Monday, September 23, 2013

கன்னுக்குட்டிக் காதல்! - சுப்ரஜா -short story


கால் சென்டர். அது ஒரு பன்னாட்டு நிறுவனம். நான், இங்கு வேலைக்கு சேர்ந்து சரியாய் ஒரு ஆண்டு ஆகிறது. இது, ஏதோ டில்லி, மும்பை, கோல்கட்டா, சென்னை போன்ற நகரங்களில் இருப்பது போன்ற வானுயர்ந்த கட்டடங்கள் போல அல்ல.



மாதம், 20 ஆயிரம் ரூபாய் சம்பளம். பிடித்தம் எல்லாம் போக கைக்கு வரும், 17 ஆயிரம் ரூபாயில் வீட்டுக்கு அனுப்பியது போக, ரூம் வாடகை, மெஸ் பீஸ் போக, மிச்சம், வார இறுதி நாட்களில், திப்பு சுல்தான் கோட்டையை பார்க்க வரும், டூரிஸ்டுகளை வேடிக்கைப் பார்க்கும் போது, வாங்கித் தின்னும் கடலைக்கே சரியாய் இருக்கும்.


திப்பு சுல்தான் கோட்டையிலிருந்து கூப்பிடும் தூரத்தில், பிரபல லேப்- டாப் கம்பெனி ஒன்றின் கால் சென்டர். அதில் தான் எனக்கு வேலை.
என் பெயர் குமார கிருஷ்ணன். ஆனால், கால் சென்டரில் என் பெயர் ஆன்ட்ரூஸ்.



ஒரு மாதம் தொடர்ந்து நைட் ஷிப்ட்.


இரண்டு நாள் லீவ் போட்டு ஊரைச், சுற்றிப் பார்க்கலாம் என கிளம்பினேன்.
ஒரு நிமிடம்.
என்னைப் பற்றி நீங்கள் கொஞ்சம் தெரிந்து கொண்டால் மிக நன்றாய் இருக்கும்.
சொந்த ஊர் கும்பகோணம்.
அங்கு, ஏ.ஆர்.ஆர்., பள்ளியில் படித்த போதும், எனக்கு காதல் வரவில்லை. ஆனால், டைரக்டர் பாலாவின், "சேது' படத்தின் படப்பிடிப்பு எங்கள் கல்லூரியில் நடந்து கொண்டிருந்த போது தான் அவளைப் பார்த்தேன். "லேடி பேர்ட்' சைக்கிளில் தோழியுடன். ஷூட்டிங் பார்க்க வந்து இருந்தாள்.
எந்த அரிதார பூச்சும் இல்லாத பளீர் முகம்.
கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்து கொண்டு நின்றவள், பின், சைக்கிளைத் தள்ளிக் கொண்டு நகர, அவளை பின் தொடர ஆரம்பித்தேன்.
அந்த வெயில் நேரத்தின் சூடு கூட, என் மேல் உறைக்கவில்லை. அவளின் பாவாடையும், தாவணியும் அவள் மேல் நாகரிகத்தின் நிழல் இன்னும் விழவில்லை என்று சொன்னது.
நிகுநிகு என்ற உயரத்தில், கொஞ்சம் பூசினாற் போல உடல் வாகு.
அவளுடன் பேச வேண்டும் என்று, ஒரு உத்வேகம் எனக்கு. அருகில் போய், "என்னங்க...' என்றேன்.
சைக்கிளை நிறுத்தி, "என்ன?' என்றாள்.
"உங்க பேரு என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?' என்றதும் முறைத்தாள்.
"ம்... பேரைத் தெரிஞ்சுக்கிட்டு, என்ன செய்யப் போறீங்க?'
" எல்லாம் ஒரு இது தான்...' இழுத்தேன்.
"இதுன்னா?'
"எப்படி சொல்றது... உங்களை எனக்குப் ரொம்ப பிடிச்சு இருக்கு. உங்ககிட்ட பேசணும் போல இருக்கு' என்றேன்.
"எல்லாருக்கும் தான் எல்லாரையும் பிடிக்குது...'
"விடுங்க... நீங்க சொல்லாட்டி வேற எப்படியாவது தெரிஞ்சுக்குறேன்...'
"அப்படியா... தெரிஞ்சுக்கிட்டு என்னை கூப்பிடுங்க. அப்ப பேசலாம்... வாடி' என்று, தன் தோழியுடன் சைக்கிளை உருட்டிக் கொண்டு கிளம்பி விட்டாள்.
காதல்ன்னா பொய் என்று நினைக்கும், அத்தனை பேரும் அந்தாண்டை ஓடிப் போய் விடுங்கள். ஒரு வாரம் சரியான அன்ன ஆகாரம் இன்றி, அவளைத் தேடி அலைந்தேன். கனவில் அவளுக்கு முத்தம் கொடுத்தும், இடுப்பை இரு புறமும் பிடித்து வருடிக் கொண்டும் இருந்தேன்.
அவளைத் தேடித் தேடி, களைத்து, ஒரு நாள் சக்கரப்பாணி கோவில் அருகே, எதேச்சையாக அவளைக் கண்டேன்.
என்னைப் பார்த்ததும், அவளிடம் ஒரு ஜெர்க். உடனே கோவிலுக்குள் நுழைந்து விட்டாள். பின்னாடியே போனேன்...
மாலை மங்கிய வேளை... கோவிலில் கூட்டம் குறைவாகவே இருந்தது.
ஆட்டுக்குட்டி மாதிரி அவள் பின்னாலயே போனேன். சக்கரத்தாழ்வார் சன்னதியில் நுழைந்தாள். நானும் நுழைந்தேன். ஆரத்தி, தீர்த்தம், துளசி கொடுக்கும் போது, "என்னம்மா வாதினி...எப்படி இருக்கே? உன்னோட அம்மாவை கோவில் பக்கமே காணோமே! என்ன ஆச்சு?' என்று கேட்டார் பட்டாச்சாரியார்.
"ஐயோ' என்கிற மாதிரி, என்னைப் பார்த்தவள், நாக்கை கடித்தபடியே பட்டாச்சாரியாரை பார்த்து, "அம்மாவுக்கு ஒரு வாரமா மூச்சு இழுப்பு' என்றாள்.
"சிரமம் பார்க்காம, காலையில கோவிலுக்கு வரச் சொல். தீர்த்தம், துளசி வாங்கிப் வாயில போட்டுக்கிட்டா எல்லாம் சரியாயிடும்...'
"நாளைக்கு வரணும்ன்னு சொல்லிகிட்டு இருந்தாங்க... '
உள்ளே சென்ற பட்டாச் சாரியார் சடாரியுடன் வந்தார்.
எங்களுக்கு சடாரி வைத்து முடித்ததும், அவள் பக்கம் திரும்பி பார்த்து, "போயிட்டு வாம்மா குழந்தே...' என்றவர் என்னை, "என்ன' என்பது போல் பார்த்தார்.
நான் நகர, அவள் வெளிப் பிரகாரத்தை சுற்ற ஆரம்பித்தாள். நானும் பின்னால் சுற்றினேன். மூன்றாவது சுற்று சுற்றும் வரை கொஞ்சம் கூட்டம் இருந்ததால், அவளிடம் பேச தயங்கினேன்.
அவள் நாலாவது சுற்று ஆரம்பித்ததும் கொஞ்சம் உயிர் வந்தது.
பின்னால் கொஞ்சம் மங்கலான வெளிச்சத்திற்கு வந்த போது, "வாதினி' என்றேன். மெல்ல நடந்து கொண்டே, "என்ன?' என்றாள்
"கொஞ்சம் நில்லேன், உங்கிட்ட பேசணும்...'
"என்ன?'
"பத்து நாளா, என் சட்டைப் பையிலேயே வச்சுகிட்டு, உன்னை தேடிட்டு இருக்கேன்...' சட்டென்று, அவள் கையில் திணித்து விட்டு, வேகமாய் வெளியே வந்து விட்டேன்.
சரியாய் அரை மணி நேரத்தில், ஒட்டு மொத்த அக்ரஹாரமும் எங்கள் வீட்டின் முன் தான் இருந்தது. நான், ஒரு லூசுப் பயல். அவர்களை பார்த்த பின் தான், என் காதல் கடிதத்தில், என் முகவரியை அடியில் தெளிவாக எழுதியது ஞாபகம் வந்தது. அப்புறம் என்ன, அடிதான். அப்பா வாத்தியார்... அவர் சொல்லிக் கொடுத்து, சரியாக படிக்காத பையன்களின் மேல் உள்ள கோபத்தை எல்லாம், என் மேல் தீர்த்துக் கொண்டார். அதன் பின் கல்லூரி முடித்து, சென்னையில் வேலையில் சேரும் வரை, வாதினி பற்றி நான் நினைக்கவில்லை, பார்க்கவில்லை. சென்னையிலிருந்து அப்படியே பெங்களூருக்கு வந்தாகிவிட்டது. வீட்டில் கல்யாணம் என்று பேச்சு எடுத்தாலே, என் மூளைக்குள், ந்யூக்ரான்கள் விழித்துக் கொள்ளும்.
"அப்புறம் பார்க்கலாம்...' என்று வாய் சொன்னாலும், மனதுக்குள் ஒரு அரக்கன் வந்து, "என் காதலை நிராகரித்து, என்னை போட்டு கொடுத்த வாதினி, நல்லாவே இருக்க மாட்டாள். அவள் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதை பார்த்த பின் தான், திருமணம் செய்து கொள்ள வேண்டும்...' என்று ஒரு வெறித்தனமான தீர்மானத்தை எடுத்துக் கொண்டிருந் தேன். இதற்கு காரணம், அந்த சம்பவம் நடந்த மறுவாரம், அவர்கள் குடும்பம் சொல்லி வைத்தாற் போல, டெம்போவில் எங்கோ கிளம்பி விட்டது.
இரண்டு நாள் லீவ் போட்டு ஊர் சுற்றலாம் என்று கிளம்பினேன் அல்லவா...
திப்பு சுல்தான் கோட்டைக்கு, போகலாம் என்று கிளம்பியவன், ஒரு டர்ன் அடித்து, தரியா தவுலத் பாக்கின் உள்ளே நுழைந்தேன்.
தரியா தவுலத் பாக், திப்பு சுல்தானின் கோடை வாசஸ்தலம். இக்கட்டடத்தை கட்ட ஆரம்பித்தது திப்புசுல்தானின் தந்தை ஹைதர் அலியாக இருந்தாலும், கட்டி முடித்தது திப்பு சுல்தான் தான்.
இந்த பிரதேசத்தில் முக்கிய சுற்றுலா ஸ்தலமாக புகழ் பெற்றுள்ள, இந்த அரண்மனை, 1959ல் தேசிய நினைவு சின்னமாக அறிவிக்கப்பட்டதையும், தரியா தவுலத் பாக், இந்தோ-சராசனிக் கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்டது என்றும், பல முறை சுவர் குறிப்புகளிலிருந்து படித்து தெரிந்து கொண்டேன்.
