Monday, August 03, 2015

கூடங்குளம்: அணு அரசியல்! (மினி தொடர் பகுதி-2)

‘கியூபா தேசத்தாய்க்கு தனது குழந்தைகள் பிரகாசமான எதிர்காலத்தை பார்ப்பார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது. ஆனாலும், அதற்கான வெற்றியானது லட்சக்கணக்கான மனித உயிர்களைக் கொன்று அழிக்கும் அணு குண்டில் இருந்து பெறப்படுவதாக இருக்காது’- சே குவேரா

உலகம் முழுவதிலும் உள்ள அறிவியல் அறிஞர்களுக்கு அணுசக்தி குறித்த சிந்தனையை தூண்டிவிட காரணமாக இருந்தது, இரண்டாம் உலகப் போர். ஜெர்மனிக்கு எதிரான அந்த போரில், ஹிட்லரின் படைகள் அணு குண்டு பயன்படுத்தும் என்ற அச்சம் அமெரிக்கப் படைகளுக்கு ஏற்பட்டது. அதனால் தாங்களும் அணு குண்டு தயாரிக்க வேண்டும் என்றும் அதற்கான அனுமதியை கொடுக்க வேண்டும் என்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அப்போதைய அமெரிக்க அதிபருக்கு கடிதம் எழுதினார். 

அதன் பின்னரே அணுக்களை பிளவுபடுத்தும் ஆய்வுகள் உலக அளவில் அதிகரிக்க தொடங்கியது. இரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகஷாகி நகரங்கள் மீது அணு குண்டு வீசப்பட்டு லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டது எல்லாம் வரலாறு. 

அணு குண்டின் பாதிப்பை நேரில் பார்த்த பின்னர், அணு குண்டு தயாரிக்க காரணமாக இருந்து மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாக ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வருந்தியதையும் வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிறது. உலக நாடுகளின் பார்வை அணு சக்தியில் பதிய காரணம், அணு குண்டு வைத்திருக்கும் நாடுகள் மட்டுமே வல்லரசு நாடாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. தன்னையும் வல்லரசாக காட்டவாவது அணு சக்தியில் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உலக நாடுகளுக்கு ஏற்பட்டது. 

அதனால் வளர்ந்த நாடுகளுக்கு கோடிகளை கொட்டிக் கொடுத்தாவது அணு சக்தி குறித்த ஆய்வை மேற்கொள்ள முண்டியடித்துக் கொண்டு முன்வந்தன. இதில் இந்தியாவும் விதிவிலக்கு அல்ல.

அதனால், அமெரிக்காவிடம் இருந்து அணு சக்தி தொழில்நுட்பங்களை பெற்று மின்சக்தியை உற்பத்தி செய்ய இந்தியா முடிவு செய்தது. அதன்படி, நாட்டின் பல இடங்களில் அணு உலைகள் அமைக்கப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இந்த அணு உலைகளில் இருந்து பெறப்படும் கழிவுப் பொருளில் இருந்து அணு குண்டுகளை தயாரிக்க முடியும். ஆனால், இந்தியாவுக்கு அந்த தொழில்நுட்பம் தெரியாது என்பதால் அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் பலவும் இந்தியாவுடன் அணுஉலைகளுக்கான ஒப்பந்தங்கள் செய்வதில் ஆர்வம் காட்டின.

கூடங்குளத்தில் அணு உலை

இந்தியாவின் தாராப்பூர் நகரில் அமைக்கப்பட்ட அணு உலைக்கு தேவையான எரிபொருளான யுரேனியத்தை அமெரிக்கா விற்பனை செய்து வந்தது. இதற்காக இரு நாடுகளுக்கும் இடையே வணிக ஒப்பந்தமும் கையெழுத்தாகி இருந்தது. இந்த நிலையில், 1974 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமராக இருந்த இந்திராகாந்தி காலத்தில் போக்ரானில் முதன் முதலாக அணு குண்டு சோதனையை இந்திய விஞ்ஞானிகள் நடத்தினார்கள். இதனை அறிந்ததும் அமெரிக்கா ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றது.

‘நாங்கள் உங்களுக்கு எரிபொருள் கொடுத்ததே அணு உலைகளை அமைத்து மின் உற்பத்தி செய்ய மட்டும் தான். ஆனால், எங்களை கேட்காமல் அணு குண்டு தயாரித்து சோதனை செய்து பார்த்ததை ஏற்றுக் கொள்ள முடியாது. இனிமேல் உங்களுக்கு அணு உலைக்கான எரிபொருள் சப்ளை செய்ய மாட்டோம்’ என கறார் காட்டியது. இந்தியாவின் பல இடங்களில் யுரேனியம் கிடைத்த போதிலும், பிற தாதுப்பொருட்களுடன் இருக்கும் அதனை தனியாக பிரிக்கும் தொழில்நுட்பம் வேறு நமக்கு தெரியாது. 

கோடிக்கணக்கில் முதலீடு செய்த அணு உலைகளின் இயக்கத்தை முடக்கும் விதத்தில் அமெரிக்கா செயல்படுவதை எப்படி முறியடிப்பது என இந்திய விஞ்ஞானிகள் விழிபிதுங்கி நின்றனர். பின்னர், ‘எதிரிக்கு எதிரி நண்பன்!’ என்கிற கொள்கை முடிவை எடுக்க மத்திய அரசாங்கம் முடிவெடுத்தது. 

அதன்படி, அப்போது அமெரிக்காவுக்கு சவாலாக திகழ்ந்த சோவியத் யூனியனுடன் கூடுதல் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. அந்த நாட்டின் உதவியுடன் அணு உலைகளின் செயல்பாட்டை தொடரவும் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி 1979ஆம் ஆண்டு அப்போதைய பிரதமரான மொரார்ஜி தேசாய் தலைமையிலான அமைச்சரவை கூடி சோவியத் யூனியனுடன் அணுசக்தி தொடர்புகளை வைத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சோவியத்துடன் வர்த்தகம், தொழில்நுட்பம், அறிவியல், கல்வி என இந்தியாவின் நெருக்கம் அதிகரித்தது. 1988ல் சோவியத் குடியரசின் அதிபரான மிகைல் கார்பசேவ் மற்றும் இந்தியாவின் அப்போதைய பிரதமரான ராஜீவ்காந்தி இடையே புதிய அணு உலைகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதில், நாட்டின் தென்கோடிப் பகுதியான கூடங்குளத்தில் ரஷ்ய தொழில்நுட்பத்துடன் கூடிய இரு அணு உலைகள் அமைப்பது என தீர்மானிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் குறித்து அறிந்ததும் கூடங்குளம் மற்றும் அதனை சுற்றிலும் உள்ள மீனவ கிராமங்களை சேர்ந்த மக்கள் மட்டும் அல்லாமல் குமரி மாவட்ட மக்களும் கொந்தளிக்க தொடங்கினர். காரணம், இந்த அணு உலைகளை குளிர்விப்பதற்காக குமரி மாவட்ட விவசாயிகளின் நீர் ஆதாரமான பச்சையாறு அணையில் இருந்து தண்ணீர் கொண்டுவர முடிவு செய்யப்பட்டு இருந்ததே. 

அணையில் இருந்து தண்ணீர் கொண்டு சென்றால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என விவசாயிகள் குமுறினர். அதே சமயம், அணு உலையை குளிர்வித்த பின்னர் வெளியாகும் சூடான தண்ணீரை கடலுக்குள் விடுவதாகவும் தீர்மானிக்கப்பட்டு இருந்தது.

இப்படி செய்தால் சுற்றுப்புறப் பகுதிகளில் மீன்வளம் முழுமையாக அழியும் என்றும் தங்களுக்கு தெரிந்த ஒரே தொழிலான மீன்பிடித் தொழில் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது எனவும் மீனவர்கள் எச்சரித்தனர். நெல்லை, குமரி மாவட்டங்களை பாதிக்கும் இந்த விவகாரத்தை கண்டித்து பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதம் என எதிர்ப்பு கிளம்பத் தொடங்கியது. முக்கிய அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் பலவும் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடத் தொடங்கின. இந்த சூழலில் ஒப்பந்தம் போடப்பட்டு ஓராண்டுக்குப் பிறகு 1989ஆம் வருடம் மே மாதத்தில் குமரி மாவட்டத்தில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 

இரு மாவட்ட விவசாயிகள் மற்றும் மீனவர்கள் இதில் கலந்து கொண்டனர். கூட்டம் அதிகரித்துக் கொண்டே சென்றதன் மூலம் மக்களின் அதிருப்தி அதிகமாகி இருப்பதை அரசு புரிந்து கொண்டது. போலீஸாரை குவித்து கூட்டத்தை கலைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், ஆக்ரோஷமாக இருந்த மக்கள் அணு உலை அமைக்க மாட்டோம் என அரசாங்கம் உத்தரவாதம் கொடுக்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியபடி இருந்தனர். இதனால் துப்பாக்கிச் சூடு நடத்தியே போலீஸாரால் கூட்டத்தை கலைக்க வேண்டியதாகிப் போனது.

அதன் பின்னர், இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலக அரசியலிலும் பல்வேறு மாற்றங்கள் தோன்றின. கம்யூனிச கூட்டமைப்பாக இருந்த சோவியத் யூனியன் பல நாடுகளாக உடைந்து சிதறியது. இந்தியாவின் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். இந்த நிகழ்வுகள் கூடங்குளம் அணு உலை விவகாரத்திலும் எதிரொலித்தது. இரு நாடுகளுமே தங்களின் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட தயக்கத்தால் அதனை அப்படியே கிடப்பில் போட்டு விட்டனர். 

சில ஆண்டுளுக்கு பிறகு இந்த திட்டம் மறுபடியும் தூசு தட்டப்பட்டது. அப்போது மக்களிடம் ஒரு மாற்றம் ஏற்பட்டு இருந்தது. அதன் பின்னணியில் இருந்த அரசியல் எது?

அரசியல் தொடரும்....
- ஆண்டனிராஜ்

படங்கள்: எல்.ராஜேந்திரன்

நன்றி - விகடன்

0 comments: