Saturday, March 28, 2015

கமலுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது ஏன்? - சைக்கோ ஸ்பெஷலிஸ்ட் செல்வராகவன் பேட்டி

  • சிம்பு, யுவனுடன்
    சிம்பு, யுவனுடன்
  • படம். எல்.சீனிவாசன்
    படம். எல்.சீனிவாசன்
  • மனைவி கீதாஞ்சலியுடன்..
    மனைவி கீதாஞ்சலியுடன்..
‘‘உண்மை இதுதான். தற்போதைய சினிமாவில் சுதந்திரம் அறவே இல்லை. நான் படம் எடுக்கத் தொடங்கிய 2000-ல் ஒரு ஆரோக்கியமான சூழல் இருந்தது. 100 படங்களில் 99 படங்கள் காமெடிப் படங்கள்தான் விற்கும் என்ற நிலை அப்போது இருந்ததில்லை ’’
ஒவ்வொரு முறையும் வெப்பம் தெறிக்கக் கோபத்தோடு பேட்டிக்குத் தயாராவதுதான் இயக்குநர் செல்வராகவன் ஸ்பெஷல். சிம்புவை வைத்து அடுத்து எடுக்கவிருக்கும் புதிய படத்தின் ஆரம்ப கட்ட வேலைகளில் மூழ்கியிருந்தவர், ‘தி இந்து’வுக்காக அளித்த பேட்டியிலிருந்து...
‘இரண்டாம் உலகம்’ படத்துக்குப் பிறகு ஏற்பட்டிருக்கும் இடைவெளியை எப்படி உணர்கிறீர்கள்?
தொடர்ந்து படம் பண்ணிக்கொண்டே இருக்க வேண்டுமா என்ன? ஓடிக்கொண்டே இருக்கும்போது நின்று மூச்சு வாங்கிக்கொள்வோம் இல்லையா.. அப்படித்தான் இந்த இடைவெளியை எடுத்துக்கொள்கிறேன்.
‘காதல் கொண்டேன்’, ‘7ஜி ரெயின்போ காலனி’ படங்களின் வழியே ஏற்படுத்திய தாக்கத்தை, நீங்கள் புதிய களங்களில் உருவாக்கிய ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘இரண்டாம் உலகம்’ படங்களில் ஏற்படுத்தவில்லையே?
தொடர்ந்து காதல் படங்களையே கொடுக்க முடியாது. நான் இங்கே காதல் படங்கள் மட்டும் எடுப்பதற்காக வரவில்லை. அப்போது எனக்கு 22, 23 வயது இருக்கும். அதனால் சில படங்கள் அந்த வயது அனுபவத்தில் இருந்திருக்கலாம். அதையே தொடர்ந்தால் பணத்துக்காக மட்டுமே இயங்கும் ஆளாக மாறிவிடுவோம். அதில் எனக்கு உடன்பாடில்லை. ஒரு ஃபிலிம்மேக்கர் பல வகைப்படங்களைக் கொடுத்தே ஆக வேண்டும்.
உங்கள் படங்களைப் படமாக்கும்போது திரைக்கதையின் முதல் காட்சியில் தொடங்கி வரிசையான முறையில் படமாக்குவீர்கள் என்பது உண்மைதானா?
சில படங்களை அப்படித் தொட்டுத் தொடர்ந்திருக்கிறேன். அதுமாதிரி செய்யும்போது நிறைய கட்டுப்பாடுகள் இருக்கின்றன. படக்குழுவினர் எல்லோருடைய ஒத்துழைப்பும் அதற்கு முக்கியம். எல்லா தருணங்களிலும் அப்படிச் செய்ய முடியாத சூழலும் உருவாகும். தொடக்கத்தில் 15 முதல் 20 காட்சிகள் வரைக்குமாவது வரிசையாக எடுக்கும்போது கதையோடு நம்மை இணைத்துக்கொள்வது இலகுவாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.
படைப்பாளியின் சுதந்திரத்திற்குள் தணிக்கைக் குழு அதிகம் தலையிடுவதாகவும், படத்தை ஆராய்ந்து தேர்ந்த விமர்சனம் வைப்பவர்கள் அங்கே குறைவு என்றும் கூறப்படுவதை எப்படிப் பார்க்கிறீகள்?
என் படங்களுக்கு சென்சாரில் இதுவரை எந்தப் பிரச்சினையும் எழுந்ததில்லை. அவர்கள் முன் வைக்கும் பல கருத்துகள் ஏற்றுக்கொள்ளும்படியாகத்தான் இருக்கும்.
உங்கள் படங்களை மணிரத்னம் தொடர்ந்து பாராட்டிவந்திருக்கிறார். தற்போது அவரும் காதல் கதைக்குத் திரும்பியிருக்கிறார் என்று தெரிகிறதே?
அப்படியெல்லாம் இல்லை. வேறுவேறு மனநிலைகளில் கிரியேட்டர்கள் யோசிக்கத்தான் செய்கிறார்கள். காதல் கதைகளைக் கொடுக்க இது சரியான நேரம்தான். தற்போதைய சூழலில் காதல் படங்கள் எதுவும் இல்லை. காமெடிப் படங்களைத்தான் இழுத்துப்போட்டு இயக்குகிறார்கள். இப்போது காதலைத் தொட்டால் புதிதாகத்தான் இருக்கும்.
கமலின் ‘விஸ்வரூபம்’ படத்தில் பணியாற்ற முடிவெடுத்து படத்தின் ஆரம்ப வேலைகளில் இணைந்திருந்தீர்கள். திடீரென ஒரு கட்டத்தில் விலகியும் விட்டீர்கள். அந்தப் படத்தில் பணியாற்றியிருக்கலாமே என்று எப்போதாவது நினைத்ததுண்டா?
நடக்காததைப் பற்றி நான் எப்போதுமே கவலைப்பட்டதில்லை. சினிமா எல்லோரும் சேர்ந்து பயணிக்கக்கூடிய விஷயம். சரியாக இல்லை என்றால் அதன் உறுதி கம்மியாக இருக்கும். ஒரு விஷயம் நடக்கவில்லை என்றால் அடுத்ததை நோக்கி நகர்வதுதானே சரி.
இனி திரைப்படமே எடுக்க வேண்டாம் என்ற மனநிலையோடு பேட்டி கொடுத்தவர், நீங்கள். அந்த கோபம் எல்லாம் குறைந்துவிட்டதா?
எப்போதுமே என் கோபங்களுக்குச் சரியான காரணம் இருக்கும். இங்கே இருக்கும் சூழ்நிலை மீதுதான் என் கோபம். மும்பையில் சினிமா வேலை செய்யும்போது மரியாதை இருக்கிறது. இங்கே இல்லை. இது பணத்துக்கான தொழில் என்று 90 சதவீதம் ஆட்கள் பார்க்கிறார்கள். பணம் மட்டும்தான் சினிமாவா? பணம் அவசியம்தான். அதுவே முழுக்க அவசியமாகிவிடக் கூடாதே. என் கோபம் இதுதான்.
தனுஷின் வளர்ச்சியில் உங்கள் பங்களிப்பும் இருந்திருக்கிறது. ஒரு அண்ணனாகத் தற்போது அவருடைய ஓட்டத்தை எப்படி கவனிக்கிறீர்கள்?
சின்ன வயதில் இப்படி இருந்தோம், அப்படிச் சுட்டித்தனம் செய்தோம் என்ற ஏக்கங்கள் இருக்கலாம். அதை எல்லாம் கடந்து எல்லோருக்கும் தனித் தனிக் குடும்பம், திசைகள் வந்துவிட்டன. அதைவிட ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் ஒரு எல்லைக்கோடும் உருவாகியுள்ளது. அண்ணன், தம்பி என்பதை எல்லாம் கடந்து தனித் தனி இடம் இரண்டு பேருக்கும் இருக்க வேண்டும்.
சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளைத் தவிர்த்துவிடுகிறீர்களே?
கூட்டமாக இருக்கும் இடத்தில் என்னால் இருக்க முடியாது. சின்ன வயதில் இருந்தே நான் இப்படித்தான். நாலு பேர் சுற்றி நின்றாலே எனக்குப் பிரச்சினை. நான் எனக்கு ஏற்ற மாதிரி வாழ்கிறேன்.
ட்விட்டரில் குழந்தைகளோடு அதிக நேரம் செலவிடுவது தொடர்பான பதிவுகளையே நிரப்புகிறீர்களே?
அது ஒரு வரம்தான். எவ்வளவு பேர் குழந்தையின் அருமையைப் புரிந்துகொள்கிறோம். பிள்ளைகளின் பொழுதுபோக்கிற்காக நேரத்தை வீணாக்குவது விசேஷமானது. அதை விட்டுவிடக் கூடாது.
அவ்வளவு எளிதாகப் படப்பிடிப்புக்கு அழைத்து வர முடியாதவர் என்று கூறப்படும் சிம்புவை நீங்கள் இயக்க இருப்பதுதான் தற்போது கோடம்பாக்கத்தில் பேச்சாக இருக்கிறது..
‘காதல் கொண்டேன்’ படம் இயக்கிய நாட்களில் இருந்தே சிம்புவைத் தெரியும். என்னையும்கூட, ‘இவன் அப்படி, இப்படி’ என்று கூறுகிறார்கள். சிம்புவையும் அதுமாதிரி ஏதாவது சொல்லிக்கொண்டிருப்பார்கள். இதற்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. நெருக்கமான இரண்டு நண்பர்கள் சேர்ந்து இந்தப் படத்தில் பயணிக்கப்போகிறோம். அவ்வளவுதான்.
‘மாலை நேரத்து மயக்கம்’ படத்தினை உங்கள் மனைவி கீதாஞ்சலி இயக்குகிறார். படப்பிடிப்பில் உங்களையும் பார்க்க முடிகிறதே?
நான் ஒரு கதையைத் தயார் செய்து வைத்திருந்தேன். திடீரென ஒரு நாள், ‘நான் படம் இயக்கப்போகிறேன்’ என்று ஒரு டீமோடு வந்து கேட்டாங்க. ‘ஓ தாராளமாக’ என்று கதையைக் கொடுத்துவிட்டேன். திரைக்கதை என்னோடது என்பதால் படப்பிடிப்பில் கதையில் ஏதாவது மாற்றம் வரும்போது நான் அங்கே இருந்துதானே ஆக வேண்டும்?
சிம்புவை வைத்துத் தொடங்கும் படத்தின் கதைதான் என்ன?
ஒவ்வொரு முறை ஒரு படம் செய்யும்போதும் நிறைய யோசிப்பேன். இதைத் தொடுவோம் எனும்போது எனக்கு முதலில் ஆர்வம் ஏற்பட வேண்டும். மீண்டும் ஒரு சோகமான காதல் கதையோ, பாதிக்கப்பட்ட மனதின் கதையோ எடுக்க முடியாது. இந்தப் படத்தில் என்னவெல்லாம் ஈர்க்க முடியும் என்று பார்க்கும்போது என்னோட தேடலும் அதை நோக்கியதாக இருக்கிறது. அப்படி ஒரு படமாகத்தான் இதுவும் வரும்.
விக்ரமை இயக்கப் புறப்பட்டு ‘லடாக்’ வரை படப்பிடிப்புக்கு போய் படத்தைத் தொடர முடியாமல் போனதற்குக் காரணம் என்ன?
கதையை மாற்றிக்கொண்டே போகச் சொன்னார்கள். அது முடியாது என்று சொல்லிவிட்டேன். சிம்பிள். அவ்வளவுதான்.


நன்றி  - த  இந்து

1 comments:

'பரிவை' சே.குமார் said...

நல்ல பேட்டி... பகிர்வுக்கு நன்றி.