Thursday, February 14, 2013

இசையமைத்ததில் டாப் 10 பாடல் - எம் எஸ் வி பதில்கள்!

கோபாலன், திருவாரூர். 

 
  ''அலுவலகத்தில் பியூனாக இருந்தாலும் அவரை நீங்கள், 'ஆபீஸ் பையன் அவர்களே’னு மரியாதை கொடுத்துதான் அழைப்பீர்கள் என்று என் நண்பர் சொன்னார். அப்படியா?'' 



''ஆமாங்க! 'ஆபீஸ் பையன் அண்ணே’னு கூப்பிடுவேன். சினிமாவில் நான் பார்த்த முதல் வேலையே ஆபீஸ் பையன் வேலைதான். எட்டு வயசுல இருந்து பல கஷ்டங்களைச் சந்திச்சு, முட்டி மோதித்தான் சினிமாவில் எனக்குன்னு ஓர் இடத்தைப் பிடிச்சேன். ஆபீஸ் பையனா வேலை பார்த்தப்ப, எல்லாவிதமான மனிதர்களிடமும் சகஜமாகப் பழகி அவங்களோட சுகதுக்கங்களில் பங்கெடுத்துக்கிட்டதால், எல்லாரையும் மதிக்கணும்கிற பண்பு எனக்கு இயல்பாவே வந்திருச்சு. எம்.கே.தியாகராஜ பாகவதர், எம்.எம்.மாரியப்பா, எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன்கிட்ட எல்லாம் நெருங்கிப் பழகிட்டு, இந்தப் பண்புகூட இல்லைன்னா, அப்புறம் என்ன அர்த்தம்? யாரா இருந்தாலும், எந்த உயரத்தில் இருந்தாலும் மனிதர்களை மதிக்கணும். அதுதான் முக்கியம்!''


மந்திரியப்பன், கீழ்க்கட்டளை.
 ''இப்போதைய இளைய தலைமுறை இசையமைப்பாளர்களைப் பற்றி உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்?'' 




''எங்க காலம் மாதிரி இல்லை இப்போ.தொழில்நுட்பத்துல தமிழ் சினிமா எங்கேயோ உயரத்துல இருக்கு. நான், இளையராஜா, ரஹ்மான் மட்டும் இல்ல... எங்க பாதையில நிறையப் பேர் தொடர்ந்து வந்திருக்காங்க. வித்யாசாகர், இளையராஜாவோட மகன் யுவன்ஷங்கர் ராஜா, தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவா, ஹாரிஸ் ஜெயராஜ், ஜி.வி.பிரகாஷ், டி.இமான், விஜய் ஆண்டனினு எல்லாருமே பிரமாதமா மியூஸிக் போடுறாங்க. சின்னவங்க, பெரியவங்கன்னு இல்லீங்க. இசையைப் பொறுத்தவரை மக்கள் விரும்பிக் கேட்கணும்... அவ்வளவுதான். இளைய தலைமுறை பசங்க மக்கள் விரும்பிக் கேட்கிற மாதிரி இசையமைக்கிறாங்க.''



கி.மனோகரன், பொள்ளாச்சி. 


''நீங்க இசையமைக்க ரொம்பவும் கஷ்டப்பட்ட பாட்டு எது? ஏன்?'' 



'' 'அவன்தான் மனிதன்’ படத்துல ஒரு பாட்டு. பாடலின் சூழ்நிலைக்கு கண்ணதாசன் பிரமாதமாப் பாட்டு வரிகளை எழுதிட்டாரு. கவியரசரோட அந்த வரிகளுக்கு நான் பல டியூன் போடுறேன். எனக்கே திருப்தி இல்லை. ரொம்பக் கவலையாப்போச்சு. கடைசியில எனக்குப் பிடிச்ச மாதிரி ஒரு டியூன் அமைஞ்சது. அந்தப் பாட்டு... 'ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா’! அந்த டியூன் ரசிகர்களுக் கும் ரொம்பப் பிடிச்சுப்போனது என்னோட பாக்கியம்.


இந்த இடத்துல கவியரசர் பாட்டு எழுதி ரொம்பவும் குறுகிய நேரத்துல நான் டியூன் போட்ட பாட்டு பத்தியும் சொல்லிடுறேன். 'நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்துல வர்ற 'முத்தான முத்தல்லவோ’ பாட்டுக்கான மெட்டை நான் போடப் போட, ஓடுற காரிலேயே கவிஞர் அந்த மெட்டுக்கான வரிகளைச் சொல்லிக்கொண்டு வர, நாங்க அந்த மெட்டுக்காக எடுத்துக்கிட்டது மொத்தம் மூணே நிமிஷம்தான்!''



ரா.பாலகுமாரன், சென்னை-63. 


''நீங்கள் சில படங்களில் நடித்துள்ளீர்கள். உண்மையில் நடிகராக வேண்டும் என்ற ஆசையில்தான் திரைத் துறைக்கு வந்தீர்களா?'' 



''சின்ன வயசுல என் குருநாதர் நீலகண்ட பாகவதரிடம் பாட்டுப் பயிற்சிதான் எடுத்துக்கிட்டேன். அவர் நாடகங்களும் எழுதுவார்.


அப்போ கேரளா கண்ணணூர்ல இருந்த சிறைக் கைதிகளின் பொழுதுபோக்குக்காக ஹரிச்சந்திரா நாடகம் போட்டார். அந்த நாடகத்துல அவர் என்னை லோகிதாசனா நடிக்கவெச்சார். அந்த நாடகத்தைப் பார்த்த மாவட்ட கலெக்டர், 'இந்தப் பையன் சினிமாவுல சேர்ந்தா பிரமாதமா வரு வான்’னு என்னைப் பாராட்டினார். அதைக் கேட்ட துல இருந்துதான் எனக்கு சினிமா கிறுக்குப் பிடிச்சுருச்சுனு சொல்லணும். எப்படியாவதுசினிமா வுல சேர்ந்துடணும்னு முடிவுபண்ணிட்டேன். அப்புறம் என் மாமா மூலம் திருப்பூர் ஜூபிடர் பிக்சர்ஸ்ல ஆபீஸ் பையனா வேலைக்குச் சேர்ந்தேன். அங்கே அப்போ 'கண்ணகி’ பட வேலைகள் நடந்துட்டு இருந்தது. அந்தப் படத்தில் பாலமுருகன் வேஷத்தில் நடித்தேன். அப்புறம், 'குபேர குசலா’ படத்தில் ஒரு வேஷம் கிடைச்சது.



ஆபீஸ் பையன் வேலை பார்க்கிறப்ப ஸ்டுடியோல இருக்கிற ஆர்மோனியப் பெட்டியைத் துடைக்கிற சாக்குல அதை ஆசையாத் தடவித் தடவிப் பார்ப்பேன். இந்த நேரத்துலதான் டி.எஸ்.பாலையா அண்ணன் பழக்கம் ஏற்பட்டுச்சு. அவர் என்னைத் தன்னோட நாடக ட்ரூப்புல சேர்த்துக்கிட்டார். அவரோட பல நாடகங்கள்ல சின்னச் சின்ன வேஷங்கள்ல நடிச்சேன். பிறகு, சினிமாவுல பாலையா அண்ணன் பிஸியாகிட்டதால், முன்னே மாதிரி அவரால நாடகங்கள் நடத்த முடியலை. நாடகங்கள் இல்லா ததால வறுமையில் ரொம்பக் கஷ்டப்பட்டேன். மறுபடியும் ஜூபிடர் பிக்சர்ஸுக்கே திரும்பினேன். அங்கேதான் என் வாழ்க்கைல ஒளி விளக்கு ஏத்தி வெச்ச இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவைச் சந்திச்சேன். அவர் என்னைத் தன்னோட உதவியாளரா சேர்த்துக்கிட்டார். நடிப்பு ஆசையை உதறிட்டு, நான் இசை பக்கம் திரும்பினது அப்போதுதான்.''

 விகடன் மேடை எம் எஸ் வி பதில்கள்!

வி.ஆர்.கிருத்திகா, திருத்தங்கல். 


''நீங்கள் இசையமைத்ததில் டாப் 10 பாடல்களைப் பட்டியல் இடுங்களேன்?'' 



'' 1. எங்கே நிம்மதி...  (புதிய பறவை)
   2. யார் அந்த நிலவு...  (சாந்தி)
   3.  தெய்வமே...  தெய்வமே (தெய்வ மகன்)
   4. தேவனே என்னைப் பாருங்கள்...  (ஞானஒளி)
5. தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு...  (அவள் ஒரு தொடர்கதை)
6. ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்.  (அபூர்வ ராகங்கள்)
7. சிப்பி இருக்குது முத்து இருக்குது... (வறுமையின் நிறம் சிவப்பு)
8. அல்லா... அல்லா... (முகமது பின் துக்ளக்)
9. எதற்கும் ஒரு காலம் உண்டு... (சிவகாமியின் செல்வன்)
10. நிலவு ஒரு பெண்ணாகி...  (உலகம் சுற்றும் வாலிபன்).''
தலத்தெரு பாலு, காரைக்கால். 


 ''எம்.எஸ்.வி. என்கிற உங்கள் பெயரிலேயே ஏதோ சிறப்பு இருப்பதாகக் கேள்விப்பட்டு இருக்கிறேன். அது என்ன சார்?'' 


'' 'மனையங்கத்து சுப்பிரமணியன் விஸ்வநாதன்’ என்பதுதான் எம்.எஸ்.வி.  
நான் பிறந்த கேரளாவில் ஒரு வழக்கம் உண்டு. ஒவ்வொரு குடும்பத்துக்கும் என்று ஒரு பட்டப் பெயர் இருக்கும். அந்த வழக்கப்படி எங்கள் குடும்பத்துக்கு 'மனையங்கத்து’ என்பது பட்டப் பெயர். ஆக, என் பெயரின் 'எம்’ என்பது 'மனையங்கத்’தையும் 'எஸ்’ என் தந்தை சுப்பிரமணியனையும் குறிக்கும்.



இன்னொரு விஷயமும் உண்டு... 1964-ல் நான் முதன்முதலில் 7,500 ரூபாய் கொடுத்து கார் வாங்கினேன். அந்த காருக்குக் கிடைத்த பதிவு எண் என்ன தெரியுமா? MSV 5052 என்பதாகும். இன்றும் அந்தக் காரை நான் மாற்றாமல் என்னோடு வைத்திருக்கிறேன்!''



யு.ஆதி, முக்கூடல். 


 ''இதுவரை நீங்கள் வெளியில் சொல்லாத ரகசியம் ஒன்று?'' 


''ரகசியம்னு எதுவும் கிடையாதுங்க. என்னோடு சினிமாவில் வேலை பார்த்த எல்லாருக்கும் என்னோட எல்லா உண்மையும் தெரியும். ஆனா, பரவலா பலருக்கு என்னைப் பத்தித் தெரியாத ஒரு செய்தி... எனக்கு டான்ஸ் ஆடத் தெரியும். ஆமாங்க... சினிமாவில் நாம் என்னவாகப் போகிறோம்னே தெரியாம, நாடக நடிகனா, சினிமா கம்பெனி ஆபீஸ் பையனா, பலருக்கு அசிஸ்டென்டா இருந்தப்ப... இதையும்தான் கத்துக்குவோம்னு வழுவூர் ராமையாப்பிள்ளைகிட்ட பரதநாட்டியம் கத்துக்கிட்டேன். ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிச்ச 'குபேர குசலா’, 'மகாமாயா’, 'கண்ணகி’ ஆகிய படங்கள்ல பெண் வேஷத்துல நான் குரூப் டான்ஸ் ஆடி இருக்கேன். இதெல்லாம் பலருக்குத் தெரியாது.''  


கு.முத்து, திருவாரூர். 


 ''எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெய்சங்கர் என நடிகர்களுக்கு ஏற்ப தன் குரலை மாற்றிப் பாடுவதில் வல்லவர் டி.எம்.எஸ். உங்கள் இசையமைப்பில் நீங்கள் அவரை அப்படிப் பாடச் சொல்லிக் கேட்பீர் களா? அல்லது அவரே  அப்படிப் பாடுவாரா?'' 


''என்னோட எட்டு வயசுல இருந்து டி.எம்.எஸ். எனக்குப் பழக்கம். கோயம்புத்தூர்ல ஜூபிடர் ஸ்டுடியோவுல நான் மாசம் 15 ரூபா சம்பளம் வாங்கினப்ப, அவர் ஒரு பாட்டுக்கு 250 ரூபா வாங்கினவர். பெரிய வித்தைக்காரர். நடிகர்களை மனசுல வெச்சுக் கிட்டுப் பாட மாட்டார். போட்டுக் கொடுக்கிற டியூனுக்கு ஏத்த மாதிரி பிரமாதமாப் பாடுவார். அப்படிப் பாடுறப்ப ஒவ்வொரு நடிகருக்கும் ஒவ்வொரு மாதிரி பாடுறது மாதிரியே இருக்கும். அதுதான் அவரோட ஸ்பெஷல்!''


ரகோத்தமன், தாராபுரம்.
''கவிஞர் வாலியைப் பற்றிச் சொல்லுங்களேன்?'' 


''வாலிப வரிகளின் நிரந்தர ஊற்றாக இருக்கும் அவரைப் பத்தி நான் சொல்ல என்ன இருக்கு? மெட்டு போட்ட அடுத்த நொடியே அருவியாப் பாட்டைக் கொட்டுவார். வார்த்தைகள் அவர்கிட்டே சேவகம் செய்யும். அவர் ஒரு தீர்க்கதரிசி. 'நீ பெரிய ஆளா வராமப் போக மாட்டே விசு’னு சொல்லிக்கிட்டே இருப்பார். அவர் வாய் முகூர்த்தம் பலிச்சிடுச்சு. எனக்குத் தெரிஞ்சு நன்றி உணர்ச்சிக் குப் பெரிய உதாரணம் கவிஞர் வாலிதான்!''


வி.ராம்ஜி, பொன்மலை.
''உங்கள் பாணியிலேயே கேட்கிறேன்... மேட்டருக்கு மீட்டரா? மீட்டருக்கு மேட்டரா? இரண்டில் எது சிறந்தது?'' 



''சினிமா இசைங்கிறது ஒரு டீம் வொர்க். ஏற்கெனவே நான் சொல்லியிருக்கேன். எனக்கு ஈகோங்கிறதே கிடையாது. கம்போஸிங்ல உட்கார்ந்து பாட்டெழுதி (மேட்டர்) மெட்டு போடணுமா? இல்ல மெட்டு (மீட்டர்) போட்டுப் பாட்டு எழுதணுமானு டிஸ்கஸ் பண்ணுவோம். பெரும்பாலும் பாடல் வர்ற சிச்சுவேஷனைப் பொறுத்தது இது. பாட்டெழுதறதுக்கு கண்ணதாசன் வர்றப்பயே... 'ஏண்டா விசு... சந்தத்துக்கா? சொந்தத்துக்கா?’னு கேட்டுக்கிட்டேதான் வந்து உட்கார்வார். 'யோவ்! வந்ததுக்கு ஏதாச்சும் எழுதய்யா’னு நான் தமாஷா ஒரு அதட்டல் போடுவேன். அப்புறம் பாட்டு கட்டுவோம்!''



அடுத்த வாரம்...


THANX - VIKATAN

2 comments:

காரிகன் said...

சில மாதங்களுக்கு முன் வந்த இளையராஜாவின் பதில்களுக்கும் திரு எம் எஸ் வி அவர்கள் சொல்லும் வார்த்தைகளுக்கும் தான் எத்தனை வித்தியாசம். மற்ற இசை அமைப்பாளர்களை கொஞ்சம் கூட விட்டுக்கொடுக்காமல் பெருந்தன்மையோடு அவர்களை புகழ்ச்சியாக கருத்து சொல்லும் எம் எஸ் வி ஒரு உன்னதமான மனிதர் என்பதில் யாருக்காவது சந்தேகம் இருக்க முடியுமா?இதுதான் மேன்மையானவர்களின் குணம்.

R. Jagannathan said...

Well said! - R. J.