Tuesday, September 10, 2013

கோச்சடையான் ட்ரெய்லர் ரசிகர்களை ஏமாற்றியதன் பின்னணி

 
 
சுல்தான் தி வோரியர் அனிமேஷன் ட்ரெயிலர் வெளியாகி ஐந்து ஆண்டுகள் கழித்து வெளியாகியிருக்கிறது கோச்சடையான் ட்ரெயிலர். ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் வெளியாவதால் சிஜியில் முன்னேற்றம் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் ட்ரெயிலரை பார்த்தால் ஏகப்பட்ட தில்லுமுல்லுகள் நடந்திருக்கும்போல இருக்கு. அதை பற்றி கொஞ்சம் டீப்பா நோண்டுவோம்

பெர்ஃபோமன்ஸ் கப்சரிங் என்றால் என்ன ?

அனிமேஷன் காட்சி ஒன்றில் பாத்திரம் ஒன்றை அசைவிப்பதற்கு 2 வழிகளை பின்பற்றுவார்கள். ஒன்று Key frame அனிமேஷன். அதாவது பாத்திரத்தின் ஒவ்வொரு அசைவையும் Frame by Frame ஆக கணினி மூலமாகவே உள்ளிடுவார்கள். சாதாரணமாக திரைப்படங்களில் 24 frame per second என்ற வகையில் ஒரு செக்கன் காட்சிக்கு 24 key frame வழங்கப்படும். மிகவும் கடினமான பணி இது. இரண்டாவது முறை மோஷன் கப்சரிங். மோஷன் கப்சரிங் என்பது நுண்னிய சென்சார்களை ஒரு நடிகரின் உடலில் பொருத்தி நடிக்கவைத்து அவரது அசைவுகளை ஒளிப்புள்ளிகளாக கணினியில் பதிவுசெய்து, அதனை வடிவமைக்கப்பட்ட கிராபிக்ஸ் உருவத்திற்கு உள்ளிடுவதன் மூலம் அவ் உருவத்தினை அசையவைப்பது. ஹாலிவூட்டில் நெடுங்காலமாக இந்த முறைதான் உபயோகிக்கப்படுகிறது. நாம் அறிந்த ஸ்பைடர்மேன் 2, மேட்ரிக்ஸ், லோர்ட் ஒஃப் தி ரிங்க்ஸ், கிங்காங் படங்களில் இதே தொழில்நுட்பம்தான் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும். லோர்ட் ஒஃப் தி ரிங்க்ஸ் இன் கோலும் பாத்திரம், கிங்காங் எல்லாமே மிகத்துல்லியமான கிராபிக்ஸுடன் உயிரோட்டமாக நடமாடியதற்கு மோஷன் கப்சரிங் தொழில்நுட்பமே உதவிபுரிந்தது.

இது இலகுவான முறையாக இருந்தபோதும் இதன்மூலம் மிக துல்லியமாக ஒரு நடிகரின் அசைவுகளை பிரதியெடுக்க முடியாது. மோசன் கப்சரிங் மூலம் பதிவுசெய்யப்பட்ட நடிகரின் அசைவுகளை மேலும் துல்லியமாக்க keyframe மூலம் மேலும் மெருகூட்டப்படும். இதனால் அறிமுகப்படுத்தப்பட்டதே பெர்ஃபோமன்ஸ் கப்சரிங். இது ஒன்றும் புதிய தொழில்நுட்பம் அல்ல. மோஷன் கப்சரிங்கின் மேம்பட்ட வடிவமே. நடிகரின் அசைவுகளை துல்லியமாக பதிவுசெய்ய அதிக சென்சார்கள் பொருத்தப்பட்ட Lycra எனப்படும் ஆடையை நடிகருக்கு அணிவித்து நடிக்க வைப்பார்கள். இந்த பெர்ஃபோமன்ஸ் கப்சரிங் தொழில்நுட்பம்தான் கோச்சடையானில் உபயோகப்படுத்தப்பட்டதாக கூறியிருக்கிறார்கள். ஆனால் ட்ரெயிலரை பார்க்கும்போது பெர்ஃபோமன்ஸ் கப்சரிங் அல்ல, மோஷன் கப்சரிங் தொழில்நுட்பம் கூட பயன்படுத்தாமல் வெறும் Keyframe அனிமேஷன் முறையில் படம் உருவாக்கப்பட்டுள்ளதுபோன்றே தெரிகிறது. ஒவ்வொரு பாத்திரங்களின் ஒவ்வொரு அசைவிலும் அந்தளவுக்கு கார்டூன்தனம் தெரிகிறது.

விளம்பரத்திற்காக பெர்ஃபோமன்ஸ் கப்சரிங் பெயரை பயன்படுத்திவிட்டு படம் முழுவதும் keyframe அனிமேஷன் முறையில்தான் எடுத்தார்களா? அல்லது பெர்ஃபோமன்ஸ் கப்சரிங்கை பயன்படுத்த தெரியாமல் சொதப்பியிருக்கிறார்களா ? அவர்களுக்குத்தான் வெளிச்சம். கப்சரிங் முறை சொதப்பியது இருக்க, படத்தின் கிராபிக்ஸ் இன்னொரு சொதப்பல். ஐந்து வருடங்களுக்கு முன்னர் எப்படி இருந்ததோ கொஞ்சம்கூட முன்னேற்றம் இல்லாமல் அதேபோல்தான் இருக்கிறது. பாத்திரங்களின் வடிவமைப்பு, முக்கியமாக ரஜினியின் கிராபிக்ஸ் தோற்றம் பெருத்த ஏமாற்றம்

ஒரு நபரை கிராபிக்ஸில் உருவாக்கும்போது முகம் தத்ரூபமாக இருக்கவேண்டும் என்பதற்காக, அவரை எல்லா கோணங்களிலும் படம்பிடித்து கிராபிக்ஸ் முகத்துடன் பொருத்திவிடுவார்கள். உதாரணத்திற்கு ஸ்பைடர்மேனில் வரும் octopus என்னும் பாத்திரம் இப்படி வடிவமைக்கப்பட்டதே. ஆனால் அது கிராபிக்ஸ்தான் என்று யூகிக்கமுடியாத அளவிற்கு தத்ரூபமாக இருக்கும். அதேபோல கஜினி கம்பியூட்டர் கேமில் வரும் அமீர்கானின் முகம். சில கோணங்களில் மட்டும் படம்பிடிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டிருந்தாலும் சிறப்பாக வந்திருக்கும். ஒரு கம்பியூட்டர் கேமில் காட்டியிய தத்ரூபத்தை, மிகப்பெரிய சூப்பர்ஸ்டாரை வைத்து எடுக்கும் படத்தில் காட்டாதது கவலைக்குரிய விடயம். environment வடிவமைப்பு மட்டும் மொத்தமாக பார்க்கும்போது ஓரளவு நன்றாக உள்ளது. இவற்றைவிட நிறைய சொதப்பல்கள். 46 ஆவது செக்கனில் வரும் குதிரைக்கூட்டம், 48 ஆவது செக்கனில் வரும் பெண்கள்கூட்டம் (பாடல் காட்சி) 56 ஆவது செக்கனில் வரும் பாடல் காட்சி, இந்த காட்சிகளில் மக்கள் கூட்டத்தை காண்பித்திருப்பார்கள். எல்லோரது அசைவுகளும் செக்கன் மாறாமல் அச்சில் வார்த்ததுபோல இருக்கும். இவற்றை எல்லாம் விட உச்சக்கட்டமான பொறுப்பற்ற செயல் தெரிவது ட்ரெயிலரின் 56 ஆவது செக்கனில். ரஜினி முன்னோக்கி நடந்துவந்துகொண்டிருப்பார். காமெரா கோணத்தில் ரஜினியின் அளவு மாறுபடாது. அதாவது காமெரா ரஜினியோடு சேர்ந்து பின்னோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது என்று அர்த்தம். அதன்படி பின்னால் இருக்கும் கோட்டையும் ரஜினிக்கு பின்னால் இருப்பவர்களும் பின்னோக்கி நகரவேண்டும். ஆனால் இங்கே அப்படியே நிற்கிறார்கள்

சரி, இது எல்லாம் ஒருபுறம் இருக்க, ஏற்கனவே சுல்தான் தி வோரியர் எடுக்கப்பட்டு கைவிடப்பட்டது எல்லோருக்கும் தெரியும். அந்த படம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் ரஜினி உடல்நிலை சரியில்லாமல் இருந்ததும் தெரியும். அதுபற்றிய மேலதிக தகவல்கள் இல்லாமலே கோச்சடையான் ஆரம்பிக்கப்பட்டது. சுல்தான் தி வோரியரில் ரஜினியின் கிராபிக்ஸ் தோற்றத்துக்கான அசைவுகளை ரஜினியின் டூப் நடிகர் ஜீவா வழங்குவதாகவும் ஒரு செய்தி அடிபட்டது. இதையெல்லாம் வச்சு பார்க்கும்போது கோச்சடையானில் உண்மையாகவே ரஜினியின் பங்கு இருக்கிறதா? அல்லது குரலை மட்டும் கொடுத்துவிட்டு வெறும் வியாபாரத்துக்கு ரஜினியின் பெயர் பயன்படுத்தப்படப்போகிறதா ?????
 
 
thanx -Mathuran Raveendran fb page

1 comments:

Unknown said...

வந்தா தான் தெரியும்