Thursday, January 10, 2013

தாய்மையென்பது யாதெனில்.-ஜோஸி - சிறுகதை


தாய்மையென்பது யாதெனில்...

கதை: ஜோஸி / ஓவியம்: வேதா

காலை நேரம். அனிதா காஃபிக் கோப்பையை முரளியிடம் கொடுத்தவாறே சொன்னாள்.
முரளி, இன்னிக்கு வர்ஷாவோட ஸ்கூல்ல பேரன்ட்ஸ் மீட்டிங் இருக்கு. அதோட மார்க்ஸ் எல்லாம் கொடுப்பாங்க."
ஸாரி அனி, இன்னிக்கு எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு. கண்டிப்பா அவாய்ட் பண்ண முடியாது. நீ மட்டும் போ ப்ளீஸ்" என்றான்.
என்ன முரளி இப்படிப் பொறுப்பே இல்லாம இருக்கீங்க? இப்படியிருந்தா அவ எதிர்காலம் என்னாகும்?"
எனக்குப் பதிலாதான் நீங்க ஓவர் பொறுப்பா இருக்கீங்களே மேடம். நீங்க பார்த்துக்கங்க" என்று சொல்லிவிட்டு காலிக் கோப்பையை அவளிடம் கொடுத்து விட்டுக் குளிக்கச் சென்றான்.
இரவு மணி பதினொன்று. வீட்டுக்கு வந்த முரளி கை அலம்பிவிட்டு டைனிங் டேபிள் முன் அமர்ந்தான். தட்டில் சப்பாத்தி வைத்தாள் அனிதா.
ஒரு வாய் சாப்பிட்டதும், அனி, சூப்பர்! ஆமா, நீ ஏன் உம்முனு இருக்கே?" என்று அவளைச் செல்லமாகச் சீண்டினான்.
காலையில் பேரன்ட்ஸ் மீட்டிங் இருந்ததே; என்ன சொன்னாங்க, வர்ஷா என்ன மார்க்ஸ் எடுத்திருக்கானு கேட்க மாட்டீங்களா?"
, ஸாரி! மறந்திட்டேன். சரி, சொல்லு."
அவ B + வாங்கியிருக்கா."
வெரிகுட்."

என்ன வெரிகுட் ஒரு தடவையாவது அவ A + எடுத்திருப்பாளா? இல்ல, A கிரேடாவது வாங்கலாம்ல."
ஏய் அனிதா, அவ குழந்தைடி. அதோட அவ படிக்கிறது செகன்ட் ஸ்டான்டர்ட் புரியுதா?"
சும்மாயிருங்க. அவ என்ன குழந்தையா? அவளோட கிளாஸ்லே கீர்த்தனானு ஒரு பொண்ணு. எப்பவுமே அவதான் A + தெரியுமா?"
அனி, குழந்தைகளை கம்பேர் பண்ணாதே."
நான் ஒண்ணும் கம்பேர் பண்ணல; சும்மா சொன்னேன். அவ அம்மாவை இன்னிக்குப் பார்த்தேன். ரொம்ப படிச்ச மாதிரிகூட தெரியலை"
நீ போய் டிப்ஸ் கேட்க வேண்டியது தானே?" என்றான் கை கழுவியவாறே.
ஆமாங்க. எம்.எஸ்சி. படிச்சுட்டு வீட்லே உட்கார்ந்து இவளுக்குச் சொல்லிக் குடுக்கிறேன். நான் போய் டிப்ஸ் கேட்கணுமா? நல்லா திட்டிட்டேன் வர்ஷாவ."
அவள அடிச்சியா?"
பின்ன கொஞ்சுவாங்களா?"
அனிதா, நீ அவ படிப்பு விஷயத்துல ரொம்ப ஓவரா நடந்துகறியோனு எனக்குத் தோணுது. அவ எப்படிப் படிக்கிறாளோ படிக்கட்டும்; இனிமேல் இப்படிப் பண்ணாதே" என்று எரிச்சலுடன் சொல்லிவிட்டுப் படுக்கை அறையில் அழுது அழுது சோர்ந்து கிடந்த குழந்தையை அணைத்துக் கொண்டான்.
முரளி சொந்தமாக பிஸினஸ் செய்வதனால் அனிதாதான் வீட்டு நிர்வாகம், குழந்தை, படிப்பு எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறாள். அதிலும் படிப்பு விஷயத்தில் ரொம்ப கண்டிப்பு. வர்ஷாவுக்கு அனிதா பாடம் சொல்லிக் குடுக்கும்போது முரளிக்கு சில சமயம் கோபமும், சில சமயம் சிரிப்பும் வரும்.
ஒருநாள் வர்ஷா சத்தமாக அழுவது கேட்டது. பார்த்துக் கொண்டிருந்த ஃபைலை மூடிவிட்டு முரளி ஓடினான். முரளியைப் பார்த்ததும் குழந்தை அவனைக் கட்டிக் கொண்டாள்.
வர்ஷா, என்னடா ஆச்சு?"
அம்மா அழறாங்கப்பா"
அம்மா அழறானு நீயும் அழறியா?"
ம்," என்றாள்.
வர்ஷாவின் மேத்ஸ் புக்கைக் காட்டியபடி முரளி, இந்த சம்மை பத்துத் தடவைக்கு மேல சொல்லிக் கொடுத்துட்டேன். அவ தலையிலே ஏறல. ஒருவேளை நம்ம பொண்ணுக்கு மேத்ஸ் வரவே வதா?" என்று சொல்லிவிட்டு கண்ணீர்விட, முரளி வாய் விட்டுச் சிரிக்கத் தொடங்கினான். அதைப் பார்த்த குழந்தை அழுவதா, சிரிப்பதா என்று தெரியாமல் இருவரையும் மாறி மாறிப் பார்த்தாள்.
அனிதா கோபமாகி, இப்ப எதுக்குச் சிரிக்கிறீங்க?" என்றாள்.
பின்ன என்ன? சின்ன விஷயத்துக்குப் போய் நீ அழுதால் சிரிப்பு வராதா? அனி விடு. அவ குழந்தை!"
அப்ப அந்தக் கீர்த்தனா குழந்தை இல்லையா?"
முரளி ஒன்றும் பேசாமல் சென்றான்.
அன்று வர்ஷாவின் பிறந்தநாள், வர்ஷாவுக்குப் புத்தாடை அணிவித்து அழகு படுத்தினாள் அனிதா. கோயிலுக்குப் போய்விட்டு, ஹோட்டலில் காலை உணவை முடித்தார்கள்.
வர்ஷா புது டிரஸ்ல ரொம்ப அழகாயிருக்கா’ - என்று ஆசையோடு சொன்னான் முரளி.
கண்ணு போடாதீங்க" - என்ற அனிதாவின் குரலில் பெருமை வழிந்தது.
டாடி."
என்னம்மா?"
இன்னிக்கு கீர்த்தனாவுக்கும் ஹேப்பி பர்த்டே"
ஏண்டா செல்லம், இன்னிக்கும் அம்மாவை மூட்அவுட் பண்ற?"
சும்மாயிருங்க. ஆமா, இன்னைக்கு அவுட்டிங் போறோம்?"
அனி, இன்னைக்கு லீவுதானே? அதனால கம்பெனி புது டிரைவர் பாலுவை வரச் சொல்லியிருக்கேன். சின்னதா ஒரு பிக்னிக் போவோம், எனக்குக் கொஞ்சம் டயர்டா இருக்கு. அதான் பாலுவை வரச் சொன்னேன்."

அப்போது காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது. வெளியில் டிரைவர் பாலு நின்றிருந்தான்.
சார், வரச் சொன்னீங்களே"
பாலு, நானே போன் பண்ணியிருப்பேனே!"
இல்ல சார் கோயிலுக்கு இந்தப் பக்கம் வந்தேன். அதான் அப்படியே கேட்டுப் போயிடலாம்னு வந்தேன்"
வர்ஷா, அப்போது வெளியில் ஓடினாள் கீர்த்தனாஎன்று கத்திக்கொண்டு. அங்கே பாலுவின் ஸ்கூட்டரைப் பிடித்த படி ஒடிசலாய் சிவப்பாய் அழகான ஒரு சின்னப் பெண் நின்றிருந்தாள்.
என்ன பாலு, கீர்த்தனா உங்க பொண்ணா?"
ஆமா மேடம், அவளை உங்களுக்குத் தெரிமா?"
ம்... தெரியும் வர்ஷாவோட கிளாஸ்மேட்"
கீர்த்தனாவை வர்ஷா உள்ளே கூட்டி வந்தாள்.
கீர்த்தனா, உனக்கும் இன்னைக்குப் பர்த்டேவா? வர்ஷா சொன்னாள்" என்றான் முரளி.
ஆமா அங்கிள்" என்றாள் மெல்லிய குரலில்.
அங்கு இருவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள் உற்சாகமாகப் பறிமாறப்பட்டன. இருவரும் துள்ளிக் குதித்தபடி உள்ளே போய் விளையாட ஆரம்பித்தனர்.
பாலு, உங்கப் பொண்ணு நல்லா படிப்பா போலிருக்கே. அவ பேச்சுத்தான் இங்கே அடிக்கடி ஓடும்" என்று முரளி சொல்லவும் பாலுவுக்குத் தெரியாமல் அவனை முறைத்தாள் அனிதா.
அவளாதான் படிப்பா. என் பொண்டாட்டிக்கு நேரம் இருக்கிறதில்ல, அவ கார்மென்ட்ஸ்ல வேலை பார்க்கிறாள். இப்ப முழுகாம வேற இருக்கா. குழந்தை பிறந்தால் வேலையை விட்டுடணும். அப்புறம் பாப்பாவுக்கு ஃபீஸ் கட்ட முடியாது. அதனால அடுத்த வருஷம் பாப்பாவை எங்க அம்மா ஊருக்குப் படிக்க அனுப்பிடுவேன்," என்றான்.
அனிதாவைப் பார்த்தான் முரளி. அவள் மிகுந்த சந்தோஷப்படுவாள் என்று நினைத்தான்.
ஆனால் அனிதாவோ, பாலு, எல்லோருக்கும் படிப்பு சுலபமாய் வராது. கீர்த்தனாவுக்கு அது வருது. அதோட கீர்த்தனா ரொம்ப ஈடுபாடோட படிப்பானு நினைக்கிறேன். இந்த வயசுல பெத்தவங்களோட இருக்கிறது தான் நல்லது. மேலும் உங்க அம்மாவும் வயசானவங்கதானே, அதனால கீர்த்தனாவை நாங்க படிக்க வைக்கிறோம். அதோட உங்க மனைவிக்குக் குழந்தை பிறந்து கொஞ்ச நாள் ஆனவுடன் அவங்களுக்கு டெய்லரிங் தெரியும்கிறதாலே நானே ஒரு நல்ல வேலைக்கு ஏற்பாடு செய்றேன், சரியா?" என்றாள்.
எனக்கு என்ன சொல்றதுனே தெரியலை மேடம்," என்று நன்றியில் நெகிழ்ந்தான் பாலு.
முரளியும் ஆச்சரியத்தோடு அனிதாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.
பாலு, கீர்த்தனாவும் நம்மகூட வரட்டும். இன்னிக்கு நாம எல்லோரும் சேர்ந்தே வெளியில் போகலாம், என்ன முரளி சரியா?"
அனி இவ்வளவு நல்லவளா நீ?"
முரளி, வர்ஷாவோட கம்பேர் பண்ணி கீர்த்தனா மேல கொஞ்சம் பொறாமைப்பட்டது நிஜம்தான். அதே சமயம் அந்தக் குழந்தை ஃபீஸ் கட்ட முடியாமல் அங்கு படிக்கப் போறதில்லை"னு நினைக்கும்போது வருத்தமாக இருந்தது. அதுதான் அப்படிச் சொன்னேன்.
முரளி நாம விளக்கைத் தூண்டி விடுவது மாதிரி வர்ஷாவையும் தூண்டித்தூண்டி விட்டுப் படிக்க வைக்கிறோம். ஆனால், கீர்த்தனா மாதிரி குழந்தைகள், தானாகவே பிரகாசிக்கும் சூரியன் மாதிரி. அதை ஏழ்மைங்கிற மேகம் ஏன் மறைக்கணும்? அதான்..." என்றாள்.
ஏய், அனி சூப்பரா பேசுற. உண்மையில் நான்கூட இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பேனானு தெரியாது. ரியலி கிரேட் அனி நீ..." அன்புடன் அணைத்துக் கொண்டான்.
வர்ஷாவுக்கு மட்டுமே தாயாக இருந்து தவித்த அவளது மனது இப்போது கீர்த்தனாவுக்காகவும் தவித்ததை நினைத்து நெகிழ்ச்சி அடைந்தான் முரளி.

0 comments: