Sunday, November 11, 2012

சுகி சிவம் -தீபாவளி சிறப்புக் கட்டுரை @ கல்கி

தீபாவளி சிறப்புக் கட்டுரை

மனசெல்லாம் மத்தாப்பூ!


நம் எல்லோருக்குமே மகிழ்ச்சியாக இருக்கத்தான் ஆசை. ஆனால், மகிழ்ச்சியாக இருப்பவர்கள் எத்தனை பேர்? பலர் மகிழ்ச்சியாக இருப்பதாகக் காட்டிக் கொள்கிறார்களே தவிர, நிஜமாகவே அப்படி இருப்பதாகத் தோன்றவில்லை.

மகிழ்ச்சிக்கு நாம் சில நிபந்தனைகள் விதிக்கிறோம். இது நடந்தால், இப்படி இப்படி சூழ்நிலைகள் அமைந்தால் மட்டுமே நான் மகிழ்ச்சியாக இருக்கமுடியும் என்கிறோம். அதனால்தான் நாம் மகிழ்ச்சியாக இருக்க முடிவதில்லை. எது நடந்தாலும் அதை மகிழ்ச்சியாக்கிக் கொள்கிறவர்களே வெற்றியாளர்கள்.


தொலைக்காட்சியில் சுவாரஸ்யமான தொடரைப் பார்க்க இடையிடையே விளம்பரங்களையும் சகித்துத்தான் ஆகவேண்டும். வாழ்க்கையும் அப்படித்தான். சந்தோஷம் மட்டுமே தனியாகக் கிடைக்காது. இடையிடையே சங்கடங்களும் கலந்துதான் வரும். அந்தச் சங்கடங்களின் போது மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதுதான் வாழ்வின் விசேஷமே!


வானொலியில் பாட்டு கேட்பதற்கும் ஆடியோ ப்ளேயரில் பதிவுசெய்யப்பட்ட பாட்டுக் கேட்பதற்கும் வேறுபாடு உள்ளது. மியூஸிக் பிளேயரில் பிடித்ததாக மட்டுமே தேர்வு செய்து கொள்ள முடியும். வாழ்க்கை வானொலி மாதிரி. வருவதில் பிடித்ததும் உண்டு. பிடிக்காததும் உண்டு. பிடிக்காதது வரும்போது வருத்தப்படுவதில்லை என்று உறுதி எடுத்துக் கொண்டு வேதனையின்றி வாழ்வது மிகப்பெரிய கலை.


மனிதர்கள், சங்கடங்களே வரக்கூடாது என்று எதிர்பார்க்கிறார்கள். பிரச்னை இல்லாத வாழ்க்கை எந்த மனிதனுக்காவது கிடைக்குமா என்ன? தலை உள்ள காலம் வரை தலைவலி இருக்கத்தானே செய்யும்


 மனிதர்கள் இருக்கும் வரை பிரச்னைகளும் இருக்கத்தான் செய்யும். ஒவ்வொரு பிரச்னைக்கும் தீர்வும் இருக்கிறது என்ற புரிதலே மனமகிழ்ச்சி தருகிற விஷயம். அதே பழமொழி புத்தகத்தில் சுறுசுறுப்பாக உள்ளவனுக்கு ஒவ்வொரு மரத்தின் பின்னாலும் ஒரு ரொட்டி இருக்கிறது... ஒவ்வொரு கல்லின் கீழும் ஒரு கதை இருக்கிறது" என்று படித்தேன். ஆம், ஒவ்வொரு பிரச்னைக்கும் ஒரு தீர்வு இருக்கிறது என்ற புரிதல் அவசியம்.‘நம்மால் தீர்க்க முடியாத பிரச்னைகள் வராதா?’ என்று கேள்வி எழுந்தால் அதற்கும் ஒரு பிரிட்டிஷ் பழமொழி வைத்திருக்கிறேன். வீட்டை விடப் பெரிய கதவுகள் இருக்க முடியாது" என்பதே அது. நம் சக்திக்கேற்ப நம் பிரச்னைகளும் உள்ளன. நமக்கு மீறியது என்றால் நிச்சயம் அவை நமக்குரிய பிரச்னையே அல்ல என்று விலகி நிற்கும் துணிவு அவசியம். இந்த விவேகம் மிக மிக முக்கியம்.


ஒரு பட்டிமன்றத்துக்கு நான் நடுவராக இருந்தேன். அப்போது அங்கே பேசிய ஒரு பெண் பேச்சாளர், இன்னொரு பெண் பேச்சாளரின் கணவர் அட்டைக் கரி, அமாவாசைக் கரி என்று கிண்டலடித்தார். அடுத்துப் பேசிய கவிதா ஜவஹர் என்கிற அந்தப் பெண் பேச்சாளர் சிறிதும் கவலையடையாது, அவுங்க கறுப்புதான் ஆன மனசு தங்கம்ல. கறுப்புன்னா என்ன நஷ்டமா? இப்ப அடிக்கடி கரண்ட் போகுதில்ல. அன்னிக்குச் சாயங்காலம் ஏழு மணிக்கு கரண்ட் போச்சு. நான் என்ன செஞ்சேன்? அத்தான்... லேசா ஒரு சிரிப்பு சிரிங்கன்னேன். அந்த வெளிச்சத்துல தீப்பெட்டி எடுத்தேன். தீக்குச்சி வெளிச்சத்துல மெழுகுவத்தி எடுத்தேன். பிரச்னை தீந்திடுச்சுல்ல" என்று ஒரு போடு போட்டார்.


கொஞ்சம் மிகையான கற்பனை என்றாலும் அவரது தன்னம்பிக்கையான குரலும் நேர் வளமான மனமும் என்னை அசர வைத்தன.


ஒரு வேடிக்கையான கதை. ஓர் அலுவலகத்தில் மதிய உணவு வேளையின் போது மூன்று பேர் ஒன்றாகச் சாப்பிடுவது வழக்கம். தினமும் ஒரே வகையான உணவே அவர்களது டிபன் பாக்ஸில் இருக்கும். ஒருவருக்கு இட்லி மற்றவருக்குப் புட்டு, இன்னொருவருக்குச் சப்பாத்தி. இதே சிற்றுண்டிதான் தினமும். ஒருநாள் இட்லிக்காரர் எரிச்சலுடன், இன்னிக்கு மனைவிகிட்ட சொல்லப் போறேன். நாளைக்கும் இட்லியே கொடுத்தனுப்பினா இந்த 8வது மாடியிலிருந்து விழுந்து செத்துடுவேன்" என்று கத்தினார் புட்டுக்காரரும் ரோஷமுடன் அதையே வழிமொழிய சப்பாத்திக்காரரும் அதை வழிமொழிந்தார். ஆனால், மறுநாள் டிபன் பாக்ஸ் திறந்ததும் மூவருக்கும் வருத்தம். அதே இட்டிலி... அதே புட்டு... அதே சப்பாத்தி. ரோஷக்கார இட்லிக்காரர் சொன்னால் சொன்னபடி மாடியிலிருந்து விழுந்து விட்டார். புட்டுக்கும் வேறுவழியில்லை. அவரும் பாய்ந்தார். சப்பாத்தியும் அதையே பின்பற்றி விட்டார்.கீழே விழுந்த மூவரையும் அள்ளிப் போட்டுக் கொண்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். அவர்களது மனைவிமாருக்கும் தகவல் தரப்பட்டது. பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்த மனைவிமார் மூவரும் தங்கள் தலையிலடித்துக் கொண்டார்கள். இட்லிக் காரர் மனைவி சொன்னார். இவர் இப்படிச் சொல்லுவாரே ஒழிய, செய்ய மாட்டார்ன்னு இட்டிலியே வைச்சேன்" என்றார். இது நிறைய விளையாட்டுக்குச் சொல்லும். அப்படி நெனச்சுடுதான் புட்டு வைச்சேன்" என்றார் அடுத்தவர். சப்பாத்திக்காரர் மனைவியோ, எனக்கு ஒண்ணு புரியவே இல்லை. சப்பாத்தி போட்டதும் அவர்தான், எடுத்து வச்சிக்கிட்டதும் அவர்தான்; அவரும் ஏன் விழுந்தார்னு புரியவே இல்லை" என்றார்.மனிதர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். இதைச் செய்யாவிட்டால் மற்றவர்கள் தவறாக நினைப்பார்களோ என்கிற கவலையிலேயே வாழ்வைத் தொலைத்து விடுகிறார்கள். பிறரது நினைப்பு... பிறரது விமர்சனம்... இவற்றாலேயே அளவுக்கு அதிகமாகத் துன்பப்படுகிறார்கள். இந்த வட்டத்திலிருந்து வெளியே வந்து விட வேண்டும். பிறர் என்ன நினைப்பார்களோ என்கிற கவலை நம்மை மகிழ்ச்சியாக வாழவே விடாது.


நாம் துக்கப்படுவதற்கும் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் எப்போதுமே பிறர் காரணம் என்று ஏமாந்து போகிறோம். நம் மனமே தான் உண்மைக் காரணம். நம் மனத்தை நாம் விரும்பியபடி மாற்றியமைக்க நம்மால் முடியும். நம்புவது சிரமம் என்றாலும் அது தான் உண்மை.


நமக்கு உடல்நலம் சரியில்லை என்று மனம் நம்பி விட்டால் காரணமே இன்றி நாம் நோய்வாய்ப் படுகிறோம். அதேபோல நிஜமாகவே உடல்நலக் குறைவு ஏற்படும் போதும், இல்லை எனக்கு ஒரு குறையும் இல்லை... என்னை இது எதுவும் செய்யாது" என்று திடமனத்துடன் நம்பி நோயில்லாத போது எப்படி இருப்போமோ அப்படியே இருக்கத் தொடங்கினால் நோயே ஓடி விடுகிறது என்கிறது உளவியல். மறக்கின்ற ஞானம் என்று இதனைக் குறிப் பிட்டு நோயைமனதிலிருந்து முழுமை யாகத் துடைத்து எடுத்து விட்டால் உடம் பால் அதைத் தாங்கிப்பிடிக்க ஆகாதுஎன்று எழுதுகிறார் நாகூர்ரூமி.


சுருக்கமாகச் சொன்னால், எப்போதும் நமது மனம் நம்மை உபயோகப்படுத்திக் கொள்கிறது. ஆனால் மனத்தை நாம் உப யோகப்படுத்திக் கொள்ள பழகிக் கொண் டால் வாழ்க் கையை ஜெயித்து விடலாம். கலை வாணர் என்.எஸ். கிருஷ்ணன் காரை ஏலம் போட வந்து விட் டார்கள். துணைவியார் மதுரம் பதறியபடி மாடிக்கு ஓடி வந்தார்.


 தமது வழக்கமான ஹெஹ்ஹே சிரிப்பைக் கலைவாணர் உதித் ததும் மதுரம், இப்ப என்ன சிரிப்பு வேண் டிக் கிடக்கு?" என்று சீறினார். நம்ம காரை வித்துடலாமான்னு நான் கேட்டப்ப இதை எந்த மடையன் வாங்குவான்னு கேட்டியே... இப்ப போயி எத்தனை பேரு மடையன்னு எண்ணிக்கோ" என்றபடி வருத்தமின்றி இருந்தாராம் என்.எஸ்.கே.சந்தோஷமானவை நடந்தால்தான் நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று சாதிக்காதீர் கள். அது குழந்தை மனம். சங்கடமானவை நடந்தாலும் சந்தோஷமாகவே இருங்கள். அதுதான் மனமுதிர்ச்சி. சில வருடங்களுக்கு முன்பாக கொல்கத்தா வானொலி நிலையத்துக்கு குரல் தேர்வுக்கு நெடுநெடுவென்று ஓர் இளைஞர் வந்தார். குரல் சரியில்லை என்று தோல்வியுடன் வெளியேறினார். இன்று அவர் விளம்பரப் படங்களில் நடிக்கவே கோடி கோடியாகத் தருகிறார்கள். அவர்தான் அமிதாப்பச்சன்.


பிரதமரின் விஞ்ஞான ஆலோசகர் பதவி முடிந்த பின் பல்கலைக்கழகப் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்தார் அப்துல்கலாம். எதனாலோ பணி தரப்படவில்லை. அதனால்தான் அவர் ஜனாதிபதியானார்.


சங்கடங்கள் வந்தாலும் சந்தோஷமாகவே இருங்கள். தீபாவளி மத்தாப்பூவைப் பார்த்தீர்களா? அதன் தலையில் நெருப்பையே வைத்தாலும் வண்ண வண்ணமாய் பொங்கிப் பொங்கி எப்படி எல்லாம் சிரிக்கிறது பார்த்தீங்களா?


அப்படி இருக்க முயற்சிப்போமா?

நன்றி - கல்கி

0 comments: