Wednesday, November 28, 2012

புன்னகை - உலக இலக்கியம் - சிறுகதை - தமிழில் சுரா


         இரவு முழுவதும் தூங்காமல் இருக்க வேண்டுமென்று அவன் தீர்மானித்தான். "ஒஃபீலியாவின் நிலைமை மிகவும் மோசம்' என்று மட்டுமே தந்திச் செய்தியில் இருந்தது.

அந்தச் சூழ்நிலையில் புகைவண்டியின் அறைக்குள் படுத்து உறங்குவது என்பது நல்ல ஒரு விஷயமாகஇருக்காது என்று அவன் நினைத்தான். அதனால் மிகவும் களைப்பாக இருந்தா லும், இரவில் ஃப்ரான்ஸைச் சுற்றி வந்து கொண்டிருக்க, அவன் அந்த முதல் வகுப்பு பெட்டியில் வெறுமனே உட்கார்ந்தி ருந்தான்.

ஒஃபீலியாவின் அருகில்தான் அவன் இருந்திருக்க வேண்டும். ஆனால், அவளுக்கு அவன் தேவைப்படவில்லை. அதனால் இங்கு இந்த புகைவண்டியின் அறைக்குள் இருக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகிவிட்டது.

மனதிற்குள் ஒரு கடுமையான சுமையை அவன் உணர்ந்தான். ஒரு "ட்யூம'ரைப் போல ஒன்று... அமைதியாக இருப்பதுதான் அதற்குச் சரியான மருந்து. அப்போது அவன் கௌரவமாகவே வாழ்க்கையைப் பார்த்துக்கொண்டிருந்தான். மிகவும் அழகாக சவரம் செய்யப்பட்ட அந்த முகத்தில் அருமையான, அடர்த்தியான புருவங்கள் இருந்திருந் தால், சிலுவையில் அறையப்பட்ட ஏசுவின் சாயல் தெரிந்திருக்கும்.

இரவு வேளையில் அந்த புகைவண்டி நரகத்தைப் போல இருந்தது. எதுவுமே இயல்பாக இல்லை. மிகவும் அருகிலிருந்த இரண்டு ஆங்கிலேயர்கள் எப்போதோ இறந்துவிட்டிருந்தனர். ஒரு வேளை- அவனுக்கு முன்பே கூட அது நடந்திருக்கலாம்.

அவன் தனக்குள் தானே மரணமடைந்து கொண்டிருந் தான் அல்லவா?

முன்னாலிருந்த மலைகளின் பகுதிகளுக்கு நடுவில் வெண்மை நிறத்தில் புலர்காலைப் பொழுது முகத்தைக் காட்டிக் கொண்டிருந்தது. அவனுடைய மனதில் ஒரு கவிதையின் வரிகள் தோன்றின.

"கவலையின் சாயலுடன் புலர்காலைப் பொழுது வர முதல் சாரல் மழைக் குளிர்!

அவளின் சாந்த கண்கள் அடைகின்றன...

அதில் அவள் காணும் புலர்காலைப் பொழுது வேறு!'

அவன் அனுபவித்த புறக்கணிப்பின் எந்தவொரு அடையாளமும் வெளியே தெரியவில்லை.

அவனுக்குள் முனிவரின் சஞ்சலமற்ற துன்பம் தெளிவாகத் தெரிந்தது.

அவன் இத்தாலியில் இருந்தான். அவனுக்கு அந்த நாட்டின்மீது ஈடுபாடு எதுவும் உண்டானதேயில்லை. ஒரு வகையான கவித்துவ உணர்வுடன் அவன் கடல், ஆலிவ் மரங்கள் ஆகியவற்றைப் பார்த்தான். தான் வேறு உணர்ச்சிகளுக்கு அடிமையாகி விடுவாமோ என்று அவன் நினைத்தான்.

ஒஃபீலியா பிரார்த்தனைக்காக தங்கிய நீல சகோதரிகளின் இல்லத்தை அவன் அடைந்தபோது, மீண்டும் இரவாகிவிட்டிருந்தது. அவன் மதர் சுப்பீரியருக்கு முன்னால் அழைத்துச் செல்லப்பட் டான். அவனுடைய நாசியையே பார்த்தவாறு நடந்து வந்த அந்த இல்லத்தின் தலைவி எதுவும் பேசாமல் அமைதியாக வணங்கினாள். தொடர்ந்து அவள்  ஃப்ரெஞ்ச் மொழியில் கூறினாள்:

""கூறுவதற்கு வருத்தமாக இருக்கிறது. ஆனால், இன்று மதியம் அவள் மரணத்தைத் தழுவி விட்டாள்.''

அவன் அதிர்ச்சியடைந்தாலும், எந்தவித உணர்ச்சி யையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. அவன் இருட்டையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்த இல்லத்தின் தலைவி தன்னுடைய வெண்மை யான, மென்மையான கரத்தை அவனுடைய கையில் அழுத்தியவாறு அவன் முகத்தையே உற்றுப் பார்த்தாள்.

""தைரியமாக இருக்க வேண்டும்.'' அந்தப் பெண் சொன்னாள்.

அவன் பின்னோக்கி நகர்ந்து நின்றான். ஒரு பெண் தன் அருகில் வந்து நிற்கும்போது, அவன் பயப் பட்டான். நல்ல ஆடைகளை அணிந்து நின்றிருந்த அந்தப் பெண்ணிடம் அளவற்ற பெண்மைத்தனம் வெளிப்பட்டது.

""சரி... நான் அவளைச் சற்று பார்க்கலாமா?''

அவன் மெதுவான குரலில் ஆங்கிலத்தில் கேட்டான்.

அந்த இல்லத்தின் தலைவி மணியை அடித்தாள். ஒரு இளம் பெண் துறவி அங்கு வந்து நின்றாள்.
அவளுடைய மூடுபனியைப் போன்ற நிர்மலமான கண்களில் குறும்புத்தனமான ஏதோ ஒன்று மறைந் திருப்பதைப்போல தோன்றியது. அவள் மிகவும் வெளிறிப் போய் காணப்பட்டாள். அந்த இல்லத்தின் தலைவியின் வார்த்தைகளைக் கேட்டு, அவள் வணங்கினாள். இறுதி ஆறுதல் என்பதைப் போல அவன் அவளுக்கு நேராகத் தன் கையை நீட்டினான். அந்த இளம் கன்யாஸத்ரீ வெட்கத்துடன் தன்னுடைய இளம் தளிரைப் போன்ற கையை அவனுடைய கையில் வைத்தாள்- தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு கிளியைப்போல.

அளந்து பார்க்க முடியாத அந்த அமைதியின் ஆழத்திலும் அவன் சிந்தித்தான்.

"என்ன மென்மையான கை!'

குளிர்ச்சியான இடைவெளி வழியாக நடந்து அவள் ஒரு கதவைத் தட்டினாள். நடந்தபோது அவளுடைய பாவாடையின் அசையும் ஓசைகளை மட்டுமே அவன் கேட்டுக் கொண்டிருந்தான்.

கதவ திறக்கப்பட்டது. உயரமாக இருந்த அந்த அறையில் போடப்பட்டிருந்த ஒரு கட்டிலைச் சுற்றி ஏராளமான மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டி ருந்தன. அவன் மிகவும் அமைதியாக நின்றிருந்தான். கறுத்த, பழமையான முகத்தைக் கொண்ட ஒரு கன்யாஸ்த்ரீ மெழுகுவர்த்திக்கு அருகில் குனிந்து உட்கார்ந்திருந்தாள். அந்த கன்யாஸ்த்ரீ அழகான தோற்றத்தைக் கொண்டிருந்தாள். மார்பில் இணைத்து வைத்திருந்த வெண்மையான கைகளுக்கு மத்தியில் ஜெபமாலை தொங்கிக் கொண்டிருப்பதை அவன் பார்த்தான். அவளுக்குப் பின்னால் இருந்த கதவின் வழியாக அந்த இல்லத்தின் தலைவி உள்ளே வந்தாள். இப்போது- மூன்று கன்யாஸ்த்ரீகளுக்கு நடுவில் அவன். மதர் சுப்பீரியர் கவலையுடன் பிணத்தை மூடியிருந்த துணியை உயர்த்தி, முகத்தைப் பார்க்க அனுமதித்தாள்.

மரணமடைந்து, எந்தவித அசைவுமில்லாமல் கிடந்த தன் மனைவியை அவன் பார்த்தான். தன்னுடைய மனதிற்குள் ஒரு சிரிப்பு வெடிப்பதைப் போல அவனுக்குத் தோன்றியது. அவனுடைய முகத்தில் ஒரு வினோதமான புன்னகை வெளிப்பட்டது.

மூன்று கன்யாஸ்த்ரீகள், மெழுகுவர்த்தி வெளிச் சத்தில் ஒரு கிறிஸ்துமஸ் பூ மரத்தைப்போல தோன்றி னார்கள். அவனுடைய மென்மையான, பரிதாபமான உணர்ச்சிகளை அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார் கள். அந்த ஆறு கண்களும் பதைபதைப்புடன் இருந்தன. அந்த பதைபதைப்பு, பின்னர் கவலைக்கு இடம் தந்தது. அந்த மெழுகுவர்த்தி வெளிச்சத்தில், அந்த மூன்று கன்யாஸ்த்ரீகளையும் பார்த்தபோது, அவனுடைய முகத்தில் ஒரு புன்னகை உண்டானது. தொடர்ந்து அது நிரந்தரமானதாக ஆனது. அந்த மூன்று பெண்களின் முகங்களுக்கும் அந்த புன்னகை பரிமாறப்பட்டது- மூன்று மலர்கள் ஆழமாக விரிவதைப் போல. அந்த வெளிறிய இளம் பெண் துறவியிடம் புன்னகை, வேதனை நிறைந்த தாகவும் குறும்புத்தனத்தின் மென்மை கலந்ததாகவும் வெளிப்பட்டது. கறுத்த கன்யாஸ்த்ரீயின் முகத்தில் பக்தி நிறைந்திருந்தது. பக்குவப்பட்ட ஒரு பெண்ணின் நெற்றியாக அவளுடைய நெற்றி இருந்தது.

மதர் சுப்பீரியரின் இயல்பு குணம் அவனுடைய குணத்தைப் போலவே இருந்தது. அவள் சற்று புன்னகைக்க வலிய முயற்சித்தான். இளம் பெண் துறவிக்கு திடீரென்று அழ வேண்டும்போல தோன்றியது. இல்லத்தின் தலைவி அவளுடைய தோளில் தன் கையை வைத்து ஆறுதல் சொன்னாள். கறுத்த பெண் துறவியோ  மன சஞ்சலமடைந்து ஜெபமணியைப் பிடித்துக் கொண்டும், மறைமுகப் புன்னகையை நிறுத்தாமலும் இருந்தாள்.

அவன் தன் மனைவியின் பிணத்தையே பார்த்தான். மரணமடைந்த தன் மனைவி தன்னைப் பார்க்கிறாளா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதைப்போல. அவனுக்கு பயமும் இருந்தது.

அழகாகவும், இதயத்தைத் தொடக்கூடிய விதத்தி லும், மரணமடைந்த தன்னுடைய சிறிய நாசியை வெளியே நீட்டிக்கொண்டு, ஒரு குழந்தையின் பார்வையுடன் அவள் படுத்திருந்தாள். அவனுடைய புன்னகை மறைந்தது. அவன் ஒரு சாட்சியைப் போல பார்த்தான். அவன் அழவில்லை. அர்த்தமே இல்லாமல் வெறித்துப் பார்த்தான். அவ்வளவுதான்... தனக்காக இப்படியொரு தியாகம் உண்டாகும் என்று தனக்கு முன்கூட்டியே தெரியும் என்று அவன்  நினைத்தான்.

அவள் அந்த அளவிற்கு சோதனை முயற்சிகள் செய்யக் கூடியவளாகவும், அறிவாளியாகவும், குழந்தையைப் போன்றவளாகவும்,  கறாரான குணம் கொண்டவளாகவும் இருந்தாள். அவளுடைய மரணமும் அதே மாதிரி ஆகிவிட்டது. திடீரென்று அவனுக்கு மிகப் பெரிய வெற்றிடம் உண்டாகி விட்டதைப்போல இருந்தது.

அவர்களுக்கு திருமணம் நடைபெற்று பத்து வருடங்கள் கடந்துவிட்டிருந்தன. அவன் எந்தச் சமயத்திலும் முழுமையான சந்தோஷம் நிறைந்தவனாக இருந்ததில்லை- எந்தவொரு காரணத்தைக் கொண்டும். அவனுடைய மனைவி எப்போதும் தன் விருப்பப்படி செயல்படக் கூடியவளாக இருந்தாள். ஒஃபீலியா அவன்மீது அன்பு வைத்திருந்தாள். கண்டிப்பு நிறைந்தவளாக ஆனபோது, அவள் அவனை ஒதுக்கிவிட்டாள். அவள் கோப குணம் கொண்டவளாகவும் அலட்சிய குணம் கொண்டவளாக வும் மாறினாள். ஆறு முறை அவள் அவனைத் தேடி திரும்பி வந்தாள். அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. குழந்தைகள் வேண்டும் என்பது அவனுடைய விருப்பமாக இருந்தது. குழந்தைகள் இல்லாமல் போனதற்காக அவன் கவலைப்பட்டான்.

இனி அவள் அவனைத் தேடி எந்தச் சமயத்திலும் திரும்பி வரப்போவதில்லை. இந்த முறை அவள் போனது- இறுதியான போக்கு. ஒரேயடியாகப் போய்விட்டாள்.

அவள் யார்?

அவன் அந்த மூன்று பெண்களின்மீதும் தன்னுடைய பார்வையைத் திருப்பினான். அவன் சிரித்தான்.

அவன் வெளியே வர முயற்சித்தான். அந்தப் புன்னகை தன்னுடைய உதட்டிலிருந்து மறையவில்லை என்பதை அப்போதும் அவன் கவனித்தான்.

""பாவம்...'' இரக்கத்துடன் அந்த இல்லத்தின் தலைவி சொன்னாள்.

""பாவம் ஒஃபீலியா... அவளுக்கு இவை அனைத்தும் தெரியும்.''

அவர்கள் மூவரும் மரணமடைந்த பெண்ணுக்காக பிரார்த்தனை செய்தார்கள். மெழுகுவர்த்திகளை கீழே அழுத்தி அணைத்தார்கள். கறுத்த பெண் துறவி தன்னு டைய புனித நூலுடன் மீண்டும் அமர்ந்தாள். மற்ற இரண்டு பெண்களும் இடைவெளியில் நடந்தார்கள். அன்னப் பறவைகள்நதியில் நீந்துவதைப் போல அவர்கள் அமைதியாக நடந்து சென்றார்கள். தனியாக முன்னால் நடந்து சென்று கொண்டிருக்கும் அந்த மனிதனை அவர்கள் பார்த்தார்கள். அவர்கள் வேகமாக நடந்தார்கள்.

""மன்னித்து விடுங்கள், மதிப்பிற்குரிய பெண்களே! நான் என்னுடைய தொப்பியை எங்கோ மறந்து வைத்துவிட்டேன்.'' அவன் சொன்னான்.

எதையோ தேடுவதைப்போல அவன் பதைபதைப்பு டன் தன் கைகளை முன்னால் நீட்டி அசைத்தான். இப்போது அவனுடைய முகத்தில் புன்னகை இல்லை. கடுமையான விரக்தி மட்டும்...

0 comments: