Thursday, November 29, 2012

நாமக்கல் கலெக்டர் நாடே போற்றும் ந(வ)ல்லவர் ஆனது எப்படி?          இந்தியாவின் ஆட்சி நிர்வாகப் பணியில் உள்ள அதிகாரிகள் ஆசியாவில் உள்ள மற்ற எந்த நாட்டைக் காட்டிலும் திறமை குறைந்தவர்களாக உள்ளனர் என ஹாங்காங்கை சார்ந்த அரசியல், பொருளாதார கன்சல்டன்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. திறமையற்ற அதிகாரிகள் உள்ள பட்டியலில் 10 புள்ளிகளுக்கு 9.21 புள்ளிகள் பெற்று இந்தியாதான் முதல் இடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து வியட்நாம் (8.54), இந்தோனேசியா (8.37), பிலிப்பைன்ஸ் (7.57), சீனா (7.11), ஆகிய நாடுகள் வருகின்றன. மேலும் ஆசிய நாடுகளின் அரசு அமைப்பு முறை, அதிகாரிகளின் செயல் பாடு குறித்து ஆய்வு செய்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தாங்கள் எடுக்கும் முடிவு எதிர்பார்த்த பலனை கொடுக்காதபோது அதற்குத் தார்மிக பொறுப்பேற்கும் மனப்பக்குவமும் இந்திய அதிகாரிகளுக்கு இல்லை. தங்களது முடிவு  தவறாக இருந்தாலும் அதை நியாயப்படுத்துவதில்தான் முனைப்பு காட்டுகின்றனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக இந்தியா முழுமைக்கும் இந்த நிலைதான் தொடர்கிறது. இருந்தபோதிலும் சில நேர்மையான திறமைவாய்ந்த அதிகாரிகளும் உண்டு. இருப்பினும் ஒரு உண்மையான பொதுவுடமைவாதி, பகுத்தறிவுவாதிகளுக்கு எந்த அதிகாரிகளும் ஈடில்லை. ஏனெனில் இந்த இருவரும் அரசின் மக்கள் விரோத கொள்கைகளையும் திட்டங்களையும் எதிர்த்து போராடுபவர்கள். சாதி,மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்காதவர்கள். இந்த இரண்டு கொள்கையும் கொண்ட ஐ.ஏ.எஸ் அதிகாரியை பார்ப்பது மிக மிகக் கடினமான காரியம். ஆனால் அவர்களில் விதிவிலக் கானவர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்.
நாமக்கல் மாவட்டத்தில் பிறந்த உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். பொறியியல் (எலக்ட்ரானிக்ஸ்) பட்டதாரி. 1995- இல் இந்திய சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிப்பெற்றார். 1997-இல் பரமக்குடியில் துணை ஆட்சியராக பணி யாற்றினார். பரமக்குடி நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாதனை புரிந்தார். பின்பு DRDA திட்ட அலுவலர். 2001 -இல் தமிழ்நாடு சிறு தேயிலை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சம்மேளன நிறுவனத்தின் (இன்ட்கோசர்வ்) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக பணியாற்றினார்.இவரின் முயற்சியில் உலகின் முதல் எலக்ட்ரானிக் தேயிலை ஏலமுறை (ETAS- Electronic Tea Auction System )  கொண்டுவரப்பட்டது. அதேபோல முதன்முறையாக 50 டன் தேயிலை மலேசியாவிற்கு ஏற்றுமதி செய்து சாதனை நிகழ்த்தப்பட்டது. ஐ.எஸ்.ஓ தரச் சான்றிதழும் பெற்று தந்தார். பின்பு தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) இயக்குநர் பணி, 2004 சென்னை மாநகராட்சி டெபுடி கமிஷனர். அப்போது ஏற்பட்ட சுனாமியின் போது (இந்த வார்த்தை தமிழகத்தில் அப்போது அறிமுகப்படுத்தியவர் உதயசந்திரன்) பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களுக்கு மீட்பு குழுக் களை அனுப்பினார். 2005-06 தமிழ்நாடு மின்னனுக் கழகம் வரையறை (எல்காட்) மேலாண் இயக்குனர்.
அடுத்து 2007-08-இல் ஈரோடு மாவட்ட ஆட்சியர், அங்கு தொழில்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தினார். பூவுலகின் நண்பர்களின் திட்டத்தை போன்ற இயற்கையான உணவு பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்ய உதவிபுரிந்தார். அதற்காக பசுமை அங்காடிகளை திறந்து வைத்தார். அதிகளவில் கல்வி கடன் பெற்றுதந்த (ஒரே வருடத்தில் 110 கோடி ரூபாய்) மாவட்ட ஆட்சியர் என பெயரெடுத்தார். பின் மாற்றலாகி மதுரை மாவட்ட ஆட்சியராக பணியாற்றி  னார். முதல் முறையாக தென் தமிழகத்தில் மதுரையில் தொழில் நுட்ப பூங்காவை கொண்டு வந்தார். பாப்பார்ப்பட்டி, கீரிப்பட்டி கிராமங்களில் உள்ளட்சி தேர்தலை நடத்தினார்.
பாப்பார்பட்டி, கீரிப்பட்டியில் 17 முறை தேர்தல் அறிவிக்கப்பட்டும் ஒரு தலித் பஞ்சாயத்துத் தலைவராக முடியாததற்கான முக்கிய காரணம் அரசின் கண்ணோட்டமே. அங்கு தலைவிரித்தாடும் அப்பட்டமான சாதி வெறியையும், தீண்டாமையையும் சட்டத்தின் துணை கொண்டு இல்லாது ஒழிக்கும் கடமை அரசுக்கு உண்டு என்பதை தனது கடமையாக எடுத்துக்கொண்டு அந்த கிராமங்களில் மிக சிறப்பாகவும் தைரியமாகவும் தேர்தலை நடத்திக் காட்டினார்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரைச் சேர்ந்த திரு. டி. ரங்கசாமி என்பவர் தமிழர்களின் வீரவிளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டுக்குத் தடைகோரி உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் ஒரு வழக்கைத் தொடர்ந்தார். தமிழக அரசின் உள்துறைச் செயலாளர், சுற்றுலாத் துறைச் செயலாளர், மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர் ஆகியோரை இவ்வழக்கின் பிரதிவாதிகளாகச் சேர்த்திருந்தார் ரங்கசாமி. இவ்விளையாட்டில் ஈடுபடும் இளைஞர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதோடு காளைகளும் துன்புறுத்தப்படும் என்பதால் இவ்விளையாட்டு தடைசெய்யப்பட வேண்டும் என்பதே அவரது வாதம்.  அவரது மனுவை ஏற்று நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு இடைக்காலத் தடை விதித்தது.இவ்விளையாட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் எனக் கோரி, உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கின் மூன்றாம் பிரதிவாதியான மதுரை மாவட்டத்தின் ஆட்சித் தலைவரான த. உதயச்சந்திரன் பதில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரமாக பிரச்சினை வராமல் போனது. அந்த மனுவில் "இது போன்ற வீர விளையாட்டுகள் சமூக ரீதியிலான முக்கியத்துவம் வாய்ந்தது. பண்பாட்டு ரீதியில் அவசியமானது.'"இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டானது இந்து மதத்தோடு மட்டும் தொடர்புடையதாகக் கருதக்கூடியது அல்ல என்பதைத் தங்களுக்கு முன்வைக்கிறேன். கிறிஸ்தவர்களும் முகமதியர்களும் தங்களுடைய வழிபாட்டுத் தலங்களிலேயே இந்த நிகழ்ச்சியை நடத்தி வருவதால் ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்தின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் விளையாட்டாகவே இதனைக் கண்டுணரத் தங்களை வேண்டுகிறேன்.


உடனே தடை நீக்கப்பட்டது. முதல் முறையாக ஜல்லிக் கட்டில் மாடு களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் மதுரை ஆட்சியர் பணியிலிருந்து உதய சந்திரன் மாற்றப்பட்டபோது பொதுமக்களும் அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். பாப்பார்பட்டி, கீரிப்பட்டி ஊராட்சி தலைவர்கள் பதவி விலகுவதாக அறிவித்தனர். அடுத்து பெண்கள் மேம்பாடு துறையின் மேலாண் இயக்குநர். இவரது முயற்சியில் தமிழகமெங்கும் 5000 பெண்கள் சுய உதவிக் குழுக்கள் உருவாகின. பின்னர் அதுவே பல மடங்கு விரிவாக்கம் பெற்றது.பின்பு அதிமுக அரசால் டி.என்.பி.எஸ்.சி செயலாளராக பணியிலமர்த்தப்பட்டார். தேர்வாணையத்தில் அவர் செய்த மாற்றம் இந்தியாவில் எந்த ஒரு மாநில தேர்வாணையமும் செய்யாதது. ஆன்லைன் விண்ணப்பம், நிரந்தர பதிவு எண், உடனடி விடைகள் வெளியீடு, ஆண்டு திட்டம், போன்ற மிகச் சிறந்த நடைமுறைகளை கொண்டுவந்தார். தரமான வினாத்தாள்கள், தமிழுக்கு முன்னுரிமை என சீரிய பணிகள் தொடர்ந்தன. இவை யெல்லாம் உங்களுக்கே தெரியும். இந்த பணியில் தேர்வாணைய தலைவரும் சிறந்த ஒத்துழைப்பை அளித்தார்.ஆசிரியர் தேர்வு வாரியம், மின்சார வாரியத்தில் வேலைவாய்ப்பு, மருத்துவ பணியாளர் தேர்வாணையம் போன்றவற்றில் தொடர்ந்து முறைகேடுகள் நடந்து வருகின்றன. இவற்றின் மீது பல வழக்குகள் உயர்நீதி மன்றத்தில் உள்ளன. இவற்றிலிருந்து மாறுபட்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மட்டுமே நேர்மையாக தேர்வுகளை நடத்திவருகின்றன. அதற்கு மிக முக்கிய காரணம் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்., நட்ராஜ் ஐ.பி.எஸ். இந்த நிலையில் டி.என்.பி.எஸ்.சி தேர்வு கட்டுபாட்டு அதிகாரியாக கரூர் மாவட்ட முன்னாள் ஆட்சியர் வெ.ஷோபனா ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டார்.


 இவர் சென்னையை சேர்ந்தவர். 2003-இல் ஐ.ஏ.எஸ் பணியில் சேர்ந்தார். கரூர் மாவட்ட ஆட்சியர் பணியில் இருந்தபோது அரசியல்வாதி போல செயல்பட்டு வந்ததாக பத்திரிக்கைகளால் விமர்சிக்கப்பட்டவர். சிறிதுகாலம் அவருக்கு பதவி தரப்படாமல் இருந்தது. தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்து நட்ராஜ் ஐ.பி.எஸ், தேர்வாணைய தலைவர் பதவியிலிருந்து ஓய்வுப் பெற இன்னும் சரியாக ஐந்து மாதங்களே உள்ளன. தேர்வாணையத்தின் இத்தகைய சூழலில், உதயசந்திரன் பதவி மாற்றம் செய்யப்பட்டது  (இப்போது மீண்டும் இன்ட்கோசர்வ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக அரசு நியமித்துள்ளது) பல கேள்விகள் நமக்கு எழுகிறது. திமுக ஆட்சிக்காலத்தில் சமச்சீர்கல்வி முறை கொண்டுவந்தது மட்டும் எப்படி சாதனையோ அப்படி அதிமுக ஆட்சியில் டி.என்.பி.எஸ்.சி சீர்திருத்தம் ஒரு சாதனையே.ஆனால் ஊழலில் மூழ்கியிருந்த தேர்வாணையத்தை சுத்தப்படுத்தி இந்திய அளவில் சிறந்த அரசு பணியாளர் தேர்வாணையமாக மாற்றம் செய்து காட்டியவரை ஜெயலலிதா அரசு டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்களுக்காக மாற்றியுள்ளது. வி.ஏ.ஓ தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளது, குரூப் 2 தேர்வுகள் முடிந்த நேரம், குரூப் 1 தேர்வு அறிவிக்கப்பட உள்ளது. ஆன்லைன் தேர்வுமுறை டெண்டர் அறிவிப்புடன் உள்ளது. இந்த பரபரப்பான நேரத்தில் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். மாற்றம் செய்யப் பட்டது மீண்டும் தேர்வாணையத்தின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. குரூப்-1 தேர்வு நியாயமாக நடக்குமா? தேர்வாணையம் ஊழலின்றி இயங்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மேலும் தங்களின் கருத்துகளை பகிர்ந்துக்கொள்ள [email protected] மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். 
நன்றி - நக்கீரன் 

0 comments: