Thursday, January 10, 2013

கமாடி(யூ)ட்டியில் கலக்குவது எப்படி?- சோம. வள்ளியப்பன்

-->
ஷேர் மார்க்கெட் சீக்ரெட்!

கமாடிட்டியில் கலக்குவது எப்படி?

சோம. வள்ளியப்பன்

சென்னை தியாகராய நகரில் பல ஆண்டுகளாக அவருக்கு ஒரு ஸ்டேஷனரி கடை இருந்தது. சமீபத்தில் அவர் கடையில் பழங்களை விற்கத் தொடங்கினார். படிப்படியாக ஸ்டேஷனரி பொருட்கள் குறைந்து, கடையின் முழு வியாபாரம் பழம்ஆனது.
தெளிவாகக் காரணம் சொன்னார். நான் ஏன் கடை வைத்திருக்கிறேன்? வியாபாரம் செய்து லாபம் பார்க்கத்தானே? ஸ்டேஷனரியில் கிடைக்கலை. பழத்தில் கிடைக்கும் என்றார்கள். செய்து பார்த்தேன். சரியாக வருகிறது. இப்போது அதுதான்.
ஷேர் மார்க்கெட்டையும் சிலர் அப்படித்தான் பார்க்கிறார்கள். லாபம் பார்க்கத் தான் இந்த வர்த்தகமே தவிர வேறு என்ன? ஷேர் போலவே எளிதாக, பகுதிநேர வேலையாக, வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய வர்த்தகமான கமாட்டிட்டீஸ், இப்போது ஷேர் வர்த்தகம் செய்பவர்கள் இடையே பிரபலம்.
விலை ஏறும் முன்பாக வாங்கி, விலை உயர்ந்த பின் விற்று லாபம் பார்ப்பது மற்றும், விலை உயர்ந்து, இறங்க இருக்கும் தருவாயில் விற்று, விலை இறங்கிய பிறகு அதையே வாங்கி, அதன்மூலம் லாபம் பார்க்கிற இரண்டு வழிகளுமே, கமாடிட்டீஸ்சில் சாத்தியம்.
வேறுபாடு, வாங்கி விற்கப்படும் பொருள். அங்கே பல்வேறு நிறுவனங்களின் பங்குகள். இங்கே பல்வேறு மூலப் பொருட்கள். தங்கம், வெள்ளி, அலுமினியம், கச்சா எண்ணெய் மற்றும் விவசாய விளைபொருட்கள். பங்குகளை தேசியப் பங்குச்சந்தை (NSE) மற்றும் மும்பை பங்குச்சந்தையின் (BSE) தரகர்கள் மூலம் வாங்கலாம், விற்கலாம். கமாடிட்டிகளை மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் (MCX) மற்றும் நேஷனல் கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் (NCDX)ன் தரகரின் மூலம் வாங்கலாம்; விற்கலாம்.

கமாடிட்டிகளைப் பெரும் பிரிவுகளாக இப்படிப் பிரிக்கலாம்: முதலாவது புல்லியன். இதில் தங்கம் மற்றும் வெள்ளி. இரண்டாவது மெட்டல்ஸ். இதில் காப்பர், அலுமினியம் போன்றவை அடங்கும். மூன்றாவது எனர்ஜி. இந்தப் பிரிவில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு போன்றவை. நாலாவதாக விவசாய விளைபொருட்கள். மிளகு, மஞ்சள், பருப்பு வகைகள், உருளை கிழங்கு போன்றவை.
என்னது உருளைக்கிழங்குக் கூடவா என்று வியப்பாக இருக்கலாம். 15 நாட்களுக்குள் கெட்டுவிடும் பொருட்களுக்குத் தான் இங்கே அனுமதி இல்லை. உருளைக்கு உண்டு.
பங்குகளைப் போலன்றி, பொருட்கள் சந்தையில், ஒரே பொருளே, பல்வேறு அளவு (லாட் சைஸ்)களில் கிடைக்கும். உதாரணத்துக்கு மெகா கோல்டு 100 கிராம், கோல்ட் குனியா 8 கிராம். சாதாரண முதலீட்டாளர்களால் இவற்றையெல்லாம் வாங்க முடியுமா என்று சிலர் யோசிக்கலாம். பங்கு சந்தையின், பியூட்சர்ஸ் வர்த்தகம் போன்றதுதான் கமாடிட்டீஸ் வர்த்தகம்.
வாங்கும்போது மொத்தப் பணமும் கொடுக்க வேண்டாம். மார்ஜின் பணமாக ஒரு சிறிய தொகை கட்டினால் போதும். உதாரணத்துக்கு, ஒரு கிலோ வெள்ளி கடந்த வாரம் ரூ. 58000 விற்றது. 1 கிலோ வாங்க விரும்புகிறவர்கள் அதற்கு சுமார் ரூ. 3300 கட்டினால் போதும். அதன்பிறகு வெள்ளி விலை உயர்ந்தால், வாங்கியவர் மேற்கொண்டு எதுவும் தர வேண்டாம். விலை இறங்கினால் மட்டுமே, மேலும் சிறிது மார்ஜின் பணம் கட்ட வேண்டி இருக்கும்.

பங்கு சந்தையின் F & O போலத்தான். வாங்கிய மாதத்துக்குள் வாங்கியதை விற்றும் விற்றதை வாங்கியும் நேர்செய்து கொண்டு விட வேண்டும். பங்கு சந்தையில் F & O அதிகபட்சம் மூன்று மாதங்கள்தான். கமாடிட்டியில் ஆறு மாதங்கள்வரை உண்டு. F & O இறுதிநாள் பங்குசந்தையில் மாதத்தின் கடைசி வியாழக்கிழமை. கமாடிட்டீஸில் மாதத்தின் கடைசிநாள். அதுவும் பொருளுக்குப் பொருள் மாறுபடும்.
வாங்கி விற்றதற்கு தரகர் கமிஷன் உண்டு. ஆனால், பங்குச்சந்தை போல எஸ்.டி.டி. கிடையாது. சர்வீஸ் டேக்ஸ் உண்டு. கமாடிட்டிகளை வாங்கி வைத்திருந்து விற்று லாபம் பார்த்தால் வருமான வரி உண்டு. விரும்பினால் கமாடிட்டிகளை டெலிவரி எடுக்கலாம்.
தங்கம் என்றால் நான்கு வகைகள். மெகா என்பது 100 கிராம் தங்கம், மினி என்பது 10 கிராம். குனியா என்பது 8 கிராம். கமாடிட்டியில் 1 கிராம் தங்கத்தைக்கூட வாங்க முடியும். அதன் பெயர் பெட்டல் (இதழ்). ஒரு கிராம் தங்கம் வாங்க ரூ.200 மார்ஜின் போதும். வெள்ளியைப் பொறுத்த வரை மெகா என்பது முப்பது கிலோ. வெள்ளி மினி 5 கிலோ. வெள்ளி மைக்ரோ 1 கிலோ. இது தவிர சில்வர் 1000 என்ற ஒரு வகையும் உண்டு.
பங்குகள்போல ரோல் ஓவர்தான் செய்ய வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. விரும்பினால் டெலிவரி கேட்கலாம். அவர்கள் குறிப்பிடும் இடங்களில் டெலிவரி பெற்றுக் கொள்ளலாம். சில தரகர்களிடம் மட்டும் இந்த வசதி இருக்கிறது.

பங்குகளுக்கு வர்த்தகக் கணக்கு தொடங்குவது போலவே, கமாடிட்டிக்கும் தனியாகக் கணக்கு ஆரம்பிக்க வேண்டும். வழக்கமான தேவைகள்தான். வருமான வரி கணக்கு, முகவரி அட்டை, வங்கிக் கணக்கு போன்றவை.
பங்குகளை விட்டுவிட்டு ஏன் கமாடிட்டியில் வர்த்தகம் செய்ய வேண்டும் என்ற கேள்வி வரலாம். இவையும் வர்த்தகப் பொருட்கள். இவற்றிலும் விலை ஏற்ற இறக்கங்கள் உண்டு. வாய்ப்பு இருக்கிறது. அதனால்தான்.
பங்கு வர்த்தகமும் செய்யலாம். கூடவே கமாடிட்டியிலும் செய்யலாம். ஒரே தரகர் இரண்டு வகையிலும் உதவ முடியும். கமாடிட்டியில் வர்த்தக நேரம் அதிகம். பங்குகள், பங்குச் சந்தைகள், தரகர்கள், செபியின் (SEBI) கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவர்கள். கமாடிட்டியினர் பார்வர்டு மார்க்கெட் கமிஷனால் கண்காணிக்கப் படுபவர்கள்.
கமாடிட்டியில் அன்னிய நேரடி முதலீட்டாளர் (FIIக்கள்) கிடையாது. இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. பெரும்பாலான பெரிய ஊர்களில் கமாடிட்டி வர்த்தகம் செய்ய முடியும். தரகர்கள் இருக்கிறார்கள். தவிர, வீட்டில் இருந்தபடியே இணையம் மூலமும், ஆன்லைன் வர்த்தகம் செய்யலாம்.
கமாடிட்டி என்பது எந்த ஒரு தனிப்பட்ட நிறுவனத்தின் பொருள் அல்ல. பங்குகள்போல ஒரு நிறுவனத்தின் லாப நட்டங்களைப் பொறுத்து விலை மாற்றம் அடைவது இல்லை. பெரும்பாலானவை உலகளாவிய பொருட்கள். உதாரணத்துக்கு, தங்கமும் கச்சா எண்ணெயும்.

சிலர் பங்கு விலைகளில் விளையாடுவதைப் போல, எவராலும் இப்படிப்பட்ட பொருட்களை வாங்கிக் குவித்து, விலையேற்றவோ, தொடர்ந்து விற்று விலை இறக்கவோ முடியாது.
இந்தப் பொருட்களின் தேவைகளை எவரும் தனியாகவோ, கூட்டுச் சேர்ந்தோ பெரிய அளவுகளில் மாற்ற முடியாது. அதனால் மிகப் பெரிய வீழ்ச்சிகள், ஏற்றங்கள் நிகழ்வது அரிது. (முன்பு ஒருமுறை வெள்ளியில் நடந்திருக்கிறது.)
சில பங்குகளின் விலைகள் ஒரேயடியாக எழுபது, எண்பது சதவிகிதம் எல்லாம் விழுந்து ரூபாய்க்கு 20, 30 காசுகள் மதிப்புள்ளவையாக ஆகி விடுவதுபோல கமாடிட்டிகளில் ஆகும் வாய்ப்பு மிகக் குறைவு.
கமாடிட்டிகளில் டிவிடெண்ட் கிடையாது. வாங்கினோம். தூக்கி உள்ளே வைத்தோம் என்று நீண்ட காலத்துக்கு விட முடியாது. டெலிவரி எடுத்தால்தான் அப்படிச் செய்ய முடியும்.
கமாடிட்டியிலும் பணம் பண்ணலாம். அதை புரிந்து கொண்டு, சரியான முடிவுகள் எடுத்தால்.

2 comments:

DIVI said...

As we know u r specialist in Banking sector - We expect lot of creative ideas on this and ideas for us to handle banking issues

ATOZ FOREX DETAILS said...

http://atozforexdetails.blogspot.in

மனதை அடக்குபவனே மாபெரும் வீரன் என்பார்கள். மனம் ஒரு குரங்கு என்பார்கள், நான் ஏன் மனம் பற்றியே சொல்கிறேன் என்றால், மனநிலைக்கும் டிரேடுக்கும் அவ்வளவு தொடர்பு உண்டு.
இப்பொழுது எங்கு பார்த்தாலும், வால்மார்ட் வர வேண்டாம் என்றும்,மதுக்கடைகளை மூட வேண்டும் என்றும் ஒரே போராட்டம் நடப்பதைக்காணலாம். நான் ஒன்று கேட்கிறேன், நாம் அனைவரும் குடிக்காமல் இருந்து விட்டால் வியாபாரம் இல்லாமல் கடைகளை மூடித்தானே ஆக வேண்டும், ஆனால் நாம் குடிக்கவும் செய்கிறோம்,கடைகளை மூடவும் சொல்கிறோம். அங்குதான் பிரச்சனையே.

இதுபோலதான் 99% டிரேடர்கள் இலக்கை நிர்ணயம் செய்வார்கள்,ஆனால் பொறுமையோடு காத்திருக்க மாட்டார்கள். மணிக்கொரு சிஸ்டம் பாலோ ( SYSTEM FOLLOW ) பண்ணுவார்கள். இரண்டு லாஸ் வந்தால் போதும்,உடனே அந்த இண்டிகேட்டர் சரி இல்லை என அடுத்த இண்டிகேட்டர்,அதுவும் ஒரு டிரேட் லாஸ் ஆனால் போதும் மறுபடியும் அடுத்த சிஸ்டம் என குரங்கு போல தாவிக்கொண்டே இருக்கும் மனம் தான் 99% டிரேடர்களின் மிகப்பெரிய பலவீனம்.