ஒரு கட்டத்தில் திப்புவை எதிர்க்க முடியாத வெள்ளையர்கள், வஞ்சகமாக வெஸ்லி என்கிற தளபதி மூலம் கோட்டைக்குள் பின் புறமாய் புகுந்து, திப்புவை போட்டுத் தள்ளியது வேறு கதை. அரண்மனைக்கும், காவிரிக் கரைக்குமிருந்த ரகசிய வழி மூலம் வெள்ளையர்கள் அரண்மனைக்குள் நுழைந்துள்ளனர்.
அதை விடுங்கள்...
தரியா தவுலத்தில், ஓவியங்களைப் பார்த்து கொண்டிருந்த போது, அந்த தம்பதி கண்ணில் பட்டனர். தூரத்தில் இருந்து பார்க்கும் போதே, அவர்களின் செல்வ செழிப்பு தெரிந்தது. ஒரு சின்னப் பெண்ணும், அவர்களுடன் துள்ளி வந்தாள். ஆறேழு வயது இருக்கும்.
அவர்கள், சுவர்களின் ஓவியங்களைப் பார்த்தபடி, என் அருகில் வந்த போதுதான் கவனித்தேன். கொஞ்சம் பூசினாற் போல் இருந்த அவள், வாதினியே தான்.
அவள் கழுத்தில் இருந்த நகைகளும், அவள் முகத்தில் இருந்த மலர்ச்சியுமே, அவளின், "ஸ்டேட்டஸ்'சை சொன்னது. அவளின் கணவன் அழகாக இருந்தான். அவளை கும்பகோணத்திலோ, சுவாமி மலையிலோ, ஒரு கட்டு வீட்டில், ஒரு சராசரி கணவனுடன் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்த எனக்கு, ஒரு மரண அடி. அவள் என்னை அடையாளம் கண்டு கொள்ளக் கூடாது என்று மெல்ல நகர்ந்தேன்.
""ஹாய்...'' என்றாள்.
நான் நின்றேன்.
கணவனை அழைத்துக் கொண்டு, என் அருகில் வந்தாள்.
""ராகவ் நான் சொல்லலை, இவன் தான் என்னோட, "காப் லவர்!' முதன் முதல்ல காதல் கடிதம் கொடுத்தவன், உன் பேர் என்ன மறந்துட்டனே, ம்...''
""குமார கிருஷ்ணன்.''
""ம்... கிருஷ்ணன்... உன்னைப்பத்தி, இவர் கிட்ட சொல்லியிருக்கேன். நீ கோவில்ல எனக்கு லெட்டர் கொடுத்தது, லூசு மாதிரி முகவரியையும் சேர்த்து எழுதிக் கொடுத்தது.''
அவள் கணவன் தொடர்ந்தான்...
""இவங்க அப்பா அக்ரஹாரத்தையே திரட்டிட்டு, உங்க வீட்டுக்கு வந்தது... ப்ளா ப்ளா... என்னப் பண்றீங்க...ஆர்கியலாஜி டிபார்ட் மென்டுல சேர்ந்துட்டீங்களா?'" என்றான்.
என் கம்பெனி பற்றி சொன்னேன்...
""ஓ... நாங்க நியூ ஜெர்சியில இருக்கோம். ப்ளேஸ்மென்ட் சர்வீஸ் வச்சிருக்கார். இவ பொறந்தப்பவே இந்தியா வரணும்ன்னு நினைச்சேன். இப்ப இவளுக்கு ஆறு வயசு... "ஸ்வேதா, அங்கிளுக்கு ஹாய் சொல்லு...' என்றாள், லட்டு மாதிரி இருந்த குழந்தையிடம். அது தலையை பக்கவாட்டில் ஆட்டி, "நோ மாம்' என்றது.
""அவளுக்கு புது ஆசாமிங் களைப் பார்த்தா, எண்டர்டெயின் செய்யக் கூடாதுன்னு சொல்லி வளர்த்திருக்கோம்.''
அவர் தன் பர்சில் இருந்து, ஒரு கார்டை எடுத்து கொடுத்து, ""யூ.எஸ்., வந்தா போன் செய்யுங்க,'' என்றார்.
கடைசியில், அவர்கள் கிளம்பிய போது, கார் வரை சென்று வழியனுப்ப போனேன். அவள் கை ஆட்டிப் போனாள்.
தமிழ் சினிமா பார்த்து, நாம் காதலித்த பெண், நம்மை நிராகரித்ததால் பிச்சை எடுக்கும் ரேஞ்சுக்குதான் இருப்பாள் என்று, கற்பனை செய்து கொண்டிருந்த எனக்கு, இது ஒரு செருப்படி.
தரியா தவுலத் முன், குச்சி ஐஸ் பிடி போல உணர்ந்தேன். அங்கிருந்து, மொபைலில் அப்பாவுக்கு போன் போட்டேன்.
""என்னடா?''
""சீக்கிரம், ஏதாவது ஒரு கழுதையை பாருங்க... கல்யாணம் செய்துக்கிறேன்,'' என்றேன். 
***



சுப்ரஜா


thanx - varamalar

0 comments: