Saturday, November 17, 2012

விகடனில் அதிக பட்ச மார்க் அள்ளிய 4 படங்கள் - ஒரு அலசல்

'என்னைப் பொறுத்தவரை...'

றுமையின் நிறம் சிவ'ப்பு - கே.பாலசந்தர், 'மௌன கீதங்கள்’ - கே.பாக்யராஜ், 'பாலைவனச் சோலை’ - ராபர்ட்-ராஜசேகரன், 'அலைகள் ஓய்வதில்லை’ - பாரதிராஜா - 'விகடனில் வெளியான சினிமா விமர்சனங்களில் அதிகபட்ச மதிப்பெண்கள் (ஏ-50-க்கு மேல்) பெற்ற படங்கள் இவை.
வாசகர்களின் சார்பாகப் பாராட்டுகளைத் தெரிவிக்க இந்த நான்கு படங்களின் டைரக்டர்களை விகடன் அலுவலகத்துக்குச் சிறப்பு விருந்தினர்களாக அழைத்தோம். அவர்களும் எங்கள் அழைப்பை ஏற்று அலுவலகம் வந்து கௌரவித்தார்கள்.''உங்கள் படம் வெற்றி பெறும் என்பதை முன்கூட்டியே நீங்கள் எதிர்பார்த்தீர்களா? என்னென்ன காரணங்களுக்காகப் படம் வெற்றி அடையும் என்று நினைத்தீர்கள்? எதிர்பார்த்த நல்ல அம்சங்கள் எல்லாம் பாராட்டப்பெற்ற னவா? பாராட்டப்படாத அம்சம் ஏதாவது உண்டா? வரப்போகும் உங்களுடைய படங் களுக்கு எந்த விதத்தில் இந்த வெற்றி பயன் தரப் போகிறது?'' என்று கேள்விகள் கேட்டு டைரக்டர் களின் கருத்துக்களை அறிய விகடன் விமர்சனக் குழு விரும்பியது.'என்னைப் பொறுத்தவரை என் படத்தைப் பற்றி நான் கூற விரும்புவது இதுதான்...’ என்று அந்த டைரக்டர்கள் மனம் திறந்து பேசினார் கள்.கே.பாலசந்தர் - 'வறுமையின் நிறம் சிவப்பு’

''வெற்றி பெறும் என்கிற நம்பிக்கையில்தான் எந்தப் படத்தையுமே ஆரம்பிக்கிறோம். அந்த நம்பிக்கை இல்லாவிட்டால் ஆரம்பிக்கப் போவதில்லையே. சில சமயங்களில் படப்பிடிப்பின் பாதி கட்டத்தில் நம்பிக்கை இழக்க நேரிடும். நினைத்த அளவுக்குச் சில இடங்கள் அமையாமல் போகலாம்.
'வறுமையின் நிறம் சிவப்பு’ படத்தைப் பொறுத்தவரை வறுமையை நகைச்சுவையோடு சொல்ல வேண்டும் என்றே தீர்மானித்திருந்தேன். 'இது ஒரு 'டிரை’ சப்ஜெக்ட்... க்ளிக் ஆகாது...’ என்று நண்பர்கள் பயமுறுத்தினார்கள். இருந்தாலும், எனக்கு நம்பிக்கை இருந்தது.வேலை இல்லாத் திண்டாட்டத்தை, பூதாகாரமான அந்தப் பிரச்னையை சுயவேலைவாய்ப்பு மூலம் ஓரளவுக்குத் தீர்க்க முடியும்  என்று படத்தில் நான் சொல்ல விரும்பினேன். ஆனால், அதை நான் பிரசாரம் செய்யவில்லை.பம்பாயில் இருந்து வரும் ஒரு பத்திரிகையில் நான் படித்த கட்டுரை ஒன்று இந்தப் படத்தை எடுக்க எனக்குத் தூண்டுகோலாக இருந்தது. மொபைல் பீடாக் கடை வைத்திருக்கும் ஒரு பட்டதாரியைப் பற்றிய கட்டுரை அது. 'சொந்தமாக வேலை செய்து நான் சந்தோஷமாக இருக்கிறேன்...’ என்று சொல்லியிருந்தார் அவர். சின்ன நூலிழைபோல் இதை வைத்துக்கொண்டு அதை மெருகேற்றுவதற்காகச் சில ஜிலுஜிலுப்புகளைச் சேர்த்தேன்.சாதாரணமாக, ட்ரீட்மென்ட்டின்போது பாதி திருப்தி கிடைக்கும். நடிகர், நடிகைகளின் பெர்ஃபார்மன்ஸ் மீதி திருப்தியைக் கொடுக்கும். கடைசியில், சினிமா துறையைச் சேர்ந்த சிலரே குழப்புவார்கள். சிறப்பாக எடுத்திருக்கிறோம் என்று நான் நினைப்பதை, நன்றாக இல்லை என்று யாராவது சொல்லிவிட்டால்போதும்,  இரண்டு நாட்களுக்கு எனக்குத் தூக்கமே வராது.வ.நி.சிவப்பில் ஒரு சின்ன கதையைத்தான் வைத்திருந்தேன். படம் முடிந்ததும் என் யூனிட்டைச் சேர்ந்தவர்களுக்குப் போட்டுக் காட்டினேன்... மறு நாள் ரீ ரிக்கார்டிங் ஆரம்பம். படத்தைப் பார்த்ததும் என் ஒருவனைத் தவிர வேறு யாருக்குமே நம்பிக்கை ஏற்படவில்லை. என்னை நேருக்கு நேர் சந்திப்பதையே தவிர்த்தார்கள். படத்தைப் பற்றி அபிப்பிராயம் கேட்டு அவர்களைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்த நானும் விரும்பவில்லை.'இரண்டு வாரம்தான் ஓடும்...’ என்றார் ஒருவர்.

'மூன்று வாரம்தான்...’ என்றார் இன்னொருவர்.

'ஒரு வாரம்தான்...’ என்று கெடு வைத்தார் மூன்றாமவர்.

ஆக, என் யூனிட்காரர்களின் கணிப்புப்படி அதிகபட்சம் மூன்று வாரங்கள்தான் இந்தப் படத்துக்கு லைஃப் கொடுத்தார்கள்.ஆனால், இந்தப் படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சக்கைப்போடு போட்டது. இதை இந்தியிலும் எடுக்கப்போகிறேன்.இந்தப் படத்தில் கமல் ஏற்ற கேரக்டர் எல்லோராலும் ரசிக்கப்பட வேண்டும் என்று நான் எதிர்பார்த்தேன். பாரதியாரின் அபிமானியாக அந்தப் பாத்திரத்தைச் சித்திரித்து இருந்தேன். கிட்டத்தட்ட பாரதியின் சின்னமாக அதை அமைத்து இருந்தேன். படம் பார்க்கிறவர்கள் அந்தப் பாத்திரத்தோடு ஐக்கியமாக வேண்டும் என்று விரும்பினேன். காந்தியை மறந்துவிட்ட மாதிரி பாரதியாரையும் மக்கள் மறந்துவிட்டு இருந்தால் கமலின் கேரக்டரே எடுபட்டு இருக்காது; படத்துக்கும் வெற்றி கிடைத்திருக்காது.தீவிரமான இந்த கேரக்டருக்காக, மற்ற இரண்டு கேரக்டர்களையும் கான்ட்ராஸ்ட்டாகவே அமைத்திருந்தேன்.கமலின் உத்வேகமும் ஆவேசமும் நான் படைத்திருந்த பாத்திரத்துக்கு உயிர் கொடுத்தன. குட்டி பாரதியாராகவே அவர் மாறிவிட்டார். நான் நினைத்த இந்த நல்ல அம்சம் மக்களிடையே வரவேற்கப்பட்டது.கமலும் ஸ்ரீதேவியும் கவிதையிலேயே பாடும் 'சிப்பி இருக்குது...’ பாடல் நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்த்தேன். அதே மாதிரி அந்தப் பாடல் எல்லோராலும் பாராட்டப்பட்டது.திரைக்கதை அமைக்கும்போது நான் எதிர்பார்த்து, ஆனால் முழுமை பெறாமல் போனது அந்த மூன்றாவது கேரக்டர்தான். எதிர்பார்த்த எஃபெக்ட்டைக் கொடுக்கவில்லை அது. ஒரு புது முகத்தை அந்தப் பாத்திரத்துக்குப் போட்டேன். என் எதிர்பார்ப்புக்கு அவரால் ஈடு கொடுக்க முடியவில்லை. கமலுக்குச் சரிசமமாக எடுபட்டிருக்க வேண்டிய பாத்திரம் அது. ஒருவேளை, அந்தப் புது முகத்தின் முழுத் திறமையையும் வெளிக்கொண்டு வர முடியாதது என்னுடைய பலவீனம்தானோ என்று நினைக்கிறேன்.க்ளைமாக்ஸ் இல்லாமல் ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்று எனக்கு ரொம்ப நாளாக ஆசை. ஆனால், ஒவ்வொரு படம் எடுக்கும்போதும் க்ளைமாக்ஸ் இல்லாமல் முடிக்கத் தைரியம் இருக்காது. ஏதோ ஒரு விதமான க்ளைமாக்ஸ் கொடுப்பேன். இந்தப் படத்தைத்தான் தைரியமாக க்ளை மாக்ஸ் இல்லாமல் முடித்தேன்.


 'தீர்த்தக் கரையினிலே’ பாடலுடன் படம் முடியும். இதை எந்த அளவுக்கு மக்கள் ஏற்றுக்கொள்வார்களோ என்று நான் பயந்தேன்.


க்ளைமாக்ஸ் என்ற பெயரால் வலுக்கட்டாயமாக மெலோ டிராமாவை நுழைத்தோ, போலித்தனமாகச் சில திருப்பங்களைக் கொடுத்தோதான் படத்தை முடிக்க வேண்டும் என்பது தேவையே இல்லை என்பதை இந்தப் படம் எனக்குத் தெளிவுபடுத்தியது!''கே.பாக்யராஜ் - 'மௌன கீதங்கள்’ ''மௌன கீதங்களைப் பொறுத்தவரை ட்ரீட்மென்ட்டிலேயே எனக்கு முழு நம்பிக்கை கிடைச்சுடுச்சு. படம் முழுக்கக் காமெடியை வெச்சா அதை நல்லா ரசிப்பாங்கன்னு எதிர்பார்த்து அது மாதிரியே செய்தேன். புருஷன் - பெண்டாட்டி சச்சரவு களை வீடுகளிலே நடப்பது மாதிரியே காட்டியிருந்தேன். 'நம்ம வீட்டிலேயும் இதே மாதிரிதான் நடக்குது’னு படம் பார்க்கற ஒவ்வொரு புருஷனும், ஒவ்வொரு பெண்டாட்டியும் நினைக்கணும். இரண்டு, மூன்று காட்சிகளிலாவது அது மாதிரி நினைச்சா எனக்கு சக்சஸ்னு முடிவு பண்ணிக்கிட்டேன்.
'வாராயோ தோழி’ பாட்டுடன் படத்தை முடிச்சுடலாம்னு ஆரம்பத்துல நினைச்சேன். அதுவரைக்கும் படத்தைப் போட்டுப் பார்த்தபோது கொஞ்சம் பயந்துட்டேன். 'பலமா மியூஸிக் வெச்சு ஒரு க்ளைமாக்ஸ் இல்லாம என்னய்யா படம் எடுத்திருக்கார்’னு சொல்வாங்களோனு ஒரு கன்ஃப்யூஷன். அந்த மாதிரி நினைக்கறவங்களுக்கு இருக்கட்டுமேனு கடைசி சீனைச் சேர்த்தேன்.பாலசந்தர் சார்கிட்ட படத்தைப் போட்டுக் காட்டி க்ளைமாக்ஸுக்காகத் திட்டு வாங்கினேன். 'கல்யாணம் வேணுமா?’னு அவர் கேட்டார். படத்தைப் பார்த்த பாரதிராஜா, 'கடைசி சீன் இல்லாட்டா மாஸ் அப்பீல் இருக்காதுனு பயந்துட்டியா?’னுட்டார். ஆனா, சரிதாவோட நடிப்பு கடைசி நேரத்துல எனக்குக் கை கொடுத்துச்சு. படம் பார்க்கறவங்களை அது எமோஷனலா தொட்டுடுச்சு.சாத்துக்குடி வாங்கிட்டு வர்ற காட்சியை நான் எதிர்பார்த்ததுக்கும் மேலயே ரசிச்சாங்க... 'எனக்கு இதெல்லாம் பிடிக்காது’னு அந்தப் பொண்ணு சொல்லியும், அம்மா அதைப் பிடுங்கிட்டுப் போறதைப் பிரமாதமா ரசிப்பாங்கன்னு நினைச்சேன்... அந்த அளவுக்கு அங்கே சிரிப்பு இல்ல.
மௌன கீதங்களோட வெற்றியால எனக்குப் புது 'தாட்’ எதுவும் வரல. ஆனா, மத்த இரண்டு படங்கள்ல நான் செஞ்ச தப்பிலேருந்து நான் நிறையத் தெரிஞ்சுக் கிட்டேன்... 'இன்று போய் நாளை வா’ படத்தில், கடைசியில் நான் வேண்டும் என்றே சேர்த்த கதை சரியா வரவேற்கப்படல... இன்னும் கொஞ்சம் 'வெயிட்’ கொடுத்து அதை நான் நல்லாவே அமைச்சிருக்கணும். அதுபோல 'விடியும்வரை காத்திரு’ படத்துல என்னுடைய வில்லன் கேரக்டர் ஜனங்களுக்குப் பிடிக்கல.
'இவன் எப்போதும் அப்பாவி ரோலையே பண்ணிக்கிட்டு இருக்கான்’னு சொல்றாங்களேனு 'விடியும்வரை காத்திரு’ படத்துல வித்தியாசமா பண்ண நினைச்சேன். ஆனா, படத்துக்கு கலெக்ஷன் கம்மி! 'மௌன கீதங்கள்’ல மனைவிக்காகக் கணவன் அஞ்சு வருஷம் காத்துக்கிட்டு இருக்கற மாதிரி காட்டிட்டு, அந்தப் படம் ஓடிக்கிட்டு இருக்கிறபோதே, 'விடியும்வரை காத்திரு’ படத்தில் கையில துப்பாக்கியை வெச்சுக் கிட்டு மனைவியைக் கொல்றதுக்காகவே எந்நேரமும் நான் அலைஞ்சுக்கிட்டு இருக் கிற மாதிரி காட்டினது ஜனங்களுக்குப் பிடிக்கல.அதனால அடுத்து வரப்போகும் படங்களில் கதையைத்தான் மாத்தணுமே தவிர, என் சுபாவத்தை மாத்திக்கிடத் தேவை இல்லேனு தெளிவாயிடுச்சு!''ராபர்ட் - ராஜசேகரன் - 'பாலைவனச் சோலை’
''கதைக்கான கரு கிடைத்தவுடனேயே எங்களுக்கு நம்பிக்கை வந்துவிட்டது.'பாலைவனச் சோலை’ எங்களுடைய முதல் படமாக இருந்ததால் முழு திரைக் கதையையும் எழுதி முடித்த பின்புதான் படப்பிடிப்பைத் தொடங்கினோம்.படத்தில் வரும் ஐந்து இளைஞர்களுடன் படம் பார்ப்பவர்களுக்கு ஒரு 'இன்வால்வ்மென்ட்’ நிச்சயமாகக் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். மற்றவர்களைப் போல நடித்துக் காட்டும் கேரக்டர் - அதை ஏற்று நடித்தவரின் திறமை காரணமாகவே - நன்றாகப் பாராட்டப்படும் என்று நினைத்தோம். அந்த நம்பிக்கையின் காரணமாகக் கடைசியில் மீண்டும் அதை 'ரிபீட்’ செய்தோம்.
அதே மாதிரி வாசுவின் தங்கையைப் பெண் பார்க்கும் காட்சியில், 'நான் உன்னைக் காதலிக்கல... சகோதரி மாதிரியே நடந்துக்க விரும்பறேன்’னு சுஹாசினி மறைமுகமா சொல்ற இடத்தை ரசிப்பாங்கன்னு எதிர்பார்த்தோம். ரசிச்சாங்க. வேலைக்காக நூறாவது அப்ளிகேஷனை போஸ்ட் செய்வதற்கு முன்னால் தபால் பெட்டிக்கு மாலை போடும் இடமும், 'வேலை இல்லாமல் திண்டாடுபவர்களின் கண்ணீர்தான் நமது நாட்டில் ஓடும் வற்றாத ஜீவநதி!’ என்ற வசனமும் ரசிகர்களின் கைதட்டல்களைப் பெறும் என்று திடமாக நம்பினோம். நம்பிக்கை வீண் போகவில்லை.
'ஆளானாலும் ஆளு...’ என்று ஐந்து பேர்களையும் ஜாலியாகப் பாட வைத்துவிட்டு, பாடலின் முடிவில் கிடாரை 'மிக்ஸ்’ செய்து அழுகையில் முடித்திருப்பதில் ரசிகர்களுக்கு ஏற்பட்ட அனுதாபமும், கடன் வாங்கி டாக்ஸிக்காரனுக்கு பத்து ரூபாயைக் கொடுக்கும் சந்திரசேகரை, 'நீ என்ன கர்ணன் மாதிரி’ என்று மற்ற நாலு பேர் கிண்டல் செய்யும் இடத்தில் தியேட்டரில் தோன்றும் சிரிப்பும் - நாங்கள் அவ்வளவாக எதிர்பார்க்கவில்லை.
முதல் படத்தில் கிடைத்திருக்கும் வெற்றி எங்களை வெகுவாகப் பயமுறுத்தியிருக்கிறது. தமிழ்ப்பட ரசிகர்கள் ரொம்பவும் புத்திசாலிகள். அவர்களுக்கு ஏற்ற புத்திசாலித்தனமான படங் களை - வெகுஜன ரசனையையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும் என்ற கவலையில், நாங்கள் எங்கள் அடுத்த படத்தில் ஈடுபட்டு இருக்கிறோம்!''பாரதிராஜா - 'அலைகள் ஓய்வதில்லை’  ''படத்தோட வெற்றி அல்லது தோல்வியைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. 'இதைச் சொல்லணும்’னு என் மண்டையில ஒரு அரிப்பு உண்டாகும். உடனே, அதைச் சொல்லிடுவேன். நான் சொல்றது முட்டாள்தனமாகக்கூட இருக்கலாம். ஆனா, தப்போ ரைட்டோ, சொல்ல நினைக்கறதை அழுத்தமா சொல்லிடுவேன். நான் சொல்றதை ஜனங்க ஏத்துக்கிட்டாங்கன்னா ஓ.கே. ஏத்துக்கலேன்னா அவங்களுக்கு அது பிடிக்கலேன்னு நினைச்சுப்பேன். திருப்பியும் மண்டையைச் சொறிய ஆரம்பிச்சுடுவேன்.நான் எதையும் 'அனலைஸ்’ பண்ணிப் பார்க்கறதும் இல்லை... ஒரு மாட்டு இடையன் புல்லாங்குழல் வாசிக்கிற மாதிரி நான் வாசிச்சுக்கிட்டு இருக்கேன். என்னோட வாசிப்பு நல்லாயிருக்குன்னு சொன்னா சந்தோஷப்படுவேன். 'இது என்ன ராகம்?’னு கேட்டா எனக்குத் தெரியாது. என்கிட்ட ஏதோ ஒரு உணர்வு இருக்கும். அதை அப்படியே படத்துல கொட்டிடுவேன். ஆனா, அதைப் பத்திப் பிரிச்சுத் தர்க்கம் பண்ணிப் பேச எனக்குத் தெரியாது.'அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் சில தவறுகளைத் தெரிஞ்சே செய்திருக்கேன்னு வெச்சுக்குங்களேன்... சரியா ஊதத் தெரியாம அதைக் கெடுத்துட்டேன்னு சொன்னாலும் அந்தத் தப்பை நான் ஏத்துக்கிறேன்.கடைசி ஷாட்ல பூணூலையும், சிலுவையையும் கழற்றி எறியறப்போ கொஞ்சம் சலசலப்பு இருக்குமோனு பயந்தேன். எனக்கு நியாயமா பட்டத்தை நான் சொன்னேன். ஆனா, எனக்கு நியாயமா படறது எல்லோருக்கும் நியாயமா படணும்னு என்ன அவசியம்?என்னோட சாதனை எனக்கு இனம் புரியாத ஒரு விஷயம். படத்துக்கு வர வேண்டிய வெற்றி, மரியாதை இல்லாம வந்திருக்கலாம். எனக்கு ஏதாவது தோணிக்கிட்டே இருக்கும். அதைச் சொல்லிக்கிட்டே இருப்பேன். எனக்கு என்னையே எடை போட இன்னொரு பதினைந்து, இருபது வருடங்களாவது ஆகும்!''

 நன்றி - விக்டன்

0 comments: