Sunday, February 16, 2014

விஜயை எனக்கு எதிரியாக்கி விடாதீர்கள் - எஸ்.டி.ஆர் சிம்பு. பேட்டி @ THE HINDU

கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு படம், இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம், தங்கையின் திருமணத்தில் பிஸி. ஹன்சிகாவுடன் காதல் என்று பரபரப்பாக இருக்கிறார் எஸ்.டி.ஆர் சிம்பு. எத்தனை பரபரப்புக்கு இடையிலும் எத்தனை சர்ச்சைக்குரிய கேள்வியைக் கேட்டாலும் தயக்கமில்லாமல் பேச ஆரம்பிக்கிறார். 



‘சிலம்பாட்டம்’, ‘வாலு’, எல்லாமே மாஸ் ஹீரோ சிம்புவின் ஹீரோயிசத்துக்கான படங்கள். ஆனால் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘வானம்’ போன்றவை சிம்புவை கதாபாத்திரங்களாகக் காட்டின. இனி சிம்புவை இப்படியும் பார்க்கலாமா? 


 
எந்த திட்டமிடலும் என்னிடம் இல்லை. கௌதம் மேனன் முதலில் ‘சுராங்கனி’ என்ற கதையைத் தான் எனக்குச் சொன்னார். ஒரு இளைஞன் ரவுடியாகி பிறகு அவனே எப்படி டானாக மாறு கிறான் என்பதுதான் கதை. ஆனால் நான் பலமுறை விரும்பிப் பார்த்த காதல் படங்களில் ‘அலைபாயுதே’, ‘மின்னலே’ இரண்டுக்கும் தனியிடம் உண்டு. உங்களிடம் ‘மின்னலே’ மாதிரி ஒரு காதல் கதையைத்தான் எதிர்பார்த்தேன் என்று கௌதமிடம் சொன்னேன். எனது எண்ணத்தைப் புரிந்துகொண்டு உடனே ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ கதையை எழுதினார். என் வாழ்க்கையில் சில பக்கங்களை நினைவுபடுத்தியதும் அதில் ஒன்றிப்போனேன். அதேபோல ‘வானம்’ படத்தின் தெலுங்குப் பதிப்பைப் பார்த்தபோது அந்தப்படத்தில் ‘கேபிள் ராஜா’ என்ற கேரக்டர் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. 

 

நிஜவாழ்க்கையில் நான் என்ன செய்வேனோ அதையே அந்த கேரக்டரும் செய்தது. அதனால் அந்தப் படத்தில் விரும்பி நடித்தேன். எனது இமேஜை விட எனது ரசிகர்களை நான் நடிக்கும் படங்கள் திருப்திப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்காக நடிப்புக்குத் தீனிபோடும் கதைகளை தேடிப்பிடித்து நடிக்க வேண்டும் என்றோ தேசியவிருது கிடைக்க வேண்டும் என்றோ நான் எதிர்பார்க்கவில்லை. நான் எவ்வளவுதான் இயல்பாக நடித்தாலும், நன்றாக நடித்தேன் என்று யாரும் எழுதப்போவதில்லை. எனது ஒரே பலம் எனது ரசிகர்கள் மட்டும்தான். அவர்கள் சொல்வதுதான் எனக்கு வேதவாக்கு. 



‘விண்ணைத்தாண்டி வருவாயா’ கார்த்திக் கதாபாத்திரத்தின் குணங்கள் சிம்புவுடன் எவ்வளவு ஒத்துப்போகும்? 


 
கார்த்திக் கேரக்டரின் அத்தனை மென்மை, உண்மை, முரட்டுத்தனம், அப்பா, அம்மாவிடம் இருக்கும் பணிவு, காதலியிடம் காட்டும் துணிவு எல்லாமே எனது குணங்கள். அதனால்தான் அந்தக் கேரக்டரில் என்னால் அத்தனை ஒன்றிப் போக முடிந்தது. ஆனால் சிம்பு என்றால் வம்பு என்று இன்னும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். என் நண்பர்களிடம் கேளுங்கள், என் பெற்றோரிடம் கேளுங்கள், என் தங்கையிடம், தம்பியிடம் கேளுங்கள், என் வீட்டு ஊழியர் களிடம் கேளுங்கள்..அவர்கள் சிம்பு என்றால் அன்பு என்று சொல்லுவார்கள். 



உங்கள் ‘லவ் ஆன்தம்’ எந்த கட்டத்தில் இருக்கிறது? 

 
சர்வதேச பாப் இசைப் பாடகர் ஏகான் வந்து பாடிக்கொடுத்து விட்டார். இன்னும் அதில் சில இறுதி கட்ட வேலைகள் இருக்கின்றன. அவற்றை முடித்ததும், அதை எப்போது வெளியிட வேண்டும் என்று என் மனம் சொல்கிறதோ அப்போது வெளியிடலாம் என்ற முடிவில் இருக்கிறேன். 



உங்களையும் அஜித்தையும் இணைத்த புள்ளி எது? 


 
ஒரு மாஸ் ஹீரோவுக்கு இன்னொரு பிரபலமான ஹீரோ பரம ரசிகனாக இருக்கமுடியுமா என்ற சந்தேகத்தில் கேட்கிறீர்கள். நான் முதலில் சினிமா ரசிகன். அதன்பிறகே நடிகன், ஸ்டார் எல்லாம். ரஜினிக்குப் பிறகு என்னை கவர்ந்த ஆளுமை அஜித். எனது பள்ளி நாட்களில் அப்பா இயக்கி நடித்த ‘மோனிஷா என் மோனாலிசா’ படம் வெளியானது. ஆனால் அதேநாளில் வெளியான ரஜினி படத்தை நண்பர்களுடன் முதல்நாள் முதல் ஷோ விசிலடித்து பார்த்திருக்கிறேன்.



 நான் நடிகனாக இருந்தாலும் எனது படங்களை நானே எப்படி விசிலடித்து பார்ப்பது? ரசிகன் சிம்பு விசிலடித்து படம்பார்க்க ரஜினிக்குப் பிறகு அந்த இடத்தில் அஜித் வந்து சேர்ந்ததில் ஆச்சரியமில்லை. காரணம் நிஜவாழ்விலும் அஜித் ஹீரோவாக இருக்கிறார். அவரது நல்ல குணமே இன்னும் அவர் மீதான ஈர்ப்புக்கு காரணமாக அமைந்துவிட்டது. அஜித்தை எனது இன்னொரு வயதில் பார்ப்பதுபோலவே எனக்குத் தோன்றுகிறது. நான் இப்படிச் சொல்வதால் அண்ணன் விஜயை எனக்கு எதிரியாக்கி விடாதீர்கள். அவர் மீது எப்போதும் மரியாதை கொண்டவன் நான். 



அஜித் உங்களுக்குக் கொடுத்த அட்வைஸ்? 

 
அவர் வலிந்து யாருக்கும் அறிவுரை சொல்லமாட்டார். நாமே இதை யோசிக்காமல் விட்டு விட்டோமே என்று நறுக்கென்று ஆலோசனை சொல்லுவார். எனக்கு ஒன்றைச் சொன்னார். “உனக்கென்று இருக்கும் இடத்தை யாரும் அபகரிக்க முடியாது. கஷ்டப்பட்டு இந்த இடத்தை பிடித்திருக்கிறாய். அதனால் உழைப்பதைத் தவிர வேறு எதைப்பற்றியும் யோசிக்காதே. கவனம் சிதறவிடாதே” என்றார். எனக்கு ஒரு அண்ணன் இருந்து தலையில் கொட்டி சொன்னால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது. 

 

ஹன்சிகாவிடம் உங்களுக்கு பிடித்த விஷயங்கள் என்ன? 

 
ஹன்சிகாவிடம் எனக்குப் பிடித்த விஷயம் அவரிடம் இருக்கும் இயல்பு. பாசிட்டிவ் குணம், மற்றவர்களுக்கு உதவவேண்டும் என்ற இளகிய மனம். இவையெல்லாம்தான். 


நீங்களும் நயன்தாராவும் மீண்டும் இணைந்து நடிப்பது பரபரப்பாகியிருக்கிறதே? 


 
இணைந்து நடிக்கும் முன்பு, ரசிகர்களும் மீடியாவும் இதை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்ற குழப்பம், எனக்கு நயன்தாராவுக்கு, இயக்குநர் பாண்டிராஜூக்கு இருந்தது. ஆனால் நாங்கள் பயந்ததுபோல எதுவுமில்லை. 


ரசிகர்கள் உட்பட எல்லோருக்குமே வேறு நிறைய வேலைகள் இருக்கின்றன என்பது தெரிந்துவிட்டது. நான் அதிகம் பயந்தது ஹன்சிகாவின் தலையை உருட்டி விடுவார்களோ என்றுதான். எனக்கும் என் காதலுக்கும் கருணை காட்டிய அத்தனை ஊடக நண்பர்களுக்கும் என் நன்றி. 


thanx - the hindu 

 

0 comments: