Thursday, November 22, 2012

பீனிக்ஸ் பறவை @ மும்பை. மக்கள் - சிறுகதை -ஆர். மீனலதா

பீனிக்ஸ் பறவை @ மும்பை. மக்கள்

கதை : ஆர். மீனலதா
ஓவியம் : ராமு

ஏம்மா ராதா, நீயுந்தான் கிட்டத் தட்ட இருபத்து இரண்டு வருஷமா ஆபீஸுக்குப் போய் அல்லாடறே? ஒரு ஃபர்ஸ்ட் க்ளாஸ் பாஸ் எடுத்துக்கிட்டு சௌகரியமா போகக் கூடாதா?" மாமியார் லக்ஷ்மி வாஞ்சையோடு கேட்டாள்.
அப்படியில்ல பாட்டி; அம்மாவுக்குத் தன்னோட ஃப்ரெண்ட்ஸ் கும்பலோடு செகண்ட் க்ளாஸ்ல பேய் கும்பல்ல போனாத்தான் சரிப்படும்" - மூத்தவன் ஆனந்த் சொல்ல, செல்லப் பெண் ரேகாவும், அன்புக் கணவன் சிவராஜனும் சேர்ந்து கலாட்டா பண்ணினார்கள்.
சரி! சரி! செகண்ட் க்ளாஸ் பாஸ் வர்ற இருபத்தைந்தாம் தேதியோட முடியுது. அப்புறம் ஃபர்ஸ்ட் க்ளாஸ் பாஸ் எடுத்துடறேன். ஆளாளுக்கு கலாட்டா பண்ண வேணாம்" முற்றுப் புள்ளி வைத்தாள் ராதா.
அன்றிரவு ராதாவுக்கு ஒரே யோசனை.
ஃபர்ஸ்ட் க்ளாஸ் பாஸ் எடுக்கறேன்னு சொல்லி விட்டாளே தவிர, தேவையா? ஃப்ரெண்ட்ஸோடு கலாய்த்துக் கொண்டும், ஸ்லோகம் சொல்லிக் கொண்டும் போவது போல வருமா? அநாவசியச் செலவு வேற!’
சிவராஜன் ஆரம்பம் முதலே ஃபர்ஸ்ட் க்ளாஸ் பயணிதான். என்ஜினீயரிங் முடித்து, ஆனந்த் இரண்டு மாதங்களாக வேலைக்கு செல்வது அலுவலகப் பேருந்தில். மும்பை லோக்கல் ட்ரெயின் நெரிசலுக்குப் பயந்து, கல்லூரிக்கு ரேகா செல்வதும் மாநகர பஸ்ஸில்தான்.
முன்பிருந்ததை விட குடும்ப நிலைமை இப்போது ஓரளவு ஓகேதான். சம்பளமும் கூட வருகிறது என்றாலும் யோசனையாக இருந்தது. சரி, எதற்கும் முதல்ல ஒரு மாதம் ஃபர்ஸ்ட் க்ளாஸ் பாஸ் எடுக்கலாம். போகப் போக பார்த்துக்கலாம். இல்லன்னா வீட்டுல இருக்கிறவங்க நச்சு தாங்காதுஃபர்ஸ்ட் க்ளாஸ் பாஸ் எடுப்பதென்று முடிவெடுத்தாள் ராதா.
என்னம்மா கண்ணு! இன்னிக்குத் தேதி 25. நினைவிருக்கில்லையா?" கிசுகிசுத்த சிவராஜனிடம்,
ம்...ம்" என்றாள்.

அலுவலக வேலை முடிந்து பாஸ் எடுக்க வருகையில், மைல் கணக்கில் க்யூ. மறுநாள் வாங்கிக் கொள்ளலாம் என்று எண்ணி வீடு திரும்பியவளிடம் லக்ஷ்மி கேட்டாள், பாஸ் வாங்கியாச்சா?"
இல்லம்மா, இன்னைக்கு க்யூ நிறைய. நாளைக்குக் காலையில கண்டிப்பா வாங்கிடறேன்" என்றவாறே பாத்ரூமுக்குள் நுழைந்தாள்.
மறுநாள் வீட்டினர் மீண்டும் நினைவுபடுத்த, ஞாபகமாக தமதுமுதல்முதல் வகுப்பு பாஸை வாங்கி கம்பீரமாக ஃபர்ஸ்ட் க்ளாஸில் ஏறினாள். கசகசவென இல்லாமல், சற்றே சௌகரியமாக நின்று கொண்டு போக முடிந்ததென்றாலும் செகண்ட் க்ளாஸ் ஃப்ரெண்ட்ஸ் கூட்டம் மிஸ் ஆனது வருத்தமாகத்தான் இருந்தது.
அலுவலகம் சென்றவுடன் முதல் வேலையாக, மாமியார் லக்ஷ்மி, கணவர் மற்றும் ஆனந்த், ரேகா எல்லோரிடமும் பாஸ் எடுத்த விவரத்தைத் தெரிவித்தாள்.
சாப்பாட்டு நேரத்தில், தமது நெருங்கிய அலுவலக நண்பிகளிடம் இதைப் பகிர்ந்து கொண்டாள். ஃபர்ஸ்ட், ஃபர்ஸ்ட் க்ளாஸ் பாஸாச்சே!
மாலை மூன்று மணியளவில், ராதா, சிவராஜனுக்கு ஃபோன் செய்து, தனக்கு பிரமோஷன் கிடைத்திருக்கும் செய்தியை சந்தோஷமாகச் சொன்னாள்.
கங்கிராட்ஸ்" என வாழ்த்தியவனிடம், நான் கொஞ்சம் சீக்கிரமாகக் கிளம்பலாம்னு இருக்கேன். முடிஞ்சா நீங்களும் வாங்களேன். தாதர் ஸ்டேஷனில் மீட் பண்ணி, இரண்டு பேரும் அந்தேரிக்குச் சேர்ந்தே போகலாம்" என்றாள்.
எனக்கு வேலை எக்கச்சக்கமாy இருக்கு. நாளைக்குச் சேர்ந்து போகலாம் ஓகே?" என்று ஃபோனை வைத்தான் சிவராஜன்.
சிவராஜனிடம் சீக்கிரம் வீடு திரும்புவதாகச் சொல்லிவிட்டாளே தவிர, முக்கியமான திடீர் மீட்டிங் காரணமாக, ராதாவால் கிளம்ப முடியவில்லை. திரும்பவும் சிவராஜனிடம் பேசவும் நேரமில்லை.
சிவராஜனுக்கு அன்றைக்கென்று பார்த்து, அலுவலகத்தில் நிறைய வேலை. ராதாவுடன் சேர்ந்து போக முடியவில்லை. என்ன செய்வது? ப்ரைவேட் கம்பெனியாச்சே. அவசர அவசரமாக வேலையை முடித்து சர்ச் கேட் ஸ்டேஷன் வருகையில் ஆறு மணியாகி விட்டது. இலேசாக வானம் இருட்டிக் கொண்டு வர ஆரம்பித்தது. கூட்டத்துக்கு நடுவே அடித்துப் பிடித்து சர்ச்கேட் - போரிவிலி ட்ரெயினில் ஏறினான். பிறகு தான் தெரிந்தது ஏதோ யோசனையில் ஃபர்ஸ்ட் க்ளாஸுக்கு அடுத்து இருந்த செகண்ட் க்ளாஸில் ஏறியது. ‘பரவாயில்லை. ஒருநாள் இதில் பயணம் செய்தால் குறைந்து போக மாட்டோம்என்று நினைத்துக் கொண்டான். மழை ஆரம்பமானது.
மெதுவாக சாந்தா க்ரூஸ் ஸ்டேஷனை நெருங்குகையில், ‘டமால்என்ற சத்தம். காதுகள் அடைத்துப் போயின. வண்டி நின்று போனது. ஒரே புகைமயம்.
பாம்! பாம்!" உடீமாரோ! ஜல்தி!" (பாம் வெடித்து விட்டது. கீழே குதியுங்கள், சீக்கிரம்) என்று கத்தல். பாம் வெடித்தது முதல் வகுப்புப் பெட்டியில். சிவராஜனும், தான் தினமும் வணங்கும் சாயிபாபாவை நினைத்துக் குதித்தான்.
நல்லவேளை ஃபர்ஸ்ட் க்ளாஸில் ஏறவில்லை. ராதா முதலிலேயே வீட்டுக்குப் போயிருப்பாள் என்ற சமாதானத்துடன் மற்றவர்களுடன் வேகமாக நடக்க ஆரம்பித்தான். வழியில் கண்ட அவலங்கள் நெஞ்சைப் பிழிந்தன. உடன் நடந்து வந்த பயணி ஒருவர் மயங்கி விழ, அவருக்கு உதவி செய்து, பிறகு வெளியே வந்து டாக்ஸி பிடித்து வீடு வருகையில் இரவு மணி ஒன்பது.
லக்ஷ்மி, ஆனந்த், ரேகா மூவரும் பேயறைந்த மாதிரி வாசலில் நின்று கொண்டிருந்தார்கள் . ராதா எங்கே?
ராதா! ராதா! வரலையா?" பதற்றத்துடன் உள்ளே சென்றான் சிவராஜன். சின்னத் திரையில், ‘தொடர் பாம் வெடித்ததினால் பயணிகள் அதுவும் முதல் வகுப்புப் பயணிகள் மரணம்; ரயில் பெட்டிகள் சேதம்என டீ.வி.யில் அவலக் காட்சிகள் ஓடிக் கொண்டிருந்தன. எல்லோரும் உறைந்து போனார்கள். ராதாவை தொடர்புகொள்ள முடிய வில்லை. ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் என வந்தது.

‘ஒருவேளை நாம வந்த லோகல் அல்லது அடுத்த லோகல் ஃபர்ஸ்ட் க்ளாஸில் வந்திருப்பாளோ? அநாவசியமாக ஃபர்ஸ்ட் க்ளாஸ் பாஸ் எடுக்கச் சொல்லி வற்புறுத்தினோமே என்று மனத்துக்குள்ளேயே மருகினார்கள். சிவராஜன்சாயிராம்என்றவாறே கண்களை மூடி அமர்ந்து விட்டான்.
நான் வேணா போய்ப் பார்க்கிறேன்" என்று கிளம்பிய ஆனந்தை நிறுத்தினாள் லக்ஷ்மி.
மழைல நீ போய்த் தனியா மாட்டிக்காதே" என்று சொல்கையில், கரண்ட் கட்டானது. யாரிடம் கேட்க, என்ன செய்வது என்று புரியாமல், தவிப்புடன் உட்கார்ந்திருந்தனர்.
இரவு 10.25 மணிக்கு கரண்ட் வர, ராதா இன்னும் வரலையா?" என்றவாறே எதிர் வீட்டு சீதாவும் ரவியும் வந்தனர்.
ஆனந்த்! நீயும் அங்கிளும் சேர்ந்து போய்ப் பாருங்க. இப்படி இடிஞ்சு போய் உட்கார்ந்திருந்தா எப்படி?" அதட்டினாள் சீதா.
யாருக்கும் வார்த்தைகளே வரவில்லை.
வாடா ஆனந்த்! நாம கிளம்பலாம். சீதா, லக்ஷ்மி மாமியைப் பார்த்துக்கோ. ரேகா, அப்பாவைக் கவனிச்சுக்கோ" கிடுகிடுவென உத்தரவிட்டார் ரவி.
ரவியும், ஆனந்தும் கிளம்பி நாலு அடி எடுத்து வைத்திருப்பார்கள். அப்போது ஸ்கூட்டர் ஒன்று வேகமாக வந்து நின்றது. ராதாவின் அலுவலக ப்யூன் வந்திறங்கினான்.
ராதா மேடம்" என்று அவன் கூறியவுடன் ராதாவுக்கு என்ன ஆச்சு?" என்று பதறினார்கள்.
கவலைப்படாதீங்க சார். மேடமுக்கு ஒண்ணும் ஆகலை. முக்கியமான மீட்டிங் திடீர்னு முடிய நேரமாயிடுச்சு. புறப்படறப்போ, பாம் நியூஸ் வரவே ரொம்பவே பதறிட்டாங்க. எல்லா ஸ்டாஃபும் இப்போ ஆஃபீஸ்ல இருந்து கிளம்பியாச்சு. உங்ககிட்ட விவரம் சொல்லச் சொல்லி என்னை அனுப்பினாங்க. மேடம் செல்ஃபோனில் சார்ஜ் இல்லையாம். வீட்டுக்கு ஃபோன் செய்தால்டெட்டோன் கேட்குதாம். ட்ராஃபிக் நிறைய இருந்ததால் நான் வருவதற்கும் நேரம் ஆகிவிட்டது. ஸாரி சார்!"
ஏதேதோ உணர்ச்சிகள் மோத மலைத்துப் போய் நின்ற சிவராஜனிடம், பயப்படாதீங்க ஸார், நாமெல்லாம் இங்க ஃபீனிக்ஸ் பறவைங்க மாதிரி. எப்படிப்பட்ட மோசமான சூழ்நிலையிலிருந்தும், உத்வேகத்துடன் மீண்டு விடுவோம்" என்று சொல்லி புறப்படத் தயாரானான்.
தாங்க்யூ! தாங்க்யூ வெரி மச்!" என்றவாறு கண்களில் கண்ணீர் அருவி போலக் கொட்ட, சிவராஜன் ஓடிச் சென்று, அவனை இறுக அணைத்துக் கொண்டான்.
உன் பேர் என்னப்பா?"
சாயிராம்!" என பதில் வந்தது.

 நன்றி - கல்கி 

0 comments: