Monday, November 26, 2012

பெஸ்ட் CM காமராஜர், பெஸ்ட் PM வி பி சிங்க் ,மத்தவங்க வேஸ்ட் - கி ராஜநாராயணன் கலக்கல் பேட்டி

காந்தி செத்தது கூட நல்லதுதான் !


சமஸ்

படங்கள்: ஜெ.முருகன்


நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்தவர் கி.ராஜநாராயணன். பாண்டிச்சேரி அரசாங்கம், வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் ஒதுக்கி இருக்கும் சின்ன வீட்டில் அவரைப் பார்த்தபோது, அவர் ஒன்றும் அத்தனை வசதியோடு இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், வழக்கமாக எழுபதைத் தொட்டாலே நடுங்க ஆரம்பிக்கும் நம் சமூகச் சூழலில், 90 வயதிலும் நிறைந்த சந்தோஷத்தோடு இருக்கிறார்.
''ரத்தமும் சதையுமாக ஊரோடு உறைந்துபோன உங்களை மாதிரி ஓர் எழுத்தாளர் 66 வருடங்கள் இருந்த ஊரைவிட்டு, இன்னோர் ஊருக்கு இடம்பெயர்வது என்பது அவ்வளவு சுலபம் அல்ல. இடைசெவலைவிட்டு எப்படிப் பிரிந்து புதுவைக்கு வந்தீர் கள்?''

''ஒரு சூறாவளி உண்டு. பேரு மறந்துபோச்சு. அந்தக் காத்து என்ன பண்ணும் தெரியுமா? சமுத்திரத்துலேர்ந்து சர்ர்ர்ர்ருன்னு புறப்படும். அது மேலே எழும்புறதும் யாருக்கும் தெரியாது. கீழே இறங்குறதும் யாருக்கும் தெரியாது. சர்ர்ர்ர்ருனு நெலத்தைத் தொட்டுட்டு திரும்பவும் மேலே கிளம்பும். அந்தச் சமயம் ரெண்டு நண்பர்கள் பேசிக்கிட்டுப் போறாங்கனு வெச்சுக்குங்க. ஒரு ஆளைத் தூக்கிட்டுப் போயிடும். தூக்குனதே தெரியாது. தடம் தெரியாம அப்படியே இன்னொரு எடத்துல இறக்கிவெச்சுட்டுப் போயிடும். அப்படி ஒரு காத்து! இப்படித்தான் பள்ளிக்கூடம் பக்கமே போகாத என்னை மத்தியப் பல்கலைக்கழகம்கிற காத்து வந்து இடைசெவல்லேர்ந்து தூக்கி பாண்டிச்சேரியில் விட்டுட்டுப் போயிட்டு.
அப்புறம், மத்தியில ஒரு தடவை என் ஊருக்குப் போனேன். ஊரு அடையாளமே மாறிக்கிடந்துச்சு. அங்கே இசையைப் பத்தியும் பேச ஆள் இல்லை; இலக்கியத்தைப் பத்தியும் பேச ஆள் இல்லை. எனக்குப் பிடிச்ச பிரெஞ்சுப் பேராசிரியர்கள், ஆங்கிலப் பேராசிரியர்கள், இலக்கியவாதிகள்னு சுத்தி இருந்த இந்த ஊர்ச் சூழலை நெனைச்சுப் பார்த்தேன். இங்கேயே வந்துட்டேன்.''
''ஆரம்பக் காலத்தில் இடைசெவலில் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்?''


''சும்மாதான் இருந்தேன். சின்ன வயசுலேர்ந்தே நான் பெரிய நோயாளி. ஐயோ, எனக்கு வந்த வியாதி எல்லாம் இருக்கே... அதுல ஒரே ஒரு வியாதியைக் கண்டாலே, அவனவன் செத்துருவான். நான் சாகலை. ஆனா, எல்லோருக்குமே பயம்தான். எப்ப போவேனோன்னு. ஊருல நம்ம குடும்பம் நல்ல செல்வாக்கான குடும்பம். 80 ஏக்கரா நெலம் இருந்துச்சு. மூணு அண்ணன் தம்பிங்க. உடல் உழைப்பே இல்லாம வாழ்ந்துட் டேன். தம்பிகளுக்கு எல்லாம் கல்யாணம் பண்ணி வெச்சேன். நான் பண்ணிக்கலை.


நோயாளி இல்லையா? அப்புறம், எங்க பாட்டிதான் சொன்னா, 'சும்மா தைரியமாக் கல்யாணம் பண்ணிக்கோடா’னு. முப்பது வயசுல கல்யாணம் பண்ணிக்கிட்டேன். உள்ளூர்ப் பொண்ணுதான். நான் நோயாளினு தெரிஞ்சே பண்ணிக்கிட்டா. அப்போது அவளுக்கு இருபது வயசு. நல்ல நிர்வாகி அவ. வீட்டு வேலை, வயல் வேலைனு எல்லாத்தையும் கட்டிச் சுமந்தா. ஒரு கட்டத்துல சொத்து பாகம் பிரிச்சு, விவசாயம் உட்கார்ந்த பின்னாடிதான் நான் பிழைக்க வேண்டிய சூழல் உருவாச்சு. சரியா அப்போதான் எழுத ஆரம்பிச்சேன். எழுத்தே பிழைப்பாப் போச்சு.''
''பள்ளிக்கூடம் ஏன் உங்களுக்குப் பிடிக்காமல் போனது?''''பலருக்கும் படிப்பு புடிக்காமப்போறதுக்கு வாத்தியாருங்களோட கண்டிப்புதான் காரணமா இருக்கும். ஆனா, என் கதையே வேற. வாத்தியாருங்களோட நெருக்கமான சிநேகம் எனக்கு இருந்துச்சு. அது எப்படின்னா, இந்தக் காலம் மாதிரி வாத்தியாருங்க வசதி வாய்ப்போட இருந்த காலம் இல்லை அது. ரொம்ப ஏழ்மைப்பட்ட சூழல்ல இருப்பாங்க. ஊருல கொஞ்சம் வசதியான விவசாயிங்க பார்த்து ஒதுக்கிவிடுற குடிசைங்கதான் வாத்தியாருங்களுக்கு வீடா இருக்கும். பெரும்பாலான வாத்தியாருங்க தொழுவுலதான் தங்கி இருப்பாங்க. அதனால, வசதியான வீட்டுப் பிள்ளைகளுக்குத் தனி மரியாதை.


எங்க ஊர் வாத்தியாருங்களுக்கு விறகுல தொடங்கி பால், மோர் வரைக்கும் எங்க வீட்டுலேர்ந்துதான் போகும். எதுக்கும் துட்டு வாங்கக் கூடாதுனு சொல்லிடுவார் எங்க நைனா. அதனால, பள்ளிக்கூடத்துல மட்டும் இல்லை; அவங்க வீட்டுலேயேகூட சொல்லிக்கொடுக்கத் தயாரா இருந்தாங்க வாத்தியாருங்க. ஆக, அக்கறை எல்லாம் இருந்துச்சு. ஆனா, படிப்பு ஏறலை. படிப்பை வாங்கிக்குற சக்தி எனக்கு இல்லைனு சொல்ல முடியாது. எனக்குப் படிப்பைக் கொடுக்குற சக்தி வாத்தியார்களுக்கு இல்லைங்கிறதுதான் உண்மை. ஆனா, எந்த வாத்தியாரும் இதை ஏத்துக்க மாட்டாங்க.''
''கல்வி ஒரு பெரும் வியாபாரமாகிவிட்ட இன்றைய சூழலில், பள்ளிக்கூடங்களின் நிலை மாறி இருக்கிறதா?''

''கல்வியைப் பத்தி நிறையப் பேசுறோம். ஆனா, ஒண்ணும் நடக்கலை. என்னையக் கேட்டா, புத்திசாலியை மேலும் புத்திசாலிஆக்குறது இல்லை; மக்குப் பிள்ளையைப் புத்திசாலி ஆக்குறதுதான் ஒரு நல்ல வாத்தியாருக்கு அடையாளம். பள்ளிக்கூடம்னு சொன்னாலே, பிள்ளை சந்தோஷமாக் கிளம்பி ஓடணும். அதுதான் ஒரு நல்ல பள்ளிக்கூடத்துக்கு அடையாளம். அப்படிப்பட்ட சூழல் இன்னைக்கு வந்திருக்குதானு கேட்டா, இல்லை. மேலும் மோசமாகிட்டு இருக்குன்னுதான் சொல்லணும். இந்தச் சூழல் மாறணும்னா, பெத்தவங்களோட மனநிலை முதல்ல மாறணும். பள்ளிக்கூடத்துக்கு உள்ளே மட்டும் இல்லை; பள்ளிக்கூடத்துக்கு வெளியிலேயும் படிப்பு இருக்குங்கிறதைப் புரிஞ்சுக் கணும்.''
''கட்டுக்கோப்பான கலாசாரத்துக்குப் பேர் போன இடைசெவல் மாதிரி ஒரு இந்தியக் கிராமம்; உலகிலேயே முற்போக்கானதாகச் சொல்லப்படும் பிரெஞ்சு கலாசாரச் சூழல் நிலவும் பாண்டிச்சேரி மாதிரி ஒரு நகரம்... இரண்டிலுமே நீங்கள் வாழ்ந்திருக்கிறீர்கள். எந்தக் கலாசாரம் உண்மையில் உன்னதமானதாக உங்களுக்குத் தெரிகிறது?''

''பிரெஞ்சுக் கலாசாரம்தான் உன்னதமாத் தெரியுது. இந்தப் பொறப்பு எடுத்த நோக்கம் என்ன? சந்தோஷமா வாழணும். அதுதான் நோக்கம். சந்தோஷமா எப்படி வாழறது? பறவைகளை மாதிரி மனுஷன் வாழணும். எந்தக் கட்டுப்பாடும் இல்லாம, அவனவன் நினைச்ச மாதிரி சுதந்திரமா, சந்தோஷமா வாழணும். அதுக்கு எந்தக் கலாசாரம் எடம் கொடுக்குது? இந்தியக் கலாசாரம் எடம் கொடுக்கலை. அட, விருப்பப்பட்ட ஒரு மனுஷாளோட சேர்ந்து வாழ்ற சுதந்திரம்கூட இங்கே இல்லையே?


ஒரு காலத்துல கிராமங்கள்ல அந்தக் கலாசாரம் இருந்துச்சு. விருப்பம்போல வாழலாம். புடிச்சவங்களோட சேர்ந்து வாழலாம்; புடிக்கலைன்னா அத்துக்கிட்டுப் போய்டலாம். இன்னொண்ணு சேர்த்துக்கிடலாம். புள்ளைங்களுக்கும் தெரியும். அம்மாதான் நம்மளோட அம்மா, நம்ம அப்பா இவரு இல்லைங்கிறது. ஊருக்கும் தெரியும். யாரும் எதையும் தப்பா நெனைக்கிறது இல்லை. சந்தோஷமா இருந்தாங்க. ஆனா, அந்த மாதிரி கிராமம் எல்லாம் இப்ப குறைஞ்சுக்கிட்டு வருது. நகரத்துக்காரன் எல்லாம் சேர்ந்து கிராமத்தைப் புனிதமாக்கிட்டான். கட்டுப்பாடு கட்டுப்பாடுனு பேசி வாழ்க்கையையே பொழைப்பா மாத்திக்கிட்டு ஆளாளுக்குப் பைத்தியம் பிடிச்சு அலையுறோம்.''
''அப்படி என்றால், ஒரு கலாசா ரத்தை மதிப்பிட பாலியல் சுதந்திரம் தான் அளவுகோலா?''

''ஆமா, கலாசாரம்னு பேசுனா, மொதல்ல அங்கே இருந்துதானே தொடங்கணும்? ஒழுக்கம், ஒழுக்கம்னு எங்கே கூச்சல் கேட்குதோ, அங்கேதான் நிறைய ஒழுக்கக்கேடு இருக்கும். ஒவ்வொருத்தனும் மனசுக்குள்ள ஆயிரம் தடவை சோரம் போறான். வெளியே பேசுறது பதிவிரதத்தனம். சென்னையிலேயே, ரெண்டு மூணு வருஷத்துக்கு முன்னாடி நடந்துச்சா இல்லையா? கம்ப்யூட்டர் கம்பெனியில கக்கூஸு அடைச்சு, குழாயை உடைச்சப்ப வண்டி வண்டியா ஆணுறைகளை எடுத்த கதை நாடு முழுக்க நாறுச்சா இல்லையா? அப்ப வெளியே மூடிக்கிட்டு உள்ள வெறியோட அலையுறதுல என்ன இருக்கு? அட, பச்சப்புள்ளைங்க மேல எவ்வளவு வன்முறை நடக்குது? என்னடா, இந்தக் கி.ரா. இந்த வயசுல இப்படிப் பேசுறானேனு நெனைக்கக் கூடாது. இந்த வயசுல நான் பொய் பேசக் கூடாது, இல்லையா? மொதல்ல இங்கே குடும்பம்கிற அமைப்பு உடையணும்னு நெனைக் கிறேன்.''

''இந்தியாவுக்குப் பாலியல் கல்வி வேண்டும் என்று நினைக்கிறீர்களா?''

''கண்டிப்பா வேணும்னு சொல்றேன். இல்லைன்னா, குட்டிச்சுவராப் போயிடும். எப்படி வாழணும்னு மொதல்ல நாம கத்துக்கணும். பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்கணும். மறைச்சு மறைச்சு வெச்சுதான் பெரிய விஷயமாக்கிட்டோம். பிள்ளைங்க இது ஒரு பெரிய விஷயம்னு நெனைச்சு, அந்த ஞாபகமாகவே அலையுது. நான் கேட்குறேன்... ஒரு நாள்ல முக்கா நாளு ஒருத்தன் இந்த நெனைப்பாவே திரியுறான்னா, அது சிக்கலா, இல்லையா? அது அவனோட சிக்கல் மட்டும்தானா... சமுதாயத்தோட சிக்கலுமா


? கம்ப்யூட்டர் மூலமா மணிக்கணக்கா உறவாடுறானே, அவனோட ஆழ்மனசுத் தேவை என்ன? கிராமப்புறங்கள்ல மேல் வயித்துப் பசி, கீழ் வயித்துப் பசினு சொல்வாங்க. ரெண்டு பசியுமே மோசமானது. ஆனா, இங்கே எல்லாருமே மேல் வயித்தைப் பசியைத் தீர்க்குறதைப் பத்தி மட்டும்தான் பேசுறோம். கீழ் வயித்துப் பசியை மறந்துடுறோம்.''
''சமூக வலைதளங்களை எல்லாம் கவனிக்கிறீர்களா?''

''சங்கதி என்ன நடக்குதுனு மட்டும் தெரியும். என்ன, முன்னே மறைச்சுவெச்சுப் படிச்சோம்... இப்பம் மறைச்சுவெச்சுப் பார்த்துக் குறீங்க, உறவாடிக்கிறீங்க.''
''இந்த வயதில் காதலைப் பற்றி என்ன நினைக்கிறீர் கள்? உங்கள் முதல் காதலை இப்போது நினைவுகூர முடியுமா?''

''முதல் காதல்... ஹா... ஹா... பசிக்குது. அந்தச் சமயத்துல பக்கத்துல நல்ல சாப்பாடு. உடனே கிடைச்சுட்டா, அதை ஒரு விஷயமா நெனைப்போமா? அப்படித்தான் இந்தக் காதலும். கிடைச்சுட்டா, அந்த நேரச் சாப்பாடு. கிடைக்காட்டி, அதுக்குப் பேர் காதல். கிடைக்கவே கிடைக்காட்டி, அது அமரக் காதல், காவியக் காதல். ஒரு விஷயம் சொல்லலாம். காதல் ஒரு தடவை மட்டும் வர்றது இல்லை. வந்துக்கிட்டே இருக்குறது.''
''நம் சமூகத்தில், பெரும்பாலானபடைப் பாளிகள் தனிப்பட்ட வாழ்க்கையில் தோல்வி அடைந்து இருக்கிறார்கள்.வெற்றிகரமான உதாரணங்களில் ஒருவர் என்ற முறையில் இந்தப் பிரச்னைக்கு என்ன காரணம் என்று சொல்லுங் களேன்..?''

''ரெண்டு காரணங்கள். ஒண்ணு, ஒரு படைப்பாளியோட நேரத்தை அவன் வீட்டுல அனுமதிக்கணும். எனக்கு ராத்திரியில எழுத வருது; அது சம்பந்தமா, முக்கியமா நான் ஒரு புத்தகத்தைப் படிக்கணும்னு வெச்சுக்குங்க. அப்போ நான் படிச்சாகணும். அப்போ பார்த்து என் பொண்டாட்டி, 'தூக்கத்தைக் கெடுக்காமப் படுங்க’னு சொன்னா வேலைக்கு ஆகாது. ஏன்னா, எழுத்து நம்ம இஷ்டப்பட்ட நேரத்துக்கு வராது. அதேபோல, அவளோட கஷ்டத்தையும் நான் புரிஞ்சுக்கணும்.என்னோட அனுசரணையை அவ எதிர்பார்க்குறானு வெச்சுக்குங்க. பொய்யா யாவது சில வார்த்தைகள் ஆறுதலாப் பேசணும். நடிக்கணும். தப்பு இல்லே. மனசைக் காயப்படுத் துற மாதிரி உண்மையைப் பேசுறதைவிட இது மேல். இன்னொரு விஷயம் இருக்கு. படைப்பு சார்ந்து வர்ற உறவு களை, குடும்பத்துக்கு உள்ளே நுழையவிடாம வெச்சுக்குறது. உங்க எழுத்தைப் படிச்சுட்டு ஒரு பொண்ணு, 'நான் உங்க அடிமை’னு சொல்லிக்கிட்டு வர்றானு வெச்சுக்குங்க. அவளை எங்கே நிப்பாட்டணும்னு உங்களுக்குத் தெரிய ணும். இது ரெண்டும் தெரியாததுதான் நிறையப் பேருக்குப் பிரச்னை ஆயிடுது.''
''ஒரு கதை சொல்லியாகச் சொல்லுங்கள்... குடும்பத்துக்குள், உறவுகளுக்குள் கதையாடலும் உரையாடலும் ரொம்பவும் சுருங்கிவிட்டது இல்லையா?''

''கதைங்கிறதுக்கு ஏராளமான அர்த்தம் உண்டு. அதுக்கு ஏகப்பட்ட வடிவமும் உண்டு. நேரடியான வாய் மூலமான உரையாடல் குறைஞ்சு இருக்கலாம். ஆனா, வெவ்வெறு வடிவத்துல உரையாடல் நடந்துக்கிட்டுதான் இருக்கு. கதை இல்லாம இங்கே எதுவும் நடக்காது. ஆக, கதை நடக்குது. ஆனா, குடும்பத் துக்கு உள்ளே அந்தக் கதையாடல் குறைஞ்சுருக்குங்கிறது கஷ்டமான விஷயம்.''
''நீங்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் படிப்பீர்கள்; எழுதுவீர்கள்?''

''புதுமைப்பித்தன் உட்கார்ந்தார்னா, ஒரே நேரத்துல கதையை எழுதி முடிச்சுடுவார்னு சொல்வாங்க. எனக்கு அப்படி வழக்கம் இல்லை. அடிச்சு அடிச்சு, திருத்தித் திருத்தி எழுதுற ஆள் நான். அதனால, எழுத்தும் வாசிப்பும் மாத்தி மாத்தி நடந்துக்கிட்டே இருக்கும். முடியுற நேரம் எல்லாம் படிப்பேன்; எழுதுவேன்.''
''வீட்டு வேலைகள் செய்வீர்களா?''''இல்லை. என் மனைவி கடுமையான உழைப்பாளி. அதேபோல, நல்ல நிர்வாகி. அதனாலேயே வீட்டு வேலையில என்னை உள்ளே விடுறது இல்லை.''
''வட்டார மொழி இலக்கியத்தின் முன்னத்தி ஏர் என்று உங்களைச் சொல்வார்கள். பின்னத்தி ஏராக யாரைச் சொல்வீர்கள்?''

''வட்டார மொழியில எழுதுற எல்லோருமே பின்னத்தி ஏர்க்காரங்கதான்.''
''தலித் மக்கள் வாழ்வை நீங்கள் எழுதாமல் இருட்டடிப்பு செய்தீர்கள் என்பது உங்கள் மீதான பெரிய விமர்சனம்...''


''எழுதலைதான். ஏன்னா, அவங்க வாழ்க்கை எனக்குத் தெரியாது. அவங்களோட மொழி, சம்பிரதாயங்கள், அதற் கான காரண காரியங்கள் எதுவும் எனக்குத் தெரியாது. எனக்குத் தெரியாத விஷயத்தை எழுதுறது தப்புனு நெனைச்சேன்... நெனைக்கிறேன்.''
''நல்ல சங்கீத ஞானம் உள்ளவர் நீங்கள். படைப்புகளில் அதை ஏன் கொண்டுவரவில்லை?''

''முந்தைய கேள்விக்கான பதிலைத்தான் இதுக்கும் சொல்லணும். எனக்கு நல்ல சங்கீத ஞானம் உண்டு. ஆனா, என் படைப்புகள் எல்லாம் என் ஊரைச் சுத்தி இயங்குறது. என்னோட கதை மாந்தர்கள் என் ஊர்க்காரங்க. அவங்களுக்குச் சங்கீதம் தெரியாது. பின்னே எப்படி எழுதறது?''
''ஒரு கட்டத்தில், வெறும் தகவல் சார்ந்ததாகிவிட்டன உங்கள் படைப்புகள் என்ற விமர்சனம் உண்டு...''
''இதுக்குக் காலம்தான் பதில் சொல்லணும்.''
''எழுத்தில் போதுமான திருப்தி இருக்கிறதா? எழுத நினைத்தவை எல்லாவற்றையும் எழுதிவிட்டீர்களா?''

''எழுதாத எழுத்தை நெனைச்சுப் பார்க்குறது, வாழாத காலத்துல வாழ்ந்து வீணடிக்கிறதுக்குச் சமம். யாராலுமே நெனைச்ச எல்லாத்தையும் எழுதிட முடியாது. முடிஞ்சது வரைக்கும் திருப்தி இருக்கு.''


''சரி, ஒரு மூத்த குடிமகனாகச் சொல்லுங்கள்... இப்போது திரும்பிப் பார்க்கும்போது சுதந்திரத்துக்கு முந்தைய கனவுகளில் கொஞ்சத்தையேனும் சுதந்திரம் நிறைவேற்றி இருக்கிறதா?''

''நிறைய ஏமாந்தோம்னுதான் சொல்லணும். அப்ப நாங்க ரெண்டு கட்சியா இருந்தோம். காந்தி கட்சி... நேரு கட்சி. வயசாளிங்க காந்தியை நம்பினாங்க. எளந்தாரிங்க நேருவை நம்பினோம். ரெண்டு பேர் பாதையும் வெவ்வேறு. குறிப்பா, நேரு ரொம்ப யதார்த்தமாவும் நவீனமாவும் இருப்பாருனு எல்லாம் நெனைச்சோம். ஆனா, காந்தி, நேரு ரெண்டு பேருமே கனவைத்தான் விதைச்சாங்க. யதார்த்தத்துக்கும் அவங்களுக்கும் ரொம்ப தூரம் இருந்துச்சு. சரியா சொல்லணும்னா, காந்திக்கு, தான் ஆளத் தகுதியான ஆள் இல்லைங்கிறது தெரிஞ்சுருந்துச்சு. நேருவுக்கு அது தெரியலை. அவ்வளவுதான் வித்தியாசம்.''


''காந்தி ஒருவேளை உயிரோடு இருந்திருந்தால், இந்திய வரலாறு வேறு மாதிரி இருந்திருக்குமோ?''''இன்னும் மோசமாத்தான் இருந்துருக்கும்னு நெனைக்கிறேன். வரலாற்றைப் பொறுத்தவரைக் கும் காந்தி செத்ததுகூட நல்லதுதான்.''
''நீங்கள் பார்த்தவரை 'இது நடக்காமல் இருந்திருந் தால், இந்திய வரலாறே வேறு மாதிரி இருந்திருக்கும்’ என்று எந்தச் சம்பவத்தைச் சொல்வீர்கள்?''

''நேதாஜியோட மறைவு. அது நடக்காம இருந்திருந்தா, அவர் பிரதமரா ஆகி இருந்தா, நிச்சயம் இந்தியாவோட வரலாறு வேறு மாதிரி இருந்திருக்கும்.''
''இதுவரை இந்தியாவை ஆட்சி செய்த பிர‌தமர்களிலேயே யார் சிறந்தவர்? யார் மோசமானவர்? ஏன்?''

''மக்கள் மேல உண்மையான அக்கறை ஒரு அரசாங்கத்துக்கிட்டே இருந்து வெளிப்பட்டதை ரெண்டு காலகட்டத்துல உணர்ந்திருக்கேன். ஒண்ணு, சாஸ்திரியோட காலகட்டம். இன்னொண்ணு,  வி.பி.சிங் காலகட்டம். ஆனா, அரசியல்ரீதியா நிறையத் தப்பான, பொறுப்பு கெட்ட முடிவுகளை எடுத்தார் சாஸ்திரி. குறிப்பா சொல்லணும்னா, மலையகத் தமிழர்கள் உரிமைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளிவெச்சு சிரிமாவோ பண்டாரநாயகாகூட அவர் போட்டுக்கிட்ட ஒப்பந்தம். அதனாலேயே, நான் அவரை வெறுத்தேன். வி.பி.சிங் கிட்டே ஒரு தொலைநோக்குப் பார்வை இருந்துச்சு. அவருக்கு அரசியல் பெரும்பான்மைப் பலம் இருந்திருந்தா, பெரிய மாற்றங்களை அவர் கொண்டுவந்திருப்பார். அதனால, வி.பி.சிங் நீங்கலா மத்தவங்க அத்தனை பேருமே மோசம்தான்.''
''தமிழகத்தின் சிறந்த முதல்வர் என்று யாரை மதிப்பிடுவீர்கள்? மோசமானவர் யார்? ஏன்?''

''ஓமந்தூராரும் காமராஜரும் சிறந்த முதலமைச்சர்கள்னு சொல்வேன். ஏன்னு கேட்டா, அவங்க கை சுத்தம், வாய் சுத்தம். நாடு முதல் நோக்கமாவும் கட்சி ரெண்டாம்பட்சமாகவும் அவங்க காலத்துல இருந்துச்சு. அதேபோல, அண்ணாதுரையோட தொடக்கம் நல்லா இருந்துச்சு. ஆனா, குறுகின காலத்துக்குள்ள அவர் போய்ட் டார். அப்புறம் நடக்குற கதை எல்லாம்தான் ஊருக்கே தெரியுமே!''
''இந்தியாவில் நாளுக்கு நாள் மாநில உணர்வுகள் வலுப்பெறுகின்றன. தேசியத்தின் மீதான கனவுகள் நொறுங்குகின்றன. எதிர்காலம் என்னவாகும்?'


'
''நாசமாத்தான் போகும். மாநில உணர்வு மிகுந்துபோகுதுன்னா என்ன காரணம்? ஒரு மாநிலத்துக்கு உரிய தண்ணியை முறையாக் கொடுக்க முடியலைன்னா, அப்புறம் அந்த மத்திய அரசாங்கத்து மேல மக்களுக்கு எப்படி மரியாதை நீடிக்கும்?''
''சின்ன வயதில் ஆயுதக் குழுக்களில் இருந்தவர் என்ற முறையில் சொல்லுங்கள்... இந்தியாவில் ஆயுத வழியிலான புரட்சி சரிப்படுமா?''

''சரிப்படாது. அந்தக் காலம் எல்லாம் மலை ஏறிப்போச்சு.''


''இந்தியாவில் சாதியை ஒழிக்க முடியுமா?''''ஒழிக்கணும்னு ஆசைப்படுவோம்.''
''இந்திய ஜனநாயகம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால்கள் என எவற்றைச் சொல்வீர்கள்?''''ஏழ்மை... ஏழ்மை... ஏழ்மை!''thanx - vikatan

4 comments:

நம்பள்கி said...

அவசியம் எல்லோரும் படிக்கணும்...!

Easy (EZ) Editorial Calendar said...

உங்கள் பதிவு மிக அருமையாக இருந்தது.....பகிர்வுக்கு மிக்க நன்றி.....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

raj said...

Arumai ..thanks for sharing.

vijay said...

excellent and thanks sir.