Thursday, November 22, 2012

கொச்சின் - ஊர் சுற்றும் வாலிபனின் பார்வையில்

நான் கண்ட ஊரு!


நாங்கள் சமீபகாலமாக கேரள மாநிலத்தில் உள்ள கொச்சினில் வசித்து வருகிறோம். அரபிக் கடலோரம் அமைந்த மிகப் பழைமையான துறைமுக நகரம் இது. எர்ணாகுளம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கும் கொச்சியைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
கொச்சு-அழிஎன்னும் மலையாள வார்த்தையிலிருந்து மருவிகொச்சிஎன்றானதாகச் சொல்லப்படுகிறது. கொச்சு-அழி என்பதற்குசின்ன ஏரிஎன்று அர்த்தம். ‘கொச்சிஎன்றொரு நதி பாய்ந்து, கடலுடன் கலப்பதாலும் இந்தப் பெயர் வழங்கப் பட்டிருக்கலாம்.
நிக்கோலாடா கோன்ட்டி என்ற இத்தாலிய யாத்ரிகர், சேர மன்னர்களின் ஆளுகையில் இருந்த கொச்சியைப் பற்றிய நிறையத் தகவல்களை ஆவணப் படுத்தியிருக்கிறார். குறிப்பாகபெரும் பாடப்புஎன்ற குறுநில மன்னர்கள் கொச்சியை பல காலம் ஆண்டதாக எழுதியுள்ளார்.
இந்தியக் கடற்படையின் தென்புல ஆளுமைமையமாகவும், இந்திய கடலோரப் பாதுகாப்புப் படையின் மாநிலத் தலைமையகமாகவும் கொச்சி விளங்குகிறது.
சிறந்த துறைமுகம் என்பதால் கப்பல் வணிகத்தில் கொடிகட்டிப் பறக்கிறது. மிளகு, ரப்பர், மீன், தேயிலை என நிறைய ஏற்றுமதியாகிறது. படகு சர்வீஸ் உள்ள ஊர்.
கொச்சினுக்குக் கிழக்குப் பகுதி முழுக்க எர்ணா குளம் என்று அறியப்படுகிறது. எர்ணாகுளம் நவ நாகரிகமான நகரம். இந்துக்கள், சிரியன் கிருத்துவர்கள், முஸ்லிம்கள் மூவருமே தலா 33% வசிக்கும் ஊர்.
மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ளதால் ஜூன் முதல் செப்டெம்பர் வரை மழைக்காலம். பொதுவாகவே ஆண்டுதோறும் இதமான சீதோஷ்ணம் நிலவுகிறது.

மழை எந்த நேரத்தில் பெய்யும் என்றே தெரியாது. அதனால் கையில் குடை இல்லாமல் யாரையும் பார்க்க இயலாது. சின்ன பெட்டிக் கடை முகப்புகளில் கூட மடக்குக் குடைகளை விற்பனைக்குக் காணலாம்.
அழகான தோட்ட வீடுகள், புது மோஸ்தர் பங்களாக்கள் கட்டுவதில் பிரியமுள்ளவர்கள். பல வீடுகளில் பிள்ளைகள் வெளிநாடுகளுக்குப் போய் உழைத்துப் பணம் அனுப்ப, அதில் பளபள பங்களா கட்டி, வயதான பெற்றோர் மட்டுமே வசிப்பார்கள்.
பகவதி அம்மன், கிருஷ்ணர், சிவனைக் கும்பிடுகிறார்கள். சிவன் கோயில்களை மகாதேவ ஸ்வாமி கோயில் என்கிறார்கள். வாழை இலைகளில் இருவாச்சி, நந்தியாவட்டை, செம்பருத்தி போன்ற மலர்களை வைத்து வழிபடுகிறார்கள். எல்லா கோயில்களுமே பித்தளைக் கொடி மரத்துடன், தேக்கு மரம் மற்றும் செந்நிற ஓடுகளால் கட்டப்பட்டு, கிட்டத்தட்ட ஒரே வடிவமைப்பில் பெரிய திறந்தவெளியுடன் சுத்தமாக உள்ளன.
இளம்பெண்கள் சாயங்காலம் தலைக்குக் குளித்து, ஈரக்கூந்தலை நுனியில் பின்னி, வெள்ளை நிறமுண்டுஅணிந்து பயபக்தியுடன் கோயிலுக்கு வரும் அழகே தனி!
கலாசாரம் மற்றும் பாரம்பரிய உணர்வு கொண்டவர்கள். வீடு முதல் ஆடை ஆபரணங்கள் வரை பழைமை போற்றுவார்கள்.

நம்ம ஊர் போல தெருவோரப் பூக்கடைகள் அரிது. பூங்கொத்து, மலர் வளையம் விற்கும் கடைகளில் கொஞ்சமாக மல்லி கட்டி வைத்திருப்பார்கள். ஆனால் கொள்ளை விலை.
தமிழர்கள் சேற்றில் காலை வைத்தால்தான், கேரளாக்காரர்கள் சோற்றில் கை வைக்க முடியும்என்று இங்கு சொல்வது, உண்மைதான். காய்கறி முதல் அரிசி வரை எல்லாமே தமிழ்நாட்டில் விளைவதுதான். கடல் மற்றும் கடல்சார்ந்த பூமி என்பதால் பயிர் விளைய அதிக இடமில்லை. அப்படியே இருந்தாலும் அதீத மழையால் பயிர் வளர்வதில்லை.
கம்யூனிஸ உணர்வு அதிகம் உள்ள ஊர். தொழிலாளர் சம்பள விகிதம் மிக உயர்வு. செங்கொடி பிடித்து கோஷமிட்டபடி, ஊர்வலம் போவது சகஜமாக நடக்கும்.
சாப்பாடு விஷயத்தில் அதிக ருசி பார்ப்பதில்லை. ஏழைகள் கொட்டைச் சோற்றைக் கஞ்சியாக்கி, அதற்கு கப்பங்கிழங்கு, கடலைப் பருப்பு சுண்டலைத் தொட்டுச் சாப்பிட்டு பசியாறி விடுவார்கள்.

டீ என்றாலும் அது பால் சேர்க்காதகட்ட சாயாதான்! புட்டு, ஆப்பம், மீன், பழம் பொரி விரும்பிச் சாப்பிடுவார்கள்.
ஆடைப் பிரியர்கள், நகைப் பிரியர்கள், திருமணத்தின் போது பணக்கார மணப் பெண்கள் கழுத்திலிருந்து வயிறு வரை பொன் நகையாக அணிந்திருப்பார்கள்.
பஸ், ரயில்களில் ஏறும்போது, முண்டியடிக்காமல் வரிசையில் நிற்பார்கள்.
இலக்கியப் பிரியர்கள். எழுத்தாளர்களுக்கு ஸ்டார் வேல்யூ உள்ள ஊர். கிராமப்புற பெருசுகள் கூடமலையாள மனோரமாவையும்மாத்ரு பூமியையும் திண்ணைகளில் அமர்ந்தபடி படித்துக் கொண்டிருப்பதைக் காணலாம்.
முன்னொரு காலத்தில் அமைதியும், அழகும் மிக்கதாக இருந்த கொச்சின், இப்போது பெரிய பெரிய மால்களும், விண்ணை முட்டும் கட்டங்களுமாக பரபரப்பான மெட்ரோ நகரமாகி விட்டது.
- தீபா பத்மநாபன், ‘கெனோபிலேடிஸ் கிளப், கொச்சின்

நன்றி - கல்கி

0 comments: