல், ஹீரோவா திலீபன் அறிமுகமாகிறார்ல..?''


''அப்படிப் பார்க்காதீங்க. என் அசிஸ்டென்ட் கின்ஸ்லின் நல்ல கதையோட வந்தார். 'ஹீரோ யார்?’னு கேட்டேன். 'உங்க தம்பியை வெச்சே பண்ணலாம்’னு சொன்னார். திலீபனும் நடிக்கிறேன்னு சொன்னான். நான் சரின்னு சொல்லிட்டேன். திலீபன், தானா எடுத்த முடிவு இது. சினிமாங்கிறது எப்பவுமே கத்துட்டே இருக்க வேண்டிய ஒரு கலை. அதைக் கஷ்டம்னு சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. எந்தப் பின்னணியும் இல்லாம சினிமாவுக்கு வந்த நான், கஷ்டப்பட்டேன்னு சொல்ல முடியாது. ஆனா, கடுமையா உழைச்சேன். கத்துக்கிட்ட விஷயங்களைச் சந்தோஷமா செயல்படுத்த ஆரம்பிச்சேன். அந்த அனுபவம் சிலருக்கு ஆரம்பத்திலேயே கிடைக்கும். சிலருக்கு அப்புறமாக் கிடைக்கும். அதேபோல திலீபன் ஜெயிக்கிறது அவன் கையில்தான் இருக்கு.''
இங்கே சின்னதாக இடைமறித்தார் திலீபன்... ''இந்தப் படத்தில் நான் நடிக்கலாம்னு முடிவு எடுத்ததைவிட, அந்தக் கதைக்காக இயக்குநர் தான் என்னைத் தேர்ந்தெடுத்தார். அதுதான் நிஜம்.
 நான் விளம்பர நிறுவனம் நடத்திட்டு இருக்கேன். அப்போ அங்கே வந்து போகும் அண்ணனோட உதவியாளர்கள் பழக்கம்ஆனாங்க. அப்படி நட்பானவர்தான் கின்ஸ்லின். அவரோட 'வத்திக்குச்சி’ ஸ்க்ரிப்ட்டுக்கு மாஸ் ஹீரோக்கள் செட் ஆக மாட்டாங்கன்னு சொல்லிட்டே இருப்பார். திடீர்னு ஒரு நாள், 'நீங்க நடிச்சா நல்லா இருக்கும்’னு சொன்னார். ஸ்டேஜ் ஷோ, டான்ஸ், பாடி லாங்குவேஜ், வசன உச்சரிப்புனு ஒரு வருஷப் பயிற்சிக்கு அப்புறம்தான் நடிச்சேன்'' என்று தனக்கான சின்ன இன்ட்ரோ கொடுத்துவிட்டு, அண்ணன் முகம் பார்த்தார் திலீபன். முருகதாஸிடம் பேட்டி தொடர்ந்தது. ''தமிழ் சினிமாவில் நிறைய இளைஞர்கள் பளிச்னு முத்திரை பதிச்சிருக்காங்க. கவனிக்கிறீங்களா?'''' 'பீட்சா’, 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படங்கள் ஆச்சர்யப்படுத்தின. தன்னை நிரூபிக்கணும்னு ஒரு இயக்குநர் அஞ்சாறு வருஷம் கஷ்டப்பட வேண்டிய சூழல் இப்போ இல்லை. ஒரு கேமரா இருந்தா தன்னோட கற்பனையை ஷூட் பண்ணி, கம்ப்யூட்டர்ல அவங்களே எடிட் பண்ணி, சின்னச் சின்ன மியூஸிக் சேர்த்து டி.வி.டி. பண்ணி கையில் கொடுத்துர்றாங்க. இந்த டிரெண்ட் பார்க்கும்போது தமிழ் சினிமா வில் இன்னும் நிறைய பவர்ஃபுல் படங்கள் வரும்னு நம்பிக்கை இருக்கு!'' ''குறும்பட இயக்குநர்கள் சினிமாவில் சாதிப்பது நல்ல விஷயம். ஆனா, முதல் படத்தில் முத்திரை பதிச்ச பலர் இரண்டாவது படத்தில் சறுக்கிடுறாங்களே?''''அதே ஃபார்முலாதான். சினிமாவில் நிறையக் கத்துட்டே இருக்கணும். முதல் வாய்ப்பில் தன் காதல் அல்லது தன் நண்பனின் காதல்னு ஏதோ ஒரு அனுபவம் அவங்களுக்கு இருக்கும். அது உண்மைக்கு நெருக்கமா இருக்கிறதால ரசிகர்களும் ரசிப்பாங்க... சிரிப்பாங்க... கை தட்டுவாங்க. படமும் ஹிட் ஆகிடும்.
ஆனா, ரெண்டாவது படமும் அப்படிப் பண்ண முடியாது. த்ரில்லர், ஆக்ஷன், குடும்ப உறவுகள், சமூக நலன் சார்ந்த படம்னு வேற வேற தளத்தில் டிராவல் பண்ண ணும். 'மோகமுள்’ மாதிரியான கதைகள் படிக்கும்போது ஒரு வாழ்க்கை வாழ்ந்த மாதிரி இருக்கும். அந்த மாதிரி நிறையப் படிக்கணும். சின்னச் சின்ன விஷயங்களையும் ரசிக்கும் மனசு, கற்பனைத் திறன், வாசிப்புப் பழக்கம் இருந்தா 'அழகி’, 'ஆட்டோகிராஃப்’ மாதிரி படங்களை இருபது வயசுலயே எடுக்கலாம். ஒவ்வொரு நிமிஷமும் நம்மளைச் சுத்தியே நிறைய சினிமா ஓடிட்டு இருக்கு. அதுல இருந்து சீன் பிடிச்சாலே, சிக்ஸர் அடிக்கலாம்!''நன்றி - விகடன் 

0 comments: