Monday, November 05, 2012

விஜய் டி வி - சூப்பர் சிங்கர் - போட்டி சர்ச்சைகள்


          சிவராத்திரியல்ல.. ஏகாதசியல்ல.. இரவு  நேர கிரிக்கெட் போட்டியும் அல்ல.. ஆனாலும் அக்டோபர் 26 வெள்ளிக்கிழமையன்று தமிழகத்தின் பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினர் கொட்டக் கொட்ட விழித்திருந்து அந்த டி.வி. நிகழ்ச்சியை ரசித்துக்கொண்டிருந்தார்கள். நேரடி ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது சென்னை நேரு உள்விளையாட் டரங்கத்தில். அங்கும் பல்லாயிரக்கணக்கானோர் நள்ளிரவு கடந்தும் உற்சாகக் குரல் எழுப்பியபடியே இருந்தார்கள். அத்தனையும் விஜய் டி.வியின் ஜூனியர் சூப்பர் சிங்கர் 3 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி ஏற்படுத்திய தாக்கம்தான்.

ரியாலிட்டி ஷோ எனப்படும் தனிமனித திறமைகளை வெளிப்படுத்தும் டி.வி. நிகழ்ச்சிகளில் தமிழக டி.வி. ரசிகர்களை அதிகம் கவர்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்று இந்த ஜூனியர் சூப்பர் சிங்கர். பிரபல பின்னணிப் பாடகர்களைப்பேல சிறுசுகள் அநாயசமாகப் பாடும் இந்த நிகழ்ச்சியை ஒரு சினிமாவைவிடவும் அதிகமாக பிரம்மாண்டமாக்கி பிரபலப்படுத்தியது விஜய் டி.வி. நிறுவனம். தொலைக்காட்சியில் பாடும் வாய்ப்பு, லட்சக்கணக்கில் பரிசுத் தொகை, பிரபலமாவதற்கேற்ற விளம்பரம் என இந்த நிகழ்ச்சி அமைந்திருந்ததால், பாடத் தெரிந்த தங்கள் பிள்ளைகளை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு அனுப்புவதற்கு பெற்றோர்கள் போட்டிபோட்டனர்.


பல சுற்று தகுதிப் போட்டிகளில் தேறிவந்த இளம் பாடகர்கள், டி.வி. நிகழ்ச்சியில் பங்கேற்று, நடுவர்களான பிரபல பின்னணிப் பாடகர்கள் முன்பாக தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள். நடுவர்களின் மதிப்பெண்ணும், டி.வி. ரசிகர்களின் எஸ்.எம்.எஸ். ஓட்டும்தான் இந்த ஜூனியர் சிங்கர்ஸை அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேற்றிச் செல்லும் என்பதால் போட்டிகள் விறுவிறுப்பாகவே இருந்தன.

இறுதிப் போட்டிக்கு 5 பேர் தேர்வு செய்யப்பட்டார்கள். அதுதான், வெள்ளிக்கிழமையன்று நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. இரவு 1.30 மணி வரை நீடித்த இந்த நிகழ்ச்சியில் யார் ஜெயிக்கப்போகிறார்கள் என்ற பதைபதைப்பு ஜூனியர் சிங்கர்களின் பெற்றோர்களிடம் எக்கச் சக்கமாக இருந்தது. நேரில் பார்த்த ரசிகர்களிடமும் டி.வியில் லைவ் ஷோ பார்த்த ரசிகர்களிடமும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் இந்த  டென்ஷனை ஏற்படுத்திக் கொண்டே இருந்தார்கள். ஆனால், பாட்டு பாடிய குட்டீஸிடம் எந்த டென்ஷனு மில்லை. அவர்களுக்கு மகிழ்ச்சிதான் அதிகரித் திருந்தது. காரணம், போட்டியில் ஜெயிப்பவ ருக்கு பரிசு கொடுப்பதற் காக ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் அங்கு வந்திருந்ததுதான். இந்தச் சின்ன வயதில் மிகப் பெரிய இசை ஜாம்பவான் முன்பாக பாடுகிறோம் என்பதே ஜூனியர்களுக் குப் பெரும் பரிசாக இருந்தது.

நேரு ஸ்டேடியத்தில் நிகழ்ச்சியை நேரில் பார்த்த திருப்பூர் ரமேஷ் நம்மிடம் தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். ""பிரகதி, யாழினி, கௌதம், ஆஜித், சுகன்யா ஆகிய 5 பேரும்தான் இறுதிச் சுற்றில் கலக்கியெடுத்தாங்க. அதிலும் பிரகதி தனது இரண்டாவது சுற்றில், ‘"மைய்யா... மைய்யா...'’என்ற மணிரத்னத்தின் "குரு' படத்தின் பாடலை ஆடியபடியே பாடி ரசிகர்களையும்  ரகுமானையும் அசர வச்சிட்டார். அதுபோலவே யாழினியும் "கொஞ்சம் நிலவு.. . கொஞ்சம் நெருப்பு'’ என்ற பாட்டை ஆட்டத்துடன் பாடி கைதட்டல்களை அள்ளிட்டார். பிரகதியின் பாடலுக்கு ரசிகர்களோடு அவரோட அம்மாவும் லைட்டா மூவ்மெண்ட்ஸ் கொடுத்து உற்சாகப்படுத்துனாங்க.
தென்மாவட்டத்திலிருந்து முதன்முதலா ஃபைனலுக்கு செலக்ட்டான தூத்துக்குடி கௌதம் பாடுனப்பதான் அந்தப் பையனோட அம்மா ரொம்ப பதட்டத்தோடு, தலையைக் குனிஞ்சி, கண்ணை மூடிக்கிட்டு சாமியை வேண்டிக்கிட்டே இருந்தாங்க. "வந்தே மாதரம்' பாட்டு பாடி, ஒட்டுமொத்த ஆடியன்சோட கைதட்டலையும் வாங்குன ஆஜீத்துதான் வின்னர்னு அறிவிச்சி, ரகுமான் கையால பரிசு கொடுக்கப்பட்டப்ப உலகமே சுழலுறமாதிரி அந்த சின்னப்பையனுக்கு அப்படியொரு சந்தோசம். ரகுமான் சார் ரசிகன், ரகுமான் சார் ரசிகன்னு சொல்லிக்கி ட்டிருந்தவனுக்கு அவரே பரிசு கொடுத்தாருன்னு சந்தோசம் இருக்காதா'' என்றார்.

நாம் ஆஜித்தின் சொந்த ஊரான திருச்சியில் விசாரித்தோம். ""எங்க ஊரு பையனுக்கு 60 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடு பரிசா கிடைச்சிருக்கு. அதுவும் ஏ.ஆர்.ரகுமான் கையால கிடைச்சிருக்குங்கிறது எங்க எல்லோருக்கும் பெருமைதான். ஆஜித்தை வளர்த்ததும் அவனுக்கு குருவா இருந்ததும் அவனோட பெரியம்மா சமீதாதான். ஆஜித்தோட அம்மா அப்பா சபானா-நிஷாருக்கு கல்யாணமாகி 10 வருசம் கழிச்சி பிறந்த குழந்தை இவன். 6 மாசக் குழந்தையா இருக்கிறப்பவே டி.வியில சினிமா பாட்டு கேட்டா அதை மழலை பாஷையில் குதப்புவானாம்.


 http://3.bp.blogspot.com/-Ce5Sll78ehg/UCYAPI-VoJI/AAAAAAAAM-E/pbc6ExpZ-FI/s1600/Pragathi+Guruprasad+in+airtel+super+singer+junior+3+at+vijay+tv+(13).jpg


 இது கடவுள் வரம்னு அவங்க குடும்பம் உற்சாகப்படுத்தியிருக்கு. கே.கே.நகரில் 4000 குழந்தைகள் படிக்கிற ஆல்ஃபா பள்ளிக்கூடத்தில்தான் ஆஜித்தும் படிச்சான். அவங்க பெரியம்மா அங்கேதான் டீச்சரா இருந்தாங்க. அதனால  அவனோட இசை ஆர்வத்தை கண்டுபிடிச்சி வளர்த்தாங்க. யு.கே.ஜி படிக்கும்போதே வந்தே மாதரம் பாட்டை பாடி, குட்டி ஏ.ஆர்.ரகுமான்னு பெயர் எடுத்தவன். அப்ப அதைக் கிண்டல்கூட பண்ணினாங்க. ஆனா இப்ப 11 வயசிலே, அதே ஏ.ஆர். ரகுமான் கையால பரிசு வாங்கி சாதிச்சிருக்கான்'' என்கிறார்கள் பெருமை பொங்க.

ஃபைனலுக்கு முன்னாடி நடந்த  போட்டியில் பாட்டு வரிகளை மறந்து  போய் டாப் 3 லிஸ்ட்டில் இடம்பிடிக்க முடியாமல் போனவர்தான் ஆஜித். அது மாதிரியே யாழினிக்கும் இடம் கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒயில்டு கார்டு என்கிற முறையில் ரசிகர்கள் எஸ்.எம்.எஸ். மூலமாக ஓட்டுப் போட்டுத் தேர்வு செய்தால், அவர்கள் ஃபைனலை நோக்கி முன்னேறமுடியும். இன்னாருக்கு இந்த நம்பரில் ஓட்டுப் போட்டு எஸ்.எம்.எஸ். அனுப்புங்கள் என்று சம்பந்தப்பட்டவர்களின் படங்களோடு தமிழகத்தின் முக்கிய நகரங்களில் எல்லாம் போஸ்டர் ஒட்டியது விஜய் டி.வி. ஓட்டுகள் குவிந்தன. ஆஜித்துக்கு ஆதரவாக இதுவரை இல்லாத அளவுக்கு நான்கரை லட்சம் எஸ்.எம்.எஸ். ஓட்டுகள் குவிந்தன. அதுபோலவே, யாழினிக்கும் நிறைய பேர் ஓட்டுப் போட்டதால் அவரும் ஃபைனலை நோக்கி முன்னேறினார். இறுதிச் சுற்றில் ஆஜீத் முதலிடம்  பெற, இரண்டாவது இடம் பிடித்த பிரகதிக்கு 5 லட்ச ரூபாய் மதிப்பில் தங்க நகை, மூன்றாவது இடம் பிடித்த யாழினிக்கு 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நகை, சுகன்யாவுக்கும் கௌதமிற்கும் 2 லட்ச ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

பள்ளிப் பருவத்தில், தமிழகம் தழுவிய அளவில் திறமைகளைக் காட்டி, உலகின் பல பகுதிகளிலும் உள்ள தமிழ் மக்களின் மனங்களை தங்களின் திறமை யால் வென்ற இந்த ஜூனியர் சூப்பர்களின் ஆற்றலை இசை நுணுக்கம் அறிந்தவர்கள் மிகவும் பாராட்டு கிறார்கள். பிரபல இசைக் கலைஞரும் இசைப் பயிற்சி வல்லுநருமான மீரா காயத்ரி நம்மிடம், ""அந்தப் போட்டியில் கலந்துக்கிட்ட எல்லாப் பிள்ளைகள் கிட்டேயும் தனித் திறமை இருந்தது. அற்புதமா பாடி னாங்க. ஏ.ஆர்.ரகுமான் அந்த நிகழ்ச்சிக்கு வந்ததன் மூலம்  அவங்களோட திறமைக்கு ஒரு அங்கீகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதே மாதிரி திறமையுள்ள வர்கள் கிராமப்புறங்களிலும் இருக்கிறார்கள். நகரத்தில் உள்ள பிள்ளைகளுக்கு கிடைக்கிற வாய்ப்பு அவங் களுக்குக் கிடைக்கிறதில்லை. அவங்களையும்  கண்டு பிடிச்சி,  மேடையேற்றி வாய்ப்புகளைக் கொடுக்க ணும். அப்பதான் உண்மையான திறமைகள் வெளிப்பட்டுக் கிட்டே இருக்கும்'' என்றார்.

இசைப் பிரியரும் இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவருமான  திருவாரூர் ஜி.ரவி, ""அது ரொம்ப அற்புதமான நிகழ்ச்சி. இந்தத்  திறமைகளைத் தொடர்ந்து வளர்க்கிற மாதிரி வாய்ப்புகள் கொடுக்கணும். பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பள்ளிக்கூடத்திலேயே இசை வகுப்பைத் தொடங் கணும்னு சொல்லியிருந்தார். அவர் சொன்ன கருத்து ரொம்பவும்  சரியானது. மனதை ஒருமுகப்படுத்தவும், ஒரு விஷ யத்தின் மீது கவனத்தை செலுத்தவும் இசை என்பது சரியான பயிற்சியாக அமையும். மாணவர்கள் மனதில் ஒழுங்கும் கட்டுப்பாடும் இசை மூலமா உருவாகும்போது  அவங்களால பாடத்தையும் நல்லா படிக்க முடியும். மனப்பாடப் பகுதிகளை எளிமையா உள்வாங்கிக்க முடியும். பள்ளிக்கூடங்களிலேயே தமிழிசையை சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்கலாம்'' என்கிறார்.

http://metromasti.info/aimg,300,2012/09/05/gossip_image/6182-Airtel-Super-singer-jr-3-Unplugged-Round-Pragathi-performance.jpg
அதே நேரத்தில், இந்த சூப்பர்  சிங்கர் நிகழ்ச்சியின் மறுபக்கத்தையும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டத் தவறவில்லை. முதல் பரிசு என்பது திறமையின் அடிப்படையிலா ஓட்டுகளின் அடிப் படையிலா என்ற குழப்பம் உள்ளது என்பதைக் குறிப்பிடும் அவர்கள், ""முதல் சுற்றில் கிளாசிக்கல் சாங் பாடவேண்டும் என்று நிபந்தனை விதித்தவர்கள், அருமையா கிளாசிக்கல் பாடிய பிரகதியை விட்டுவிட்டு, கிளாசிக்கல் வரைமுறைக்குள்ளேயே வராத "வந்தே மாதரம்' பாடலைப் பாடிய ஆஜீத்துக்கு பரிசு கொடுத்தது எப்படி? 
இந்தப் போட்டியில் கலந்துக்கிட்ட சின்னப்புள்ளைகளை டி.வி. நிறுவனத்தோடு காண்ட்ராக்ட் போடவச்சு, தங்களோட டி.ஆர்.பி. ரேட்டிங்கை அதிகப் படுத்திக்கிறது சட்டப்படி சரியானதுதானா?'' என்று கேள்வி எழுப்புவதுடன் இந்தப் போட்டி நடத்தும் விதம், தேர்வு முறை, பரிசுத் தொகை அனைத்தையும் விமர்சனத்திற்குட் படுத்துகிறார்கள். "11 வயது பையனுக்கு 60 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்படும்போது, அதன் மதிப்பு அந்தப் பையனுக்குத் தெரியாது. அது அவனது பெற்றோருக்குத்தான் பயன்படும். பெற்றோரின் வானளாவிய ஆசைகளுக்குப் பிள்ளைகளைப் பயன்படுத்தும் போக்கையே இத்தகையப் போட்டிகள் வளர்க்கின்றன' என்றும் "சமுதாயத்தால் இது  மற்ற பிள்ளைகளின் மீதும் மன அழுத்தத்தை உண்டாக்கும்' என்றும் குறிப்பிடுகின்றனர்.

குழந்தைகள் நல குழுமத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் மனோ ரமா இதுபற்றி கூறும்போது, ""ரியாலிட்டி ஷோக்கள் மூலமாக குழந்தைகளின் திறமையை வெளிக்கொண்டு வருவது பாராட்டுக் குரியதுதான். அதை ஒளி பரப்பும் முறைகள் சரியான வகையில் இல்லை. போட்டியில் தோற்றுப் போகும் குழந்தைகளின் அழுகையை க்ளோசப்பில் காட்டுவது, அப்போது  அவர்களின் பெற்றோர் படும் பதட்டத்தை ஸ்லோ மோஷனில் காட்டுவது, இதில் ஜெயித்தால் மட்டுமே வாழ்க்கை என்பதுபோல பிள்ளைகளை தீவிரப்படுத்துவது இவையெல்லாம் தவிர்க்கப்பட வேண்டும். அதுபோல பரிசுத் தொகையும் அவர்களுக்கான ஸ்காலர்ஷிப்பாகவோ, ஹாலிடே டூர்  புரோகிராமாகவோ, இசை சம்பந்தப்பட்டதாகவோ இருந்தால் வளர்ச்சிக்கு உதவும்'' என்கிறார் தெளிவாக.

இளம் வயதிலேயே திறமையால் அசத்திய சாதனைத் திலகங்களை சரியான  வழியில் அழைத்துச் செல்ல வேண்டிய கடமை பெற் றோருக்கும் ஊடகங்களுக்கும் இருக்கிறது. சக மனிதர்களான நமக்கும்தான்.           

நன்றி நக்கீரன் -லெனின்
ஜெ.டி.ஆர்., மனோ 


http://metromasti.info/aimg,300,2012/09/05/gossip_image/6182-Airtel-Super-singer-jr-3-Unplugged-Round-Pragathi-performance.jpg

3 comments:

Suresh V Raghav said...

All fine. But whats the reason for announcing the result at 1:30 AM in teh television while teh actual show was completed at 12:00.
If this is the case, only people who would be in the auditorium would have voted for enabling the winner to get more votes...
So from next time, we would see few lorry outside the auditorium with good biriyani smell.

Suren said...

நான் இது வரை இந்நிகழ்ச்சியை மிக குறைவாகவே பார்த்த தமிழன். முகம் சுளிக்க வைப்பவை:
1. சின்ன குழந்தைகளை காம ரசம் வழியும் பாடல்களை பாட வைப்பது. ஒரு நடுவர் - இன்னும் Feel வேணும் என்று ஒரு முறை சொன்னார் !
2. சின்ன பெண் குழந்தைகளுக்கு உடுத்த படுகிற ஆடைகள்

நான் கார்த்திகேயன்/naaan.karthikeyan said...

வின்னர நாம போடுர வோட்டு தான் தீர்மானிக்குதுனா அப்போ ஜட்ஜ்ங்க எதுக்கு,,,
இனியாவது விஜய் டீவி திருந்தனும்
இல்லனா வர சீசன்லயாவது ஜட்ஜ்ங்கள போடாம எல்லா ரவுண்ட்ஸ் முடிவையும் மக்கள் கிட்ட விடனும்
மக்களுக்கு தெரியாத மியுசிக்கா