Sunday, September 08, 2013

SATYAGRAHA- சினிமா விமர்சனம் ( தினமலர்)

 
தினமலர் விமர்சனம்

பொதுவாக சில இயக்குனர்களின் படங்களில் சர்ச்சைக்குரிய விஷயங்கள் அமைந்திருப்பதைக் காணலாம்.  ஆனால், சர்ச்சையை வைத்து படம் அமைக்கும் இயக்குனர் வெகு சிலர் தான்.  பாலிவுட்டில் இதைப் போன்ற இயக்குனர்களில் குறிப்பிடத்தக்கவர் மதுர் பந்தாகர், பிரகாஷ் ஜா.

‘ஆரக்ஷன்’ படத்தின் தோல்விக்குப் பிறகு பிரகாஷ் ஜா இயக்கிய திரைப்படம் தான் ‘சத்தியாக்கிரஹா’.  டிரையிலரிலேயே சாதாரண குடிமகன் அமிதாப்பச்சன், ஐ.ஏ.எஸ் அதிகாரியை அடிப்பது போன்ற காட்சி காட்டப்பட கண்டிப்பாக இப்படமும் சர்ச்சைக்குரியது தான் என உறுதி செய்யப்பட்டது.

வெளிநாட்டில் பி.எச்.டி. படித்துவிட்டு இந்தியாவில் கம்யூனிகேஷன் செக்டாரில் பிஸினஸ் செய்ய அஜய் தேவ்கன் இந்தியா திரும்புகிறார்.  அஜய் தேவகனின் தோழனும் அமிதாப் பச்சனின் மகனுமானவர் இந்திராநீல் சென்குப்தா. கடமை, கண்ணியம் என வாழும் அமிதாப் பச்சனின் மகன், சாலையில் விபத்துக்குள்ளாகி உயிர் இழக்கிறார். இவரின் குடும்பத்திற்கு உதவித் தொகை தருவதாக மனோஜ் பஜ்பாய் அறிவிக்கிறார். 
 நீண்ட காலமாக அரசு அலுவலகம் சென்று உதவித் தொகை கிடைக்காமல் அமிதாப்பின் மருமகள் அம்ரிதா ராவ் ஏமாற்றம் கொள்ள வெகுண்டு எழும் அமிதாப்பச்சன் அலுவலகத்திற்கு சென்று நெறி தவறிப்பேசும் ஐ.ஏ.எஸ் அதிகாரியை ஓங்கி அரைகிறார். வரம்பு மீறியதற்கு அமிதாப்பச்சன் கைது செய்யப்படுகிறார். இச்சம்பவம் டி.வி ரிப்போர்டர் கரீனா கபூரால் பிரபலப்படுத்தப்படுகிறது.  சமூக ஆய்வலர், இளைஞர் அணி தலைவர் போல் விளங்கும் அர்ஜுன் ராம்பால் தன் குழுவுடன் இணைந்து அமிதாப்பச்சனுக்கு ஆதரவாக போராடத் துவங்குகிறார்.

அமிதாப்பச்சனுக்கு உதவித் தொகையை பெற்றுத் தருகிறார் மினிஸ்டர் பஜ்பாய். ஆனால் தன்னைப் போன்ற இழுக்கடிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்கும் வரை அத்தொகையை வாங்க மாட்டேன் அவர்களுக்காக சத்தியாக்கிரஹா போராட்டம் செய்யப் போவதாக அமிதாப்பச்சன் கூறுகிறார்.  இச்சம்பவம் மீண்டும் பரபரப்பாகிறது. இதற்குப் பின் அனைவருக்கும் நீதி கிடைத்ததா?  அமிதாப்பச்சன் போராட்டத்தின் விளைவு தான் கிளைமாக்ஸா?? என எதிர்பார்த்தால் கடைசியில் கண்டபடி சுற்றி… உளறிக் கொட்டி கிளறி மூடுகிறார் பிரகாஷ் ஜா.


வேற்று மொழிப்படம் டிவிடிகளைப் பார்த்து காப்பியடிக்கும் இயக்குனர்கள் உண்டு.  ஆனால், பிரகாஷ் ஜா இவர்களுக்கு விதிவிலக்கு. இவர் தன் முந்தைய படங்களையே பார்த்துப் பார்த்து ரசித்து அதிலிருந்தே காப்பியடித்து விடுகிறார்  இல்லை…. இன்ஸ்பயர் ஆகிவிடுகிறார். இவர் முன்பு இயக்கிய ஆரக்ஷன், ராஜ் நீதி சாயலிலேயே இப்படமும் அமைந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் இப்படத்திலும் அதே வில்லன் மனோஜ் பஜ்பாய், முந்தைய படத்தில் நேரிட்ட அதே முடிவுதான் அவருக்கு இப்படத்திலும்.


காந்திய உடைக்கும் மாடர்ன் உடைக்கும் இடையே அஜய் தேவகன் அணிந்து வரும் கதாபாத்திரத்திற்கு சுத்தமாக பொருந்தவில்லை.  அர்ஜுன் ராம்பாலை எடுபிடி போல் காட்டி முக்கியத்துவமில்லாத கதாபாத்திரம் கொடுத்து விரயம் செய்துள்ளனர்.  மீடியா ரிப்போர்டர் கொஞ்சம் பிகு பண்ண வேண்டும் என இயக்குனர் கரீனாவிடம் கூறியிருப்பார் போலிருக்கிறது.  பிகுனா பிகு அப்படி ஒரு பிகு. இவரின் மேக்கப் கூட ரசிகர்களை ப்பா!!!    என ஜதி போட வைக்கிறது.

ஒரு பிரபல நிகழ்வை அடிப்படை நாட்டாக வைத்துக் கொண்டு அதில் பிரகாஷ் ஜா காத்தாடி விடப்பார்த்து காலை வாரிக் கொண்டுள்ளார்.  அமிதாப் பச்சன் மட்டும் தான் சரியான தேர்வு.  ஒரே ஆறுதல் இவரும் இல்லை என்றால் அவ்வளவுதான்.

ஏகப்பட்ட லாஜிக் சறுக்கல்கள், கதை, காந்தியவாதம் பற்றியது. ஆனால் கதாபாத்திரங்களின் வடிவமைப்பில் அதற்குரிய கொள்கைகளை காந்தியின் கொள்கை கொண்டவர்களாக சரியாக பிரதிபலிக்கச் செய்யவில்லை.  மினிஸ்டர் வீட்டில் தோன்றிய போதெல்லாம் எளிதாக புகுந்து அவரை அடிக்கும் அஜய் தேவகனின் காட்சியைப் போல் பல காட்சிகளில் லாஜிக் சொதப்பல்கள்.

இன்றைய சூழலில் போராட்டம் உருவாகும் விதத்தை, மனிதர்களின் தெளிவற்ற கொள்கையை நையாண்டி கலந்து தைரியமாக விமர்சித்ததில் பிரகாஷ் ஜா பாராட்டப்படுகிறார்.  சரியான கதாபாத்திரத் தேர்வுடன், இளமைப் பட்டாளத்தின் துணையுடன் எடுக்கப்பட்டிருந்தால் சத்தியாக்கிரஹா ரசிக்கத் தக்கதாய் அமைந்திருக்கலாம்.  ஆழமற்ற கதையமைப்புடன் சத்தியாக்கிரஹா ததிங்கிணத்தோம் ஆடுகிறது.

மொத்தத்தில் “சத்தியாகிரஹா” – “ஆஃப் பாயில்”.  
THANX  - DINAMALAR
  • நடிகர் : அமிதாப் பச்சன், அஜெய் தேவ்கன்
  • நடிகை : கரீனா கபூர்
  • இயக்குனர் :பிரகாஷ் ஜா
 

0 comments: