Thursday, January 10, 2013

தைலாபுரத்தின் நெகிழ்வான பக்கங்கள். -

-->
பாட்டாளி சொந்தங்களே

நின்றுகொண்டே பயணம் செய்த 100கி.மீ.

மருத்துவர் . ராமதாஸ்

அடடா அந்த மூன்றாம் நாள் நிகழ்ச்சிகள் இருக்கின்றனவே? அது தைலாபுரத்தின் நெகிழ்வான பக்கங்கள்.
பரிசுகளுக்காகவும், வாழ்த்துக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டிருக்கும். பரிசு பெற்றவர்கள் உட்பட அனைவரும் எனது காலில் விழுந்து வாழ்த்துக்களையும், பணத்தையும் பெற்று விடுவார்கள். சிறந்த நிகழ்ச்சிகள், சிறந்த குடும்பப் பரிசு, சிறந்த புதுமுகம், சகலகலா வல்லவர் எனப் பல பிரிவுகளில் பரிசுகள் வழங்கப்படும்.
அதைத் தொடர்ந்து அனைவரும் எதிர்பார்க்கும் அறிவுரை நேரம் வரும். தைலாபுரத்தில் பார்க்கும் போதெல்லாம் அறிவுரை கிடையாது. அன்பும், அரவணைப்பும் மட்டும்தான். ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் தான் பெரியவர்களின் அறிவுரை. யார் பெயரையும் குறிப்பிடாமல் பொதுவாக அறிவுரை வழங்கப்படும். இதில் பார்வையாளர்கள் எவரும் கிடையாது. பெரியவர்கள் பதினாறு பேர். குழந்தைகள் பதினாறு பேர் என குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே இருப்பார்கள். கொஞ்சம் அழுகை, கொஞ்சம் சிரிப்பு, நிறைய தலையாட்டல்களுடன் அறிவுரை நேரம் முடிவுக்கு வரும். குழந்தைகளிடம் எந்த விளக்கமும் கோரப்படாது. தவறு செய்த பெரியவர்கள் தங்களைத் திருத்திக் கொள்ள அவகாசம் தரப்படும். குழந்தைகளின் மேற்படிப்பு, திருமணம் போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.
தைக்கூடலில் கூடிய குடும்ப உறுப்பினர்கள் விழா முடிந்ததும் குடும்பம் குடும்பமாக ஊருக்குப் புறப்பட்டுச் செல்வார்கள். அதுவரை குதூகலமாக இருந்த தைலாபுரம் தோட்டம் காலியாகும்போது கனத்த இதயத்துடன் நானும், எனது மனைவியும் அமர்ந்திருப்போம். எனினும், பொங்கல் விழாவின் நினைவுகளும், சிரிப்புகளும் அடுத்த ஒரு மாதத்துக்கு உற்சாகமாகவும், நினைக்கும்போதெல்லாம் சிரிக்கும் வகையிலும் எங்களை வைத்திருக்கும்.
1980-இல் வன்னியர் சங்கம் தொடங்குவதற்குக் காரணமாக என்னுள் இருந்தவை இரண்டு. ஒன்று தமிழ்நாட்டில் தனிப்பெரும் சமுதாயமாக வன்னியர் இருந்தும் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் ஒரு விழுக்காடுகூடப் பயன் பெறவில்லை. இதை நான் மருத்துவராகத் தொழில் நடத்திய சமயத்தில் காண முடிந்தது. மருத்துவக் கல்லூரியில் படித்தபோது ஒட்டுமொத்த மருத்துவப் படிப்பில் ஒவ்வோர் ஆண்டும் இரண்டு மூன்று வன்னியருக்குத்தான் இடம் கிடைத்தது என்ற உண்மையைத் தெரிந்து கொண்டேன்.
அடுத்து, அப்போது படித்த அரசு அல்லது தனியார் வேலையில் இருந்த ஒரு சிலரைக் கொண்டு, 'SSS' என்ற சமூக நற்பணி அமைப்பு ஒன்று ஆரம்பித்து நடத்தப்பட்டு வந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த இப்போது ஆரணி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிற எம்.கிருஷ்ணசாமி, பொறியாளர் மணிவண்ணன், பத்மஸ்ரீ டாக்டர் இராஜசேகரன், பொறியாளர் பி.டி. ஜெயராமன் ஆகிய நால்வரும் சேர்ந்து கல்வி, வேலை வாய்ப்புகளில் மிகப் பின்தங்கி இருக்கின்ற இந்தச் சமுதாயத்துக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் வழிகாட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு 1970-இல் இந்த 'SSS' அமைப்பை ஆரம்பித்தார்கள். சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையில் அக்காலத்தில் இருந்த கீதாகபே என்ற ஓட்டலில் முதல் கூட்டம் நடந்தது.
இந்தச் சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் எஸ்.எஸ். இராமசாமி படையாச்சியார், மாணிக்கவேல் நாயக்கர், மேஜர் சண்முகம், பிற்பட்டோர் நல கமிஷன் தலைவராக இருந்த .என்.சட்டநாதன், முதல் .பி.எஸ். அதிகாரியும் காவல் துறை தலைமை இயக்குனரும் (DGP) ஆக இருந்து ஓய்வு பெற்ற இராஜ்மோகன் போன்ற இந்தச் சமுதாயத்தில் உயர் பதவியில் இருந்தவர்கள் சமூக நற்பணி அமைப்பினுடைய ஆண்டு விழாக் கூட்டங்களிலே கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பரிசும் பாராட்டும் வழங்கி ஊக்கப்படுத்துவார்கள்.

இராஜ்மோகன் திருச்சி மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளராக இருந்த போது சென்னை மியூசியம் தியேட்டரில் நடந்த ஓர் ஆண்டுவிழாவில் நடைபெற்ற மார்க்கண்டேயன் நாடகத்தில் எம வேஷம் போடவும் அவருடைய அண்ணன் பொறியாளர் நெய்வேலி இராசேந்திரன் மார்க் கண்டேயன் வேஷம் போடவும் கலை நிகழ்ச்சிகள் நடந்ததுண்டு.
மணிவண்ணன் உடல்நலம் குன்றிய தனால் அப்பொறுப்பு எல் அண்டு ட்டி நிறுவனத்தின் மேலாளராகப் பணியாற்றிய வழக்கறிஞர் .கே.நடராசனிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆங்கிலத்தில் 'News Letter' என்ற ஒரு மாத இதழும் பின்னாளில் செய்தி மடல்என்ற தமிழ் மாத இதழும் வெளிவந்தது.
.கே.நடராசன் பொறுப்பேற்ற பிறகு மாவட்டத் தலைநகரங்களிலும் வட்ட தலைநகரங்களிலும் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. அப்போது கோபால் என்ற தொழிலதிபர் இந்த இயக்கத்துக்கு வலுவூட்டினார். இந்தச் சமுதாயத்தில் அப்போது இருந்த ஒரே தொழிலதிபர் இவர் மட்டும்தான். சிக்கனத் திருமணம் நடத்த வேண்டுமென்ற ஒரு கோட்பாட்டை கோபால் முன்வைத்து, திருமணத்துக்கு வேண்டிய தாலி, உடைகள், பாத்திரங்கள் போன்றவற்றைத் தம்முடைய செலவிலேயே வாங்கிக் கொடுத்து பல மாவட்டங்களிலே அதை ஓர் இயக்கமாகவே நடத்தி வந்தார்.
'SSS' பற்றி நான் கேள்விப்பட்டு ஞாயிற்றுக் கிழமைகளில் அக்கூட்டம் எங்கு நடந்தாலும் செல்லத் தவறுவதில்லை. இந்தத் தலைவர்களை என் வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்து மகிழ்ந்த காலங்கள் உண்டு. நாளடைவில் .கே.நடராசன் இந்த அமைப்பினுடைய ஒரு சர்வாதிகாரி போல் செயல்பட்டு, கூட்டங்களிலே ஒரே ஒரு நாற்காலி மட்டும் மேடையில் போட்டு, தாம் மட்டும் அமர்ந்து கொண்டு கூட்டங்களை நடத்துவார். வன்னியர் என்ற சொல்லைக் கூட்டத்தில் யாரும் பேசக் கூடாது. சமூகம் என்றுதான் சொல்ல வேண்டும் என்றெல்லாம் கட்டளை பிறப்பிக்கப்பட்டது உண்டு. இந்நிலையில் படிக்காத பாமர வன்னிய மக்களுக்கும் வழிகாட்ட வேண்டுமென்ற நோக்கத்தில் ஏன் ஓர் வன்னியர் சங்கத்தைத் தொடங்கக்கூடாது என்ற எண்ணம் என்னுடைய ஆழ்மனத்தில் இருந்து கொண்டே இருந்தது.
காங்கிரஸ் பேரியக்கம் தொடங்குவதற்கு ஒருவருடத்துக்கு முன்னாலே 1884-இல் இந்தச் சமுதாயத்திலிருந்த பெரியவர்கள் வன்னிய குல சத்திரிய மகா சங்கம்என்ற அமைப்பை, கோபால் நாயக்கர் என்பவர் தலைமையில் ஆரம்பித்தார்கள். பின்னாட்களில் அது மாவட்டம், வட்டங்கள் தோறும் பல பெயர்களில் ஆரம்பிக்கப்பட்டு பலரால் நடத்தப்பட்டு வந்தன.

படிக்காத மிகமிகப் பின்தங்கிய சமுதாயமாக இருந்த வன்னியர் சமுதாயத்துக்குப் புளி மூட்டைபோல் ஒன்று சேர்ந்து வழிகாட்ட வேண்டிய தலைவர்கள் நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்து விட்டால் பல திசைகளில் உருண்டோடுவது போல வன்னியர் சங்கம் என்ற பெயரிலே ஆங்காங்கே பல அமைப்புகளை வைத்துக் கொண்டு பலவிதமான வன்னியர் சங்கக் கொடிகளையும் வைத்துக் கொண்டு சிதறிக் கிடந்தார்கள்.
தமிழ்நாட்டில் ஒரு மிகப் பெரும்பான்மையான சமுதாயம் தமிழ்நாட்டை ஏன் ஆளவில்லை என்ற கேள்விக்கு அன்றிலிருந்து இன்றுவரை வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த பெரியவர்கள் சொல்லி வந்த ஒரே பதில் வன்னியர்களுக்குள் ஒற்றுமை இல்லைஎன்ற இரண்டு வார்த்தைகள்தான்.
வன்னியர் சமுதாயத்தில் சிதறிக் கிடந்த அமைப்புகளை எல்லாம் ஒன்று சேர்த்து ஒரு அமைப்பின் கீழே, ஒரு கொடியின் கீழே கொண்டு வர வேண்டுமென்ற எண்ணம் எனக்குப் பல ஆண்டுகளாக இருந்து வந்தது. இருபத்தெட்டு சங்கங்களின் தலைவர்களோடு தொடர்பு கொண்டு பேசி 20.7.1980 அன்று என்னுடைய வீட்டில் இவர்களையெல்லாம் கூட்டி வைத்து வன்னியர் சங்கம் என்ற இரண்டு வார்த்தைகளில் இந்த அமைப்பு இருக்க வேண்டுமென்றும், அக்னிக் குண்டம் பொறித்த மஞ்சள் கொடி இதனுடைய கொடியாக இருக்க வேண்டுமென்றும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதில் முக்கியத் தலைவர்களாகக் கலந்து கொண்டவர்கள் தமிழக அரசின் ஓய்வு பெற்ற தலைமைச் செயலாளர் இராயப்பா, 1952 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியாவிலேயே நேருவுக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற கிடங்கல் சம்பந்தம் போன்றவர்கள். ஒவ்வொரு சாதிக்கும், அவரவர்கள் மக்கள் தொகைக்கு ஏற்ப கல்வி, வேலை வாய்ப்புகளில் வகுப்புவாரி இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பது அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானம். தமிழகத்தில் மிகப் பெரிய சமுதாயமாக இருக்கிற வன்னியர்களுக்கு மாநிலத்தில் இருபது சதவிகிதமும் மத்தியில் இரண்டு சதவிகிதமும் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்பது இரண்டாவது தீர்மானம். மூன்றாவது தாழ்த்தப்பட்டவர்களுக்கு 18 சதவிகிதமாக இருக்கின்ற இட ஒதுக்கீட்டை 22 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என்பது. மூன்று தீர்மானங்களும் அனைவரது ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி 1980-இல் ஈரோடு கருங்கல்பாளையத்தில் மிகப் பிரம்மாண்டமான வன்னியர் சங்கத்தின் முதல் மாநாடு நடைபெற்றது. ஒரு லட்சம் மக்கள் கலந்து கொண்ட வன்னியர் சங்க முதல் மாநாட்டில் அனைத்துச் சமூகத்தினருக்குமான வகுப்புவாரி ஒதுக்கீட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானம்தான் முதன்முதலாக வன்னியர் சங்கம் சார்பாக அரசுக்கு வைக்கப்பட்ட கோரிக்கை!
இந்தக் கோரிக்கைக்கு மக்களிடையே ஆதரவு திரட்ட வேண்டும், அதற்கான அடித்தளமாக ஊர்தோறும் வன்னியர் சங்கம் கிளைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்து வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாவட்டம் மாவட்டமாகச் சென்று வன்னியர் சங்கக் கொடியேற்றி அமைப்புகளை உருவாக்கி வந்தேன்.

வாரத்தில் ஒருநாள் என்று ஆரம்பித்து, அது இரண்டு நாட்களாக ஆகி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஊர் ஊராகச் சென்று வன்னியர் சங்கத்தை வளர்க்கும் பணியில் ஈடுபட்டேன். வாரத்தில் ஐந்து நாட்கள் சம்பாதித்த பணத்தை எடுத்துக் கொண்டு வன்னியர் சங்க வேலையாகப் புறப்பட்டு, செலவு செய்துவிட்டு திங்கள் கிழமை காலையில் வந்து குளித்துவிட்டு, வழக்கம் போல் ஸ்டெதாஸ்கோப்பை மாட்டிக்கொண்டு நோயாளிகளைப் பார்ப்பேன்.
சேலம், தருமபுரி, தஞ்சாவூர், ஈரோடு போன்ற மாவட்டங்களுக்குப் பல நேரங்களில் தமிழக அரசின் விரைவுப் பேருந்தில் பயணம் செய்தேன். பல இரவு நேரங்களில் பேருந்தில் உட்காருவதற்கு இடம் கிடைக்காமல் 100 கி.மீ. தூரம்வரைகூட நின்றுகொண்டே பயணம் செய்திருக்கிறேன். இடையில் யாராவது இறங்கினால் உட்கார வாய்ப்புக் கிடைக்கும்.
என்னைக் கிராமம் கிராமமாகக் கூட்டிச் செல்லுகிற வன்னியர் சங்கப் பொறுப்பாளர்கள் கொடியேற்ற ஏற்பாடு செய்வார்கள். வெளிச்சத்துக்கு அவர்கள் அரிக்கன் விளக்கைக் கையில் பிடித்துக் கொள்ள, நான் ஒரு ஸ்டூல் மேலே ஏறி என்னுடைய பேச்சைத் தொடங்குவேன். ஊருக்கு 25 இளைஞர்களைக் கொடுங்கள். இந்தச் சமுதாயத்தை மாற்றிக் காட்டுகிறேன் என்று என்னுடைய வீராவேசமான உரையைத் தொடங்கி, பல செய்திகளை அந்த ஊர் மக்களுக்குச் சொல்லுவேன். அப்போது .தி.மு..வைச் சேர்ந்த இளைஞர்கள் அதிகமாக என் அருகில் வந்து என்னுடைய பேச்சைக் கேட்பார்கள். .தி.மு..வைச் சேர்ந்த இளைஞர்களும் எந்தக் கட்சியையும் சாராத இளைஞர்களும் வன்னியர் சங்கக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அதிக அளவில் வன்னியர் சங்கத்தில் உறுப்பினர்களாகச் சேர்ந்தார்கள். தி.மு..வில் இருக்கும் வன்னியர்கள் மட்டும் யாரோ டாக்டர் ராமதாசாம், வன்னிய மக்களை மாற்றிக் காட்டப் போவதாகப் பேசிக் கொண்டிருக்கிறார் என்று கிண்டல் செய்வார்கள். வன்னியர் சங்கத்தின் இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்குக் காங்கிரசில் இருந்த வன்னியர்கள் அப்போது முழு அளவில் ஒத்துழைப்புத் தந்தார்கள்.
கொடி ஏற்றும் நிகழ்ச்சி இரவு பகல் என்று தொடர்ந்தது. எனது காரில் பழைய சோற்றையும் கூழையும், வற்றல் மிளகாயையும், மல்லாக் கொட்டையையும் காலை உணவாக எடுத்துக் கொண்டு வழியில் இருக்கிற கிணற்றங்கரையில் சாப்பிட்டுவிட்டு காலை எட்டு மணியிலிருந்து கொடி ஏற்றும் நிகழ்ச்சி ஆரம்பிக்கும். பகல் சாப்பாட்டை எனக்கு மாலை ஐந்து மணிக்குப் போடுவார்கள். இரவு சாப்பாட்டை அதிகாலை இரண்டு மணிக்குக் கொடுப்பார்கள். இடையில் காப்பி, தேநீர் என்ற பேச்சுக்கே இடமில்லை. அதிகாலை இரண்டு மணிக்குச் சாப்பிட்ட பிறகு, கொடி ஏற்றும் நிகழ்ச்சி காலை ஆறு மணிவரை தொடரும். இப்படியாக வடதமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள் அனைத்திலுமுள்ள கிராமங்களில் என் கால் படாத ஊரே இல்லை. ஆண்டுகள் செல்லச் செல்ல, வன்னியர் சங்கம் வளர, வளர தெருத்தெருவாக என்னை நடக்க வைத்து வீடுதோறும் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பார்கள்.

1 comments:

M. Shanmugam said...

பழைய தகவல்களை தேடி தந்துள்ளீர்கள்
மிக்க நன்றி

Tamil Latest Movie News