Thursday, November 22, 2012

சி எம் ஆக இருந்தபோது எம் ஜி ஆருக்கு என்னால் ஏற்பட்ட சிக்கல் - முக்தா வி சீனிவாசன் பேட்டி

எப்படி இருக்கீங்க?... குட்டுப்பட்டுதான் திருந்த வேண்டும்! - முக்தா சீனிவாசன்


எண்பத்தோரு ஆண்டு கால தமிழ் சினிமா வரலாற்றில் படத்துறையில் பழுத்த அனுபவம் பெற்ற இயக்குநர் முக்தா வி.சீனிவாசன். எண்பத்து மூன்று வயது நிரம்பிய அவரது அனுபவச் சிதறல்கள்............நீங்கள் திரைப்பட உலகில் நுழைந்த ஆரம்பகால அனுபவங்களைப்பற்றி சொல்லுங்களேன்?
தஞ்சை மாவட்டத்திலுள்ள பாபநாசம்தான் எங்கள் சொந்த ஊர். சிறு வயதில் நான் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்து இரண்டு ஆண்டுகள் அந்தக் கட்சிக்காக பணியாற்றினேன். கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டபோது சேலம் அனெக்ஸ் சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட கம்யூனிஸ்ட்டுகளில் நானும் இருந்தேன். சிறைச்சாலையில் கம்யூனிஸ்ட்களுக்கும் சிறைக்காவலர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் பதினோரு கம்யூனிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒரு மரத்துக்குப் பின்னால் மறைந்து கொண்டதால் நான் உயிர் தப்பினேன். அந்த சமயத்தில் மாடர்ன் தியேட்டர்ஸில் எனது அண்ணன் ராமசாமி டைப்பிஸ்ட்டாகப் பணியாற்றி வந்தார். எனது நிலையைப் பார்த்த என் அண்ணன் தன் முதலாளி டி.ஆர்.சுந்தரத்திடம் எங்கள் குடும்ப நிலையைச் சொல்லி என்னை விடுவிக்க ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொண்டார். 
டி.ஆர்.சுந்தரம் தன் நண்பரான மாவட்ட காவல்துறை கண்கணிப்பாளர் உதவியுடன் என்னை சிறையிலிருந்து மீட்க வந்தார். என்னை விடுவிக்க நிபந்தனை ஒன்றை விதித்தார் சிறை அதிகாரி. "இனி நான் கம்யூனிஸ்ட் இயக்கங்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ள மாட்டேன்' என்று எழுதி கையெழுத்திட்டுத் தர வற்புறுத்தினார் அந்த அதிகாரி.இதற்கு நான் மறுக்கவே டி.ஆர்.சுந்தரம் என் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். "கஷ்டப்படுகிற பிரமணப் பையன் நீ....ஒழுங்கா இருந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டாமா?' என்று கோபத்துடன் என்னை திட்டிக்கொண்டே கையெழுத்து போட வைத்து, தன்னுடன் மாடர்ன் தியேட்டர்ஸ் அழைத்துச் சென்றார்.1947ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10ம் தேதி நான் மாடர்ன் தியேட்டர்ஸில் உதவி இயக்குனராகச் சேர்ந்து பணியாற்ற ஆரம்பித்தேன். "ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி', "ஆதித்தன் கனவு', "மாயாவதி', "பொன்முடி', "திகம்பர சாமியார்' போன்ற பல படங்களுக்கு தொடர்ந்து உதவி இயக்குனராகப் பணியாற்றினேன். இந்த கால கட்டத்தில் டி.ஆர்.சுந்தரம் "சண்டமாருதம்' என்ற மாதமிருமுறை பத்திரிகையையும் நடத்தி வந்தார். இந்தப் பத்திரிகையிலும் உதவி ஆசிரியர் பொறுப்பில் இருந்து பல்வேறு பணிகளையும் செய்து வந்தேன். "சண்டமாருதம்' பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பில் இருந்த சண்முக சுந்தர நயினார் என்பவர் முதுமை காரணமாக ஓய்வு பெறவே அவரது இடத்துக்கு முத்தையா என்ற வாலிபர், மாதம் எழுபத்தைந்து ரூபாய் சம்பளத்தில் பணியமர்த்தப்பட்டார்.நானும் என் அண்ணனும் தங்கியிருந்த அறையிலேயே முத்தையாவும் தங்க அனுமதிக்கப்பட்டார். பிற்காலத்தில் கண்ணதாசன் என்று பிரபலமடைந்த கவிஞர்தான் அன்று எங்கள் அறையில் தங்கியிருந்த முத்தையா.டி.ஆர்.சுந்தரம் கண்டிப்புக்கு பேர் போன கறார் ஆசாமி. கருணையே அவருக்குக் கிடையாது. பிரியம் என்றால் என்ன என்பதே அவருக்குத் தெரியாதா என்றே நினைக்கத் தோன்றும். யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பணி நீக்கம் செய்து விடுவார்.மாடர்ன் தியேட்டர்ஸ் சார்பில் பொம்மன் டி. இரானி என்ற இயக்குனரை பணிக்கு அமர்த்தி அவரது இயக்கத்தில் ஒரு படமெடுக்க திட்டமிடப்பட்டது. அவருக்கு உதவி இயக்குனராக என்னை நியமித்தார்கள். பொம்மன் டி.இரானி எடுத்த படம் பிடிக்காததால் அவரை வேலை நீக்கம் செய்தார் டி.ஆர்.சுந்தரம். அத்தோடு அவரது உதவி இயக்குனராகப் பணியாற்றிய என்னையும் காரணமே இல்லாமல் பணி நீக்கம் செய்து விட்டார். மாடர்ன் தியேட்டர்ஸிலிருந்து விலக்கப்பட்ட நான் கோயமுத்தூர் சென்றேன். அப்போது கோவையிலிருந்த சென்ட்ரல் ஸ்டுடியோவை ஜூபிடர் பிக்சர்ஸ்காரர்கள் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார்கள். நான் அங்கு சென்ற நேரத்தில் ஜூபிடர் பிக்சர்சுக்காக வீணை எஸ்.பாலசந்தர் "கைதி' என்ற படத்தை இயக்கி வந்தார்.
 என்னை அவரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றும்படி சொன்னார்கள். "கைதி' படம் முடிந்ததும், "அழகி' என்ற படத்தை ஆரம்பித்தார்கள். சுந்தர்ராவ் நட்கர்னி இயக்கத்தில் உருவான் இந்தப் படத்திலும் நான் உதவி இயக்குனராகப் பணியாற்றினேன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோதே சென்ட்ரல் ஸ்டுடியோவின் குத்தகை காலம் முடிவடைந்து விடவே, மீதி படப்பிடிப்பை சென்னை அடையாறில் உள்ள நெப்ட்யூன் ஸ்டுடியோவில் நடத்தினோம். இதன் பிறகு நாங்கள் எல்லோரும் சென்னைவாசிகளானோம்.நீங்கள் தனித்து இயக்கிய முதல் பட அனுபவத்தைப் பற்றி சொல்லுங்களேன்?தொடர்ந்து பல்வேறு படக்கம்பெனிகளில் பல இயக்குனர்களிடம் பணியாற்றினேன். 1957ஆம் ஆண்டு எம்.ஏ.வி. பிக்சர்ஸ் அதிபர் வேணு இயக்குநராகும் வாய்ப்பை எனக்கு அளித்தார். அப்போதெல்லாம் படம் எடுக்க ஒரு ஆண்டு முதல் ஒன்றரை ஆண்டுகள்வரை ஆகும். ஆனால் நான் "முதலாளி' படத்தை நான்கு மாதங்களில் முடித்தேன். எஸ்.எஸ்.ராஜேந்திரன், தேவிகா, எம்,என்.ராஜம் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் இப்படத்தில் நடித்திருந்தனர். அப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் எல்லோருக்கும் நல்ல லாபம் கிடைத்தது. அது மட்டுமல்ல அந்த ஆண்டின் சிறந்த மாநில மொழிப்படத்துக்கான ஜனாதிபதி விருதும் அப்படத்துக்கு கிடைத்தது. தாங்கள் சொந்தமாகத் தயாரித்து இயக்கிய படங்களைப்பற்றி.......?1960ஆம் ஆண்டு முக்தா பிலிம்ஸ் என்ற என்னுடைய சொந்த சினிமா கம்பெனியை ஆரம்பித்தேன். "நாலு வேலி நிலம்', "தாமரைக்குளம்', "பொம்மலாட்டம்' "ஆயிரம் பொய்' என்று சுமார் நாற்பது படங்களை முக்தா பிலிம்ஸ் சார்பில் தயாரித்து இயக்கினேன். "சிவாஜி நடித்த "தவப்புதல்வன்' "அந்தமான் காதலி' ரஜினி நடித்த "பொல்லாதவன்', "சிவப்பு சூரியன்' கமல் நடித்த "அந்தரங்கம்', "சிம்லா ஸ்பெஷல்' போன்ற பல படங்கள் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கவை. முக்தா பிலிம்ஸ் வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனமாக திகழ எனது தமையனார் ராமசாமியும் முக்கிய காரணம். படத்தயாரிப்பு விநியோகம், பணம் கொடுக்கல் வாங்கல் போன்ற விவரங்களை அவர் கவனித்துக் கொள்ளவதென்றும் இயக்கம், கதை வசனம் போன்ற விஷயங்களை நான் பார்த்துக் கொள்வதென்றும் பணிகளைப் பகிர்ந்து கொண்டதால் எங்களால் வெற்றிகரமாக செயல்பட முடிந்தது.உங்கள் மகன் "முக்தா' சுந்தர் இயக்கும் படங்களில் உங்கள் பங்களிப்பு உண்டா?சுந்தர் அமெரிக்காவிலுள்ள திரைப்படக் கல்லூரியில் மூன்று ஆண்டுகள் திரைப்படக்கலையை முறைப்படி பயின்றவர். சீராகப் படமெடுக்கும் முறையை அவர் அங்கு கற்றிருந்தாலும் அவரால் இங்கு அப்படியே அவற்றை செயலாற்ற முடியவில்லை. தரமான ஒரு படத்தை எடுத்து வெற்றி பெறுவதற்கு பதிலாக நான்கு சண்டைக் காட்சிகள், ஒரு குத்துப் பாட்டு, கொஞ்சம் பாலுணர்வைத் தூண்டும் காட்சிகள் என்று மசாலா சமாச்சாரங்கள் தூக்கலாக உள்ள படங்களே வெற்றிப் படங்களாக இங்கு பேசப்படுகின்றன. அவர் இயக்குனராக அறிமுகமான "கோடை மழை' படம் பரவலாக பத்திரிகைகளின் பாராட்டுதல்களைப் பெற்றது. தொடர்ந்து பல படங்களை இயக்கிய அவர் தற்போது "பத்தாயிரம் கோடி' படத்தை இயக்கி வருகிறார். ஸ்க்ரிப்டை உருவாக்குவதற்கும், வியாபார விஷயங்களிலும் எனது கருத்தை கேட்கும்போது கூறுகிறேன் அவ்வளவுதான்.
தங்களின் திரையுலக வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம்....?
முப்பத்தோரு வருடங்களுக்குமுன் "சினிமா எக்ஸ்பிரஸ்' பத்திரிகையின் முதல் இதழ் வெளியீட்டு விழா எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் நடந்தது. அப்போது தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்.தான் முதல் இதழை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார். அந்த விழாவில் பேசிய நான் எம்.ஜி.ஆரைப் பார்த்து, "தூங்காதே தம்பி தூங்காதே....' "திருடாதே பாப்பா திருடாதே' என்று நல்ல நல்ல அறிவுரையெல்லாம் உங்கள் படத்தில் வழங்கினீர்கள், இனி யார் இதுபோல் அறிவுரை எங்களுக்கு வழங்குவார்கள்? என்று கேட்டேன். தான் பேசும்போது இதற்கு பதிலளித்த எம்.ஜி.ஆர்.,"இனி வருடத்துக்கு ஆறு மாதங்கள் நேரம் ஒதுக்கி சினிமாவில் நடிக்கப் போகிறேன் என்று பேசி விட்டார். விழாவுக்கு வந்திருந்த நாளிழ்களின் நிருபர்கள் ஏதிர்பாராமல் கிடைத்த பரபரப்பான செய்தியுடன் தங்கள் அலுலகங்களுக்கு விரைந்து சென்று எம்.ஜி,ஆரின் உரையை தலைப்புச் செய்தியாக்க ஆரம்பித்து விட்டனர். இதற்கிடையில் எம்.ஜி.ஆர்.பேசியது அபோது பிரதம மந்திரியாக இருந்த மொரார்ஜி தேசாயிடம் தெரிவிக்கப்பட, உடனை எம்.ஜி.ஆருக்கு போன் செய்து விட்டார் மொரார்ஜி தேசாய். ""நீங்கள் சினிமாவில் நடிக்க விரும்பினால் நம்பிக்கைக்குரிய ஒரு நபரை தேர்வு செய்து அவரிடம் முதல்வர் பொறுப்பைக் கொடுத்துவிட்டு நடிக்க ஆரம்பியுங்கள். நாங்கள் அவருக்கு முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் தருகிறோம். ஆனால் நீங்களே முதல்வர் பதவியில் இருந்துகொண்டே சினிமாவில் நடிக்க சட்டம் இடம் தராது' என்று கூறியிருக்கிறார். உடனே எம்.ஜி.ஆர். ஆர்.எம்.வீரப்பனை அழைத்து இந்தச் செய்தி பத்திரிகைகளில் வராமல் எப்படியாவது தடுத்து நிறுத்தி விடும்படி சொல்லி விட்டார். உடனடியாக ஆர்.எம்.வீரப்பனும் அனைத்து பத்திரிகை அலுவலகங்களையும் தொடர்பு கொண்டு, "சினிமா எக்ஸ்பிரஸ்' வெளியீட்டு விழாவில் எம்.ஜி.ஆர். நடிக்கப்போவதாக அறிவித்த செய்தியை மட்டும் போடவேண்டாம் என்று கேட்டுக் கொள்ள, அதன்படியே அனைத்து செய்தித்தாள்களிலும் இந்தப் பகுதி மட்டும் தவிர்க்கப்பட்டது. ஆனால் ஒரே ஒரு நாளேட்டில் மட்டும் இந்தச் செய்தி அச்சுக்குச் சென்று விட்டதால் அதை வெளியிடாமல் நிறுத்த முடியவில்லை. அப்போது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை எப்போதும் என்னால் மறக்க முடியாது.
இன்றைய இளைய தலைமுறை கலைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் அறிவுரை?
இந்த சினிமா உலகுக்கென்றே ஒரு குணம் உண்டு. எந்த அறிவுரையையும் யாரிடமிருந்தும் ஏற்றுக் கொள்ள விரும்பாத உலகம் இது. இந்தத் தொழில் பாடம் படிப்பது என்பதே நஷ்டத்திலிருந்துதான். மற்றவர்களை காப்பியடிப்பதிலும் சினிமா தொழிலில் மிக சாதாரணமாக நடைபெறும். ஒரு படம் ஒரு குறிப்பிட்ட பார்முலாவில் தயாராகி வெற்றி பெற்றால் அதே பாணியில் பல படங்கள் தயாராகத் தொடங்கிவிடும். ஆக இதன் தனித்தன்மை என்பது எப்போதாவதுதான் வெளிப்படும். யார் என்ன சொன்னாலும் கேட்காத சினிமா உலகம் அதுவாக குட்டுப்பட்டு குட்டுப் பட்டுதான் திருந்த வேண்டும்.தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் என்று பல பிரிவுகளைக் கொண்ட இந்த சினிமா உலகில் லாபம் கிடைத்தால் அதை அனைத்து தரப்பினரும் சரியாகப் பிரித்துக்கொண்டதைப்போல் நஷ்டம் வந்தால் அதையும் பகிர்ந்து கொண்டு தொடர்ந்து தொழில் செய்த காலம் ஒன்று இருந்தது. 
பின்னர் ஒவ்வொருவரும் தாங்கள் சார்ந்த அமைப்பையும், தங்கள் பொருளாதார பாதுகாப்பையும்தான் முக்கியமாகக் கருத ஆரம்பித்த காரணத்தால் லாபத்தையும் நஷ்டத்தையும் பகிர்ந்து கொண்ட நடைமுறையே போய்விட்டது. இதனால் இந்தத் தொழில் நாளுக்கு நாள் நலிவடைய ஆரம்பித்து விட்டது. இந்தப் போக்கு மாற்றப்பட்டால்தான் சினிமா உலகம் சீரடையும்.'' என்று சொல்லும் அனுபவஸ்தர் முக்தா சீனிவாசனின் ஆதங்கத்தை நம்மால் உணரமுடிகிறது.நன்றி - சினிமா எக்ஸ்பிரஸ்

0 comments: