Tuesday, January 01, 2013

நெய்வேலி

நான் கண்ட ஊரு!

நெய்வேலி

நெய்வேலியில் பணியாற்றி ஓய்வுப் பெற்ற ஆசிரியை நான். நாற்பது வருடங்களாக நெய்வேலியில் வசித்து வருகிறேன். அதன் சிறப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன்.
* கடலூர் மாவட்டத்தில் அருட்பிரகாச வள்ளலார் வாழ்ந்த வடலூருக்கு வடமேற்கே மரங்கள் சூழ்ந்த அழகிய நகரம் நெய்வேலி டவுன்ஷிப்.
* இருபத்து நான்கு மணி நேரமும் மின்சாரமும், தண்ணீரும் தடையின்றி கிடைக்கக்கூடிய ஒரே ஊர் எங்கள் நெய்வேலியே!
* ஜம்புலிங்க முதலியார் என்ற மிராசுதார் தன்னுடைய நிலத்தில் ஆழ்க்குழாய் கிணறு தோண்டிய போது, நீர் கரிய நிறத்தில் வந்ததை அரசுக்குத் தெரிவிக்க அதன் அடிப்படையில் உண்டானதே பொன்விழா கண்ட நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்.

* அவர் நினைவாக இங்குள்ள ஒரு பிரதான சாலைக்கு ஜம்புலிங்க முதலியார் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
* காமராஜர் முதலமைச்சராக இருந்த போது இந்தியப் பிரதமராக இருந்த பண்டித ஜவாஹர்லால் நேருவின் பொற்கரங்களால் அடிக்கல் நாட்டி துவக்கப்பட்டது இந்த நெய்வேலி.
* சென்னையிலிருந்து சிதம்பரம், கும்பகோணம் பேருந்து மார்க்கமாகச் செல்பவர்கள் பண்ருட்டி தாண்டியவுடன் சாலையின் வலது புறம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் என்ற அசோகச் சக்கரத்துடன் கூடிய பெரிய வளைவைக் காணலாம்.
* இரண்டு பக்கமும் அழகிய தார்ச்சாலைகள் நடுவில் பசுமையும், குளுமையும் கொண்ட பூ மரங்கள் என காண்போர் வியக்கும் வண்ணம் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட அழகிய நகரம் நெய்வேலி.
* இரண்டு வருடங்களுக்கு முன்பே பிளாஸ்டிக் தடைசெய்யப்பட்டு விட்டதால் நகரம் மிகவும் தூய்மையாக இருக்கும்.

* நகரம் வட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு வட்டத்தின் மையத்திலும் ஒரு பள்ளிக்கூடம் அமைந்திருக்கும்.
* இங்கு இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்களும் பணிபுரிவதால் நெய்வேலி டவுன் ஷிப்பைமினி இந்தியாஎன்றே சொல்லலாம். அவர்கள் தங்கள் கலாசார விழாக்களைக் கொண்டாட தெலுங்கு சமிதி, கன்னட சங்கம், கலாலயா போன்ற அமைப்புகளும் உள்ளன. ‘காவேரி லேடீஸ் கிளப்என்ற மாதர் சங்கமும் துடிப்பாகச் செயல்படுகிறது.
* மத்திய அரசு நிறுவனம் என்பதால் பெயர்ப் பலகைகள் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என மும்மொழிகளிலும் எழுதப்பட்டிருக்கும்.

* தொழிலாளர்களின் பணித்தகுதிக்கு ஏற்ப குவார்டர்ஸ் கட்டப்பட்டிருக்கும். ஒவ்வொரு வீடும் மரங்களால் சூழப்பட்டிருக்கும். மா, பலா, தென்னை, எலுமிச்சை மரங்கள் இல்லாத வீடுகளே கிடையாது.
* பசுமைச் சூழலுக்கான தேசிய சுற்றுச் சூழல் விடுதிகளை இந்நிறுவனம் பெற்றுள்ளது. நவரத்னா விருதினையும் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு.
* தமிழக அரசின் உதவியுடன் மேல்நிலை, உயர்நிலை துவக்கப் பள்ளிகளை நிறுவனம் நடத்துகிறது. இது தவிர, ஆங்கில வழிப் பள்ளிகளும் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயாவும் உண்டு.
* பெரிய நூலகம் ஒன்று நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகிறது. அதில் சிறுவர்களுக்கான தனிப்பிரிவு இயங்குகிறது.

* நகரத்தின் மையத்தில் பாரதி விளையாட்டரங்கம் உள்ளது. இங்கு அகில இந்திய அளவில் போட்டிகள் நடைபெறும். குடியரசு தின, சுதந்திர தின நாட்களில் மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் பிரம்மாண்டமாக நடக்கும்.
* காலாண்டு, அரையாண்டு, கோடை விடுமுறை நாட்களில், மாணவ, மாணவிகளுக்கு அனைத்து விளையாட்டுகளிலும் இலவசப் பயிற்சி அளித்து பரிசும், சான்றிதழும் கொடுத்து மாணவர்களை உற்சாகப்படுத்தி மகிழ்வார்கள்.
* விளையாட்டு அரங்கிற்கு அருகில் லிக்னைட் ஹால் உள்ளது. இங்கு குழந்தைகள் தினவிழா. தேசிய பாதுகாப்பு வார விழா போன்ற விழாக்கள் நடைபெறும். வருடந்தோறும் ஜூலை மாதத்தில் மாபெரும் புத்தகக் கண்காட்சியும் இங்குதான் நடைபெறும்.
* நெய்வேலி மக்கள் நன்கு படித்தவர்களாகவும், கலை, விளையாட்டுகளில் ஆர்வ மிக்கவராகவும் இருப்பர்.

* இந்தக் கடைகளுக்கு மத்தியில் கோல்டன் ஜூப்ளி பார்க், மினி சோலையாகக் கண்களுக்கு விருந்தளிக்கும். இங்கு குழந்தைகளுக்கான விளையாட்டுச் சாதனங்கள் ஏராளம். பெரியவர்களுக்கான நடைப்பயிற்சி பாதையும் உண்டு. வட்டம் 8ல் இருக்கும் நேரு நூற்றாண்டு விழா பூங்காவும் சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறது.
* வட்டம் 24-ல் தொன்மை வாய்ந்த மாதா கோயில் ஒன்று உள்ளது. நகரின் கிழக்கே அமைந்துள்ள வேலுடையான்பட்டு முருகன் கோயிலும் பழமைவாய்ந்தது. இங்கு பங்குனி உத்திரத்திற்கு வரும் ஆயிரக்கணக்கான காவடிகளும் அன்னதானமும் பக்தர்களை வசீகரிக்கும்.
* வட்டம் 16-ல் அமைந்துள்ள நடராஜர் கோயிலில் 13.5 அடி உயரமுள்ள ஆசியாவிலேயே பெரிய உயரமான நடராஜர் விக்ரகம் உள்ளது. இந்தக் கோயிலில் ஆலய ஓதுவாரால் இலவச தேவார வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
* கிறிஸ்தவ, முஸ்லீம் அன்பர்களுக்கான சர்ச்சுகள், மசூதிகளும் இங்கு உண்டு.

* தொழிலாளர்களின் நலனுக்காகப் பொது மருத்துவமனையும் ஆயுர்வேத மருத்துவமனை ஒன்றும் சிறப்பாகச் செயல்படுகின்றன. இங்கு யோகாசன வகுப்புகள் நிறுவனத்தால் இலவசமாக நடத்தப்படுகின்றன.
* நிர்வாகம் ஆங்காங்கே கட்டியுள்ள திருமண மண்டபங்களில் தொழிலாளர்கள் குறைந்த கட்டணத்தில் குடும்ப விழாக்களை நடத்திக் கொள்ளலாம்.
* இங்குள்ள தெருக்களின் பெயர்கள் மிகவும் வித்தியாசமானவை. மாதிரிக்குச் சில: அப்பர் சாலை, சுந்தரர் சாலை, வேலூர் சாலை, மைசூர் சாலை, மயில் தெரு, மான் தெரு, மண்வெட்டி தெரு, கடப்பாறை தெரு, தென்னை வீதி, பனை வீதி.
* நெய்வேலி டவுன்ஷிப்புக்குள் அமைந்துள்ள மத்தியப் பேருந்து நிலையம் மிகவும் சிறிதாகத்தான் இருக்கும். மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்பது போல அனைத்து ஊர்களுக்கும் பேருந்து வசதி உண்டு.
* பசுமையும், குளுமையும் நிறைந்த எங்கள் நெய்வேலியின் அழகிய தார்ச்சாலைகளில் பயணிப்பதே தனி சுகம். அதற்காகவாவது நெய்வேலிக்கு வருகை தாருங்கள்.
படங்கள் உதவி: விஜய், இந்து, அபி


நன்றி - கல்கி 

1 comments:

பூந்தளிர் said...

நீங்களே நெய்வேலியை சுற்றிக்காட்டி விட்டீர்களே. நன்றி.