Monday, November 19, 2012

பாட்டாளி மக்கள் கட்சி - சுய சரிதை - டாக்டர் ராம்தாஸ்

பாட்டாளி சொந்தங்களே!

மருத்துவர் . ராமதாஸ்

முதலில் நான் ஒரு விவசாயி, இரண்டாவதாக நான் ஒரு மருத்துவர், மூன்றாவதாக ஒரு சமூகப் போராளி, நான்காவதாக எந்த பதவிக்கும் போக விரும்பாத ஒரு அரசியல்வாதி" என்று தொடர்ந்து பதிலளித்து வருபவர் மருத்துவர் . ராமதாஸ்.
சென்னையில் இருந்துகொண்டு அரசியல் செய்துவரும் தலைவர்களுக்கு மத்தியில், கிராமத்திலேயே இருந்துகொண்டு தாம் பிறந்த மண்ணை நேசித்து, மண்ணின் வாசனையோடு மரம், செடி, கொடிகளை உருவாக்கி அவற்றோடு வாழ்ந்து கொண்டே ஒரு கட்சியின் தலைவராக வலம் வருபவர்.
நல்ல படிப்பாளி; சமூகப் போராளி; சமுதாயத்தின் அடித்தளத்தில் இருந்து உருவான இவர், தம் வாழ்க்கை அனுபவங்களை நம் வாசகர் மத்தியில் பகிர்ந்து கொள்கிறார்.
- ஆசிரியர்
நான் சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தபோது உறவினர்களிடம் கொஞ்சம் கடன் வாங்கி நுழைவுக் கட்டணம் கட்டி கல்லூரியில் சேர்ந்தேன். அதன்பிறகு எனது உறவினர்களும் அவ்வப்போது உதவி செய்துவந்தார்கள். இரண்டாண்டுகள் எப்படியோ மருத்துவப் படிப்புச் செலவைச் சமாளித்து விட்டேன். இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது என் படிப்பைத் தொடர முடியுமா என்ற அச்சத்தில் தவித்துக்கொண்டிருந்தேன். கல்லூரிக் கட்டணம் கட்டவில்லை என்பதற்காக, அறிவிப்புப் பலகையில் என் பெயரைக் குறிப்பிட்டு குறித்த தேதிக்குள் கட்ட வேண்டுமென்று எழுதிப் போட்டிருந்தார்கள்.

இந்த நிலையில் படிப்பைத் தொடர முடியுமா என்று தத்தளித்துக் கொண்டிருந்த நான், ஒருநாள் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நண்பரைக் காண ரயிலேறி விட்டேன். அவரைச் சந்தித்து என்னுடைய மனக்குமுறலையெல்லாம் கொட்டித் தீர்த்துவிட வேண்டுமென்ற எண்ணத்தில் தஞ்சைக்குப் புறப்பட்டுச் சென்றேன். அவர் தஞ்சை மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கிப் படித்து வந்தார். நானும் அவருடைய அறையில் இரண்டு நாள் தங்கினேன். இரண்டாவது நாள் என்னை விடுதி அறையில் இருக்கச் சொல்லிவிட்டு, கல்லூரிக்குச் சென்று விட்டார்.
நான் அப்பொழுது வெளியில் சென்று வரலாம் என்று மனம் போன திசையில் போய்க் கொண்டிருந்தபோது, காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. அப்பொழுது மிகவும் மனக்குழப்பத்தில் இருந்த நான், அந்த வெள்ளத்தில் வீழ்ந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்றுகூட முடிவெடுத்து விட்டேன். அப்பொழுது என் மனக்கண் முன்னால் என்னை ஆளாக்கிய என்னுடைய தாயும் தந்தையும் வந்ததால் அந்த முடிவிலிருந்து பின்வாங்கினேன்.
இதை என்னுடைய நண்பரிடம் சொல்லியபோது என் மனச்சுமை குறைந்ததாக உணர்ந்தேன். இதை என்னுடைய மைத்துனர், இராமச்சந்திரனுக்கு தந்தி மூலம் நண்பர் தெரிவித்துவிட்டார். என்னுடைய மைத்துனர், பணத்தோடு தஞ்சைக்கு வந்து என்னை மீண்டும் சென்னைக்கு அழைத்துச் சென்று என் படிப்பு தொடர வழிவகை செய்தார். உண்மையில் சொல்லப்போனால் நான் சென்னைக்கு படிக்கவந்தபோது தமிழாசிரியராக வரவேண்டும் என்ற எண்ணத்தில்தான் வந்தேன்.
ஆனால், மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்பு கிடைத்தது. இது எப்படி நிகழ்ந்தது என்பதை பின்னால் சொல்கிறேன். அதற்கு முன் என் கிராமமான கீழ்சிவிறிக்கு உங்களை அழைத்துச் செல்ல ஆசைப்படுகிறேன். ஒருங்கிணைந்த தென்ஆற்காடு மாவட்டம் திண்டிவனத்திலிருந்து 12 கி.மீ தொலைவிலுள்ள கீழ்சிவிறி. அங்கு 25.7.1939 அன்று சஞ்சீவிராய கவுண்டருக்கும் நவநீதம்மாளுக்கும் நான்காவது மகனாகப் பிறந்தேன். எனக்கு இரண்டு சகோதரிகள், மூன்று சகோதரர்கள். ஒரு சகோதரியும் இரண்டு சகோதரர்களும் இறந்து விட்டார்கள்.

கீழ்சிவிறி ஓர் அழகிய சிற்றூர். வெளி உலகத்தோடு எந்தத் தொடர்பும் இல்லாத, எந்தப் போக்குவரத்து வசதியும் இல்லாமல் இருந்த ஊர். வெளியூர்களுக்கு பண்டிகை, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்குப் போக வேண்டும் என்றாலும் கட்டை (மாட்டு) வண்டியில்தான் பயணம் செய்ய வேண்டும். எங்கள் ஊருக்கு அருகிலுள்ள திண்டிவனத்துக்குப் போக வேண்டும் என்றாலும் எல்லோரும் நடந்துதான் போக வேண்டும். சார்பதிவாளர் அலுவலகம் அங்கே இருந்ததாலே தேவை ஏற்படும் போது அதற்காக மட்டுமே நகரத்துக்குச் செல்வார்கள். பிரசவத்துக்கோ, வைத்தியத்துக்கோ என் ஊர் மக்கள் அங்குச் சென்றதாக எனக்கு நினைவில்லை.
நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும். எல்லா வகை தானியங்களும் விளைந்த ஊர் அது. அந்த ஊர் மாரியம்மன் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை கூழ் ஊற்றி மாரியம்மனுக்குத் திருவிழா செய்வார்கள். 18 நாள் பாரதம் சொல்லி திரௌபதியம்மன் கோயிலுக்கு 10 நாள் கூத்து நடத்தி இறுதியில் தீமிதி திருவிழா நடைபெறும். கூத்து பார்க்க ஒரு பாயைத் தூக்கிக் கொண்டு இடம்பிடிக்கச் செல்வேன். கட்டியங்காரன் வந்ததும் நீட்டிப் படுத்து விடுவேன். சில சமயம் அப்படியே தூங்கிப் போய், மறுநாள் காலை சூரியன் முகத்தில் பட்டதும் எழுந்திருப்பேன்.
ஊரிலுள்ள காமன்கோயில் மிகப் பிரசித்தமான கோயில். காமன் பண்டிகையைக் கூத்து நடத்தி விமரிசையாகக் கொண் டாடுவார்கள். என்னுடைய தந்தையாரும் மன்மதன் வேஷம் போட்டு மன்மதனாகப் பல ஆண்டுகள் நடித்து வந்தார்.

எனது கிராமத்தில் ஒரு ரெட்டியார் வீடும், இரண்டு நாயுடு வீடும், பிற்காலத்தில் ஒரு பிராமணர் வீடும், கூடை பின்னி விற்கின்ற வேட்டைக்காரர்கள் சிலர் வீடும், ஒரு குயவர் வீடும், நாவிதர் வீடும், ஒரு தச்சர், ஒரு கருமார் வீடும், இரண்டு பர்லாங்கு தொலைவில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் ஆதி திராவிடர் காலனியும் தனித்தனியாக இருந்து வந்தன. இங்கு வன்னியர்கள் 100க்கு 90 சதவிகிதம் பேர் வாழ்ந்து வருகின்றனர். கிட்டத்தட்ட எல்லோருமே உறவினர்கள் என்றுகூடச் சொல்லலாம். பல்வேறு சமூகங்கள் வாழ்ந்து வந்தாலும் அவரவர்கள் தங்கள் சமூகக் கடமையையும் பொறுப்பையும் உணர்ந்து நடந்து கொண்டதால் கிராமத்தில் நல்லிணக்கம் இருந்தது. ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளும் நல்ல பண்பு இருந்தது.
என்னுடைய தாத்தாக்கள் இருவரும் பெரிய வாத்தியார் எனவும், சின்ன வாத்தியார் எனவும் ஊர் மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டனர். அவர்கள் எங்கள் ஊரில் மட்டுமல்ல, எங்கள் ஊரைச் சுற்றியுள்ள 10 கிராமங்களுக்கும் நடுநிலை தவறாமல் பஞ்சாயத்து சொல்லுவார்கள்."

தொடரும் 

 நன்றி - கல்கி 

3 comments:

Seeni said...

mmmm....


thodarattum...

சிரிப்புசிங்காரம் said...

தமிழ் தமிழ்ன்னு சொல்லி ஆட்சிக்கு வந்து கோடி,கோடியா (17600000000000000 லக்ஷம் கோடியாப்பா..???) சம்பாதிச்சவனுங்க நடத்துற டி.வி யெல்லாம் பாக்க சகிக்கல (சகல இல்லப்பா சகிக்கல )ஆபாசமும்,அருவெறுப்பும் தலை விரிச்சு ஆடுது. ஆனா ராமதாஸ் நடத்துற மக்கள் டி.வி.தான் உண்மையிலேயே தமிழ் மக்களுக்கான் டி.வி

Ulaga Vanniyar Sakthiii said...

superrrrrrrrrrrrrrrrrr