Thursday, November 22, 2012

நான் ஓர் எழுத்து வியாபாரி - வைரமுத்து பேட்டி @ விகடன்

விகடன் மேடை - வைரமுத்து

படம் : கே.ராஜசேகரன்
கே.எம்.குணா, உடையார்கோவில்.

 ''சினிமாவில் உங்களுக்கு நட்பு அதிகமா? பகை அதிகமா?''

''இரண்டும் இல்லை. திரையுலகில் 'தண்ணி’யடிக்காதவனுக்கு உயிர் கொடுக்கும் நட்பும் இருக்காது; உயிர் எடுக்கும் பகையும் இருக்காது.''



உமா சொக்கன், பெங்களூரூ-3.


''தலைமைப் பண்பின் முதல் பண்பு என்ன?''


''இழிவு தாங்குதல்.
நாடாளுமன்றம் கேள்விகளால் பற்றி எரியும் நேரம். நிதியமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி மீது 'முந்த்ரா’ ஊழலைச் சுமத்திப் பின்னியெடுக்கிறார் ஃபெரோஸ் காந்தி. தாக்குப்பிடிக்க முடியாத  கிருஷ்ணமாச்சாரி, 'நான் அரசாங்கத்தின் தூண்; நீ நேரு வீட்டு நாய்’ என்று பொறுமை இழக்கிறார். அதைத் தாங்க முடியாத ஃபெரோஸ் காந்தி, 'தூணைக் கண்டதும் நாய் என்ன செய்யுமோ, அதைத்தான் இப்போது செய்யப்போகிறேன்’ என்று எல்லை தாண்டுகிறார்.



தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு சம்பவம். 'இது மூன்றாந்தர அரசு’ என்கிறார் அன்றைய எதிர்க் கட்சி உறுப்பினர் எச்.வி.ஹண்டே. ஆளும் கட்சி உறுப்பினர்கள் பாயப்பார்க் கிறார்கள். கையமர்த்துகிறார் அந்நாள் முதலமைச்சர் கலைஞர்.


'இது மூன்றாந்தர அரசல்ல; பிராமண - சத்ரிய - வைசிய - சூத்ர என்ற வரிசையில், நாலாந்தர அரசு’ என்கிறார்.


பொங்கும் பாலில் தண்ணீர் தெளித்ததுபோல் அவை அடங்கிப்போகிறது.
ஃபெரோஸ் காந்தியால் இழிவு தாங்க முடியவில்லை; கலைஞரால் தாங்க முடிந்தது. அதனால்தான் அவர் இன்னும் தலைவராக இருக்கிறார்.''


வி.என்.கிருஷ்ணமூர்த்தி, மதுரை - 4.


''ஊடகங்களில் தமிழின் தரம் எப்படிஇருக்கிறது?''



''நுட்பமான மொழி அறிவு குறைவாக இருக்கிறது. 'பணயக் கைதிகளை மீட்டிக்கொண்டு வந்தார்கள்’ என்று சொல்கிறார்கள்; எழுதுகிறார்கள். 'மீட்டுதல்’ என்பது வாத்தியத்துக்கான தொழில். 'மீட்டல்’ என்பது மீட்சிக்கான தொழில். 'ராவணன் வீணையை மீட்டினான்; ராமன் சீதையை மீட்டான்’ என்பவைதாம் சரியான வினைகள். மீட்டு - மீள் என்பன வேர்ச் சொற்கள். எனவே, 'பணயக் கைதிகளை மீட்டுக்கொண்டு வந்தார்கள்’ என்பதே சரியான சொல்லமைதி.



ஒவ்வோர் ஊடகத்திலும் மொழிக் குழு ஒன்று இயங்க வேண்டும்.''


இரா.பார்த்திபன், தாளந்திருவாசல்.


'''உங்களை ஓர் எழுத்து வியாபாரி’ என்கிறேன்..?''


 ''ஒரு வகையில் சரியென்றே ஒப்புக்கொள்கிறேன். ஒவ்வொரு மனிதனும் இந்த பூமிக்கு ஒரு சந்தை தேடியே வந்திருக்கிறான். சிலர் சந்தையைத் தேர்ந்தெடுக்கிறார்கள்; பல பேரைச் சந்தையே தேர்ந்தெடுக்கிறது.


அரசியல்வாதிக்குத் தலைச் சந்தை;
சாமியாருக்குச் சமயச் சந்தை;
கல்வியாளருக்கு அறிவுச் சந்தை;
விலைமகளுக்கு உடற்சந்தை;
மருத்துவனுக்கு நோய்ச் சந்தை;
வல்லரசுக்கு ஆயுதச் சந்தை;
நீதிமான்களுக்குச் சட்டச் சந்தை;
காவலர்க்குக் குற்றச் சந்தை;
இசையமைப்பாளனுக்கு ஒலிச் சந்தை;
எனக்கு மொழிச் சந்தை.


ஆக எல்லோரும் வியாபாரிகளே. ஆனால், கொடுப்பது மிகுதியாகவும் பெறுவது குறைவாகவும் இருந்தால், வியாபாரம் அங்கே தொண்டாகிறது. கொடுப்பது குறைவாகவும் பெறுவது அதிகமாகவும் இருந்தால், வியாபாரம் அங்கே தொழிலாகிறது. நான் தொண்டு செய்யும் வியாபாரி என்றே என்னைக் கருதுகிறேன்.


அது சரி... உங்களுக்கு என்ன சந்தை?''


சுஜாதா ரெத்தினம், நாகர்கோவில்.




''ஒரு பாடல் வெற்றி பெற என்ன வேண்டும்?''


''இன்பத்தின் சிறகு, துன்பத்தின் வலி இரண்டில் ஏதேனும் ஒன்று தூக்கலாக இருக்க வேண்டும். அறைய வேண்டும் கன்னத்தை அல்லது வருட வேண்டும் நெஞ்சை. பாலாவின் 'பரதேசி’யில் அப்படியரு பாட்டை நெஞ்சைப் பிடித்துக்கொண்டு எழுதியிருக்கிறேன்.


வாழ்வற்றுப்போன ஒரு பஞ்சத்தில் வறண்ட பூமியைவிட்டுப் பஞ்சம் பிழைக்கக் கூட்டம் கூட்டமாக வெளியேறுகிறார்கள் இற்றுப்போன ஏழை மக்கள். செழியன் ஒளிப்பதிவில் பாலா எடுத்த படம் பார்த்துக் கண்ணீர் முட்டிவிட்டது எனக்கு. அடிவயிற்றில் இருந்து வலியின் குரலாக வருகிறது ஜி.வி.பிரகாஷின் இசை.


'ஓ செங்காடே சிறு கரடே
போய்வரவா...'

என்று தொடங்குகிறது பாட்டு
'பொத்தக் கள்ளியில் முள்ளுத் தச்சதும்
பொத்து ஒழுகுமே பாலு
காலங்காலமா அழுது தீத்துட்டோம்
கண்ணில் இல்லையே நீரு

வாட்டும் பஞ்சத்தில் கொக்குக் காலைப்போல்
வத்திப்போச்சய்யா வாழ்வு...
கூட்டம் கூட்டமா வாழப்போகிறோம்
கூட வருகுதே சாவு...’



எழுதிய வலி தீரவில்லை இதயத்தில் இன்னும்.
நகல் எடுக்க முடியாத கலைஞர்களுள் ஒருவர் பாலா. பாலாவோடு இணைய பெரிய நட்சத்திரங்கள் பயப்படுகிறார்கள்; பெரிய நட்சத்திரங்களோடு இணைய பாலாவும் பயப்படுகிறார். அந்தத் தேவைஅற்ற பயங்களைத் தீர்ப்பதற்குச் சில முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறேன். என் முயற்சி மட்டும் பலித்துவிட்டால், வாய்ப்பு இருக்கிறது தமிழில் ஓர் உலகப் படம் உருவாக.''


எம்.அருணாச்சலம், ராஜபாளையம்.


''ஆயகலைகள் அறுபத்து நான்கில் எத்தனை கலைகள் தெரியும் உங்களுக்கு?''



''முதலில் ஆயகலைகள் அறுபத்து நான்கு எவையென்று பார்ப்போம்.



1.ஆடல் 2.இசைக் கருவி மீட்டல் 3.ஒப்பனை செய்தல் 4.சிற்பம் வடித்தல் 5.பூத்தொடுத்தல்  6.சூதாடல் 7.சுரதம் அறிதல் 8.தேனும் கள்ளும் சேகரித்தல் 9.நரம்பு மருத்துவம் 10.சமைத்தல் 11.கனி உற்பத்தி செய்தல் 12.கல்லும் பொன்னும் பிளத்தல் 13.கரும்புச் சாற்றில் வெல்லம் எடுத்தல் 14.உலோகங்களில் மூலிகை கலத்தல் 15.கலவை உலோகம் பிரித்தல் 16.உலோகக் கலவை ஆராய்ந்து அறிதல் 17.உப்பு உண்டாக்குதல் 18.வாள் எறிதல் 19.மற்போர் புரிதல் 20.அம்பு  தொடுத்தல் 21.படை அணிவகுத்தல் 22.முப்படைகளை முறைப்படுத்தல் 23.தெய்வங்களை மகிழ்வித்தல் 24.தேரோட்டல் 25.மட்கலம் செய்தல் 26.மரக்கலம் செய்தல் 27.பொற்கலம் செய்தல் 28. வெள்ளிக்கலம் செய்தல்  29. ஓவியம் வரைதல் 30. நிலச் சமன் செய்தல் 31.காலக் கருவி செய்தல்  32.ஆடைக்கு நிறமூட்டல் 33.எந்திரம் இயற்றல் 34.தோணி கட்டல் 35.நூல் நூற்றல் 36.ஆடை நெய்தல் 37. சாணை பிடித்தல் 38. பொன்னின் மாற்று அறிதல் 39.செயற்கைப் பொன் செய்தல் 40.பொன்னாபரணம் செய்தல் 41.பொன் முலாமிடுதல் 42.தோல் பதனிடுதல் 43.மிருகத் தோல் உரித்தல் 44.பால் கறந்து நெய்யுருக்கல் 45.தையல் 46.நீச்சல் 47. இல்லத் தூய்மையுறுத்தல் 48.துவைத்தல் 49.மயிர் களைதல் 50.எள்ளில்  இறைச்சியில் நெய்யெடுத்தல் 51.உழுதல் 52.மரம் ஏறுதல் 53.பணிவிடை செய்தல் 54. மூங்கில் முடைதல் 55.பாத்திரம் வார்த்தல் 56.நீர் கொணர்தல் நீர் தெளித்தல் 57.இரும்பாயுதம் செய்தல் 58.மிருக வாகனங்களுக்குத் தவிசு அமைத்தல் 59.குழந்தை வளர்ப்பு 60. தவறினைத் தண்டித் தல் 61.பிறமொழி எழுத்தறிவு பெறுதல் 62.வெற்றிலை பாக்கு சித்தப்படுத்தல் 63.மேற்கூறிய கலைகளை உள்வாங்கும் விரைவு 64.வெளிப்படுத்தும் நிதானம்.


சுக்கிர நீதி சொல்லும் ஆயகலைகள் அறுபத்து நான்கும் இவைதாம்.


இவற்றுள் 7-ஆம் கலை அறிவேன். 49-ஆம் கலையில் பாதிசெய்வேன். 51-ஆம் கலை செய்திருக்கிறேன்.


இதை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் என்னைவிடச் சில கலைகள் அதிகம் தெரிந்திருக்கும் என்றே நம்புகிறேன்.''


வி.மருதவாணன், திருவாரூர்.


''இளைய தலைமுறை நடிகர்கள் நடித்த படங்களில் உங்களுக்குப் பிடித்த படங்கள்?''



''அஜித் - 'வாலி ’
விஜய் - 'கில்லி ’
சூர்யா -  'ஏழாம்  அறிவு’
விக்ரம் - 'அந்நியன்’
சிம்பு - 'விண்ணைத் தாண்டி வருவாயா’
தனுஷ் - 'ஆடுகளம்’
கார்த்தி - 'பருத்திவீரன்’
'ஜெயம்’ ரவி - 'பேராண்மை’
ஜீவா - 'கற்றது தமிழ்’
விஷால் -  'அவன் இவன்’.
ஆர்யா - 'நான் கடவுள்’
பரத் - 'காதல்’.''


எம்.சரவணன், சேலம்.


''தி.மு.க-வில் கலைஞரைத் தவிர்த்து உங்களுக்கு யாரைப் பிடிக்கும்?

 கலைஞரைத் தவிர்த்து தி.மு.க-வில் யாருக்கெல்லாம் என்னைப் பிடிக்குமோ, அவர்களை எல்லாம்


- இன்னும் பேசுவோம்...


நன்றி - விகடன் 



1. பாரதிராஜா - இளையராஜா - வைரமுத்து கூட்டணி அமைவது விஷப்பரீட்சை - வைரமுத்து பேட்டி  


http://www.adrasaka.com/2012/11/blog-post_15.html


2.

இலங்கை யில் எப்படி இருக்கிறார்கள் தமிழர்கள்? - வைரமுத்து பேட்டி

 http://www.adrasaka.com/2012/12/blog-post_4667.html

 





3. என்னை யார் தாக்கினாலும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கனும் - வைரமுத்து நக்கல் பேட்டி

 

http://www.adrasaka.com/2012/12/blog-post_13.html

  4.

தமிழ்நாடு முன்னேறியிருக்கிறதா?'' - வைரமுத்து சாட்டையடி பேட்டி

http://www.adrasaka.com/2012/12/blog-post_9476.html





4 comments:

Thozhirkalam Channel said...

ஆயக்கலைகள் 64ஐஅறிந்துகொண்டேன்.சந்தையை பற்றி சொன்ன கருத்துக்கள் அருமை

கவிதை வானம் said...

நண்பரே!
காலங்காலமாக கவிஞர்கள் என்றால் வறுமையில்தான் வாட வேண்டுமா...?எழுத்து அவருக்காவது சோறு போடுகிறதே ...வாழ்க தமிழ்

Unknown said...

"... ஒவ்வொரு மனிதனும் இந்த பூமிக்கு ஒரு சந்தை தேடியே வந்திருக்கிறான்,,'' இந்த இடத்தில் சந்தையைத் தேடியே என்றல்லவா இருக்க வேண்டும்??

thiyagarajan.s said...

எனக்கு அப்பவே தெரியும் நீ தமிழை விற்று காசு பார்க்கும் வியாபாரி என்று