Thursday, November 22, 2012

சித்தி படம், அவர்கள் படம் கம்போசிங்க் அனுபவங்கள் -எம்.எஸ்.விஸ்வநாதன்

மீட்டருக்கு மேட்டர்!

‘‘மேடையில் மெட்டமைத்தேன்!’’

எம்.எஸ்.விஸ்வநாதன்

ஒரு முறை சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டுவிழா மண்டபத்தில் கவிஞர் கண்ணதாசன் பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாட ஃபிலிமாலயா சினிமா பத்திரிகை ஏற்பாடு செய்திருந்தது. ஏராளமான ரசிகர்கள் விழா மண்டபத்தில் திரண்டு இருந்தார்கள். இயக்குனர் கே. பாலசந்தர் உள்ளிட்ட பல இயக்குனர்களும், எஸ்.பி.பால சுப்ரமணியம், பி.சுசிலா, எஸ். ஜானகி போன்ற முன்னணி பாடகர், பாடகிகளும் கலந்து கொண்டார்கள். விழாவுக்கு முன்பு என்னுடைய இசைக் கச்சேரி.
கச்சேரி தொடங்குவதற்கு முன்பு, இயக்குனர் பாலசந்தர் வித்தியாசமாக ஒரு காரியம் செய்தார். மைக் முன் வந்து, ‘விஸ்வநாதனும், கண்ணதாசனும் ரொம்ப பிஸியாக இருக்கிறார்கள். ஒரு பாடலை கவிஞரிடம் எழுத, அதற்கு எம்.எஸ்.வி.யிடம் இசையமைத்து வாங்க நான் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். முடியவில்லை. அவர்கள் சேர்ந்து இருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தை நான் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். இப்போது படத்தில் இடம் பெறுகிற பாடலுக்கான சிச்சுவேஷனை விளக்குகிறேன். அதற்கேற்ப விஸ்வநாதன் மெட்டு அமைக்க, கவிஞர் கண்ணதாசன் பாடல் எழுதிக் கொடுப்பார். அந்தப் பாடலையும், இந்த மேடையில் எம்.எஸ்.வி. பாடுவார்என்று ஒரு முன்னுரை கொடுத்தார்.
எனக்கும், கவிஞருக்கும் இன்ப அதிர்ச்சி. காரணம் பாலசந்தர் இப்படி ஒரு ஐடியாவோடு, அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார் என்பது எங்களுக்குத் தெரியாது. ‘இப்படி ஒரு அறிவிப்பைச் செய்து, நான் அவர்களுக்கு வேலை கொடுக்கப் போகிறேன் என்பது அவர்களுக்குத் தெரியாது. என் படத்துக்குப் பாடல் கிடைக்க வேண்டும் என்ற ஆர்வம் காரணமாகவே நான் இப்படி ஒரு அறிவிப்பை இங்கே செய்திருக்கிறேன். சுமார் ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரத்தில் இருவரும் சேர்ந்து பாடலை எனக்குத் தருவார்கள் என நம்புகிறேன்என்று அவர் ரசிகர்கள் மத்தியில் தெரிவித்தார்.

பாலசந்தரது சுயநலத்தில் ஒரு பொது நலமும் இருந்தது. அது என்ன? அரங்கத்தில் கூடியிருந்த நூற்றுக்கணக்கான ரசிகர்களுக்கு எப்படி ஒரு இசையமைப்பாளரும், கவிஞரும் ஒருங்கிணைந்து பணியாற்றி, ஒரு டைரக்டருக்குத் தேவையான பாடலை உருவாக்குகிறார்கள் என்பதை நேரடியாகக் காணும் வாய்ப்பு கிடைக்கிறதில்லையா? ரசிகர்கள் ஒரு புதிய நேரடியான அனுபவத்துக்குத் தயாரானார்கள் என்பதற்கு அடுத்த சில நிமிடங்கள் விடாமல் ஒலித்த ரசிகர்களது கைதட்டலே சாட்சி.
நான் என் ஹார்மோனியத்தின் முன்னால் அமர்ந்து தயாரானேன். பாலசந்தர் சொன்ன சிச்சுவேஷனுக்குரிய பாடல் வரிகளை யோசிக்கத் தொடங்கினார் கவிஞர். டியூன், வேறு டியூன், இன்னொரு டியூன் என்று நான் மாற்றி, மாற்றிப் போட்டுக் காட்டினேன். கவிஞரும் டியூனுக்கு ஏற்ப வார்த்தைகளைத் தேடித்தேடிப் போட்டு எழுதினார். ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தோடு மேடையில் நடந்ததை ரசித்தார்கள். இப்படியாக நூற்றுக்கணக்கான ரசிகர்களின் முன்னிலையில் ஒரு திரைப்படப் பாடல் உருவானது அதற்கு முன்பும் இல்லை; அதன் பிறகும் நடந்ததில்லை. பிறகு அந்தப் பாடலை எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்குச் சொல்லிக் கொடுக்க, அவர் மேடையில் அந்தப் பாடலைப் பாடிக் காட்டினார். ரசிகர்கள் அதனைக் கைதட்டி, ரசித்துப் பாராட்டினார்கள்.
மறுநாள் அந்தப் பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டு, அதனைத் தொடர்ந்து படம் பிடிக்கப்பட்டது. அது எந்தப் பாடல் தெரியுமா?
கமல்ஹாசன், ரஜினிகாந்த், சுஜாதா ஆகியோர் நடித்தஅவர்கள்படத்தில் இடம்பெற்ற
அங்கும் இங்கும் பாதை உண்டு இன்று நீ எந்தப் பக்கம்?
ஞாயிறுண்டு திங்களுண்டு எந்த நாள் உந்தன் நாளோ
- என்ற பாட்டுதான்!

இந்தப் பாட்டு உருவானபோது, இன்னும் சில மாதங்கள் கழித்து இது குறித்து ஒரு சர்ச்சை கிளம்பப் போகிறது என்று நானோ, கவிஞரோ துளியும் எதிர்பார்க்கவில்லை. அதாவது, இந்தச் சம்பவம் நடந்து சுமார் மூன்று மாதங்கள் ஆகி இருக்கும். புகழ்பெற்ற லயோலா கல்லூரியில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு என்னை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள். அதன் ஓர் அங்கமாகநேருக்கு நேர்நடைபெற்றது. மாணவர்கள் என்னிடம் பல கேள்விகளைக் கேட்டார்கள். நானும் அந்தக் கேள்விகளுக்குப் பதிலளித்துக் கொண்டே வந்தேன். திடீரென்று ஒரு மாணவர், ‘சார்! அன்னிக்கு யுனிவர்சிடி சென்டினரி ஹாலில் என்னமா ஆக்ட் பண்ணினீங்க! பிரமாதம் போங்க!’ என்றார். சட்டென்று எனக்கு ஒன்றும் புரியவில்லை.
என்ன தம்பி சொல்லறீங்க?’
மூணு மாசத்துக்கு முன்னால, யுனிவர்சிடி சென்டினரி ஹாலில் கண்ணதாசன் பிறந்த நாள் விழாவுல பாலசந்தர் சார் பாட்டுக்கு சிச்சுவேஷன் சொல்லறாராம்! நீங்க உடனே டியூன் போடறீங்களாம்! அதுக்கு கண்ணதாசன் ஆன் தி ஸ்பாட் பாட்டு எழுதறாராம்! அதை மேடையில எஸ்.பி.பி.பாடறாராம்! முன்னாலயே எல்லாத்தையும் ப்ளான் பண்ணிட்டு வந்து, என்னமா ஆக்ட் பண்ணினீங்க சார் எல்லாரும்!’

அப்புறம்தான் எனக்கு விஷயம் புரிந்தது. உண்மையாகவே ஆன் தி ஸ்பாட் நடந்த ஒரு விஷயத்தை இப்படியும் ஒரு செட் அப் என்று ஒரு சிலர் நினைக்கக்கூடும் என்று என் மண்டைக்கு உறைத்தது. அன்று உண்மையாகவே அது ஆன் தி ஸ்பாட் நடந்ததுதான் என்பதை நான் விளக்கிச் சொல்லியும் அந்த மாணவர் நம்பத் தயாராக இல்லை.
அடுத்து இன்னொரு குண்டை வீசினார். ‘இப்போ என்கிட்டேகூட ஒரு பாட்டு ரெடியா இருக்கு. எங்கே இதுக்கு டியூன் போட்டுக் காட்டுங்க பார்க்கலாம்.’
அந்த மாணவரிடமிருந்து அந்தப் பாடலை வாங்கிப் பார்த்தேன். பாடல் மாதிரியே இல்லாமல், ஏதோ வசனம் போல இருந்தது. அதையே காரணமாகச் சொல்லி, டியூன் போட மறுத்தால், அவர் சொன்ன செட்-அப் குற்றச்சாட்டு உண்மை தானோ என்ற சந்தேகம் எல்லா மாணவர்களுக்குமே வந்து விடுமே! உடனே என் அசிஸ்டன்ட் ஒருவரை அனுப்பி, என் காரிலிருந்த ஹார்மோனியத்தை எடுத்துக் கொண்டுவரச் சொன்னேன். அதில் அந்த மாணவரதுபாடல்வரிகளுக்கு டியூன் போட்டுக் காட்டினேன். மாணவர்களின் கைதட்டல் ஓய்வதற்கு வெகு நேரமானது.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய படம்சித்தி’. ஜெமினிகணேசன், பத்மினி, முத்துராமன், எம்.ஆர். ராதா ஆகியோர் நடித்த படம். அதில் ஒரு தாய் தன் பெண் குழந்தை தூங்கிக் கொண்டிருக்கும் போது பாடும் பாடல். ‘அந்தக் குழந்தை இப்போது எழுந்து விடக் கூடாது; நிம்மதியாகத் தூங்கட்டும்; தூக்கம் கலைந்து கண் விழித்துக் கொண்டுவிட்டால், அப்புறம் குழந்தையால் தூங்க முடியாதுஎன்று சிச்சுவேஷனைச் சொன்னார்.
நான் கவிஞரிடம், ‘நீங்க பாட்டை எழுதிக்குடுங்க! அதுக்கு நான் டியூன் போடறேன்என்று சொல்லிவிட்டு, கவிஞரின் வாயிலிருந்து வரப் போகும் வார்த்தை என்ன என்று ஆர்வத்தோடு காத்திருந்தேன்.
காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவறவிட்டால் தூக்கமில்லை மகளே!’
அடடா! என்ன வார்த்தைகள்! அப்படியே கவிஞரைக் கட்டி அணைத்துக் கொண்டேன்."

விஸ்வநாதனின் அப்பா சுப்ரமணியன், பொள்ளாச்சி அருகில் ஆனைமலையில் பொதுப்பணித்துறையில் வேலை பார்த்து வந்தார். சாதாரண வருமானம். சராசரி குடும்பம். ஒரு பிரச்னை காரணமாக, சுப்ரமணியன் பொதுப் பணித்துறை வேலையிலிருந்து விலகினார். அப்போது, விஸ்வநாதனின் தாய்வழி தாத்தா, திருச்சியில் ஜெயில் வார்டர். அவர் உதவியால், திருச்சி ஜெயிலில் சுப்ரமணியனுக்கும் வார்டர் வேலை கிடைத்தது. எனவே குடும்பம் திருச்சிக்கு இடம் பெயர்ந்தது. திருச்சியில் சுப்ரமணியனுக்கு திடீரென்று உடல்நலம் குன்றியது. சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அப்போது விஸ்நாதனுக்கு வயது நான்கு. அப்பா மரணத்தால் நிலை குலைந்த விஸ்வநாதன் குடும்பத்தில் அடுத்த 15 நாட்களுக்குள்ளே இன்னொரு சோகம் நடந்தது. விஸ்வநாதனின் தங்கை வேசம்மா, திடீரென்று இறந்து போனாள். விஸ்வநாதனின் இழப்பைப் புரிந்து கொள்ளாத ஊரார், ‘அப்பனையும், தங்கச்சியையும் அடுத்தடுத்து முழுங்கிவிட்டு நிற்கிற துக்கிரிப் பயல்என்று தூற்றினார்கள்.
- ராணி மைந்தன்

0 comments: